சமீபகாலமாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பு டிரைவர், கண்டக்டர் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. எல்லாம் டாஸ்மாக் படுத்தும் பாடு.
முன்பெல்லாம் போக்குவரத்து ஊழியர்களில் சிலர் தங்கள் உடல் வலியை மறக்க ஓய்வு நேரத்தில் குடித்தனர். இப்போதோ அந்த சிலர் டூட்டிக்கே குடித்துவிட்டு வருகின்ற சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இது தனிப்பட்ட நபர் உரிமைப் பிரச்சினையென்றால் சாதாரண மாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது பொதுமக்களின் உயிர் பிரச்சினை. உதாரணத்திற்கு சில சம்பவங்கள்...
ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து (டி.என். 63-1102) பரமக்குடிவரை ஒழுங்காக வந்தது. அங்கு டிரைவர்கள் மாறினார்கள். இளையாங்குடி சாலை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் டிரைவராக ஏறினார். ஏறும் போதே ரொம்ப தட்டுத் தடுமாறித்தான் ஏறியிருக்கிறார். பேருந்திலோ சரியான கூட்டம். டிரைவரிடமிருந்து கிளம்பிய பழவாசனை பேருந்தின் கடைசி சீட்டுவரை போய் திரும்பி வந்தது.
உஷாரான சில பயணிகள் முன்னெச்சரிக்கையோடு இறங்கி வேறு பேருந்தில் ஏறிவிட்டனர். போதை டிரைவர் பற்றி பொருட் படுத்தாத பயணிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
பேருந்து கிளம்பியது. பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். அப்படியொரு ஆர்ப்பாட்டத்தோடு பேருந்து கிளம்பியது. டிரைவருக்கோ இதைப் பார்த்து ரொம்ப குஷி. சிரிப்பு வேறு. அதற்குப் பின்பு பெண்களும், ஆண்களும் அலற ஆரம்பித்தனர். உச்சமான வேகத்தில் பாம்பு போவது போல் பேருந்து சாலையில் போனால் ஜனங்கள் அலறாமல் என்ன செய் வார்கள்?
""நிதானமா போப்பா'' என்று கண்டக்டர் சொல்வதைக் கேட்பதாய் இல்லை டிரைவர் சண்முகம்.
ஒருவழியாக சத்திரக்குடி வந்ததும்... உயிரைக் கையில் பிடித் துக்கொண்டிருந்த கூட்டத்தில் பாதி கீழே இறங்கிவிட்டது. "ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் எடுத்தாச்சே' என்று பொருளாதார ரீதியாக சிந்தித் தவர்கள் மட்டும் உயிர் பயமில்லா மல் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.
சத்திரக்குடியில் பாதி பேரை இறக்கிவிட்டு மீதி பேர் களோடு பேருந்து கிளம்பிவிட்டது. அங்கு பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தவர்களிடம் பேசினோம். ""பின்னே என்ன சார். அரை போதை யில் இருக்காரு. சமாளிச்சு பஸ்ஸை ஓட்டிடுவார்னு நெனைச்சோம். ஆனா, அவரு மரண போதையில இருக்காரு சார். இதுவரைக்கும் ஆக்ஸிடெண்ட் ஆகாம வந்ததே கடவுளோட புண்ணியம். கண்டக்டர் சொல்றதையும் கேட்கமாட்டேங் கிறார். திடீர்னு கையை விட்டுட்டு சீட்ல சாஞ்சுக்கிட்டு பஸ் ஓட்டுறாரு. பரமக்குடியில இருக்கிற டைம் கீப்பர், டிக்கெட் கேன்வாசர், எப்படி இவ ரை வண்டி ஓட்ட அனுமதிச் சாங்கன்னு தெரியலை'' என்றனர் மிரட்சியோடு.
மறுபடியும் பேருந்து டான்ஸ் ஆடிக்கொண்டே போக... அதற்கு மேல் பொறுக்க முடியாத பயணி கள், டிரைவர் சீட் அருகே போய் "பஸ்ஸை நிறுத்து, நிறுத்து' என்று சத்தம் போட... அதற்குப்பின் சுதாரித்த டிரைவர், லாந்தை என்ற இடத்தில் ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் இறங்கி டிரைவரை அடிக்கப் போனார்கள். கண்டக்டர் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்த, அந்த நேரமாக அந்த வழியாக பரமக்குடிக்கு சென்றுகொண்டிருந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி. அமல் ராஜ், தனது வாகனத்தை நிறுத்தி பயணிகளிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தார்.
பயணிகள் விபரத்தைக் கூறியதும் கடுப்பான அவர், டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தைத் திட்டிவிட்டு பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பும்படி உத்தரவிட்டது மட்டுமில்லாமல், டிரைவரை மது சோதனை செய்து வழக்குப் போடும்படி ராமநாதபுரம் மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதற்குப் பிறகு போலீஸார் வந்து டிரைவர் சண்முகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். தற்போது போக்குவரத்துக் கழகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. பொதுமக்களோ... அந்த திகில் பயணத்தை மறக்க முடியாமல் உள்ளனர்.
இதைப் போலவே கடந்த மாதம் அழகன் குளம் டூ ராம்நாடு வருகின்ற டவுன் பஸ்ஸை ராம சாமி என்ற டிரைவர் கடும்போதையுடன் ஓட்டிவர... பயணிகள் எல்லோரும் அலறித் துடிக்க... கண்டக்டர் பிரேக்கை மிதித்து வண்டியை நிறுத்தி னார். அந்த ஊரிலிருந்த பிரைவேட் டிரைவர் ஒரு வர் மூலம் வண்டியை ராம்நாட் கொண்டு வந்தார் கள். டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
22-ந் தேதி திருச்சி டூ ராமேஸ்வரம் வருகின்ற பி.பி. பேருந்து ஒன்றில் கண்டக்டர் போதையுடன் ஏறி, டிக்கெட் போடுகிறேன் பேர்வழி என்று சீட்டு மேல் கால் வைத்து பயணிகளின் தலை, தோள் களின் மீது ஏறி டிக்கெட் போட்டதால் பெரும் ரகளையானது. என்ன செய்வது? யாரும் புகார் செய்வதில்லை. இது அவர்களுக்கு வசதி.
இதே ரூட்டில் கடந்த மாதம் டிரைவர் ஃபுல் மப்பில், நிற்க வேண்டிய ஸ்டேஜில் நிற்காமல் செல்ல... தேவகோட்டை ஒத்தக்கடை ஸ்டாப்பில் இறங்க வேண்டிய இளம்பெண்ணை, அங்கே இறக்கிவிடாமல், பயணிகள் எல்லோரும் கத்தியும் கண்டுகொள்ளாமல்... ஏழு கிலோமீட்டர் தள்ளியுள்ள புளியால் என்ற ஊரில் இறக்கிவிட் டார். நள்ளிரவு நேரம். நல்ல வேளையாக அந்தப் பெண் செல் மூலம் தன் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்க... அவர்கள் தேவகோட்டையிலிருந்து ஆட் டோ மூலம் பஸ்ஸை துரத்தி வந்து அந்தப் பெண்ணை கூட் டிச் சென்றார்கள். இப்படி பல சம்பவங்கள்...
இதையெல்லாம் தடுத்து நட வடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் என்ன செய்கிறது? என்று பொதுவான ஊழியர்களிடம் கேட்டோம்.
""என்னைக்கு அரசியல் கட்சி கள் உள்ளே நுழைஞ்சதோ அப்போ திருந்து குடி மட்டுமில்லாம அனைத்துக் கெட்ட பழக்கங்களும் தொழிலாளர்களுக்கு வந்துவிட்டது. வேலை பார்த்துக்கிட்டிருக் கும்போதே கட்சிக் கூட்டம், கல்யாணம், காது குத்துனு கிளம்பிப் போய் தண்ணியப் போட்டுட்டு வந்து மறுபடியும் டூட்டி பார்ப்பாங்க. பெரும்பாலும் சென்னை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்னு நைட்ல ஹால்ட் அடிக்கிற குறிப்பிட்ட சில டிரை வருங்க சரக்கு சாப்பிடுவாங்க. போதை தெளியாம கிளம்புறப்பதான் இது போன்ற பிரச்சினை வருது'' என்றனர்.
இதுபோன்று இனிமேலும் நிகழா மல் இருக்க போக்குவரத்து அமைச்சர் நேருதான் சாட்டையைச் சுழற்ற வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment