Friday, August 27, 2010

விஜயகாந்த்தின் நிஜ பிளான்!


""ஹலோ தலைவரே... கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் நேரக் காய்ச்சல் பலமாகவே அடிக்க ஆரம்பிச் சிடிச்சி. காய்ச்சல் கண்டவங்க நிமிஷத்துக்கு நிமிஷம் எதையாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க... அதேபோல கட்சித் தலைவர்களும் கூட்டணி ஃபீவரில் இருப்பதால் முதல் நாள் ஒண்ணு, மறுநாள் இன்னொன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""எதை சொன்னாலும் காரணத்தோடுதானே சொல்லுவாங்க.. அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாமே!''

""தலைவரே... ஆடி மாசம் முழுக்க முகூர்த்தம் கிடையாது. அதனால ஆவணி பொறக்கட்டும்னு புரோகிதர்கள் போலவே அரசியல் தலைவர்களும் காத்திருந்தாங்க. 22-ந் தேதியன்னைக்கு ஆவணி மாதத்தில் இரண்டாவது முகூர்த்தநாள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை, கேட்கணுமா? கல்யாணம், கிரகப்பிரவேசம், கடைதிறப்பு, கட்டிடம் திறப்புன்னு ஏகப்பட்ட நல்ல காரியங்கள். அதனால, தமிழக அரசியல் தலைவர்களும் அன்னைக்கு பிஸி.''

""அ.தி.மு.க. கட்சிக்காரங்க 20 பேர் வீட்டுக் கல்யாணத்தை வானகரத்தில் ஜெயலலிதா நடத்தி வைத்தாரே!''

""இந்த விழாவுக்காக வடபழனி-கோயம்பேடு 100 அடி ரோட்டில் ஜெ.வின் வாகனம் போய்க்கிட்டிருந்தது. வழியெங்கும் ஜெ. கட்-அவுட்டுகளும் அ.தி.மு.க. கொடிகளும் நிறைந்திருந்தன. அந்த ஏரியாவில் ஒரு ஓட்டலில் நடந்த திருமணவிழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கலந்துக்கிட்டார். அவரை வரவேற்பதற்காக கொடிகட்டிய பா.ம.க. நிர் வாகிகள், அ.தி.மு.க.வோடு கூட்டணி அமையணும்ங்கிறதை விரும்புறவங்க போல! அ.தி.மு.க. கொடிகளுக்கு நடுநடுவே பா.ம.க கொடிக்கம்பங்களை ஊன்றி வச்சிருந்தாங்க. தேர்தல் நேரத்தில் நடக்கிற பிரச்சாரக் கூட்டம்போல ஒரு தோற்றம் இருந்தது. அந்தப் பக்கமா போய்வந்த அ.தி.மு.க தொண்டர்கள் கூட, மறுபடியும் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உருவாயிடிச்சோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட் டாங்க.''

""ஜெ.வும் இதை கவனித்திருப்பாரே?''

""கவனிச்சார்.. ரொம்ப டென்ஷன் ஆயிட்டார். அதன் ரிசல்ட்டை ஜெயா டி.வி.யில் பார்க்க முடிந்தது. பொதுவா, ஜெ. எங்கே போனாலும் அவர் போகிற வழியில் உள்ள அலங்காரங்கள், கட்சிக்காரர்கள் வழியெங்கும் தரும் வரவேற்பு எல்லாத்தையும் காட்டிட்டுத்தான் விழாவைக் காட்டுவாங்க. ஆனா, வானகரம் திருமண விழாவைப் பொறுத்தவரை, ஜெ. சென்ற வழியில் இருந்த அலங்காரங்களை ஜெயா டி.வி. காட்டலை. நேரடியா நிகழ்ச்சிக்குப் போயிட் டாங்க. அ.தி.மு.க. கொடி களோடு பா.ம.க கொடிகளும் பறந்ததால் அதை ஒளிபரப்பக் கூடாதுன்னு உத்தரவாம்.''

""திருமண விழாவில் குட்டிக்கதைகளை யெல்லாம் சொல்லி மணமக்களை ஜெ வாழ்த்தியிருக்காரே?''

""விழாவுக்கு வந்திருந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரும் ஜெ.விட மிருந்து கூட்டணி பற்றிய செய்தியைத்தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் விஜயகாந்த்தோடு கூட்டணி அமையும்ங்கிறது தான் அவங்க எதிர்பார்ப்பு. ஏன்னா, லோக்கலில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளெல்லாம் அங்கே இருக்கும் தே.மு.தி.க. ஆட்கள்கிட்டே, நம்ம கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு நீங்களும் வாங்க. அது தான் கூட்டணி அமையப்போகுதில்லே..ன்னு உரிமையா கூப்பிட்டிக்கிட்டிருப்பதால இந்த எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருந்தது.''

""தொண்டர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி அந்த விழாவில் ஜெ. எதுவும் பேசலையே?''

""அதே முகூர்த்த நாளில், ஆண்டாள்- அழகர் பொறியியல் கல்லூரி சார்பில் மாமண்டூ ரில் இலவச திருமண மண்டபத்தை திறந்து வைத்த விஜயகாந்த், தே.மு.தி.க.வின் கூட்டணி நிலைப்பாடு பற்றி பேசுவாருங்கிறதை அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கவே இல் லீங்க தலைவரே... .... இத்தனை நாளா தன்னோட "விருதகிரி' பட ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்த விஜயகாந்த், தே.மு.தி.கவின் தேர்தல் நிலைப்பாடு பற்றி வெளிப்படையா பேசாமல் இருந்தார். திருமண மண்டப திறப்பு விழாவில் பேசும்போது, தே.மு.தி.க. அவங்களோடு கூட்டணி, இவங்களோடு கூட்டணின்னு செய்தி வெளியிடுறாங்க. தே.மு.தி.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். தி.மு.க., அ.தி.மு.க.ன்னு இரண்டு கட்சிகளையும் மக்கள் மாறி மாறி பார்த்துட்டாங்க. வரும் தேர்தலுக்குப்பிறகு தே.மு.தி.க. தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாதுன்னு தடாலடியா போட, கூட்டணி விஷயமா பேசிக்கிட்டிருக்கும் அ.தி.மு.க.வின் பொன்னையன் தலைமையிலான மூவரணியும், தே.மு.தி.க. சுதீஷ் தலைமையிலான மூவரணியும் பயங்கர ஷாக். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர்களுக்கும் அதிர்ச்சி. அதைவிட அ.தி.மு.க. தொண்டர்களுக்குப் பலத்த அதிர்ச்சி.''

""75 சீட்டில் ஆரம்பித்து 60 சீட் வரைக்கும் தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டதையும் துணை முதல்வர் பதவி கேட்கப்பட்டதையும் நம்ம நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்ததே!''

""அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையிலான பேச்சு கள் ஒருபக்கம் நடந்துக்கிட்டிருந்தாலும் விஜயகாந்த் இதை வைத்து ஆழம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு காங்கிரசோட கூட்டணி அமைப்பதில்தான் அதிக ஆர்வம். திருச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்குப்பிறகு, விஜயகாந்ந் வந்தா வரட்டும்ங்கிற நிலைப்பாட்டுக்கு ஜெ. வந்ததைப் பற்றி நம்ம நக்கீரன் எழுதியிருந்தது. இதைத்தான், தே.மு.தி.க. தரப்பிலிருந்து இப்ப அ.தி.மு.க. தரப்பிடம் சுட்டிக்காட்டிப் பேசுறாங்க. ஜெ.வின் இந்த நிலைப்பாட்டால் விஜயகாந்த் டென்ஷனாயிட்டதா அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டிருக்குது.''

""ஓ...''

""விஜயகாந்த் ரொம்பவும் கடுப்பாகி, கூட்டத்தை என்னாலும்தான் கூட்ட முடியும். நானும் கூட்டிக் காட்டுறேன்னு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் சொன்னவர், எம்.பி.தேர்தலில் தே.மு.தி.க. அதிக ஓட்டு வாங்கிய தொகுதியான விருதுநகரில் வரும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்திருக்காரு. இதையடுத்து பல ஊர்களிலும் பொதுக்கூட்டம் நடக்குமாம். இதற் கிடையே, தே.மு.தி.க. செல்வாக்காக இருக்கும் 2 மாவட்டங்களான கடலூரிலும் விழுப்புரத்திலும் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள் தங்கள் தலைமைக்கு ஒரு தகவலை அனுப்பியிருக்காங்க. அதாவது, நாம பா.ம.க.வோடு கூட்டணி அமைத்தால் இங்கே நல்ல ரிசல்ட் கிடைக்கும். சிறுத்தைகளையும் சேர்த்துக்கிட்டா வடமாவட்டங்களில் நாமதான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்னு சொல்லியிருக்காங்களாம்.''

""ராமதாசும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனுமில்லைன்னு புதிய உறவுக்கு ஏற்கனவே கை நீட்டிவிட்டாரே..''

""திருமண மண்டப திறப்பு விழாவில் பேசிய விஜயகாந்த்தும், மறப்போம்.. மன்னிப்போம்னு சொல்லியிருக்கிறார். அதனால் தே.மு.தி.க.-பா.ம.க. அதோடு சிறுத்தைகள்னு ஒரு கூட்டணி அமைப்பதற்கான மூவ் ஆரம்ப கட்டத்தில் இருக்குது. இதில் சி.பி.எம்.மையும் கொண்டுவந்தா மூன்றாவது அணி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைக் கிறாங்க.''

""காங்கிரசோடு பா.ம.க. -தே.மு.தி.க. கூட்டணிங்கிற பழைய மூவ் என்னாச்சு?''

""விஜயகாந்த் தரப்பிலும் அன்புமணி தரப்பிலும் அகமது பட்டேல் பேசியதிலிருந்து தான் அந்த மூவ் ஆரம்பமாச்சு. அகமது பட்டேலோ நான் இரண்டு தரப்பிலும் பேசினேன். ஆனா, கூட்டணி விஷயமா எதையும் கமிட் பண்ணலைன்னு சொல்றாராம். கூட்டணி விஷயங்களில் உறுதியான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாமல் தேர்தல் சீசனுக்காக காத்திருப்பதால், எல்லா சைடிலும் மூவ் பண்ணிக்கிட்டிருக்காங்க.''

""விஜயகாந்த்தின் பேச்சுக்கு கலைஞர் ரியாக்ட் பண்ணியிருக்காரே...''

""ஆமாங்க தலைவரே... சினிமாவுக்கு வசனம் எழுதியதன் மூலம் தனக்கு கிடைத்த பணத்துக்கு உரிய முறையில் வரி கட்டிவிட்டு, மீதியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் பொதுநல காரியங்களுக்கும் வழங்கியிருப்பதை பட்டியல் போட்டிருக்கும் கலைஞர், தன்னையும் தி.மு.க.வையும் பார்த்து ஊழல் கட்சின்னு பேசும் விஜயகாந்த், கதாநாயகனாக நடிக்கும் படங்களிலே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, அதற்கு வரிகட்டாமல் கருப்பு பணமா வாங்குவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமான்னு விஜயகாந்த்துக்கு பதிலடி கொடுத் திருக்கிறார்.''

""விஜயகாந்த்துக்கு ஜெ.வின் ரியாக்ஷன் என்ன?''

""கட்சி சீனியர்கள்கிட்டே பேசிய ஜெ., ஊழ லைப் பற்றி இவரு பேசலாமா? எம்.பி. தேர்தலில் நம்மோடு கூட்டணி அமைக்கிறதுக்கு 200 கோடி பணம் வேணும்னு பேரம் பேசியவர்தானே இந்த விஜயகாந்த். கல்யாண மண்டபத்தை திறந்து வைக் கும்போது என்ன நிலைமையில் இருந்தாருன்னு தெரியலைன்னு வறுத்தெடுத்து விட்டாராம்.''

""விஜயகாந்த்தின் எலெக்ஷன் ப்ளான்தான் என்ன?''

""தலைவரே... விஜயகாந்த்தைப் பொறுத்த வரை, ஜெ.வோடு கூட்டணி சேர்ந்தால் குறைந் தளவு சீட்டுக்கள்தான் கிடைக்கும்னு நினைக்கிறார். தி.மு.க.வுடன் இருக்கும் காங்கிரசும் தன் பக்கம் வராதுன்னு நினைக்கிறார். அதனால் நாம் தனி அணி அமைத்து நிற்போம்ங்கிறதுதான் அவரோட திட்டம். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தன் தலைமையில் கூட்டணி அமைக்கத் தயங்கினால் தொகுதி உடன்பாடுங்கிற முறையில் சீட் பிரிச்சிக்க லாம்னு விஜயகாந்த் நினைக்கிறார். சி.எம். கேண்டி டேட்டாகத்தான் தேர்தலில் நிற்கணும்ங்கிறது அவரோட முடிவு. இந்த முறை பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் அடுத்த ரவுண்டில் பார்த்துக் கலாம். பெரிய கட்சிகள்கிட்டே கூட்டணி அமைப்பதற்காக சி.எம். கேண்டிடேட் என்கிற தகுதியை பலி கொடுத்திடக்கூடாதுங்கிற முடிவில் இருக்கும் விஜயகாந்த், அதற்கான மூவ்களை செய்து வர்றார். தன் தலைமையிலான அணியுடன் தேர்தலை சந்திப்பதுங்கிறதுதான் விஜயகாந்த்தின் நிஜ ப்ளான்''.

""தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பு திடீர்னு வெளியானதன் நோக்கம்?''

""முதலில் இந்தக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தத்தான் முதல்வர் முடிவு செய்திருந்தார். எம்.பி.க்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் அரசாங்கத்தின் தலைமைச் செய லகத்திலேயே கூட்டம் நடத்தி, மாநில அரசின் வரி வருவாயை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சரக்கு மற்றும் சேவை வரிகள் சம்பந்தமான உத்தேச வரைவுத் திருத்தம் குறித்து அலசுவதுங்கிறதுதான் கூட்டத்தின் நோக்கம். மத்திய அரசு மேற்கொள்ளவிருந்த முடிவால் மாநில அரசுகள் பாதிக்கப்படும்ங்கிறதை ஏற்கனவே கலைஞரை சந்திக்க பிரணாப் முகர்ஜி வந்தப்பவே எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனா, மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்வதுபற்றி பேசத்தான் பிரணாப் வந்தாருன்னு மீடியாக்கள் கிளப்பி விட்டதால, இந்த முக்கியமான விஷயம் முக்கியத்துவம் பெறலை.''

""சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி தமிழகத்தின் சார்பில் அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கிட்டு பேசினாரே!''

""பிரணாப்பிடம் கலைஞர் இந்த சட்டத்திருத்தத்தை அவசரப்பட்டு அமல்படுத்தக்கூடாது, ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான கால அவகாசம் வேண்டும்னு வலியுறுத்தியிருந்தார். இதை பிரணாப்பும் மத்திய அரசிடம் தெரிவித்தார். இதையடுத்துதான், அனைத்து மாநிலங்களிடமும் இது பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் கூட்டம் நடந்தது. அதனால் பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப் பட்டது. தலைமைச் செயலகத்தில் தி.மு.க எம்.பிக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தினால் அதை வைத்து பிரச்சினை கிளப்பிடுவாங்கன்னுதான் அறி வாலயத்தில் நடத்துவதுன்னு மாற்றம் செய்யப்பட்டது.''

""ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விவகாரம் பற்றிப் பேசத்தான் இந்தக் கூட்டம்னு தகவல் பரவியதே?''

""அவரைப் பற்றி டெல்லி வரைக்கும் தி.மு.க கம்ப்ளைண்ட் பண்ணியதால், இனி எதுவும் விவகாரமா பேசமாட்டாருன்னுதான் தி.மு.க தரப்பு நினைத்தது. சோனியாவின் உத்தரவுப்படி செயல் படுவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, இளங்கோவனோ தன் மேலே என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லைங்கிற ரீதியில் தொடர்ந்து பேசுவதால், தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்திற்கு இந்த சப்ஜெக்ட்டும் முக்கிய மானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் டெல்லியில் அகமது பட்டேலும், ஏ.கே.அந்தோணியும் சோனியாவிடம் இதைப் பற்றிச் சொல்லியிருக்காங்க. இதையடுத்து சோனியாவின் உத்தரவுப்படி குலாம் நபி ஆசாத் திங்கள் இரவு வெளியிட்ட அறிக்கையில் மத்தியி லும், மாநிலத்திலும் இந்தக் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடரும். இதை எதிர்த்து யார் பேசி னாலும் தலைமை பொறுத்துக் கொண் டிருக்காதுன்னு எச்சரிக்கை விடுத்தார். டெல்லியின் இந்த அறிக்கையையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் இளங்கோவன் சப்ஜெக்ட் தேவையில்லாமல் போய்விட்டது.''

No comments:

Post a Comment