Friday, August 27, 2010
இலங்கையின் அழுகுணி ஆட்டம்!
ஆட்டம் தொடங்கும் போதே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நகம் கடிக்கும் டென்ஷனுடன் டி.வி. பெட்டி முன் உட்கார்ந்தார்கள். இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற வேண்டுமானால் இந்தப் போட்டியில் எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமை இரு நாட்டு அணிகளுக்கும் இருந்தது. இந்தியா- இலங்கை-நியூசிலாந்து ஆகிய நாடுகளுக் கிடையே நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் பந்தயத்தின் முக்கிய போட்டி இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையே இலங்கையின் தம்புலா மைதானத்தில் ஞாயிறு (ஆக.22) மதியம் தொடங்கியது.
டோனி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்றதுமே, நல்ல சகுனம் தொடங்கி விட்டதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எடுத்த எடுப்பிலேயே ஏமாற்றம். அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்துவந்தவர்களாவது ரன் குவிப்பார்கள் என்று பார்த்தால்.. தினேஷ்கார்த்திக், யுவராஜ்சிங் ஆகியோருக்கும் எல்.பி.டபிள்யூ கொடுத்து விரலை உயர்த்தினார் அம்பயர். இப்படியே 103 ரன்களில் சுருண்டது இந்தியா. பதினைந்தே ஓவர்களில் இந்த வெற்றி இலக்கை எட்டி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை.
மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினால் ஸ்டேடியத்திலேயே அவர்களுக்கு எதிராக குரல் எழுப்புவதும், இந்திய வீதிகளில் அவர்களின் உருவங்களை கொடும்பாவி கொளுத்தி செருப்பால் அடிப்பதும் இந்திய ரசிகர்களின் வழக்கம். ஆனால், இந்த முறை அவர்களின் கோபம் முழுக்க முழுக்க இலங்கை மீது திரும்பியது.
""அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க. நம்ம ப்ளேயர்கள் 4 பேருக்கு அவுட் கொடுத்தது பற்றி டவுட் இருக்கு. டி.வி.யில் அதை ரீ-ப்ளே செய்தப்ப, அவங்களுக்குத் தப்பான முறையிலே எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டி ருக்குன்னு தெரிஞ்சுது. ரெய்னாவை சங்கக்கரா கேட்ச் பிடித்ததா சொன்ன தும் பொய்னு தெரிஞ்சுது'' என்கிறார் கிரிக்கெட் ஆட்டத்தை கண் இமைக்காமல் டி.வி.யில் பார்த்த சிவகங்கை முருகன்.
""இருநாடுகள் விளையாடும் போட்டிகளில் ஒரு அம்பயர், போட்டி நடத்தும் நாட்டின் அம்பயராக இருப்பார். இன்னொரு அம்பயர் இருநாடுகளுக்கும் சம்பந்தமில்லாத அம்பயராக இருப்பார்.
இறுதிப்போட்டிக்கு இலங்கை போக வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு அம்பயர் குமார் தர்மசேனா 3 தப்பான அவுட் கொடுத்திருக் கிறார். இறுதிப்போட்டிக்கு இந்தியா போய்விடக்கூடாது என்பதற்காக 1 தப்பான அவுட் கொடுத்திருக்கிறார் பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ரவூஃப்'' என்கிறார் கிரிக்கெட் ரசிகரான திருமாறன், கோபம் கொப்பளிக்க.
சுரேஷ்ரெய்னாவுக்கு அவுட் கொடுக்கப் பட்டதை, தம்புலா போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அருண்லால் ""நம்பவே முடியவில்லை. நாங்கள் துல்லியமான ஒலியமைப்பு வசதிகளோடு இருக்கிறோம். பேட்டில் பந்து பட்டதற்கான எந்த சத்தமும் கேட்கவேயில்லை. அப்புறம் எப்படி சங்கக்கரா கேட்ச் பிடித்தார் என்று தீர்ப்பளித் தார்கள் என்று தெரியவில்லை'' என ஓப்பனாகவே வர்ணனை செய்தார். அவருடன் இணைந்து வர்ணனை செய்த இலங்கையின் முன்னாள் வீரர் ரணில் அபய்நாயகே, "இந்திய வீரர்கள் துரதிர்ஷ்டவசமான நிலையில் இருக்கிறார்கள்' என்று அம்பயரின் தவறான தீர்ப்பை மறைமுக மாகச் சுட்டிக்காட்டினார்.
நடுவர்களின் மோசமான தீர்ப்பினால் இந்தியா தோற்கடிக்கப்பட்ட சர்ச்சையை ஆங்கிலச் சேனல்கள் பெரும் விவாதமாக்கி, ரசிகர்களின் கொதிப்பையும் கிரிக்கெட் வல்லுநர்களின் கண்டனத்தையும் ஒளிபரப்பின. உடனே இலங்கை கேப்டன் சங்கக்கரா, ""டெசிஷன் ரெஃபரல் சிஸ்டம் என்கிற மறுஆய்வு முறையை இனி போட்டிகளில் நடைமுறைப்படுத்தலாம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் தவறுகளை சரிசெய்ய முடியும்'' என்று சப்பைக்கட்டு கட்டினார்.
உங்க தொழில் நுட்ப யுக்தியெல்லாம் தெரியாதா என்று கொந்தளிக்கிறது இந்தி யத் தரப்பு. இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற ஒரு ரன் தேவைப்படுகிறது. 99 ரன்களுடன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷேவாக் சதம் அடிக்கவும் ஒரு ரன் தேவைப் பட்டது. அணியின் வெற்றியையும் ஷேவாக்கின் 13-வது சதத்தையும் காண ரசிகர்கள் பரவசத்துடன் இருந்த நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் ரன்தீவ் நோ-பால் போட்டு ஷேவாக்கின் சதத்தை தடுத்தார்.
ரன்தீவ்வுக்கு அதே அணியின் வீரர் தில்ஷான்தான் இந்த நோ-பால் ஆலோசனை யைத் தெரிவித்திருக்கிறார் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து... இலங்கை அணியினர் திட்டமிட்டே இப்படி மோசமான நடத்தைகளை மேற்கொள்கிறார்கள் என்பது புரிகிறது என்கிறார்கள் இந்திய கிரிக்கெட்டின் சீனியர்கள்.
உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவரான தமிழக வீரர் ஸ்ரீகாந்த்திடம், இலங்கை அணியின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகள் பற்றிக் கேட்டோம். ""நான் தேர்வுக்குழுவில் இருப்பதால் உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. போட்டிகள் முழுமையாக முடியட்டும் விரிவாகப் பேசுகிறேன்'' என்றார். ஜென்டில்மேன் கேம் எனப்படும் கிரிக்கெட்டை அடாவடி ஆட்டமாக ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை என்பதே சர்வதே கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு.
இனப்படுகொலைகளால் சர்வதேச அரங்கில் குற்றவாளியாகப் பார்க்கப்படும் இலங்கை, கிரிக்கெட் போட்டிகள், சினிமா விழாக்கள் மூலம் தன் கொடூர முகத்தை மாற்ற நினைக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்தியாவின் மூக்கு ஒவ்வொரு முறையும் அறுபட்டே வருகிறது. இம்முறை நம் கிரிக்கெட் வீரர்கள் சென்று, மூக்கறுபட்டு அவமானத் துடன் திரும்பியிருக்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment