Wednesday, August 18, 2010

ஒரே ஒரு மனிதருக்காக... அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி...


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!

தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.

ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.

ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.

எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!

இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.

"ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்... எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது... இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக... அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி... வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது" என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.

No comments:

Post a Comment