Thursday, August 19, 2010

பவர்கட் இல்லாத ஊராட்சி!


வெறும் 5 லட்சம் செலவில் கரண்ட் கட் இல்லாத நிர்வாகமாகிவிட்டது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி. பாம்பன் ஊராட்சியில் உள்ள 40 தெருவிளக்குகளும், மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீரேற்றும் மோட்டார் பம்புகளும் தடையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

""எங்க கலைஞர் அரசு செய்ற அத்தனை நல்ல விஷயங்களையும் இந்த கரண்ட் கட் அமுக்கிப்பிடுது. அதே மாதிரிதான் எங்க ஊராட்சிக்கு நாங்க செய்ற அத்தனை நல்ல காரியத்தையும் ஒண்ணுமில்லாமப் பண்ணிக்கினு இருந்திச்சு இந்தக் கரண்ட் கட். இந்த சூழ் நிலையிலதான் நம்ம துணை முதல்வர், சேலத்தில் இருக்கிற தமிழ்நாடு எரிசக்தித் துறை நிறு வனத்திடம், "ஊராட்சிகளில் சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கிறதுக்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்யணும்'னு உத்தரவிட்டார்.

பரிசோதனைக்காக எங்க ஊராட்சியிலும், கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையிலும் செயல்படுத்தினார்கள்.

எங்க பஞ்சாயத்து அலுவலகத்தி லேயே சோலார் தகடுகளை பதித்தார்கள். பகல் முழுதும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் கிடைக்குது. ராத்திரியில காற்றாலை-விண்ட்மில் மூலம் மின்சாரம் கிடைக் குது. இந்த கரண்டை சேமிக்க 20 பேட்டரி களையும் கருவிகளை யும் ஒரு அறையில் செட் பண்ணிட்டாங்க. மொத்தம் 2000 வோல்ட் கரண்ட் கிடைக்குமாம். எல்லாத் துக்கும் சேர்த்து 5 லட்சம்தான் செலவு. இனிமேல் கரண்ட் பில் செலவில்லை. யாரும் வந்து பீஸை புடுங்கமாட்டாங்க. பம்பு மோட்டாரும் தெருவிளக்குகளும் தாராளமா இயங்கும்'' நிறைவோடு சொன்னார் பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் ஹனீபா.

பாம்பன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டு, செயல்பட்டுக்கொண்டிருக்கும் சோலார் மற்றும் காற்றாலைகளின் செயல்பாடு தடங்கல் இன்றி செயல்படுமா?

""சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நல்ல திட்டம் இது. செயல்பாட்டை பொறுத்திருந்தே முடிவு செய்ய வேண்டும். அரசு உத்தரவிட்டால், எல்லா ஊராட்சிகளுக்கும் பரவலாக்கலாம்'' என்கிறார் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன்.

ஊராட்சித்துறை அதிகாரி ஒருவரிடம் சோலார் சிஸ்டம் பற்றி கேட்டோம்.

""நிச்சயம் இது பயனுள்ள திட்டம்தான். சினிமா தியேட்டர்கள், ரைஸ்மில், லேத் ஒர்க்ஸ், கல்யாண மண்டபங்களில் இந்த சோலார் எனர்ஜி மற்றும் மினி சைஸ் விண்ட்மில்லை பொருத்திக் கொண்டால் மின் பற்றாக்குறை ஏற்படாது'' என்றார் அந்த அதிகாரி.

""தற்போது 2000 வோல்ட் மின்சாரம் தயாரிப்பதற்கு, சோலார் தகடுகளும் காற்றாலையும் அமைக்க 5 லட்சம்தான் செலவாகிறது. இதையே தனியார்கள் செய்துகொள்ள அரசு அனுமதித்தால் செலவு இன்னும் குறையும்.

50 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவோர் சோலார் + மினி காற்றாலை மின் உற்பத்தியை செய்துகொள்ள வேண்டுமென்று அரசு உத்தரவிட்டால்... தமிழகத்தில் மின் புரட்சியே ஏற்பட்டுவிடும்'' என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment