Sunday, August 29, 2010

இப்படியும் ஒரு வாழ்க்கை! -மரணகானா விஜி



""கடவுள்களையும் காதல்களையும் புறக்கணித்து மரணத்தை மட்டுமே பாடுகிறேன், இதனைச் சொல்வதினால் பல பேருக்கு செரிமானம் ஆவதில்லை'' என்கிறார் மரண கானா விஜி.

"இன்றைக்கு இலக்கியம் என எழுதிக் குவிக் கப்படுகிற படைப்புகளை அப்புறப்படுத்தவோ அல்லது அதனை எழுதிய படைப்பாளிகளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தவோ கூடியது விஜியின் அனுபவங்கள்' என்கிறது படைப்பாளிகள் உலகம்.

அந்தளவுக்கு இவர் சந்தித்த மரணங்களும் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் மனதை உலுக்குவதாக இருக்கின்றன.





மத்திய சென்னையின் பரபரப்பான பகுதி அது. அந்த ஏரியாவின் நெரிசல் மிகுந்த தெருக் களுக்கிடையே பத்துக்குப் பத்து அளவு கொண்ட அறையில் இருக்கிறது விஜியின் வாழ்க்கை. அவரை நாம் சந்தித்தபோது... பறை அடித்து மரணத்தைப் பற்றிப் பாடிவிட்டு, தன்னைப் பற்றி நம்மிடம் பேசினார் மரண கானா விஜி.

""என்னைப் பெத்தவங்க யாருன்னு எனக்குத் தெரியாது. எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மெரினா பீச்சாண்டதான் விழுந்து கிடந் தேன். போலியோ அட்டாக் ஆன மாதிரி ரெண்டு காலும் சூம்பிப் போனதால நடக்க முடியாம ஒரே இடத்துல விழுந்து கெடப்பேன். என்ன பெத்தவங் களுக்கு என்ன கஷ்டமோ... பீச்சுல வீசி எறிஞ் சிட்டுப் போயிட்டாங்க. பொறந்த கொழந்தயா இருந்தப்பவே கெடாசிட்டாங்களா? இல்ல... மூணு, நாலு வயசானப்புறம் வீசினாங்களான்னு எனக்குத் தெரியலை. ஆனா எனக்கு நெனவு தெரிஞ்சப்ப பீச்சுலதான் நகர முடியாம கெடந்தேன்.

ஒருநாள் ஒரு அம்மா என்னப் பார்த்து "என்னடா தம்பி இங்கேயே கெடக்கிற? உன்னால நடக்க முடியாதா?'ன்னு கேட்டாங்க. என்கிட்டே பேசுன முதல் உறவு அவங்கதான். என்னோட நெலமையைப் பாத்துட்டு, ஒரு டீயும் பன்னும் வாங்கித் தந்தாங்க. அமிர்தமா இருந்துச்சு.

அவங்களுக்கு 25, 26 வயசு இருக்கும். குட்டையா, கறுப்பா இருந்தாங்க. நான் டீயைக் குடிச்சதும் "என் பேரு விஜி. என்னைக் கேட்டு நெறைய ஆம்பளைங்க வருவானுங்க. வந்தா... அதோ அங்கே இருக்கேன்னு சொல்லிவுடு'ன்னு சொன்னாங்க. அப்பதான் அவங்க விபச் சாரின்னு புரிஞ்சது. விஜி சொன்ன மாதிரி நெறய ஆம்பளைங்க வந்தானுங்க. நானும் சொல்லிவுட்டேன். நான் பார்த்த மொத தொழில்... இந்த மாமா வேலதான்.

நாலுபேருகிட்ட படுத்து எழுந்திரிச்சதாலே எனக்கு பால், டீ, பரோட்டான்னு வாங்கிக் கொடுக்கும் விஜி. அதுலதான் எப்படியோ உயிர் வாழ்ந்தேன். என்னால நடக்க முடியாததால... கொஞ்சம் காசு போட்டு ஒரு ஆசாரிக்கிட்ட சொல்லி நாலு வீலு வெச்ச ஒரு கட்டையை விஜி வாங்கிக் கொடுத்துச்சு. அதுல உட்கார்ந் துக்கிட்டு தரையை தேச்சுக்கிட்டுப் போவேன். எனக்குக் கெடச்ச மொத வாகனம் அதுதான்.

ஆளுங்க கெடைக்காதன்னைக்கு சீக்கிரமே என்கிட்டே வந்துடுவாங்க. செம மப்புல இருப்பாங்க. அவங்கள கட்டிப்புடிச்சுக்கிட்டு தூங்கு வேன். அந்த உஷ்ணம் எனக்கு ரொம்ப புடிச்சிருந் தது. இப்படியே நாட்களும் நகர, நானும் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன், என்னை உயிருக்கு உயிரா பார்த்துக்கிட்ட விஜி... ஏரியாவ மாத்திட்டா போல. மூணு நாளு, நாலு நாளு கழிச்சி ஒருமுறை மெரினா பீச்சாண்ட வருவாங்க. வரும்போது ஏதாச்சும் எனக்கு வாங்கிட்டு வரும்.

"எங்கே விஜி போனே'ன்னு கேட்டேன். "இப்பல்லாம் தொழில் பண்ண முடியலடா. அடிக்கடி காய்ச்சல், இருமல்னு வருது. ஆஸ்பத்திரியாண்ட போயிட்டு வந் தேண்டா'ன்னு சொல்லும். அப்புறம் ஒருநா ராத்திரி 12 மணிக்கு வந்த விஜி... "என்னால முடியல. நான் படுத்துக் கிறேன். என் கூடவே இரு'ன்னு சொல்லி அப்படியே படுத்துக்கிட்டாங்க. ஒரு கோணி எடுத்து போர்த்தி விட்டுட்டு அதுக்குள்ளே நானும் புகுந்துக்கிட்டேன். காலைல எழுந்து பார்த்தா... ராத்திரி எப்டி கெடந்தாங்களோ... அப்படியே கெடந்தாங்க விஜி.

"விஜி... விஜி'ன்னு சத்தம் போட்டு, அடிச்சி, உதைச்சி, எழுப்புனேன். எழுந்திருக்கவே இல்ல. நான் சத்தம் போடுறதைப் பார்த்துட்டு வாக்கிங் போனவங்க, "டேய்... அவ செத்துப் போயிட்டாடா'ன்னு சொல்ல... செத்துப் போயிட்டாங்கன்னா... என்னன்னு தெரியாம முழிச்சேன்.

விஜி பக்கத்துல உட்கார்ந்து அழுதுகிட்டே இருந்தேன். அதுதான் என்னால செய்ய முடிஞ்சது. போற வர்ற மனுஷங்கள்லாம் பார்த்துக்கிட்டே போனாங்களே தவிர... எதையும் செய்யல. இப்படியே ரொம்ப நேரம் கடந்து போச்சு. காக்கா, ஈ, எறும்புன்னு எல்லாம் எங்களச் சுத்திச் சுத்தி வந்ததுங்க.

அப்போஅந்த வழியா போய்க்கிட்டிருந்த ஒரு குப்பை வண்டி எங்ககிட்டே வந்து, "யார்ரா இவ... உங்க ஆத்தாளா?'ன்னு கேட்டுட்டு, எதைப்பத்தியும் யோசிக்காம என்னைத் தூக்கி ஓரமாவும், விஜியைத் தூக்கி குப்பை வண்டியிலயும் போட்டுட்டுக் கிளம்பிப் போனது.

எனக்கிருந்த ஒரு உறவும் போயிடுச்சு. இனி விஜி வரமாட்டான்னு தோணுச்சு. இனி யார் பரோட்டாவும் பன்னும் வாங்கித் தருவாங்கிற ஏக்கம். செத்துப் போய்ட்டாளாமே செத்துப் போயிட்டாளாமேங்கிறது மட்டும் எனக்குள் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.

விஜி, என்ன மொதமொத பார்த்த இடத்துலயே போய் உட்கார்ந்துக்கிட்டேன். எத்ன நாள் அப்படியே இருந் தேன்னு தெரியாது. ஆனா, அங்கேயேதான் கெடந்தேன். விஜியை தெரிஞ்சவன்னும், விஜியோட இருந்த பையன், விஜியோட இருந்த பையன்னு பரிதாபப்பட்டாங்க. ஒரு கட்டத்துல விஜி... விஜி...ன்னு என்னை கூப்பிட, அதுவே என் பேரா ஆயிடுச்சு'' என்று தனக்குப் பெயர் வந்த காரணத்தையும் தான் சந்தித்த முதல் மரணத்தையும் யதார்த்தமாக விவரித்தார் விஜி.

தொடர்ந்து பேசியவர் ""பீச்சாண்ட குப்பைப் பொறுக்கிற பையன் பாபு ஒருநாள் எனக்கு அறி முகமானான். என்கிட்டே வந்து, "உன்ன ரொம்ப நாளா பார்க்கிறேன். இங்கேயே கெடக்கிறியே... உனக்கு அப்பா, அம்மால்லாம் இல்லையான்னு கேட்டான். தெரியலைடான்னு சொன்னேன். உடனே அவன் "சரிடா மச்சான், இனி உனக்கு நான் இருக்கேன்டா'ன்னு சொல்லி கட்டிப் பிடிச்சிக்கிட்டான். எனக்கு கெடச்ச ரெண்டாவது உறவு பாபு.

அவன்ட்ட உனக்கு அப்பா, அம்மா இருக் காங்களாடா மச்சான்னு நான் கேட்க, "அப்பா இருக்கானான்னு தெரியலைடா, அம்மா இருக்கா. கொய்யாக்கா வித்துக்கிட்டு இருக்கா. ராத்திரி யானா தண்ணி அடிப்பா. அதோ தெரியுதே... அந்த கட்டுமரத்துக்குப் பின்னால படுத்துக் கெடப்பா. நிறைய பேரு அவகிட்டே வந்துட்டுப் போவா னுங்க' என்றான். அப்போ எனக்கும் சின்ன வயசுதான்னாலும் பாபு சொன்னதை காது கொடுத்து கேட்க முடியலை. விஜி மாதிரி பாபுவோட அம்மாவும் விபச்சாரின்னு நெனச்சிக் கிட்டேன். பாபுவை பாவமா பார்த்தேன்.

பாபு, குப்பை பொறுக்கிறது எனக்குத் தெரியும்ங்கிறதால நானும் பீச்சுல கெடக்கிற பீர் பாட்டில், பிராந்தி பாட்டில் களை பொறுக்கி வெச்சிருப்பேன். இந்த பாட்டில்களையும் பேப்பரையும் வித்துட்டு அதுல கெடைக்கிற காசுல இட்லி, கிட்லி வாங்கிட்டு வருவான். ரெண்டுபேரும் சாப்பிடுவோம். பிளாட்ஃபார்ம்ல படுத்துக்குவோம்.

இப்படிக் கெடைக்கிற காசுல அப்பப்போ கஞ்சா பொட்டலம் வாங்கி வருவான் பாபு. ராத்திரி நேரத்துல இத ஒரு வலி, வலிடான்னு கொடுப்பான். நானும் வலிப்பேன். அப்படி யே ஆகாயத்துல பறக்குற மாதிரி இருக்கும். எழுந்து ஓடலா மான்னு தெம்பு வரும். அவ்வளவு சக்தி இருந்துச்சு கஞ்சாவுக்கு.

ஒருநா கஞ்சாவ நல்லா வலிச்சுட்டு ரொம்ப நேரம் தூங்கிட்டோம். வெயிலு சுள்ளுன்னு அடிச்சதும் அந்தச் சூட் டுல எழுந்திருச்சோம். பீச்சுல தூரத்துல கூட்டமா இருந்துச்சு. அங்கே ஏதோ கூட்டமா இருக்கு. வாடா போய் பார்ப்போம்னு சொல்லிக்கிட்டே, என் கட்டை வண்டியில கயிற கட்டி இழுத்துக்கிட்டுப் போனான் பாபு.

கூட்டத்துக்கிட்டே போய் கூட்டத்தை வெலக்கி எட்டிப் பார்த்தோம். ஒரு பொம்பளை முகம் மண்ணுக்குள்ள புதைஞ்சு இருந்தது. அதப் பார்த்ததும் "டேய்... அவ எங்கம்மாடா'ன்னு கத்திக்கிட்டே போய் அவளை எழுப்பினான். ஆனா எழுந்திரிக்க வே இல்லே. "ஏய்... காலையிலேயே தண்ணி அடிச்சிட்டியா? எழுந்திரி... எழுந்திரி...'ன்னு கத்தினான் பாபு. அப்போ அங்கி ருந்தவங்க "உங்கம்மா செத்துப் போயிடுச்சுடா... எவனோ அடிச் சுப் போட்டுட்டுப் போயிட்டான்'னு சொன்னாங்க. செத்து போயிட்டாளா? நாங்க என்ன பண்றதுன்னு பாபு கேட்க... கூடி யிருந்தவங்க எல்லாரும் அவங்ககிட்ட இருந்த காசை எடுத்துப் போட்டுட்டுக் கிளம்பிப் போனாங்க. அந்த காசையெல் லாம் பொறுக்கி எடுத்துக்கிட்டு "வாடா மச்சான் போகலாம். நல்ல ஓட்டலா பார்த்து சாப்பிடலாம்'னு சொல்லிட்டு என்னை கூட்டிட்டுப் போனான்.

ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு வெளியே வந்தோம். எங்களைக் கடந்து ஒரு குப்பை லாரி போனது. அதுல பாபுவோட அம்மா. அத அவன்கிட்டே காட்டினப் போ, "ஆமாடா... அவ எங்க அம்மாதான். நாம என்னடா பண்ண முடியும்?'னு சாதாரணமா சொன்னான். அவன் அப்படிச் சொன் னதும் அந்த மரணமும் என்னை ஏதோ பண்ணிடுச்சு. நாமளும் இப்படித்தான் செத்துப் போவோமான்னு நெனைப்பு வந்துச்சு. ரொம்ப நாளைக்குப் பெறகு அன்னிக்கு நான் அழுதேன்''.

(தொடரும்)

No comments:

Post a Comment