""இரண்டு வருஷமாகக் காதலிக்கும் எனக்கு பெரியசாமியை கல்யாணம் செஞ்சு வைங்க!'' -நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து கண்ணீரோடும் கடிதத்தோடும் நின்ற அந்தச் சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் மகளிர் போலீசார்.
அந்தச் சிறுமியை விசாரித்தார்கள்.
""என் பெயர் மீனா. அப்பா பூவேந்திரன், அம்மா ராமாயி. ஊர் மங்களம்மேடு. பாலப்பட்டி ஸ்கூலில் 8-ஆம் வகுப்பு படிக்கிறேன். 13 வயது நடக்கிறது. எங்க ஊர் கோபால் மாமா மகன் பெரியசாமிக்கு வயது 22. போன வருஷம் அவர்தான் என்கிட்ட வந்து காதலிக் கிறதா சொன்னார். சரினு நானும் சந்தோஷமா கரும்புக் காடு, வாழைத்தோப்புனு போய்க் காதலிச்சோம். 15 மாதமா என்னை மட்டுமே காதலிச்ச பெரியசாமி, திடீர்னு என்னை விட்டுட்டு இன்னொரு புள்ளையக் காதலிச்சு லவ் லெட்டரும் கொடுத்திருக்கான். அதனாலதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்!'' -மிகத் தெளிவாகச் சொன்னாள் அந்த 8-ஆம் வகுப்பு மாணவி.
மீனாவை அங்கேயே இருக்க வைத்துக் கொண்டு, மீனாவின் பெற்றோரையும் பெரியசாமியின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்கள் மகளிர் போலீசார் கவுன்சிலிங் கொடுத்தார்கள்.
""இந்தக் குழந்தைக்கு கல்யாணம் செய்ய முடியாது. மீறிச் செய்தால் பால்ய விவாகமா... குழந்தைத் திருமணமாகி விடும். நாங்களும் குற்றவாளியாகி விடுவோம். பொண்ணை நல்லா படிக்க வைங்க. அஞ்சாறு வருஷமானதும் நாங்களே முன்னால நின்று ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தி விடுகிறோம்!'' புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்தாள் சிறுமி. கல்யாணம் செய்யாவிட்டால் செத்துப் போவேன் என்றாள். இரண்டு வீட்டாரும் உறவினர்களும் உட்கார்ந்து பேசினார்கள். கடைசியில்...
""போலீஸ் சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும். நாளைக் காலைல நம்ம ஊர்க் கோயில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ரெண்டு வீட்டாரும் செய்ங்கப்பா!'' -கூட்டம் முடிவு எடுத்தது.
மறுநாள் காலையில் உள்ளூர் கோயிலில் காத்திருந்தார்கள் மீனாவும் உறவினர்களும். அப்போதுதான் இந்தச் செய்தி வந்தது. ""மாப்பிள்ளை பெரியசாமி நேற்றிரவே ஊரை விட்டு ஓடிவிட்டான்!''.
கண்ணீரும் கம்பலையுமாக வீடு திரும்பியது மீனா குடும்பம்.
அன்று மாலையில் அரளி விதைகளை அரைத்துக் குடித்து மயங்கி விழுந்தாள் மீனா. மீனாவை நாமக்கல் மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த தந்தை பூவேந்திரன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டார்.
""படிக்கிற வயசில படிக்கணும். 13 வயசில காதலிக்கக் கூடாதுனு எனக்குத் தெரியலையே... அவன் ஆசைப்பட்டான்னா... எனக்கு அறிவு இல்லாமப் போச்சே... அப்பாவை இழந்துட்டு நானும் என் அம்மாவும் அனாதையா நிக்கிறோம். இப்பத் தான் புத்தி வருது... என் நிலைமை என் மாதிரி மாணவிகள் யாருக்கும் வரக்கூடாது...!'' -தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு, பெரிய மனுஷி போல கதறிக் கொண்டி ருக்கிறாள், மருத்துவமனையில் இருந்து திரும்பிய சிறுமி மீனா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment