Sunday, August 29, 2010
யுத்தம் 83 நக்கீரன் கோபால்
அருப்புக்கோட்டை வீடு. நள்ளிரவு நேரம். கதவு தட்டப்படுகிறது. அப்போதுதான் கண் அயர்ந்திருந்தார் அம்மா. தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவைத் திறக்கிறார்.
""ராமநாதன் இருக்காரா?''
""நீங்க யாரு... இந்த நேரத்திலே?''
-விசாரித்தபடியே உற்றுப் பார்க்கிறார் அம்மா. காக்கிச் சட்டை போட்டவர்கள் நிற்கிறார்கள். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலனும் தலைமை தாங்க, ஒரு போலீஸ்படை அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டை முற்றுகையிட்டிருந்தது.
பேச்சு சத்தம் கேட்டு அப்பா எழுந்து வர்றாங்க.
""என்ன சார், இந்த நேரத்திலே?'' -அப்பா கேட்டதும், கொஞ்சம் விசாரிக்கணும் என்று போலீசிடமிருந்து பதில் வருகிறது.
""இந்த நேரத்திலா? எதற்காக விசாரணை'' என்று அப்பா யோசித்தபடி நிற்கிறாங்க.
உங்க பையன்தானே நக்கீரன்கோபால்.. அவரைப் பற்றி சில விவரங்கள் எங்களுக்கு வேணும். அதனாலதான் விசாரிக்க வந்திருக்கோம்.
அப்போது மிட்நைட் மசாலா ஆட்சி நடந்துகொண்டிருந்த நேரம். முன்னாள் முதல்வரை கைது செய்வது என்றாலும் நள்ளிரவில்தான். அரசு ஊழியர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்றாலும் நள்ளிரவில்தான். கண்ணகி சிலையை கடற்கரையிலிருந்து தூக்குவது என்றாலும் நள்ளிரவில்தான். சட்டப்படி நடக்கிற விஷயமாக இருந்தால் பகலில் செய்யலாம். எல்லாமே, சட்டத்திற்கு விரோதமானதுதானே.. அதனால் நடுராத்திரியில்தான் கைது, விசாரணை, சிறையடைப்பு எல்லாமே நடந்து கொண்டிருந்தது. என்னைப் பற்றி விசாரிப்பதற்காக அருப்புக்கோட்டை வீட்டுக்கு போலீசார் போனதும் நடுராத்திரியில்தான்.
எதிரியாகவே இருந்தாலும் வீடு தேடி வந்துவிட் டால் அவர்களை உரிய மரியாதையோடு நடத்துவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். அதுவும், அருப்புக்கோட்டை போன்ற வளர்ந்து வரும் ஊர்களில் இன்னும் நம் பண்பாடு அப்படியே இருப்பதால், விசாரிக்க வந்த போலீசாரை வீட்டுக்குள் அழைச்சாங்க அப்பா.
""என் மகனைப் பற்றி உங்களுக்கு என்ன தகவல் வேணும்?'' -அப்பாவின் குரல் உறுதியாகவே ஒலித்தது.
""உங்க பையன் பிறந்தது இந்த ஊரில்தானா?''
""ஆமா..''
""படிச்சது?''
""இங்கேதான்..''
""பள்ளிக்கூடம் இங்கேதான் இருக்குதா?''
""ஆமா..''
""காலேஜ் போனாரா?''
""ஆமா.. பி.காம் படிச்சிருக்கான்''- அப்பாவுக்கு அதில் பெருமிதம்.
""காலேஜ் எங்கே இருக்கு?''
""அதுவும் இங்கேதான்.''
""உங்க பையன் சிலோனுக்குப் போயிருக்காரா?''
""எதுக்கு கேட்குறீங்க?''
""கேட்குறதுக்கு பதில் சொல்லணும். குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது''-இன்ஸ்பெக்டரின் குரல் அதிர்ந்தது. அப்பா அதற்கெல்லாம் மிரளவில்லை.
அவன் படிக்கிறப்ப, ஹாக்கி விளையாட ஒவ்வொரு ஊருக்கு போவான். அவன் எங்கே சிலோனுக்குப் போனான்?
""எதற்காக சென்னைக்குப் போனாரு?''
""பொழைப்புக்காகத்தான்.''
""என்ன வேலை?''
பத்திரிகையிலதான் வேலை. அவன் நல்லா படம் போடுவான்.
""எப்ப கல்யாணம் ஆச்சு? எத்தனை குழந்தைங்க? இது உங்க சொந்த வீடா? உங்க பையனுக்கு மெட்ராஸில சொந்த வீடு இருக்குதா?''
-போலீசார் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாங்க அப்பா. ஒரு சில கேள்வி களுக்கு அம்மா விருட்டென பதில் சொல்லியிருக்கிறாங்க. ஏதாவது ஒரு பொறி வைத்துப் பிடிக்கமுடியுமா என்று கோபியில் 10 நாள் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்த போலீசுக்கு எந்தப் பிடிமானமும் கிடைக்கவில்லை. அதனால், இப்போது அடுத்தகட்டமாக பொறி வைக்க ஆரம்பித்தார்கள். அதன் ஒரு கட்டம்தான், அருப்புக்கோட்டை வீட்டில் நள்ளிரவில் நடந்த விசாரணை.
கதவைத் தட்டி விசாரணை நடத்தி விட்டு போலீசார் போனபிறகு, அப்பா எனக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல...
""எதுக்காக இந்த நேரத்திலே வந் தாங்கன்னு தெரியலைப்பா... நீ கவனமா இரு''ன்னு சொன்னாங்க.
எனக்கு உறக்கம் போய்விட்டது. எதற் காக போலீஸ்காரங்க இன்னொரு ரவுண்டை ஆரம்பிச்சிருக்காங்க? பழைய கேஸ்களிலேயே ஏதாவது எவிடென்ஸ் தேடுறாங்களா.. இல் லைன்னா புதுசா ஏதாவது பொய்வழக்கு போடுறாங்களா என்பதுதான் புரியாமல் இருந்தது. பிறப்பு, படிப்பு, வேலைன்னு அப்பா கிட்டே விசாரித்த போலீசார் திடீர்னு நான் சிலோனுக்குப் போனேனான்னு ஏன் விசா ரிக்கணும்? மனதுக்குள் பலவிதமான கேள்விகள்.
2002-ஆம் ஆண்டு. டிசம்பர் 20-ம் தேதி.
நான் ஒரு வழக்கிற்காக கோபிக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் பயணம் தான். ஈரோடு போய் தங்கி, அட்வகேட் டிடம் ஆலோசனை நடத்திவிட்டு கோபி நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். அன் றைக்கு ட்ரெயின் லேட். காலை பத்தரை மணிக்குத்தான் ஈரோட்டில் இறங்குகிறேன். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது, யாரோ ஒரு ஆள் என்னைப் பின்தொடர்வதுபோல இருந்தது. மெல்ல நோட்டம் விட்டேன். அந்த நபரின் உயரமும் முடிவெட்டும் தோரணையும் போலீஸ்தான் என்பதை அடையாளம் காட்டிவிட்டது. ஆனால், அவர் மஃப்டியில்தான் இருந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் என்னை அவர் ஃபாலோ செய்வதை கண்டுகொள்ளாதது போல இருந்தேன். ஈரோட்டில் வழக்கமாக ஆக்ஸ்ஃபோர்டு லாட்ஜில் தங்குவதுதான் வழக்கம். அன்றைக்கும் அங்கேதான் போய்க் கொண்டிருந்தேன். தம்பி ஜீவாவும், டிரைவர் மோகனும், குண்டு பூபதியும், முகவர் பெரியசாமியும் உடன் வந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அட்வகேட் ப.பா.மோகன் வந்துவிடுவார். லாட்ஜ் வரவேற்பறையில் நிற்கும்போது, மறுபடியும் அதே நபரை பார்க்கிறேன்.
என்னைப் பார்க்காதது போல எங் கேயோ பார்த்துக்கொண்டிருந்தார். ரயில்வே ஸ்டேஷனிலிருந்தே என்னை ஃபாலோ செய்து வந்திருப்பது தெரிந்தது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன்.
ரூமுக்குள் நுழைந்த வேகத்தில் சடாரென வெளியே வந்தேன். எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்த அதே ஃப்ளோரில் என் அறைக்கு எதிர் அறை முன் நின்று கொண்டிருந்தார் அந்த நபர். நான் இப்படி சட்டென வெளியே வருவேன் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்வதென்று தெரியாமல், எதிர்ப்பக்க அறை யின் காலிங் பெல்லை அழுத்துவது போல போஸ் கொடுத்தார். என் ரூம் கதவை மூடி விட்டு உள்ளே போனேன். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. மறுபடியும் டக்கெனக் கதவைத் திறந்து பார்த்தேன். இப்போதும் என்னைப் பார்த்துவிட்டு, அந்த நபர் மீண்டும் காலிங் பெல்லை அடிப்பதுபோல போஸ் கொடுத்தார்.
அவர் ரொம்ப நேரம் நடிப்பதற்கு நான் இடம் கொடுக்கவில்லை. நேருக்கு நேராக, "யார் நீங்க... உங்களுக்கு யார் வேணும்?' என்றேன்.
""சா.. சா.. சார்...'' என ஆரம்பத்தில் கொஞ்சம் தயங் கிய அந்த நபர், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டார். ஒரு பெயரைச்சொல்லி, அந்தப் பெயரில் சென்னை பெரியமேட்டில் எக்ஸ்போர்ட் கம்பெனி இருப்பதாகவும், அதில் டிரைவர் வேலை பார்ப்பதாகவும் தயக்கமேயில்லாமல் பொய்யை அடுக்கிக் கொண்டு போனார். போலீசிற்கு எந்தளவு ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அடுத்த நிமிடமே, நமது முகவரைக் கூப்பிட் டேன்."நான் நேரா கோபி கோர்ட்டுக்கு கிளம்புறேன். அங்கேயிருந்து சென்னைக்கு நேரடியா புறப்பட்டுடு வேன். நீங்க லாட்ஜை காலி பண்ணிடுங்க' என்று சொல்லிவிட்டு கோபிக்குப் பயணமானேன்.
டிசம்பர் 23.
கோவை குரும்பலூரில் உள்ள யுனைடெட் ஊனமுற்றோருக்கான பள்ளியில் ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். கோவையிலிருந்து புறப்பட்டு குரும்பலூருக்குப் போகிறவரை போலீசார் என்னை ஃபாலோ செய்துகொண்டே இருந்தார்கள். யுனைடெட் பள்ளிக்குள் நான் சென்றதும், வெளியி லேயே போலீஸ் படை காத்திருந்தது.
ஊனமுற்ற பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் நண்பர் ராதாகிருஷ்ணனால் நடத்தப்படுகிற கல்வி நிறுவனம் என்பதால், கடுமையான வழக்கு நெருக்கடிகளுக்கிடை யிலும் அந்த விழாவில் மனமுவந்து நான் கலந்துகொண் டேன். 3 மணி நேரத்திற்கும் மேலாக விழா போய்க் கொண்டிருந்தது. விழா முடிந்து, வெளியே வந்து என் காரில் கிளம்புகிறேன். அப்போதும் போலீஸ் அங்கேயே நோட்டம் விட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.
என் வாகனம் வெளியேறுவதைப் பார்த்ததுமே, போலீஸ் டீம் ஒன்று சரசரவென அந்தப் பள்ளிக்குள் நுழைந்தது. "நக்கீரன் கோபால் இங்கே ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? அவரோடு உங்க நிர்வாகத்துக்கு என்ன தொடர்பு?' எனப் போலீஸ் டீம் அந்த பள்ளி நிர்வாகத் தை குடைய, போன் லைனில் வந்த டி.எஸ்.பி.யும் சகட்டுமேனிக்கு மிரட்டியிருக்கிறார். என் முதுகில் போலீசார் தங்கள் கண்களைப் பதித்து, ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகவே புரிந்தது.
டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். அலுவலகத்தில் உள்ள கிறிஸ்தவ தம்பிகளான ஃபிரான்சிஸ், பெருசு சுந்தர், உதயன், சந்திரமோகன், ஆடிட்டர் மோரீஸ் எல் லோரும் கேக்கும் கையுமாக என் அறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். தம்பி காமராஜ் வந்தார். அவர் கையில்... .. கத்தையாக காகிதங்கள். அதில் இருந்த ஆபத்து...?
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment