Thursday, August 5, 2010

விடுதலை தந்த தேதியில்லாத கையெழுத்து!


சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வரும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு போன்ற பரபரப்பான வழக்குகளில் ஒன்றான ஆலடி அருணா கொலைவழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநில அமைச்சர், ஒரு பாராளுமன்றத் தேர்தல் முடிவையே தீர்மானித்த போபர்ஸ் ஊழலை வெளியுலகுக்கு தெரிவித்தவர், கல்வி தந்தை என பன்முகம் கொண்ட அரசியல் தலைவரான ஆலடி அருணாவை 2004-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அவரது நண்பர் பொன் ராஜுவுடன் நடைபயிற்சிக்கு சென்ற நேரத்தில் சொந்த ஊரிலேயே வெட்டி கொலை செய்தது ஒரு கூலிப்படை. அந்த கூலிப்படையை ஏவியவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜா என்றும் அவருக்கும் ஆலடி அருணாவுக்கும் ஏற்பட்ட தொழில் போட்டிதான் காரணம் எனவும் காவல்துறை ராஜாவை கைது செய்தது.

வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் கூலிப் படையாக செயல்பட்டவர்களுக்கு மரண தண்ட னையும், கடுங்காவல் தண்டனையும் விதித்துவிட்டு எஸ்.ஏ.ராஜா உட்பட ஆறுபேரை விடுதலை செய்தது. அதை எதிர்த்து அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உயர்நீதிமன்றம் எஸ்.ஏ.ராஜாதான் ஆலடி அருணாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்ட ராஜா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதோடு, "எனக்கு இதய நோய் இருக்கிறது. அதற்காக கேலக்ஸி என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். சிறையில் உள்ள மருத்துவ மனையில் இதயநோய்க்கான சிறப்பு சிகிச்சையளிக்க வசதியில்லை. எனவே கேலக்ஸி மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சையளிக்க உத்தரவிடுமாறு' ஒரு வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தார்.

நீதிமன்றமும் "சரி' 6 வாரத் துக்கு ராஜாவுக்கு கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை அளி யுங்கள்' என உத்தரவிட்டது. சிறைத்துறை அதிகாரியாக இருந்த ஷியாம் சுந்தர் ஐ.பி.எஸ். ராஜாவின் உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது என்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் சான்றிதழ் தர, அதன் அடிப்படையில் ராஜாவை மீண்டும் சிறைக்கே அனுப்பினார்.

உடனே இது நீதிமன்ற அவமதிப்பு என ராஜா சுப்ரீம் கோர்ட்டில் கூற, நீதிபதிகள் சிறைத்துறை அதிகாரியை என்ன நடந்தது என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அவசர அவசரமாக ஷியாம் சுந்தர் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அவரது கையெழுத்திலும், அந்த பிரமாண வாக்குமூலம் சரிதான் என சான்றிதழ் அளித்த நோட்டரி பப்ளிக் கையெழுத்திலும் எந்த தேதியில் கையெழுத்திட்டார்கள் என தேதி குறிப்பிடவில்லை.

அதை கவனிக்காமல் தமிழக அரசின் ஜூனியர் வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டார். அதை நீதிபதிகள் கண்டுபிடித்து விட்டனர்.

""இது பொறுப்பற்ற தன்மையின் உச்ச கட்டம். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ராஜாவை பழிவாங்குகிறது'' என அந்த பிரமாண வாக்குமூலத்தை அந்த வழக்கறிஞரிடமே திருப்பி அளித்து விட்டார்கள்.

அந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு வைத்த வாதங்கள் எதுவும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. கொலை சதியில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்ட நாளிலிருந்து கொலை நடந்த அன்று வரை குற்றவாளிகளுடன் ராஜா தொடர்பிலிருந்தார் என உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட வாதத்தில் தங்களது சந்தேகங்களை பதிவு செய்த நீதிபதிகள் அதையே தீர்ப்பாக்கி ராஜாவுக்கு விடுதலை தந்து விட்டார்கள்'' என்கிறார்கள் சீனியர் வழக்கறிஞர்கள்.

No comments:

Post a Comment