Saturday, August 21, 2010

சட்டக்கல்லூரி ஏள போலீஸ்! மீண்டும் டென்ஷன்!


சென்னை சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமாரை போலீஸ் அடித்தே கொன்று விட்டது’என்ற ரீதியில் 18-ம் தேதி பரபரப்புத் தகவல் ஒன்று பரவ... பாரிமுனைப் பகுதி பதட் டத்தில் மூழ்கியது. கொந் தளித்துப்போன சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள்.... திபு திபுவென பாரிமுனையின் நான்கு புறத்தையும் முற்றுகையிட்டு சாலைமறியலில் குதித்தனர். சாலைகளின் குறுக்கே நைலான் கயிறுகளைக் கட்டி... யாரையும் அந்த வழியாய் செல்ல விடாது தடுத்தனர். இதனால் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படி அப்படியே நிற்க... டிராஃபிக் ஜாமில் மூச்சுத்திணற ஆரம் பித்தது வடசென்னை. தகவல் காக்கிகளுக்குப் போக... போலீஸ் டீம் ஏரியா முழுக்க ரவுண்ட் கட்டியது. காக்கிகளின் தலையைப் பார்த்ததும் மேலும் ஆவேசமான மாணவ- மாணவிகள்..

""போலீஸ் அராஜகம் ஒழிக.’ ‘காக்கிச் சட்டையே எங்கள் கருப்புக்கோட்டுடன் மோதாதே'' என்றெல்லாம் குபீர்க் கோஷங்களை எழுப்பினர். பந் தோபஸ்துக்கு நின்ற காக்கிகளுக்கு... ‘எது நடந்தாலும் அமைதியாகவே இருங்கள்’’ என உத்தரவு வந்தபடியே இருக்க... அவர்கள் இறுகிப்போய் நின்றனர்.

டூவீலர் வாசிகளும் ஃபோர்வீலர் வாசிகளும் காக்கிகளிடம் நெருங்கி "என்ன சார் வேடிக்கைப் பார்த்துகிட்டு இருக்கீங்க. "எங்களுக்கு பாதை ஏற்படுத்திக்கொடுங்க'’ என்று கேட்க.. காக்கிகளோ ‘"எங்களுக்கு எதுக்குங்க வம்பு. முடிஞ்சா நீங்களே அவங்கக்கிட்ட கேட்டுக்கிட்டு போங்க' என்று முகத்தைத் திருப்பிக்கொண்டனர்..


போராட்டக் களத்தில் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்களிடம் என்ன நடந்தது என்றோம். கொதிப்பில் இருந்த அவர்கள்...‘""எங்க சட்டக் கல்லூரியில் ஃபைனல் இயர் படிக்கும் அசோக்குமாருக்கு சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகர். நேத்து நைட் செங்கல்பட்டில் இருந்து சொந்த ஊருக்குப்போக கே.சி.கே. என்ற தனியார் பஸ்ஸில் ஏறி இருக்கார். அப்ப பக்கத்து சீட்டில் இருந்த வடநாட்டுக்காரர் ஒருத்தருக்கும் இவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு.. உடனே கண்டக்டர் பஸ்ஸை திருக்கழுக்குன்றம் போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் நிறுத்தி யிருக்கார். அப்ப அங்க இருந்த போலீஸ் வெறிபிடிச்ச மாதிரி அடிச்சி நொறுக்கியிருக்காங்க. நினைவிழந்து விழுந்த அசோக்கை அவங்களே செங்கல் பட்டு மருத்துவமனையில் அட்மிட் பண் ணிட்டுப் போய்ட்டாங்க'' என்றார்கள் ஆவேசமாய்.

நாம் அந்த கே.சி.கே. பஸ்ஸின் நடத்துநரான வாசுதேவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது...
“""அந்தப் பையன் பஸ்ல ஏறும்போதே சரி மப்பில் இருந்தார். "டேய் பஸ்ஸைப் பார்த்து ஒழுங்கா ஓட்டுங்கடா... ஏற்கனவே ரெண்டு ஆக்ஸிடண்ட்ல... மூணு மூணுபேரா ஆறுபேரைக் கொன்ன மாதிரி... இப்பவும் பண்ணாதீங்கடா'ன்னு சொன்னவர் எங்க ளைப் பச்சைப் பச்சையாத் திட்ட ஆரம்பிச்சார். லேடீஸ் பாசஞ்சருக்கு எதிரில் இப்படி அவர் அசிங்கமா பேசியதால்.... மத்த பயணிகள் அவரோட சண்டைக்குப் போனாங்க. தள்ளுமுள்ளு ஆகவும்தான் நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல அவரை ஒப்படைச் சோம்.

என்கிட்ட புகாரை எழுதி வாங்கிக்கிட்டு அனுப்பிட்டாங்க. அதுக்குப்பிறகு என்ன ஆச்சுன்னு எங்களுக்குத் தெரியாது'' என்றார் சங்கடக் குரலில்.

நாம் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவைத் தொடர்புகொண்டு... ""போலீஸ் தான் மாணவர் அசோக்குமாரை குற்றுயிரும் குலைஉயிருமாக அடித்துப்போட்டதாக குற்றம் சாட்டப்படுகிறதே?''’ என்றோம். எஸ்.பி.யோ ""அந்த மாணவரை பயணிகள் தாக்கியிருக்காங்க. இதை விசாரிச்ச திருக்கழுக்குன்றம் போலீஸ்.. அவரை சொந்த ஜாமீனில் அவரது உறவினரான கமலக் கண்ணனோடு அனுப்பி வைத்தது. ஆனால் அவர் வீட்டுக்குப் போகாமல் நேராக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் போய் அட்மிட் ஆகியிருக்கார். தகவல் தெரிஞ்சி இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் போனபோது.. உங்ககிட்ட எதுவும் சொல்லமுடியாது. மேலதிகாரிகளிடம்தான் பேசுவேன்னு சொல்லியிருக்கார்.. அப்புறம் என்ன நினைச்சாரோ மிட்நைட் 1 மணியளவில் தன் கைலியால் பாத்ரூமில் தூக்குப்போட்டுக்க முயற்சி பண்ணியிருக்கார். அவரை காப்பாத்தி சிகிச்சைக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. தற்கொலை முயற்சியில் அவர் கழுத்தெலும்பு முறிஞ்சிருக்கு. இதுதான் நடந்தது''’ என்றார்.

மாணவர் போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் செந்தில்குமாரோ ""தற்கொலை முயற்சி என்பதெல்லாம் போலீஸ் இட்டுக்கட்டும் கதைகள். மாணவர் அசோக்குமார் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தில் இருப்பவர். ஏற்கனவே இதே இன்ஸ்பெக்டர் இலங்கை அகதிகள் முகாமுக்குள் போய் தாக்குதல் நடத்தியபோது... அவரை எதிர்த்து முன்வரிசையில் இருந்து போராடியவர்தான் அசோக்குமார். அந்தக் கோபத்தில்தான் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் டீம் அவரை கொடூரமாகத் தாக்கியிருக்கிறது. தாக்கிய இந்த காக்கிகள் மீது சாதாரண வழக்கைப் போட்டிருக்கிறார்கள்.

அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை வழக்கைப் பதிவுசெய்யவேண்டும். போலீஸ் விசாரணைக்கு பதிலாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை ஓயமாட்டோம். தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்ற பயத்தில் போலீஸ் பல ஊர்களிலும் சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தபடி இருக்கிறது. இந்த அடக்குமுறைகளை கடைசிவரை எதிர்ப்போம்'' என்றார் ஆவேசமாக.

மாணவர் அசோக்குமார்.. நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு அப்பல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment