Thursday, August 5, 2010

காஞ்சி மடத்தில் வாஸ்து கோளாறாம்!


காஞ்சி மடத்தில் நடத்தப்படும் யாகங்களைக் காட்டிலும், தன் தாயார் பிறந்த இருள் நீக்கியில் நடத்தப்படும் யாகங்களால்தான் தனக்கேற்பட்ட களங்கங்கள் தீருமென்றுதிடமாக நம்புகிறாராம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரரின் உடன்பிறந்த சகோதரர் சந்திரசேகரின் பெயரில் செயல்படும் ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்புதான் ஜெயேந்திரரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28, 29, 30-ஆம் தேதிகளில் இருள்நீக்கி கிராமத்தின் நட்ட நடுவில், கணபதி ஹோமம், ஆவஹந்தி யாகம், ஆயுஸ்ய யாகம், தவபிரவ ஹோமம், மிருஞ்ஜெய ஹோமம், ரிக்வேத யாகம் ஆகிய யாகங்களை நடத்தியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள பெரியகுடி என்ற கிராமம்தான் ஜெயேந்திரரின் தந்தை யுடைய கிராமம். ஆனால், அங்கிருந்த நிலபுலன்களை விற்றுவிட்டு, ஜெயேந்திரரின் தாய் பிறந்த இருள்நீக்கி கிராமத்தில் செட்டிலாகிவிட்டது ஜெயேந்திரர் குடும்பம். இந்த இருள்நீக்கியைத் தான் தனது பிறந்த மண்ணாக்கிக் கொண்டார் ஜெயேந்திரர்.

""வருஷா வருஷம், சங்கராச்சாரியார் பிறந்த ஆடிமாத அவிட்ட நட்சத்திர நாட்களில் இருள் நீக்கியில் சாதாரணமாகத்தான் விழா கொண்டாடி னோம். ஜெயேந்திரர் மீது கேஸ் மேல கேஸா போட்டு அபகீர்த்தி ஆன பிறகுதான் கடந்த ரெண்டு வருஷமா ஸ்பெஷல் யாகம் நடத்தணும்னு சொல்லியனுப்பினார். இதே வேளையில காஞ்சி மடத்திலயும் யாகம்... பிறந்த நாள் விழா தட புடலா நடப்பதால் சங்கராச்சாரி யார் இருள்நீக்கிக்கு வர்றதில்லை. தாமரைப்பாக்கம் நாராயண சாஸ்திரிகளும், தியாகராஜ சாஸ்திரிகளும்தான் எல்லா யாகங்களையும் நடத்தினாள்... பாருங்கோ... எல்லா யாகமும் ஹோமமும் ஷேமமா நடத்திட் டோம். சங்கராச்சாரியாருக்கு வந்த சோதனையெல்லாம் பனித்துளி மாதிரி மறைஞ்சு போகப் போகுது. காஞ்சி மடத்துக்கு ஏற்பட்ட அவப்பெயரெல்லாம் ஒழிஞ்சு... மறுபடியும் மடத்தோட பெருமை பிரகாசமா ஜொலிக்கப் போகுது. காஞ்சி மடத்துல ஹோமம் பண்ணின வடநாட்டு சாஸ்திரிகள் எல்லாரும் இதைத்தான் சொல்லிருக்கா!'' என்று பூரண திருப்தியோடு சொன்னார் யாகத்தில் கலந்து கொண்ட உள்ளூர் குருக்கள் ஒருவர்.

""யாகம் மட்டுமில்லாமல், சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறு வன மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறதே... அதைப் பார்க்கவும், படமெடுக்கவும் கூட எங்களை அனு மதிக்க மறுக்கிறீர்களே?'' -டிரஸ்ட் நிர்வாகிகளிடம் கேட்டோம்.

""பொதுமக்கள் யாரும் வரலாம். எந்த சாதி, எந்த மதமானாலும் வரலாம். அனுமதிக்கச் சொல்லிவிட்டார் சங்கராச் சாரியார். ஆனால், பத்திரிகை நிருபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார். யாராவது கேமராவோடு உள்ளே வந்தால்... கேமராவை பறிக்கச் சொல்லி இருக்கிறார். தயவு செய்து போய் விடுங்கோ...!'' என்றார்கள் குருக்கள்களும் டிரஸ்ட் நிர்வாகிகளும்.

காஞ்சியிலிருந்து இருள்நீக்கிக்கு வந்த சாஸ்திரி ஒருத்தர், இருள்நீக்கி குருக்களிடம் ""யாகம் செஞ்சா மட்டும் போதாது. காஞ்சி மடமும், பெரியக்குடிக் கோயிலும் வாஸ்து சரியில்லாமல் தான் இழப்புகளும் கெட்ட பெயரும் சங்கரராமன் கொலை(!) வழக்குகளும் வந்தது. மாற்றியமைச்சுட்டு, இப்படிப்பட்ட யாகங்களை நடத்துங்கோனா... பெரியவா... வாஸ்தைப் பற்றிக் கவலைப்படவே மாட்டேங்கிறார். அனாவசியமா... லட்சம் லட்சமா செலவு செஞ்சு யாகங்களை நடத்தச் சொல்றார்!'' என்று வேதனைப்பட்டதும் நம் காதில் விழுந்தது.

No comments:

Post a Comment