Monday, August 16, 2010

யுத்தம் 79 - நக்கீரன் கோபால்


கடும் மழையினால் சென்னையில் அன்றைக்கு வரலாறு காணாத டிராபிக் ஜாம். அண்ணாசாலை உள்பட எல்லா இடங்களிலும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இரவு 3 மணி வரை டிராபிக் க்ளியராகவில்லை. சன் டி.வியில் இது பெரிய அளவில் ஃப்ளாஷ் செய்யப்பட, பொதுமக்கள் தங்கள் அவதியை டி.வி.மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கடுப்பாகிவிட்டார் ஜெயலலிதா. அரசாங்க தரப்பிலிருந்து பதிலறிக்கைகள் பறந்து வந்தன.

"சென்னையில் டிரா பிக் ஜாம் ஏற்படுவது சகஜம்தான். இதை வேண்டுமென்றே பெரிதாகக் காட்டுகிறார் கள். தி.மு.க. ஆட்சியில் சரி யாக வடிகால் வசதி செய்யாததால் தான் மழை நீர் தேங்கி, இந்தளவுக்கு டிராபிக் ஜாம்' என்றது அரசாங்க அறிக்கை. மழையால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அரசியல் லாவணி நடந்து கொண்டிருந்தது.

நாம், கர்நாடக ஹைகோர்ட் ஆர்டர் காப்பிக்காக காத்துக் கொண்டிருந்தோம். டூவீலருடன் மழையில் வசமாக சிக்கிக் கொண்ட சிவக்குமார், பெரும் போராட்டத் துக்குப்பின், அலுவலகம் சென்றார். தம்பி குருவும் டிரைவர் கணேசனும் காத்திருந்தனர். அலுவலகத்தைத் திறந்து, எங்களுக்கு அந்த ஆர்டர் காப்பியை அனுப்பியபோது 3.15 மணி.

ஃபேக்ஸ் கிடைத்ததும், அதை 7 செட் ஜெராக்ஸ் போட்டு ஆக்ஸ் போர்ட் லாட்ஜுக்கு வேகமாக வந்து சேர்ந்தார்கள் ப.பா.வின் நண்பர் கேசவனும், தம்பி ஜீவாவும், முகவர் பெரியசாமியும்.

மறுநாள், நவம்பர் 1-ந் தேதி வெள்ளிக்கிழமை காலையில் மைசூர் தடா கோர்ட். குறித்த நேரத்தில், அட்வகேட் ஈஸ்வர சந்திரா தன் ஜூனியர்களுடன் ஆஜராகிவிட்டார். தம்பி சிவசுப்ர மணியனை கோவை சிறையிலி ருந்து மைசூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். மைசூர் தடா கோர்ட்டில் இன்று பெயில் கிடைத்தாகவேண்டும். இல்லையென்றால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். திங்களன்று தீபாவளி. அதற்காக மேலும் 3 நாட்கள் கோர்ட் விடுமுறை. அதன் பின் வியாழனன்றுதான் கோர்ட். சிவாவின் அப்பாவோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

திக்.. திக்.. மனநிலை யோடு காத்திருக்கிறோம்.

அட்வகேட் ஈஸ் வர சந்திரா லைனுக்கு வந்தார்.

""success... I got the bail. also I execute the bond.. நீங்க சொன்னது போலவே கோவை சிறைக்கு எக்ஸிக்யூட் பண்ணி வாங்கிட்டேன்.''

காதுக்குள் தேனாக இனித்தது, அட்வகேட் ஈஸ்வர சந்திரா சொன்ன தகவல். ஜாமீன்தாரர்களோடு கோர்ட் வளாகத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆத்தூர் சேகரும் அவரது நண்பர் சரவணனும். சேகரைத் தொடர்பு கொண்டேன்.

""தம்பி.. சிவாவுக்கு பெயில் கிடைச்சிடிச்சி... அட்வகேட் சொன்னார்.''

""ஆமாங்கண்ணே... நாங்க இங்கேதாண்ணே காத்துக்கிட்டிருக்கோம். சிவாவை போலீஸ்காரங்க அழைச்சிட்டு வந்தப்பவே நாங்க பார்த்துட்டோம். வேனில் அவரை உட்கார வச்சிருந்தபோதே எல்லாத்தையும் பேசிட்டோம்.''

""தம்பியை கோவை சிறைக்கு மறுபடியும் எப்ப கொண்டு வர்றாங்களாம்? விசாரிச்சீங்களா?''

""அண்ணே... அதுக்குள்ளே அவரை உள்ளே கூட்டிட்டுப்போயிட்டாங்க.''

-சிவாவை எப்போது கோவைக்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு முன், மைசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிவாவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஒரு முறை, அவரோடு இன்னொரு கைதியை யும் மைசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததால், இருவரையும் ஒரே வேனில் கோவையிலிருந்து அழைத்துப் போனார்கள். கூட வந்த கைதியின் வழக்கு, மறுநாள்தான் விசாரணைக்கு வந்தது. அதனால், சிவாவை 2 நாள் மைசூர் சிறையிலேயே வைத்துவிட்டார்கள். இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற பதட்டம் நமக்கு இருந்தது. தம்பியை நேரடியாகக் கோவைக்கு தாமதமின்றி கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.





எல்லாமே நமக்கு நம்பிக்கைதான். மைசூர் தடா கோர்ட்டில் பெயில் கிடைத்துவிடும் என்பதும் நாம் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கைதான். அங்கே பெயில் கிடைக்காமல் போயிருந்தாலோ, bondஐ கோவை சிறையில் execute பண்ணுவதற்கு அனுமதி அளிக்காமல் போயிருந்தாலோ சிவாவை வெளியில் எடுப்பது சிரமம்தான். பெயில் கிடைத்துவிடவேண்டும், bond execute பண்ணுவதற்கான உத்தரவை வாங்கிவிடவேண்டும் என்ற நம்பிக்கையுடன் நம்முடைய முயற்சிகள் தொடர்ந்தன. அதற்கான பலனும் கிடைத்தது.

மைசூர் கோர்ட்டில் சிவாவுக்கு பெயில் கிடைத்துவிட்டது என்ற தகவல் எனக்குத் தெரியவந்தபோது, காலை மணி 10.30. அங்கிருந்து கோவைக்கு எவ்வளவு நேரத்தில் வரமுடியும் என்று சேகரிடம் கேட்டேன்.

நாலரை மணி நேரத்தில் வந்துவிடமுடியும்.

அப்படி யென்றால், அதிகபட்சம் சாயங்காலம் 3 மணிக்கெல்லாம் சிவாவை கோவைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். நாம் bond execute பண்ணி, அவரை வெளியில் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. நம்முடைய நம்பிக்கையை அதி கரிக்கச் செய்யும் விதத்தில் மற்ற நீதிமன்றங் களில் ஆஜராகியிருந்த வக்கீல்களிடமிருந்தும் வெற்றிச் செய்திகள் வரத்தொடங்கின.

பவானி கோர்ட்டிலிருந்து வக்கீல் சிவராமன், ""இங்கே ஓ.கே.யாயிடிச்சி. கண்டிஷனை தளர்த்தி, கர்நாடக ஹைகோர்ட் ஆர்டர்படி மைசூர் சிட்டி கமிஷனர் முன்னாடி கையெழுத்துப்போட பவானி மாஜிஸ்ட்ரேட் ஒத்துக்கிட்டார்'' என்றார்.

சத்தியமங்கலத்திலிருந்து பேசிய வக்கீல் வெங்கடேசன், ""ஷ்யூரிட்டிகள் ஓ.கே. ஆயிடிச்சி. கண்டிஷனை தளர்த்தி, நாம கேட்டபடி மாஜிஸ்ட்ரேட் ஆர்டர் போட்டிருக்கிறார்'' என்றார்.

அடுத்த போன், வக்கீல் அபுபக்கரிட மிருந்து வந்தது. அவர் கோவை நீதிமன்ற வளாகத்திலிருந்து பேசினார். ""நாம பேசியது போலவே, bond execute பண்ணியாச்சு. மைசூரில் தங்கி சிவா கையெழுத்துப் போடணும்ங்கிற கண்டிஷனை கோவை கோர்ட் ஏத்துக்கிடிச்சி.''

எல்லா இடத்திலிருந்தும் நாம் எதிர்பார்த்த வெற்றிச் செய்தி கிடைத்தது. சிவா எப்போது கோவைக்கு வருவார் என்பதை எதிர்பார்த்து நாமும் கோவையில் காத்திருந் தோம். நிருபர் மகரனைத் தொடர்புகொண் டேன். ஆச்சரியம் இந்த முறை உடனடியாக அவர் லைனுக்கு வந்துவிட்டார்.

""தம்பி.. நீங்க கோவை சிறை வாசலிலே வெயிட் பண்ணுங்க. உங்ககூட என் ஃப்ரெண்ட் சுடரோனும் இருப்பார். சிவாவை அழைச் சிட்டு வந்ததும் எனக்கு தகவல் சொல்லுங்க'' என்றேன். சிவா எப்போது அழைத்துவரப்படு கிறார் என்பதை கவனிக்கும் பொறுப்பை மகரன், நண்பர் சுடரோன், கோவை முகவர் வெங்கடாச்சலம் மூவரிடமும் ஒப்படைத்திருந் தேன். மைசூர் தடா கோர்ட்டில் கொடுக்கப் பட்ட ஷ்யூரிட்டிப் போக, மற்ற ஷ்யூரிட்டி களோடு அங்கிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார் ஆத்தூர் சேகர்.

கலவர பூமியாக இருக்கும் கர்நாடகாவில், அவரது பயணம் தடைப்பட்டால், ஷ்யூரிட்டி கொடுத்து, சிவாவை வெளியில் எடுப்பது சிரமமாகிவிடும் என்பதால் அவரை மைசூரிலிருந்து முதுமலை, ஊட்டி, மேட்டுப்பாளையம் வழியாகக் கோவைக்கு வரச்சொன்னோம். அவரும் விரைந்து வந்து கொண்டிருந்தார்.

சிவாவுக்கு எல்லா கோர்ட்டிலும் bond execute பண்ணிய தகவலை தம்பி காமராஜிடமும், மற்ற தம்பிகளிடமும் சொன்னேன். தம்பி உடனடியாக கோவைக் குப் புறப்பட்டார். சிவா விடுதலை என்கிற பெரும் சட்டப்போராட்டத்துக்கு யாரெல்லாம் பாடுபட்டார்களோ அவர்கள், சிவா சிறையிலிருந்து வரும்போது அங்கே இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

வழக்கறிஞர் ப.பா.மோகனும் அவர் டீமும் கோவைக்கு வந்து சேர்ந்திருந்தனர். தம்பி காமராஜ் வந்துகொண்டிருந்தார். தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இக்கட்டான நேரங்களிலும் பயணம் செய்த நமது பெங்களூரு நிருபர் தம்பி ஜெ.பி, அவருக்குத் துணையாக இருந்த அவரது மச்சான் பிரசாத், அண்ணன் மகன் ஹேமந்த், இன்னொரு மச்சானும் போட்டோகிராபருமான ஷ்யாம் ஆகியோரையும் கோவைக்கு வரச் சொல்லிவிட்டேன்.

நண்பர் சுடரோனை மறுபடியும் தொடர்புகொண்டு, ""என்னாச்சு?'' என்றேன்.

""இன்னும் சிவாவை அழைச்சிட்டு வரலை'' என்றார்.

அப்போது மணி, மதியம் 2.15.

பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது. எப்படியும் சிவா வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. சுடரோனிடம், ""கோவை முகவருடன் போய் 3 சால்வை வாங்கிட்டு வந்திடு'' என்றேன்.

சிறையிலிருந்து தம்பி சிவா விடுதலை யாகும்போது அவருக்கு நான், தம்பி காமராஜ், அட்வகேட் ப.பா.மோகன் மூவரும் சால்வை போர்த்தி வரவேற்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

அட்வகேட் ப.பா.மோகன் தன் ஜூனியர்கள் லெனினையும் திருஞானசம்பந்தத்தையும் கோவை ஜெயிலுக்கு அனுப்பி, எங்க சைடில் எல்லாம் ரெடின்னு சிறை அதிகாரிகளிடம் சொல்லச் சொல்லியிருந்தார். அங்கே சென்ற ஜூனியர் களுக்கு, சிறை அதிகாரிகளிடமிருந்து ஒரு புதுத்தகவல் கிடைத்தது.

""சிவா... சிறைக்குள்ளேதான் இருக்கிறார்''- என்பதுதான் அந்தத் தகவல். அதைக் கேட்டதும் நமக்கு அதிர்ச்சி. மைசூரிலிருந்து அழைத்து வந்துவிட்டார்களா, உள்ளேதான் இருக்கிறார் என்றால் அவர் இன்னும் வரவில்லை என்று மகரனிடமும் சுடரோனிடமும் சிறை அதிகாரி கள் ஏன் சொல்லவேண்டும்? நம்மைத் திசைத் திருப்பி, சிவா விடுதலையை காலந்தாழ்த்தப் பார்க்கிறார்களா?

அதிர வைத்த அந்த தகவல் வந்த நேரம், மாலை 3 மணி. நான் உடனடியாக கோவை சிறை ஏரியாவுக்கு வந்தேன்.

உள்ளே நுழைவதற்கு அனுமதி வேண்டும் என்பதால், சிறை வளாகத்திற்கு வெளியே காத்திருந்தேன். அட்வகேட் ப.பா.மோகன், அவரது ஜூனியர்கள், தம்பி மகரன், நண்பர் சுடரோன் எல்லோரும் காத்திருக்கிறோம்.

நேரம் கடந்துகொண்டிருக்கிறது... .. ஏறத்தாழ ஒரு வருட சட்டப்போராட்டம். நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிய நாம் வெற்றி பெற்றோமா? அல்லது பழி வெறிபிடித்த அதிகாரிகள் வெற்றி பெற்றனரா?

No comments:

Post a Comment