Thursday, August 26, 2010

எங்கள் வீட்டுக்கு வந்த அன்னை தெரஸா'' -சிலிர்க்கும் ஐ.ஏ.எஸ். தேவசகாயம்!


நள்ளிரவு பதினோரு மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தின் மனைவி திருமதி அஸ்டில்தான் அந்த குரலை கேட்டார்.

சண்டிகரின் கலெக்டராக இருப்பவரின் மனைவிக்கு வழக்கமான பஞ்சாபி மொழி குரல்களும் ஹிந்தி குரல்களும் அவர் வளர்ந்த பகுதியான கேரளத்தின் மலையாள குரல்களும் தாய்மொழியான தமிழ் குரல்களும் தெரியும். அந்த நள்ளிரவில் ஒலித்த குரல் ஒரு வெள்ளைக்கார குரல். ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவதை போல கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்புடன் முதிர்ந்த வயதுடைய பெண்ணின் குரல்.

""சார்... மிஸ்டர் தேவசகாயம்'' என நான்கு முறை ஒலித்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் அன்னை தெரஸா என அறிந்தபோது தேவ சகாயமும் அஸ்டிலும் அதிர்ந்து போனார்கள்.

""காலையில் உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டதாக சொன்னார்கள். அதனால் இந்த நேரம் வந்தால் உங்களை பார்க்க முடியும் என்பதால்தான் வந்தேன்'' என அன்னை மெதுவாக சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முழங்காலிட்டு ஜெபிக்கும்போது கூட கட்டாந்தரையில் தான் தனது கால்மூட்டை பதிய வைப்பார். உடுக் கின்ற துணியாக இருந்தா லும் ஒரு துணிக்கு மேல் வைத்திருக்க மாட்டார். அந்த துணி கிழிந்தாலும் தன் கையாலேயே ஊசி நூல் கொண்டு கோணல் மாணலாக தைத்தாலும் கவலைப்படாமல் போட்டுக் கொள்வார்.

தனிப்பட்ட யார் வீட்டிற்கும் போக மாட்டார். யாரிடமிருந்தும் பச்சை தண்ணீர் வாங்கி பருக மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்த அஸ்டி லும் தேவசகாயமும் "ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றால் காலம், நேரம் எதையும் பார்க்க மாட்டார். அதற்காக யார் வீட்டு கதவையும் எந்த நேரத்திலும் தட்டுவார்' என்ற அன்னை தெரஸாவின் மற்றொரு முகத்தை அப்பொழுதுதான் பார்த்தார்கள்.



""அன்னை இதுபோல் ஆறுமுறை வந்தார்கள். நாங்கள் கொடுத்த உணவு பொருட்களையும் சாப்பிட்டார்கள். எனது மகன்களுடன் பாசமாக பழகினார்கள். அவர்களை ஆசீர்வதித்தார்கள்'' என பரவசத்துடன் நினைவுகூரும் தேவசகாயம், ஹரியானா மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

""பிரிட்டிஷ் அறிஞர் ஜான் கெப்பிள், "உண்மை யான மனித நேயத்தில் யார் தன்னைத் தானே மூழ் கடித்துக் கொள்கிறானோ அவனைத்தான் உயரத்திற்கு கடவுள் இட்டுச் செல்வார்' என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரஸா அதையே மிக எளிதாக "நீங்கள் எதை பெற விரும்பினாலும் அதை முதலில் மற்றவர்களுக்குக் கொடுங்கள்' என சொல்வார். அவர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள், அனாதைகள், முதியோர் என இனி வாழ்வில் எங்களுக்கென என்ன இருக்கிறது என்று மரணத்தை எதிர்நோக்கி அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு அதிலும் -குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக ஏற்றவர்.

அவர் மரணமடைந்து சொர்க்கத்துக்குப் போனபோது, அங்கிருந்த ஏசுவின் முக்கிய சீடர் புனித பீட்டர் அன்னையைப் பார்த்து "இங்கே உங்களுக்கு வேலையே இல்லை. ஏனென்றால் இங்கே ஏழைகளும், குடிசைகளும் இல்லையே. ஆகவே உடனடியாக நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்' என சொல்லி சிரித்ததாக ஒரு கதை உண்டு.

அப்படிப்பட்ட சொர்க்கங்களில் ஒன்றாகத்தான் சண்டிகர் நகரை அன்னை தெரஸா நினைத்திருந்தார். "சண்டிகர் பணக்காரர்களின் நகரம் அங்கு நான் வரமாட்டேன்' என சொன்னவரை நாங்கள் அழைத்து வந்து பணக்கார வேஷத்துடன் நிற்கும் அந்த மகா நகரத்தில், தொழிலாளர் குடியிருப்புகள் என்றழைக்கப் பட்ட ஏழைகளின் வீடுகளில், கேன்சர் கட்டிகளால் ஆதரவற்ற மக்கள் அவதியுறுவதை காட்டினோம். அவர்களின் கண்ணீரை கண்ட பிறகுதான் சண்டிகர் நகரில் தனது "நிர்மல இதயம்' என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை துவக்க ஒத்துக் கொண்டார்.

கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜோயா தலை மையில் ஐந்து சகோதரிகளை அனுப்பி வைத்தார். ஹரி யானா நகரின் பிரதான பகுதியான 23-வது செக்டரில் 2 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 5ரூ வாடகை என 99 வருட குத்தகைக்கு என நிலம் கொடுத்தது அரசு.

அந்த இல்லத்தில் அவர் அனாதை குழந்தைகளை தொட்டிலில் போடும் தொட்டில் குழந்தை திட்டத் திற்கான தொட்டிலை முதன்முதலில் அமைத்தார்.

முதல் குழந்தை ஒரு கிறிஸ்துமஸ் நன்னாளில் வந்து விழ, அதற்கு கிறிஸ்து என்றே பெயரிட்டார். ஆரம்பித்த புதிதில் அந்த இல்லத்திற்காக 4 லட்சம் திரட்டி தருவோம் என நாங்கள் சொன் னோம். ஆனால் எங்களால் ஒன்றரை லட்சம்தான் திரட்ட முடிந்தது. நாங்கள் நிதி வசூல் செய்து கொண்டிருந்த நேரத்தில் அன்னைக்கு நோபல் பரிசு என அறிவிப்பு வந்தது. அதன் பரிசுத் தொகை யை வாங்கிய அன்னை "இனிமேல் எனக்கும் எனது நிறுவனங்களுக்கும் எந்த நன்கொடையும் தரவேண்டாம்' என வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நாங்கள் கொடுத்த தொகையை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவும் நடந்து முடிந்த காலம் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலம். எமர்ஜென்சி கொடுமைகள் பற்றிய செய்திகள் அன்னை மனதையும் பாதித் திருந்தது. அந்த கொடுமைகளை எதிர்த்த இயக்கங்களும் பெருமளவில் அன்னை உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் இவையெல்லாம் வாழ் வதற்கு எதுவுமேயில்லாத ஏழைகளை தொடவில்லை. அவர்களுக்கு சேவை செய்த அன்னை இந்த அரசியல் குழப்பங்களையெல்லாம் கடந்து ஆகஸ்ட் 26-ம் தேதி நூறு வயதை கடந்து நூற்றாண்டு விழா காணும் அன்னை தெரஸா அன்றும் இன்றும் என்றும் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment