Sunday, August 8, 2010

காணாமல் போனது ஏன்? குஷ்பு அதிரடி!


சொத்துக் குவிப்பு வழக்கில் 14 ஆண்டுகள் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது தி.மு.க. இளைஞர் அணி. தென் சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்... தி.மு.க. மகளிரணி துணைத்தலைவர் விஜயாதாயன்பன், வசந்தி ஸ்டான்லி எம்.பி., இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு ஜெ.வை கண்டித்து முழக்கமிட்டனர்.

""இளைஞரணி மேடையில் மகளிர் அணிக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு'' என்று சுவாரஸ்ய கமெண்ட் அடித்தனர் தி.மு.க. இளைஞர்கள். ஆர்ப்பாட்ட மேடையில் மகளிர்கள் நிறைந் திருந்ததால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகை குஷ்பு வருவார் என்கிற எதிர்பார்ப்பு உ.பி.க்கள் மத்தியில் ஏகமாக எதிரொ லித்தது. ஆனால் கடைசிவரை குஷ்புவை காணவில்லை. ஆர்ப்பாட்ட முடிவில், இதனை மிகப்பெரிய "குறை'யாகவே பேசிக் கொண்டே கலைந்தனர் இளைஞரணியினர். இந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை குஷ்பு.

இதுகுறித்து அவரை தொடர்புகொண்டு நாம் பேசிய போது... ""கட்சியில் நான் இணையும்போது, "எந்த கூட்டங்களில் பேசவேண்டும், எத்தகைய ஆர்ப்பாட்டங்களில், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று தலைமை சொல்லும். அதற்கேற்ப உங்களின் புரோகிராம்களை வரையறை செய்து கொள்ளுங்கள்'னு தலைவரும் தளபதியும் எனக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால், தலைமை எதுவும் உத்தரவிடாததால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை'' என்றார் குஷ்பு.


அவரிடம், ""வேறு சில பல காரணங்களால்தான் தலைமை உங்களை ஓரங்கட்டி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறதே?'' என்றதற்கு... மென்மையாக சிரித்துவிட்டு, ""அப்படிப்பட்ட எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை. வதந்திகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது? ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் நான் கலந்துகொள்ள வேணாம்னு தலைமை நினைத்திருக்க லாம். இது தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தேர்தல் நேரங்களில் பாருங்கள்... எனது பங்களிப்பும் வேகமும் தெரியும்'' என்றார்.

""ஒரு கட்சித் தலைவர் தன்மீதான வழக்கில் வாய்தா வாங்குவது ஒரு பிரச்சினையா? இதனைக் கண்டித்து இளைஞரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது... ""இது அவசியமான ஆர்ப்பாட்டம்தான். ஒரு கட்சியின் தலைவியான ஜெயலலிதா, நீதிக்குத் தலைவணங்க வேண்டும். அதைவிடுத்து, 14 வருடங்களாக ஏதேதோ சொத்தைக் காரணங்களையெல்லாம் சொல்லி வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிப் பது எப்படி சரியானது? மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல! வருமானத்துக்கு மீறி அதிகமாக சொத்து சேர்க்கவில்லையென்றால், துணிச்சலாக வழக்கைச் சந்தித்து, தான் நிரபராதி என்று ஜெயலலிதா நிரூபிக்கலாமே? அதனைச் செய்ய ஏன் தயங்குகிறார்? தடுமாறுகிறார்? மடியில் கனமில்லையென்றால் ஏன் ஜெயலலிதா பயப்பட வேண்டும்? வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது எப்படி தவறோ, அதேபோல வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிப்பதும் தவறுதான். அதனால் இதனை மக்களிடம் கொண்டு செல்வது தி.மு.க.வின் கடமை. அதனை இளைஞரணியினர் செய்திருக்கிறார்கள். ஆரோக்கியமான ஆர்ப்பாட்டம் இது'' என்கிறார் அதிரடியாக குஷ்பு.

No comments:

Post a Comment