Sunday, August 8, 2010
யுத்தம் 77 - நக்கீரன் கோபால்
சிவாவை எல்லா வழக்குகளிலிருந்தும் பெயிலில் எடுக்கவேண்டிய அவசியம். ஆனால், அவர் மீது முதன்முதலில் போடப்பட்ட வழக்கு (100/2001) கொள்ளேகால் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்தது. ஜாமீனில் வரக்கூடிய செக்ஷன்களில்தான் முதலில் அந்த வழக்குப் போடப்பட்டிருந்தது. தம்பி சிவாவுக்கும் ஜாமீன் எடுத்துவிட்டோம். அதன்பிறகு, தமிழக-கர்நாடக அதிரடிப்படையின் கூட்டு முயற்சியால் ஜாமீன் கிடைக்காத செக்ஷன்களுக்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும், தம்பி சிவாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயில், இந்த வழக்கில் தொடர்ந்து கொண்டிருந்தது.
கோவை சிறையில் சிவா இருக்கிறார். வழக்கோ கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணைக்கு சிவா சார்பில் வக்கீல் ஆஜராகாவிட்டால் பெயிலை கேன்சல் செய்துவிடுவோம் என்று நீதிபதி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பெயிலபிள் வழக்கை, நான்-பெயிலபிளாக மாற்றியதற்கு நம் தரப்பில் கவுண்ட்டர் பெட்டிஷனும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கு, நமக்கு முக்கியமான வழக்காகிவிட்டது.
கர்நாடகாவில் நம் வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அட்வகேட் ஈஸ்வர சந்திரா. அவரை அழைத்துக்கொண்டு கொள்ளேகாலுக்குப் போனால் பெயில் கேன்சலாகாமல் இருக்கும். இன்னும் இரண்டு வழக்குகளில் தம்பி சிவாவுக்கு பெயில் எடுக்க வேண்டிய நிலையில், ஏற்கனவே எடுத்த பெயில் கேன்சலாகி போச்சுன்னா அதுவேற வம்பா போயிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தோம்.
நமது பெங்களூரு நிருபர் தம்பி ஜெ.பி.யைத் தொடர்புகொண்டேன்.
""தம்பி.. .. நீங்க ஈஸ்வரசந்திராகிட்டே பேசிடுங்க. கொள்ளேகால் கோர்ட் கொடுத்த பெயில் கேன்சலாயிடக் கூடாது. பிரச்சினையில்லாம பார்த்துக்கச் சொல்லுங்க.''
""சொல்லுறேங்கண்ணே... இன்னொரு தகவல். கொள்ளேகால் கோர்ட்டில் கேஸ் வர்ற அதே 30-ந் தேதிதான் மைசூர் தடா கோர்ட்டிலும் சிவாவோட வழக்கு வருது.''
""அதுவும் முக்கியமான வழக்கு தம்பி.. நாங்க இங்கே அவருக்கு மற்ற வழக்குகளில் பெயில் எடுப்பதில் வேகமா இருக்கோம். அதனால நீங்க அந்த இரண்டு வழக்கு விவரங்களையும் பார்த்துக்குங்க.''
மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், பெங்களூரு என்று கர்நாடகாவில் போடப்பட்ட பொய் வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களையெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டவர் ஜெ.பிதான். ஆனால், கர்நாடகத்தில் ஏற்பட்ட ஒரு திடீர் பதட்டம், நமக்கு பெரும்சோதனையாக அமைந்துவிட்டது.
கர்நாடகாவில் ஹெக்டே அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் நாகப்பா. அவரை வீரப்பனும் அவரது ஆட்களும் கடத்திவிட்டார்கள். ராஜ்குமார் கடத்தலுக்குப்பிறகு நடந்த மிக முக்கியமான கடத்தல் சம்பவம் இது. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி. கடத்தப்பட்ட மாஜி மந்திரியை மீட்க தமிழக அரசு எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கர்நாடக அரசுக்குத் தெரியும். அதனால், முந்தைய மீட்பு முயற்சிகள்போல பெரியளவில் எதுவும் நடக்கவில்லை. தமிழக-கர்நாடக அதிரடிப்படைகள் கூட்டு நடவடிக்கையின் மூலம் நாகப்பா வை மீட்டு விடலாம் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாகப்பா கடத்தல், கர்நாடகாவில் அரசியல்ரீதியாக பதட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கடத்தப்பட்ட மாஜி மந்திரியின் கட்சி வேறு, கர்நாடகத்தை ஆள்கின்ற கட்சி வேறு. அதனால், இந்த கடத்தல் விவகாரம் வேறு வேறு கோணங்களில் அரசியலாக்கப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு, நாகப்பாவைக் கடத்திய வீரப்பன் வைத்த கோரிக்கை இன்னும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காவிரியில் தமிழகத்திற்குள்ள தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று நாகப்பாவைப் பணயக்கைதியாக்கி நிபந்தனை விதித்தான் வீரப்பன். அதனால், கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. தமிழர்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டார்கள். ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்ட தால், கர்நாடகத்தில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டது. சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களைக் கொளுத்தியும் பஸ் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டார்கள் .
ஜெ.பி. போன் செய்தார்.
""அண்ணே... பஸ், ட்ரெயின் எதுவும் கிடையாது. எல்லா இடமும் கலவரமா இருக்குது.''
மைசூர் தடா கோர்ட்டிலும், கொள்ளேகால் கோர்ட்டிலும் முக்கியமான வழக்குகள் இருக்கிற நிலையில், எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் தம்பி ஜெ.பி.யால் எப்படி போக முடியும் என்று நான் யோசித்தேன்.
ஜெ.பி.யோ, ""அண்ணே.... நான் டூவீலர் எடுத்துக்கிட்டுப் போயிடுறேன்.''
""எவ்வளவு தூரம் தம்பி?''
""இரண்டு இடத்துக்கும் போயிட்டு திரும்பி வரணும்னா 600 கி.மீ. ஆகும்ணே...''
என்னுடைய மனசு கேட்கலை. 600 கி.மீ. டூவீலரில் போவதென்பது சாதாரணமான காரியமல்ல. அதுவும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டு கோர்ட்டுகளுக்குப் போகவேண்டும். தமிழர்கள் என்றால் குறிவைத்து தாக்கப்படுகிற நேரம். ஒரு தமிழ்ப் பத்திரிகையின் நிருபர், அதுவும் வீரப்பனை பேட்டிகண்டும்- அவனிடம் சிக்கியவர்களை மீட்டுவந்தும் பெயர் வாங்கிய பத்திரிகையின் நிருபர் கன்னட வெறியர்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போதே அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், பழி வாங்கும் வேகத்துடன் செயல்படும் அதிரடிப் படையிடமிருந்து அவரைக் காப்பாற்றக் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதால் ரொம்பவும் ஜாக்கிரதையாக செயல்படவேண்டியிருந்தது. அதனால், தம்பி ஜெ.பி. எப்படியாவது கோர்ட்டுக்குப் போனால்தான், சிவாவுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.
""தம்பி ஜெ.பி.. நீங்க டூவீலரில் கிளம்புங்க. சிவாவைப் பார்த்து அவங்கப்பா உடல்நிலை சரியில்லைங்கிறதை சொல்லணும். நான் போய் அவங்கப்பாவை பார்த்த விவரத்தையும் இன்னும் இரண்டு நாட்களில் எல்லா கேசிலும் பெயில் எடுத்திடலாம்ங்கிறதையும் சொல்லணும். அதற்கு முன்னாடி கோவை ஜெயிலிலிருந்து தம்பி சிவாவை எப்ப அழைச்சிட்டுப் போறாங்கங்கிற தகவலை தெரிஞ்சுக்கிட்டு உங்ககிட்டே சொல்றேன்.. அப்புறம் கிளம்பலாம்.''
""சரிங்கண்ணே...''
கோவை நிருபர் தம்பி மகரன் மூலம் தகவல் கேட்டுச் சொல்லலாம் என பல முறை முயற்சித்தும், மகரன் லைனில் கிடைக்கவில்லை. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது. ஜெ.பி. பல மைல்கள் பயணிக்கவேண்டும். தாமதமானால் பயணம் செய்தும் பலன் இருக்காது. அதனால், அவரைப் புறப்படச் சொல்லிவிட்டேன்.
மனசு கேட்கவில்லை.. திக்..திக்.. என்றிருந்தது. தம்பி ஜெ.பி டூவீலரில் புறப்பட்டுவிட்டார். பதட்டமான பயணம். மாண்டியா வழியாக கொள்ளேகால் போகவேண்டும். மாண்டியாவிலிருந்து 20 கி.மீ. தூரத் தில் ஒரு ஜீப் எரிக்கப்பட்டது. அதையடுத்து, பஸ் களுக்கு தீவைக்கப்பட்டன. ரோட்டில் மரங்கள், டயர்கள் எல்லாம் எரிந்துகொண்டே இருந்தன. அந்த சமயத்தில்தான், தம்பி ஜெ.பி. டூவீலரில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.
மாண்டியாவை அடுத்து மலுவல்லி, சென்னபட்னா என கொள்ளேகால் ஏரியாக்களில் 100 கி.மீ. சுற்றுவட்டாரம் முழுவதும் கலவர பூமியாக மாறியிருந்தது. எல்லா இடங்களையும் கடந்து, கொள்ளேகால் நீதிமன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தார் ஜெ.பி. அட்வகேட் ஈஸ்வரசந்திராவின் ஜூனியரை கொள்ளேகாலில் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போயிருந்தார். ஆனால், தம்பி சிவாவை போலீசார் அழைத்து வரவில்லை. வக்கீல் ஆஜரானதால், சிவாவின் பெயிலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
கொள்ளேகால் கோர்ட்டிலிருந்து வெளியே வந்ததும் தம்பி ஜெ.பி. எனக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார். அடுத்ததாக, மைசூர் தடாகோர்ட்டுக்குப் போகவேண்டும். சிவா வருவாரா, மாட்டாரா என்பது உறுதியில்லாத நிலையில், அங்கே போகாமல் இருந்தால் 250 கி.மீ. பயணம் மிச்சமாகும். ஆனால், அவரிடம் தகவலை சொல்லவும், கோர்ட் நடவடிக்கைகளை கவனிக்கவும் வேண்டியிருந்த தால், தம்பி ஜெ.பி. டூவீலரிலேயே மைசூருக்குப் பயணம் செய்தார். ஆனால், அங்கும் சிவாவை ஆஜர்படுத்தவில்லை. என்ன ஆனார் என்ற பதட்டம் அதிகரித்தது.
கலவரச் சூழலில் 600 கி.மீ. டூவீலரில் பயணம் செய்த களைப்புடன் திரும்பினார் ஜெ.பி. அதன்பிறகு தான் நிருபர் மகரனிடமிருந்து எனக்கு போன். சிவாவை கோவை சிறையிலிருந்து அழைத்துச் செல்லவில்லை என்ற தகவலைச் சொன்னார். அவர் மேல் எனக்கு வருத்தம். மறுநாள் காலையில், வக்கீல் அபுபக்கர் மூலமாக சிவாவுக்கு எல்லா விவரங்களும் பாஸ் செய்யப்பட்டது.
அப்பாவின் உடல்நிலையை நினைத்து கவலைப்பட்ட சிவா, தனக்கு பெயில் உத்தரவுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அந்த சமயத்தில்தான், நாம் கொஞ்சமும் எதிர்பாராத அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது.
போலீசின் பொய்வழக்கால் தம்பி சுப்பு தலைமறைவாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினரைக் குறிவைத்தது போலீஸ். மேட்டூரையடுத்த நாய்க்கன் தண்டாவில் சுப்புவின் அக்கா லட்சுமி அவரது கணவர் முருகேசனோடு வசித்து வந்தார். அவர்களின் வீட்டுக்கு அதிரடிப்படை வீரர் கோபி வந்தார்.
""முருகேசன்... இருக்காரா?''
-வீட்டில் சுப்புவின் அக்காதான் இருந்தார்.
""அவர் இல்லீங்க.''
""அவர்கிட்டே சில விவரங்கள் கேட்கணும். வந்தா கேம்ப்புக்கு வரச் சொல்லுங்க'' என்றார் கோபி. சுப்புவின் அக்காவுக்கு சந்தேகம்.
""என்ன விவரமோ இங்கேயே விசாரிச்சிடுங்க சார். அவர் வந்ததும் சொல்றேன்.''
""ஒண்ணும் பயப்படவேண்டாம். எங்க கேம்ப்புக்கு அழைச்சிட்டுப் போய் சில விவரங்களை கேட்டுட்டு விட்டுடுறோம். வரச்சொல்லுங்க'' என்று அதிரடிப்படை வீரர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
தன் கணவர் முருகேசன் வீட்டிற்கு வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் சுப்புவின் அக்கா.
முருகேசன் வீடு திரும்பவேயில்லை.
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment