Sunday, July 25, 2010

சோனியாவின் மூன்று முகம்!


தன் காதல் மனைவி சோனியாவைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத் தங்கரை ராதாகிருஷ்ணனின் மகன் கிருபாகரன். பிறகுதான் நக்கீரனைச் சந்திக்க வந்தார்.

""செம்மண் நிலத்தில் பெய்த மழை போன்றது நம் காதல் என்று சொன்னாள் சோனியா... நானும் அப்படித்தான் நம்பினேன். நான் சொன்னேன்... "நம் காதல் இமயமலையைக் காட்டிலும் உயரமானது. வான்வெளியைக் காட்டிலும் அகலமானது. கடலைக் காட்டிலும் ஆழமானது என்று சொன்னேன்... ஆமாம் ஆமாம் என்றாள். சக மாணவ-மாணவிகளின் விழிகள் வியப்பில் விரிந்தன.
சோனியா-திருப்பத்தூர் நந்தனம் பொறி யியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. நான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. மாணவன். அவள் கல்லாவியில் இருந்து ஊத்தங்கரை வந்துதான் கல்லூரிக்கு போக வேண்டும். ஊத்தங்கரையில் தான் எங்கள் காதல் வளர்ந்தது.

2 வருடம் காதலித்தோம். 6 மாதம் முன்பு நண்பர்கள் உதவியோடு கோயிலில் தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டோம். பர்கூர் சார்பதி வாளர் முன்னிலையில் எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம். சோனியாவின் படிப்பு முடியும் வரை இரண்டு குடும்பங்களுக்கும் இதைப் பற்றி சொல்லக்கூடாது என்று முடிவு செய்தோம்.

இந்த 6 மாதமும்... சோனியாவின் வாழ்க்கை ரொம்ப கஷ்டமான, நாடக வாழ்க்கைதான். தன் வீட்டில் கன்னி கழியாத, குனிந்ததலை நிமிராத ஒரு நல்ல மகளாக நடித்தாள். கல்லூரியில் நல்ல மாணவியாக நடித்தாள். தினமும் இரண்டு மூன்று மணிநேரம் மட்டும் ஒரு நல்ல மனைவி யாக என்னிடம் வாழ்ந்தாள். சோனியாவின் படிப்பு முடிந்ததும் மே மாதம் தனி வீடு எடுத் தோம். வாழத் தொடங்கினோம்... 10 நாள்தான் பகிரங்க கணவன் மனைவி வாழ்க்கை... சோனியா வின் அப்பா வந்தார்... அவர் வயதுக்கு... அவரும் நடித்திருக்கிறார்... நான்தான் உண் மை என்று நம்பி விட்டேன். ஒரு வாரத்தில் அழைத்து வருவதாகச் சொல்லி கூட்டிப்போனார். எங்கேயோ பூட்டி போட்டுவிட்டு என் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

நான் என் காதல் மனைவி சோனியாவைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயம் கோர்ட்டுக்கு கூட்டி வருவார்கள். எங்கள் காதல் எவ்வளவு உயரம், அகலம், ஆழம் என்பதை நீதிபதி முன் அவள் கொடுக்கும் வாக்குமூலம்தான் நிர்ணயிக்கும்...'' வன்னியர் இன வாலிபனான கிருபாகரன் கல்யாண ஆல்பத்தை காட்டியபடி நம்மிடம் சொன்னதில் நூறில் ஒரு பகுதியைத்தான் இங்கே எழுதியிருக்கிறோம்.

சோனியாவைச் சந்திக்க கல்லாவி கிராமம் சென்றோம். சோனியா அங்கே இல்லை.

""எங்கள் சோனியா எஸ்.பி. பாபுவிடம் புகார் கொடுத்திருக்கிறாள். மிரட்டி மயக்கி திருமணம் நடந்திருக்கிறது. பதிவு செய்ததும் அப்படித்தான்... தன்னோட மார்க்ஷீட் சர்டிபிகேட்ஸ் எல்லாம் அந்தக் கிரிமினலிடம் மாட்டிக் கொண்டுவிட்டது வாங்கித் தாருங்கள். அவன் என் கணவனே இல்லை. அவனோடு வாழ்வதைக் காட்டிலும் சாவது மேல் என்று புகாரில் எழுதியிருக்கிறாள் சோனியா...'' -நம்மை விரட்டாத குறையாக சொன்னது சோனியாவின் குடும்பம்.

கோர்ட்டில், நீதிபதியிடம் சோனியா கொடுக்கப் போகும் வாக்குமூலத்தால் தான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை உண்டாக்க முடியும். தன் காதலும் கல்யாணமும் செம்மண் நிலத்தில் பெய்த மழையாகத்தான் இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டி ருக்கிறார் கிருபாகரன்.

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!


இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிப்புக்கு ஆளாகிறாள். கடைசியாக எடுத்த புள்ளி விபரப்படி ஒரு ஆண்டில் 1,85,312 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.

அரசு அலுவலகங்களிலும் கூட பாலியல் ரீதியாக பெண்களைத் துன்புறுத்துவது தொடரவே செய்கிறது. பெண்களைச் சீண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அரசு அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டிய நிலை இருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணத்துக்கு ஒரு சில-

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...' என்றார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை. இங்கே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தமிழக அரசின் கரு வூலத்துறையில் பணியாற்றும் கருவூல அலுவலர் விநாயகம் பிள்ளையோ "கணக்கர் லதாவுக்கும் மாவட்ட கருவூல உதவி அலுவலர் சிவநேசனுக்கும் தகாத உறவு இருக்கிறது' என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கே இ-மெயில் வாயிலாக புகார் அனுப்பி யிருப்பதாகச் சொல்கிறார். அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளரான பாலகிருஷ்ணன், ""தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு இழிவுபடுத்தி புகார் எழுதுவது எவ்வளவு பெரிய குற்றம்? கெட்ட நோக்கத்தோடு பெண் ஊழியர்களை இம்சிப்பது இவரது வாடிக்கை. இவர் ஏற்கனவே பணியாற்றிய சிதம்பரம், விழுப்புரத்திலும் இத்தகைய அடாவடித்தனம் செய்தவர்தான். அதனால்தான் விநாயகம் பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்றார் ஆவேசத்துடன்.

அவமானத்தில் கண்கள் சிவக்க நம்மிடம் பேசினார் கணக்கர் லதா...

""நான் நேர்மை யாகப் பணியாற்று வது ஒரு குற்றமா? அதனால் என்னென்ன இடைஞ்சல்கள்? ஒரு பெண்ணை சுலபத்தில் குற்றம் சுமத்தி இழிவுபடுத்திவிடலாம் என்ற போக்கு எத்தனை கொடுமையானது? இதனால் குடும்பத்திலும் பிரச்சினை, அலுவலகத்திலும் கேவலமாகப் பார்க்கும் நிலை என மன உளைச்ச லில் தவிக்கும் வாழ்க்கையாகி விட்டது. எனக்கெதிராக உள் நோக்கத்தோடு சுமத்தப்பட்ட இந்த அபாண்டத்திலிருந்து எப்படி மீளப் போகிறேனோ?'' என்றார் வேதனையோடு.

விநாயகம் பிள்ளையோ, ""அந்த சிவநேசன் ஒரு கபடதாரி. வள்ளலார் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களை வசியப்படுத்தும் ஆசாமி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்களே என்றுதான் பேசினேன். சிவநேச னையும் லதாவையும் இணைத்து புகார் கொடுத்திருப்பதாக அவர் களே தப்பாக எடுத்துக் கொண் டால் அதற்கு நானா பொறுப்பு? தான்தோன்றித் தனமாகச் செயல்படுபவர் லதா. நான் ஜென்டில்மேன். பெண்களைப் பெரிதும் மதிப்பவன்'' என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

""பெண்கள் அதிகமா வேலை பார்க்கிற இடத்துல இப்படியா கட்டிப்பிடிச்சு... முத்தம் கொடுத்து...? இதுக்கா அரசாங்கம் இவங்களுக்கு சம்பளம் கொடுக்கு?''.

ஏ-1382 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சுயசேவைப் பிரிவில் வேலைபார்க்கும் சாந்தி, காணக்கூடாத அந்தக் காட்சியைப் பார்த்து ஆவேசக் கூச்சலிட, சம்பந்தப்பட்ட சூப்பிரண்டு பாண்டியிடமும் அந்தப் பெண் ஊழியரிடமும் விசாரணை நடத்த வேண்டியதாயிற்று எஸ்.ஓ. அண்ணாத்துரைக்கு. "எனக்கு மேலதிகாரியாச்சே... எப்படி புகார் தர்றது? அப்படி புகார் கொடுத்துட்டு இங்கே வேலைல நீடிக்க முடியுமா?' என்று அஞ்சிய அந்தப் பெண் ஊழியர் ""அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை'' என்று மழுப்ப... ""சரி... சரி...'' என்று விவகாரத் தைக் கிளறாமல் விட்டு விட்டார் எஸ்.ஓ. ஆனாலும் "தவறு செய்த அலுவலர் மீது நடவடிக்கை இல்லையே... இது மேலும் மேலும் தவறு செய்ய, பெண் ஊழியர்களைத் தன் இச்சைக்குப் பணிய வைக்க வழி செய்து விடுமே? இங்கே பத்து வருஷமா விடாப்பிடியா சீட்ல உட்கார்ந்துக்கிட்டிருக்கிற சந்திரசேகருக்கு எங்களுக்கு நடக்குற கொடுமையெல்லாம் தெரியும். அவரோட கணக்கே வேற. அதனால, இதயெல் லாம் கண்டுக்க மாட்டாரு. எங்களுக்கு என்ன பாதுகாப்பு?' என பெண் ஊழியர்கள் சிலர் தங்களின் தவிப்பை வெளிப் படுத்த... நாம் சந்திரசேகரை அந்த ஸ்டோரில் சந்தித்தோம்.

""நான் எதுவும் சொல்லக் கூடாதே...'' என்று தயங்கியவர்,

""அந்தப் பெண்ணே இது என்னோட வாழ்க்கைப் பிரச்சினை, விட்ருங்கன்னு சொல்லிடுச்சு. அப்படியும் இத வெளிய தெரிஞ்சு யாரோ ஒரு ஆள் இங்க வந்து சத்தம் போட்டுட்டுப் போனாரு. சூப்பிரண்டு பாண்டியை இனிமே இந்த ஸ்டோரு பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஓ. சொல்லிருக்காரு'' என்றார்.

"போதையில் பெண் ஊழியர்களைச் சீண்டுவதை வெகு சிரத்தையோடு செய்து வரும் பேர் வழி' என்கிறார்களே? -நிர்வாக அலுவலகத்தில் இருந்த பாண்டியிடமே கேட்டோம்.

""அய்ய... நான் பேரன்-பேத்தி எடுத்தவன். இந்த வயசுல அப்படிப் பண்ணுவேனா? குடிக்கிற பழக்கம் எனக்குண்டு. அத மறுக்கல...'' என்று முதலில் அழுத்தம் காட்டியவர், பிறகு பேச்சுவாக்கில் ""ஆமா... என் கெட்ட நேரம்... அன்னைக்கு சபலப்பட்டுட்டேன். இதப் பெரிசுப்படுத்தாதீங்க...'' என்று ஒத்துக் கொண்டார்.

""குடும்ப சூழ்நிலை, அவமானங்களுக்கு அஞ்சி பெரும்பாலான பெண் ஊழியர்கள் தங்களிடம் அத்துமீறும் அலுவலர்கள் குறித்து புகாரே செய்வதில்லை. சகித்துப் போவதால், ஒரு கட்டத்தில் தவறுகளுக்கு அவர்களே உடன்படவும் நேர்கிறது. எங்கோ, யாரோ ஒருவர்தான் பிரச்சினையை துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இத்தகைய விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும். கருவிலிருந்து கல்லறை வரை பிரச்சினைகள் பெண்களைத் துரத்துகின்றன. இதற்கு நிச்சயம் தீர்வு காண முடியும். அதற்கு நாம் சட்டத்தை அணுக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் பயனுள்ள சட்டங்கள் பல இருக்கின்றன'' என்கிறார் வழக்கறிஞர் ரேவதி.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களைப் போற்றி பாதுகாக்கும் நெறிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

ஆட்டுக்கறி! அதிரடி ஆபரேஷன்!


இரவு 10.00 மணி. சேலம் வ.உ.சி. மார்க்கெட்டை ஒட்டிச் சென்றுகொண்டிருந்தது அந்த மினி வேன்.

""மேடம்... நீங்க சொன்ன மாதிரி இந்த இடம்தான் பப்ளிக்கிற்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாத இடம்... வேனை மடக்கிடலாமா?'' -சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பொற்கொடியிடம், செல்போனில் பர்மிஷன் கேட்டனர், அந்த வேனை பின்தொடர்ந்துகொண்டிருந்த நகர்நலத்துறை பணியாளர்களான மணிகண்டனும் சந்திரனும் சரவணனும் ஞானப்பிரகாசமும். ""ஓ.கே. கேட்ச் இட்'' என்றார் அதிகாரி.

புயல் வேகத்தில் மினி வேனை சுற்றி வளைக்கிறது நால்வர் டீம். பதறிப்போய் வேன் டிரைவர் இறங்க, ""நாங்க மாநகராட்சி நகர்நல துறையிலிருந்து வர்றோம்'' என்றபடியே வண்டியை சீஸ் செய்தார்கள்.

ஒன்றரைமணி நேர டெர்ரர் ஃபாலோ-அப் செய்து அதிரடியாக சீஸ் செய்யும் அளவுக்கு அப்படி அந்த வேனில் என்ன இருக்கிறது? என்றபடியே பின் கதவைத் திறந்து பார்த்தால் குப் பென்று நாற்றமடித்து நம் குடலைப் புரட்டியது. நூற்றுக் கணக் கான செம்மறி ஆட்டுத் தலைகளும், புழு வைத்து நாறிப்போன 1000 கிலோவிற்கும் மேலான ஆட் டுக் குடல், நுரையீரல்களும் நிரம்பியிருந்தன.

""என்னடா ஆட்டுக் கறியை பிடிச்சதுக்கு இவ்ளோ பில்ட்-அப்னு நினைக்கிறீங்களா சார்'' என கவனத்தைத் திருப்பிய நால்வர் டீம் ""ஆனா இவை எல்லாம் ஹோட்டலுக்குப் போயிருந்தா சாப்பிடுற எல்லோரும் காலிதான்... ""ஆமாங்க... அத்தனையும் விஷம்'' என்றபடியே விரிவாய் பேசத் தொடங்கினர்.

""இங்க சேலத்துல கூலி வேலைக்குப் போய் பொழப்பு நடத்துற அன்றாடம் காய்ச்சிகள்தான் அதிகம். இவங்க அதிகம் உபயோகப்படுத்துறது கையேந்தி பவன்கள், சின்னச் சின்ன ஹோட்டல்களைத்தான். ஏற்கனவே ஒன்றரை மாதம் முன் ரோட்டோர சில்லி சிக்கன், மீன் கடைகளை ரெய்டு செய்து பழைய எண்ணெய்யை உபயோகப்படுத்தக் கூடாதுன்னு எச்சரிக்கை செய்து வந்தாங்க எங்க மேடம். அப்படி யிருக்க அதன்பின் மக்கள் பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு வர்றதா தகவல் வந்துக்கிட்டு இருந் தது. குறிப்பா இந்த 15 நாட்கள்ல பல மருத்துவமனை டாக்டர்ஸ் மூலம் நிறைய பேஷன்ட்ஸ் வாந்தி, பேதியால ட்ரீட்மென்ட்டிற்கு வர் றாங்க என தகவல் வந்தது. இந்த பிரச்சினைக்கு மூல காரணம் உணவுதான் என தெரிந்த மேடம் விசாரணையில் இறங்கிய போது தான் கெட்டுப்போன பழைய கறிகளை ஹோட்டல்களில் கலந்து விநியோகித்துவிடுகின்றனர் என அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைச்சது.

மேலும் துருவியபோதுதான்... ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும் பாலானவர்கள் கறி சாப்பிடுவதால் சனிக்கிழமை தோறும் இரவுகளில் பெங்களூரிலிருந்து மினி வேன் களில் காலாவதியான கறிகள் சேலத்திலுள்ள முக்கிய ஹோட் டல்களுக்கு விநியோகிக்கப்படு கிறது உறுதியா தெரிஞ்சது. சரா சரியா ஆட்டுக்கறி கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுது. பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நக ரங்கள்ல, பெரிய ஹோட்டல்கள்ல டேமேஜ் ஆகி வேஸ்ட் ஆகுற கறியிலயும் லாபம் பார்க்க... அந்த கறிகளை பாதி ரேட்டுக்கு வித்துடுவாங்க. அதை வாங் குற சின்னச் சின்ன ரோட்டோர ஹோட்டல்கள் பிரி யாணியில கலந்து வழக்கமான விலையிலயே பொதுமக்களுக்கு தருவாங்க. பொதுமக்களால இது புது கறியா, பழைய கறியானு பார்க்க முடியாது. டேஸ்ட்டா இருந்தா ஓ.கே.னு போயிடுவாங்க. இந்த நெட்வொர்க் ஒரு சோர்ஸ் மூலம் தெரியவந்துதான் ஸ்கெட்ச் போட்டு இன்னிக்கு கையும் களவுமாக பிடிச்சிருக்கோம்'' என்றனர் பெருமிதமாக.

"வாழ்த்துக்கள் மேடம்' என்றபடியே பொற்கொடியிடம் பேசினோம்.

""பொதுவா உடனே அறுத்து சமைக்கப்படும் கறிதான் உடலுக்கு நல்லது. காலாவதியான பழைய கறிகளை சாப் பிட்டால் அமீபியாஸ் வரும், கல்லீரல் பாதிக்கப்படும். பேக் டீரியாஸ் ஃபார்ம் ஆனா வாந்தி, பேதி வரும். பழைய கறி களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் வரும். இப்போ நாங்க பிடிச்ச கறிகளை பார்த்தீங்கன்னா 2 வாரத்திற்கு முன்பு அறுக்கப்பட்டதுன்னு ஆய்வுல தெரியவரும். ரெண்டாவது, புழுக்களெல்லாம் ஃபார்ம் ஆகிடுச்சி. இதை சின்னச் சின்ன கடைக்காரர்கள், குறைந்த விலைக்கு கிடைப்பதால் வாங்கி புழுக்களை அப்புறப் படுத்திவிட்டு பிரியாணியில, மற்ற உணவுல கலந்துடுறாங்க. பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல இது நடக்குது. ஒரு கடைக்கு 1000 பேர் சாப்பிட வர்றாங்கன்னா இப்படிப் பட்ட கறிகளால அத்தனை பேரும் ஃபுட் பாய்ஸனாகி பாதிக்கப்படுவாங்க. சேலம் சிட்டியில மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு நான்-வெஜ் ஹோட்டல்கள் இருக்கு. யோசிச்சுப் பாருங்க... எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்கன்னு. இதைத் தடுக்க மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி சார்கிட்ட தகவல் கொண்டுபோய் டீம் வொர்க்கா இந்த அதிரடியை நடத்தினோம். இது தொடரும்'' என்றார் அக்கறையோடு.

""பெங்களூர் சிவாஜி நகர்ல இருந்து சேலம் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க பழைய கறிகள் விநியோகம் நடக்குது. செவ்வாய், சனி இரண்டு இரவுகளில் சேலம் சிட்டிக்கு மட்டும் 2000 கிலோ பழைய கறி வருதுன்னா தமிழகம் முழுக்க யசிச்சுப் பாருங்க. இதுல பல கோடி லாபம் கிடைக்குது. பெங்க ளூர், மைசூர்லதான் இந்த பிசினஸ் அதிகம். சேலத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் திடீரென அதிரடி ரெய்டு நடத்தி சீல் வைக்கவும் போறாங்க. குறிப்பா "பெண்பாலை' குறிக்கும் பெயரில் நகரத்துல பல இடத்துல வச்சிருக்கிற மெஸ்தான் அடுத்த டார்கெட். சத்தமில்லாமல் செய்யப் போறாங்க மேடம்'' என்கின்றனர் மாநகராட்சி வட்டாரத்தினர்.
உடைந்துபோன சுகாதாரமற்ற முட்டைகளை பாதையோர கடைகள் பயன்படுத்துவதை அறிந்து ரெய்டு நடத்தி அவைகளை அழித்துள்ளார் பொற்கொடி.

மாங்கனி மாநகரில் தொடங்கிய இந்த அதிரடி அனைத்து மாநகரங்களிலும் பரவினால் தமிழகம் "சுகாதார மான தமிழகமாய்' காட்சி தருமே!

ரத்தம் குடிக்கும் மாஞ்சா! சென்னை பயங்கரம்!

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி. உறவினர் வீட்டிலிருக்கும் தன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்து வர டூவீலரில் கிளம்பினார் திருப்பதி. சென்னை வண்ணாரப் பேட்டை அம்பேத்கார் சாலையில் சென்று கொண்டிருந்த திருப்பதியின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டதுதான் தாமதம். அடுத்த நிமிடமே கழுத்திலிருந்து குபு குபுவென இரத்தம் பீறிட் டுக் கிளம்ப... நிலை தடுமாறி கீழே விழுந்த வர்தான்... எழுந்திருக்கவே இல்லை. அதே மாஞ்சா நூல்தான் பின்னால் வந்த சரவணன் என்ற வாலிபரின் கழுத்தையும் பதம் பார்த்தது. இப்படி மாஞ்சா நூலின் கூர்மையால் கழுத்தறுபட்டு உயிரிழக்கும் சம்பவம் தமிழக தலைநகரான சென்னைக்கு புதிதல்ல. சில மாதங்களுக்குள்ளேயே பதினைந்துக்கும் மேற்பட்ட உயிர்களை குடித்து இரத்த வெறியாட்டம் ஆடிக் கொண்டிருப்பதால்தான் "இனி மாஞ்சா காத்தாடி விட்டு அதன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்திருக்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்.

இந்த கடுமையான எச்சரிப்புக்குப் பிறகும் மாஞ்சா காத்தாடி விடுகிறார்களா? என்பதை கண்டறிய மாஞ்சா காத்தாடி விடுவதை உலக விளையாட்டை போல் நினைத்து விளையாண்டு கொண்டிருக்கும் வடசென்னை பகுதியில் ரவுண்ட் அடித்தோம்.

போலீஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி பலர் காத்தாடி விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். "அப்படி என்னதாய்யா இருக்கு? இந்தக் காத்தாடி விடுறதுல?' இளைஞர்களிடம் நைஸாக பேச்சுக் கொடுத்தோம்.

""இன்னா தல இப்டி கேக்குற! உங்க எல்லாருக்கும் கிரிக்கெட்டு எப்டியோ அந்த மாதிரிதான் எங்களுக்கு மாஞ்சா நூல்ல காத்தாடி வுடுறதும்'' என்று அசால்ட் டாக சொல்லி அதிர வைத்த கொருக்குப்பேட்டை இளைஞர்கள்... இந்த விபரீத விளையாட்டைக் குறித்தும் சொல்கிறார்கள்.

""இப்ப சாதாரணமாத்தான் விள்ளாண்டுனுருப் பானுங்க. இதுவே தீபாவளி சீசன் நெருங்குற சமயத்துல பெட் கட்டி டோர்னமென்ட் மேட்சே நடத்துவானுங்க. கொருக்குப்பேட்டையில தொடங்குற மேட்ச்(!) வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, எம்.கே.பி.நகர், ஓட்டேரி, எண்ணூருன்னு ஏரியாவே களை கட்டும்'' என்கிற காந்தி ""எத்தனை காத்தாடியை நம்ம மாஞ்சா காத்தாடியில அறுக்குறோமோ அந்த அளவுக்கு நமக்கு பவரு. அறுக்குறதுக்கு பேரு லொடாய். அதுக்குத்தான் காத்தாடி கயிறுல மாஞ்சா தடவி ப்ளேடு மாதிரி சார்ப்பாக்குறானுங்க பசங்க'' என்றதும்... பொய்யது என்பவ ரோ ""இப்டி லேசா பட்டதும் அறுக்குற மாதிரி ரெடி பண்றது பசங்களுக்கு சப்ப மேட்டரு. காத்தாடி சாமான்னாவே நாட்டு மருந்துக்கடையிலே குடுத்துடு வாங்க. நூலு 45 ரூபாய், வஜ்ரம், சூடுமாவு, கலரு இதோட பாட்டில் ஓடு களை ஒடைச்சுத் தூள் தூளாக்கி கலந்துதான் வேக வைப்போம். அப்படியே சூடாக்கி நூலில் தடவுனதும்... வெய்யிலில் விட்டு காய வைப்பானுங்க. தண்டையார் பேட்டை சிமெண்ட் ரோடு ஏரியா முழுக்க கடைகள்ல காத்தாடியும், நூலும், காத்தாடி செய்யத் தேவையானதும் விக்குறாங்க.

இப்படி செய்யுற காத்தாடிக்கு கோரப்பல்லு, ஒத்தக்கயிறு, ரெட்டைக் கண்ணு, ஹார்ட் பானா, பாம்பை காத் தாடி, பறவை, பல்லு பானா, ரெட் பானா, ட்யூப் லைட்டுன்னு நிறைய பேருக்கீது. இதுல ரெட்டைக்கண்ணு, கோரப்பல்லும் தான் பார்க்குறதுக்கு டெரரா இருக்கும்.

இதுல அய்யாக்கண்ணு காத் தாடின்னு விற்குது. அதுதான் இங்க ரொம்ப ஃபேமஸ். "வீல்' முத்திரை போட்டிருக்கும்'' என்றவர் ""இந்த மாதிரி விடும்போது நிறைய பிரச்சினைலாம் வந்திருக்குதுங்க. அதாவது நடிகர்கள், அரசியல்வாதிகள், கட்சி சின்னம்லாம் போட்டு காத்தாடி விடுறதால் அறுந்து விழுற காத்தாடிக்காரன் பயங்கர காண் டாகிவிடுவான். இதுல ஏரியா பிரச்சினை, கட்சிப் பிரச்சினைன்னு வெட்டுக்குத்து லெவலுக்குப் போய்டும்ங்க'' என்கிறார் மிரட்சியுடன்.

முதலில் சுப்பிரமணி அவரது மகன் பாஸ்கர் பிறகு அவரது மகன் என்று மூன்று தலைமுறையாக காத்தாடி விடுவதை ஹாபியாக வைத்திருக்கும் (மாஞ்சா வம்சமோ) அந்த குடும்பத்தை சந்தித்தோம். ""அப்போ சும்மா ஜாலிக்காக விளை யாண்டுட்டேன் தம்பி... தப்புன்னு தெரிஞ்ச தும் என் மகனை கண்டிச்சேன் கேட்கல. இப்போ என் பேரன எம்புள்ள கட்டுப் படுத்திக்கிட்டிருக்கான்'' என்கிறார் சுப்பிரமணி.

இரண்டு கைகளை இழந்த இளை ஞன் வடிவேலு ""பத்து வயசுல ரொம்ப இன்ட்ரஸ்ட்டா காத்தாடி உட்டுக்கிட்டே ஓடும்போது ரெயில் தண்டவாளத்துல விழுந்து அப்ப வந்த கூட்ஸ் வண்டியில என்னோட கைகள் ரெண்டும் மாட்டி சின்னா பின்னமாகிடுச்சுங்க. இன்னைக்கும் சாப்பிடக் கூட முடியாம... எந்த வேலைக் கும் போக முடியாம கஷ்டப்படுறேங்க'' என்று அழும்போது அவரது தாய், தகப் பனின் கண்களிலும் அழுகை பீறிடுகிறது.

இதைவிடக் கொடுமை, கழுத்தறுபட்டு சமீபத்தில் இறந்து போன திருப்பதி குடும்பத்தின் நிலைமை. கண்ணீருடன் அம்மா லட்சுமியோ ""அய்யோ... 28 வயசுதாங்க ஆவுது அவனுக்கு. கல்யாணமாகி மூன்றரை வயசு ரோகிணி, 10 மாதக் குழந்தை தர்ஷிணின்னு ரெண்டு குழந்தைகள் இருக்கு. என் கணவர் இறந்ததுக்கப்புறம் இந்த ரெண்டு குடும்பத்தையும் அவன்தான் தாங்கிக்கிட்டிருந்தான்... இப்படி போய்ச் சேர்ந்துட்டானே'' என்று குமுறி அழ... மனைவி நித்யாவோ ""அடுத்தவங்க உசுரை எடுக்குறது ஒரு விளையாட்டாங்க. இந்த பிள்ளைங்களை எப்படி காப்பாத்தப் போறேன்னு எனக்கே தெரியல. அப்பா எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்? இப்படிப்பட்ட சாவு யாருக்கும் வரக்கூடாதுங்க. இதுக்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கணும்'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார் இரு குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு.

இந்த புகாரை விசாரித்து வரும் எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்டோ, ""கழுத்தறுபட்டு விழுந்து கிடந்ததை பதறிப் போய் தகவல் சொன்ன அதே பகுதி மக்கள்... காத்தாடி விட்டு உயி ருக்கு உலை வைத்தவர்களை கைது செய்த போது "காத்தாடி விட்ட துக்கு கைதா?' என்று கலாட்டா செய்கிறார்கள். காத்தாடி பொருட்கள் விற்பவர்களை கைது செய்யப் போனால் "எங்க ளுக்கு விற்க உரிமை இருக்கு'ன்னு கோர்ட் ஆர் டரை காண்பிக்குறாங்க. இப்படியிருந்தால் என்ன செய்ய முடியும் நாங்கள்? மாஞ்சா காத்தாடி விட்டு அதன் மூலம் இறந்தால் கொலைக்குற்றமாக கருதி கைது செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றுதான் காவல்துறை போராடுகிறது.

அதற்கு சட்டம் தான் அனுமதிக்கணும். இல்லைன்னா இந்த மாதிரியான விபரீதங்கள் நடப்பதை முழுமையா தடுக்க முடியாது'' என் கிறார் வேதனையுடன்.

யுத்தம் 73 - நக்கீரன் கோபால்


""சார்... கோர்ட்டில் முக்கால் மணி நேரம் கடுமையான ஆர்க்யூமென்ட். பி.பி. சங்கர நாராயணன் உளறிட்டாரு.''

-ஈரோடு செசன்ஸ் கோர்ட்டிலிருந்து வெளியே வந்திருந்த அட்வகேட் ப.பா.மோகனின் குரலில் உற்சாகமும் வெற்றிப் பெருமிதமும் தெரிந்தது.

தம்பி சிவசுப்ரமணியம் மேல் போடப்பட்ட ராஜ்குமார் கடத்தல் வழக்கில் பெயில் கேட்டு கோர்ட்டில் நமது அட்வகேட் ப.பா.மோகனுக்கும் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணனுக்கும் முக்கால் மணிநேரம் கடுமையான வாக்குவாதம்.

""அட்வகேட் ப.பா.மோகனின் குரல் வழக்கம் போல் ஓங்கி ஒலித்தது. ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சிவாவை கைது செய்து 63 நாட்களாகி விட்டது. இதுவரை அவரையோ நக்கீரனையோ சம்பந்தப்படுத்தி எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பால் எடுக்க முடியலை. சத்தியமங்கலம் கோர்ட் டில் கஸ்டடி ரிஜெக்ட்டானதால அரசுத்தரப்பு, உயர்நீதிமன்றத்திற்குப் போனது. அங்கே 2 நாள் கோர்ட் காம்பஸில் விசாரிப்பதற்கு பல நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தாங்க. அந்த விசாரணையும் முடிந்துவிட்டது. அதற்கப்புறம் நக்கீரன் ஆசிரியரை ராஜ்குமார் கடத்தல் வழக்குங்கிற பேரில் கோபி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 10 நாள் விசாரித்து, சம்பந்தமில்லாத கேள்விகளையெல்லாம் கேட்டாங்க. வழக்கிற்கு தொடர்பேயில்லாத அதிகாரிகளெல்லாம் விசாரித்தாங்க. அந்த விசாரணையும் முடிந்துவிட்டது. வீடியோ பதிவுடன் நடந்த அந்த விசாரணையிலும் அரசாங்கத்துக்கு எந்த ஆவணமும் கிடைக்கலை. சிவா வீட்டில் ரெய்டு, அவரோட ஸ்டுடியோவில் ரெய்டுன்னு குடும்பத்துப் பெண்களையெல்லாம் டார்ச்சர் பண்ணியும் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியலை. வேண்டுமென்றே, பழிவாங்கும் நோக்கத் தோடு அரசாங்கம் செயல்படுவதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே இந்த கடத்தல் விவகாரத்தில் நக்கீரனுக்குத் தொடர் பிருப்பதாக அரசுத்தரப்பு நம்பினால் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும்''

-உரத்த குரலில் அட்வகேட் ப.பா.மோகன் வாதம் வைக்க, ""கையில் எந்த ஆவணமோ, ஆதாரமோ இல்லாமல் எப்படி வாதாடுவது'' என்ற யோசனையுடன், "நாகப்பா 164 வாக்குமூலம்...' என்று பி.பி. இழுக்க, நமது அட்வகேட் விடுவதாக இல்லை.

""நாகப்பா என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த 164 ஸ்டேட்மென்ட்டே தவறானது. கடத்தல் நடந்து பேச்சுவார்த்தையின் பொழுது காட்டிலிருந்து தப்பி வந்த நாகப்பா பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு அவரை துன்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ வாங்கிய எந்த 164 ஸ்டேட்மெண்ட்டும் செல்லாது'' என்றார்.

-மீண்டும் ப.பா.மோகனின் வாதங்கள், அரசு வழக்கறிஞ ருக்கு டென்ஷன் தருவதாகவே அமைந்தது. அதனால் பதட்ட மான பி.பி. சங்கரநாராயணன், ""ராஜ்குமார் மீட்பு முயற்சியின் போது 40 கோடி ரூபாய் கை மாறியிருக்குது. அதில் 10 கோடி ரூபாயை ராஜ்குமாரின் மகன்கள் இருவரும் நேரிலேயே நக்கீரன் கோபாலிடம் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்'' என்ற அபாண்டத்தை தன்னுடைய வாதமாக வைத்தார்.

துடித்தெழுந்தார் நமது அட்வகேட் ப.பா.மோகன். நீதிபதி தமிழ்வாணனைப் பார்த்து, ""யுவர் ஆனர்... பி.பி. சொன்னதை அவசியம் நீங்க ரெகார்டு செய்யணும்.''

பதறிப்போன பி.பி, ""நோ.. நோ..நோ... இதை ரெகார்டு செய்யாதீங்க யுவர் ஆனர்'' - தான் சொன்னதை நீதிபதி பதிவு செய்துவிடக்கூடாது எனப் பரிதவித்தார் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன்.

ப.பா.மோகன் ஏன் நீதி பதியைப் பார்த்து பி.பி. சொன்னதை ரெகார்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது எல்லோருக்கும் இருக்குற கேள்வி.

பூனைக்குட்டி மறுபடியும் மறுபடியும் வெளியே வந்து கொண்டே இருக்கிறது என்ற கதை, எங்கப்பன் குதிருக்குள் இல்லங்கற கதை, திருடனுக்கு தேள் கொட்டுன கதை இப்படி எக்கச்சக்கமா ஆகிப் போனதால் அரசு தரப்பு பதறியது கார ணம்...





நக்கீரன் மீது ஏற்கனவே இவர்கள் என்ன என்ன வழக்கு களை போடலாம், எப்படி எல்லாம் வழக்குகளை புனையலாம் என்று திட்டமிட்டு அந்த திட்ட மிடலுக்கு ஏற்ப ஆவ ணங்களையும் சாட்சி யங்களையும் ஜோடிக்க நினைத்தனர். ஒரு வழக்கில் சட்டப்படி புலனாய்வு செய்துதான் இறுதியில் ஒருவர் குற்றவாளியா, இல் லையா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். இங்கே முன்கூட்டியே 10 கோடி ரூபாய் கைமாறியது என்று இவர்களாக எந்த ஆதாரமும் இல் லாமல் முடிவு செய்து கொண்டு புலனாய்வை கொண்டு செல்வது. அதற்கேற்ப பொய் சாட்சிகளை புனைந்து ஒரேயடியாக எதிரி களை சமாதி கட்டுவது.

இதன் காரண மாகத்தான் ப.பா. மோகன் இதை ரெகார்டு செய்யும்படி நீதிபதியை வேண்டி னார். ஏற்கனவே கோடி கள் கைமாறியது பற்றி யாரேனும் கொடுத்த புகாரோ அல்லது அது சம்பந்தமான வாக்குமூலங்களோ இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இதுநாள் வரை இல்லை. யாரும் லட்சங்களோ, கோடிகளோ எங்கள் மூலமாக கொடுத்ததாக சொன்னதுமில்லை, புகாராக எழுத்து மூலம் கொடுக்கவுமில்லை. நீதிமன்றத்தில் அதற்காக தடயங்களை சமர்ப்பிக்கவும் இல்லை. அப்படி இருந்தும் பி.பி. 40 கோடி அதில் 10 கோடி என்று முன்பு அவர்கள் ரூம் போட்டு திட்டமிட்டதை அவர் அறியாமல் வெளியே சொன்னதுதான் பூனைக்குட்டி வெளியில் வந்த கதை.

நீதிபதி அவரை ஒரு பார்வை பார்த்தார். அதன் அர்த்தம், நீங்கள் சொன்னதைத்தானே எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பதிவு செய்யச் சொல்கிறார் என்பது போல இருந்தது. பி.பி.யால் எதுவும் சொல்லமுடியவில்லை.

தடுமாற்றத்துக்குள்ளான பி.பி..., ""யுவர் ஆனர், இதை ரெகார்டு செய்வதால் உடனே பத்திரிகையில் இது செய்தியாக வெளியாகிவிடும். டி.வி.யிலும் ஒளிபரப்பி விடுவார்கள். அது இன்வெஸ்டிகேஷனுக்கு இடையூறாக அமையும். அதனால்தான் ரெகார்டு செய்யக்கூடாது என வலியுறுத்துகிறேன்'' என்றார். எங்கே நக்கீரனை பழிவாங்க அரசாங்கம் போட்ட திட்டம் வெளியே தெரிஞ்சுடுச்சோன்னு பி.பி. கிடந்து தவிக்கிற தவிப்ப கோர்ட்டே பார்த்தது.

குறுக்கிட்ட நமது அட்வகேட் ப.பா.மோகன், ""பத்திரிகைகளில் போடக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. ஓப்பன் கோர்ட்டில் நடக்கும் விஷயங்களை வெளி யிடுவதற்கும் ஒளி பரப்புவதற்கும் அவர் களுக்கு உரிமை இருக்கிறது. பட்ங்ஹ் ட்ஹஸ்ங் ற்ட்ங் ழ்ண்ஞ்ட்ற் ற்ர் ல்ன்க்ஷப்ண்ள்ட் ண்ற்'' என்றார். மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் சட்டப்போராளி அல்லவா அவர்! அதிரடிப் படையினரால் அவதிக்குள் ளான மலைவாழ் மக்களின் கொடுமைகளை நம்மோடு சேர்ந்து வெளிக் கொண்டுவந்ததில் முன்னணியில் நின்றவர். கருத்து சுதந் திரத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அதனால்தான் பி.பிக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். எல்லா டி.வி. சேனல்களின் நிருபர்களும் இருந்தனர். பி.பி. சொன்னதை எல்லோரும் குறித்துக் கொண்டனர். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் அரசு வழக்கறிஞர்.

நீதிபதி தமிழ்வாணன் அரசாங்கம் போட்ட வழக்குகளின் தன்மையை நன்கு உணர்ந்து அன்றே அடுத்ததாக வந்த கந்தவேலு கொலை வழக்கில் தம்பி ஜீவாவுக்கும், தம்பி பாலுவுக்கும் முன்ஜாமீன் வழங்கினார்.

கோர்ட்டில் நடந்த விவரங்களை போனில் நம்மிடம் பகிர்ந்துகொண்ட ப.பா.மோகன், ""சார்... ராஜ்குமார் கடத்தல் தொடர்பா நக்கீரனை சம்பந்தப் படுத்தி நாகப்பா ஏதாவது சொல்லியிருக்காரான்னு உறுதிப்படுத்திக்கணும்.''

""அதுதான் நாகப்பாவிடம் 164 வாக்குமூலம் வாங்குனது செல்லாது என்றாகி விட்டதே அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை சார்.''

""வேற யாரையாவது சொல்ல வச்சிருக்காங்களா?''

""அப்படி யாரும் வாக்குமூலம் கொடுக்கலீங்க சார்.. ஆனா, இனிமே யார்கிட்டேயாவது வற்புறுத்தி வாங்க முடியுமா?''

""பழைய தேதியைப் போட்டு ஸ்டேட்மெண்ட் வாங்குவதற்கு வாய்ப்பிருக்குது. ஆனா, வழக்கின் தன்மையை ஜட்ஜ் அறிந்திருப்பதால் அதை ஏற்க மாட்டார்.''

-நம்பிக்கையாகச் சொன்னார் அட்வகேட் ப.பா.மோகன். அவர் என்னுடன் பேசிக் கொண்டி ருக்கும்போதே எனக்கொரு யோசனை.

ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, உயிரைப் பணயம் வைத்து நக்கீரன் தனது தூதுப் படலத்தை மேற் கொண்டிருந்தது. அரசியல் காழ்ப்புணர்வாலும், பத்திரிகையுலகப் போட்டியினாலும் சில துரோகிகளும் வயிற்றெரிச்சல்காரர்களும் அதிகார பிச்சைக்கு ஏங்குறவர்களும் இன்னும் நெறைய பேர்களால்... நக்கீரனுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த மிஷனில் ராஜ்குமார் உயிருக்கு எப்படியாவது ஆபத்தை வரவழைத்து, 1 லட்சம் பேரை சாகடித்து, அதன் மூலமாக இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் செய்ய துடித்த அரசியல் அன்னகாவடிகளும் நம்மை காலிபண்ண கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தனர். ராஜ்குமார் மகன்களின் பெயரைப் பயன்படுத்தி 40 கோடி, 50 கோடி என விஷமப் பிரச்சாரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

மீட்பு முயற்சியில் தனிப்பட்ட அக்கறை செலுத்தி, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் எந்தவித உரசல்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் இரு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தவர் ரஜினி. ராஜ்குமாரை எப்படியாவது மீட்டு வந்துவிடவேண்டும் என்பது தான் நமக்கும் அவருக்கும் ஒரே இலக்காக இருந்தது. ஆனால், மீட்பு முயற்சிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருப்பதையும், ராஜ்குமார் மகன்களின் பெயர்களை அதில் இழுப்பதையும், இதுபற்றி அவர் களும் எதுவும் பேசாமல் இருப்பதையும் ரஜினியிடம் வருத்தத்துடன் தெரிவித்தேன்.

ரஜினி பதறிவிட்டார்.

-யுத்தம் தொடரும்

Thursday, July 22, 2010

சிம்பு இனி 'எஸ்டிஆர்'!


சிம்பு தனது பெயரை எஸ்டிஆர் என சுருக்கியுள்ளார். தனது ரசிகர்களும் இதே பெயரிலேயே இனிமேல் தன்னை அழைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பெயர் சுருக்கம் வந்ததற்கு ஒரு தனிக் கதையே இருக்கிறது. சிம்பு தற்போது நடித்து வரும் வானம் படத்தின் லண்டன் ஷூட்டிங்குக்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் சிம்பு. அப்போது விசா விண்ணப்பத்தில் அவரது முதல் பெயர், நடுப் பெயர் உள்ளட்டவற்றை எழுதுமாறு கூறியிருந்தனர்.

இதையடுத்து இனிஷயலின் விரிவாக்கத்துடன் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்று எழுதியிருந்தார் சிம்பு. இதைப் பார்த்த விண்ணப்ப அதிகாரி (அவருக்கு தமிழ் தெரியுமாம்) உங்களது பெயரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போலவே தெரிகிறதே. பேசாமல் எஸ்டிஆர் என உங்களது பெயரை மாற்றிக்கொள்ளலாமே எனக் கூறினாராம்.

எம்ஜிஆரும், என்டிஆரும் எத்தனையோ சாதனைகளைச் செய்தவர்கள். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு அந்த அதிகாரி பேசியதால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு, இந்தப் பெயரிலேயே இனி எல்லோரும் அழைக்கட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இதை விட முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். குறிப்பாக சமூக சேவை நிறுவனங்கள் பலவும் சிம்புவை அணுகி வருகின்றனவாம்.

தங்களுக்காக ஏதாவது செய்யுங்களேன் என்றும் அவர்கள் கோரி வருகிறார்களாம். இதை ஏற்று அவர்களுடன் கை கோர்க்க சிம்புவும் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாராம்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்., எஸ்.டி.ஆர், சமூக சேவை - ஏதோ லிங்க் இருப்பது போல தெரிகிறதே!!

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி


காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியா வை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட் டிலிருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு டெஸ்ட் போட்டியின் தொடக்கம் முதலே இருந்தது. இன்று பிற்பகல் வரை அவர் 799 விக்கெட்களுடன் இருந்தார் முரளி.

பிற்பகல் 2 மணியளவில் முரளிதரன் தனது உலக சாதனையை நிகழ்த்தினார். அவரது 800வது விக்கெட்டாக பிரக்யான் ஓஜா அவுட் ஆனார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முரளிதரன் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

10 வி. வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

முன்னதாக, காலேவில் நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்து. 2வது நாள் ஆட்டம் நடக்கவே இல்லை. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து இலங்கை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சடசடவென விக்கெட்களை இழந்து 276 ரன்களில் வீழ்ந்தது.

முதல் இன்னிங்ஸில் ஷேவாக் சதம் போட்டார். அவர் 109 ரன்களை எடுத்தார். டெண்டுல்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 2வது இன்னிங்கிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியது. ஷேவாக், கம்பீர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டிராவிட் நிதானமாக ஆடி44 ரன்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத சச்சின் இந்த முறை 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸ் தோல்வி என்ற பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருந்த நிலையில், லட்சுமண் ரூபத்தில் இந்தியாவுக்கு நிம்மதி வந்தது. மிக மிக நிதானமாக ஆடி வரும் லட்மண் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.

அவரும், இஷாந்த் சர்மாவும் நிதானமாக ஆடி இந்தியாவின் சரிவை நிறுத்தினர். இதன் காரணமாக இலங்கையை விட 94 ரன்கள் முன்னிலை இந்தியாவுக்குக் கிடைத்தது.

லட்சுமண் 69 ரன்களும், இஷாந்த் சர்மா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 338 ரன்களுக்கு இழந்தது.

95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் சதம் போட்ட பரவனவிதனா 23 ரன்களை எடுத்தார். திலகரத்னே தில்ஷன் 68 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

ஆட்ட நாயகனாக லசித் மலிங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நினைவுப் பரிசு வழங்கிய ராஜபக்சே:

முரளிதரன் உலக சாதனையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து வழங்கி முரளிதரனைப் பாராட்டினார். போட்டியின் இறுதி நாளில் அவர் மைதானத்திலிரு்நது வந்திருந்து போட்டியையும் பார்த்தார்.

விடைபெற்றார் முரளிதரன்

இந்தப் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் முரளிதரன். போட்டியின் முடிவில் அவர் பேசுகையில், தனக்கு ஆதரவாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார். மேலும், மனைவி, குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்து விடைபெற்றார்.

முரளிதரன் ஒரு பார்வை...

132 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Read: In English
அதேபோல 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

முதல் தர போட்டிகளில் 1366 விக்கெட்களையும் அவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 20, 2010

ஆர்யாவுக்கும், எனக்கும் வெறும் நட்புதான்-அடித்துக் கூறுகிறார் லட்சுமி ராய்


லட்சுமி ராயை யாருடனாவது இணைத்துதான் சமீபகாலமாக செய்திகள் வருகின்றன.

முன்பு கிரிக்கெட் வீரர் டோனிக்கும் நடிகை லட்சுமி ராய்க்கும் இடையே காதல் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தக் கிசு கிசு டோனி திருமணத்தால் பொய்யாகிவிட்டது.

இந் நிலையில் லட்சுமி ராய்க்கும் ஆர்யாவுக்கும் காதல் என்ற செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து லட்சுமி ராயிடம் கேட்டால்,

நானும், ஆர்யாவும் நல்ல நண்பர்கள். எங்களுக்கிடையில் காதல் இல்லை. இருந்திருந்தால் அதை நானே ஒப்புக் கொள்வேன். முன்பே என்னை ஆர்யாவுடன் இணைத்து பேசினார்கள். தற்போது மீண்டும் அதை ஆரம்பித்துள்ளார்கள்.

இதே போன்று தான் எனக்கும் டோனிக்கும் காதல் என்றார்கள். எனக்கும் டோனிக்கும் இடையே நட்பை தவிர வேறு எதுவுமில்லை. அவருக்கு நிறைய தோழிகள் உண்டு. அதில் நானும் ஒருத்தி.

அவருக்கு திருமணம் நடந்த போது நான் அமெரிக்காவில் இருந்தேன். இந்தியா வந்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நானும் அவரும் இன்னும் நண்பர்களாக உள்ளோம். இது அவர் மனைவிக்கும் தெரியும்.

எனக்கு வரப்போகும் கணவர் நல்லவராக இருக்க வேண்டும். நான் கலைத் துறையில் இருப்பதால் என்னை புரிந்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.

டோனியும் அசினும் நண்பர்கள் தான். இது குறித்து மேலும் பேச நான் விரும்பவில்லை என்றார் லட்சுமி.

தற்போது ராகவா லாரன்ஸுடன் நல்ல நட்பாக இருக்கும் லட்சுமி ராய், அவருடைய இயக்கத்தில் உருவாகும் காஞ்சனா படத்தில் நடிக்கிறார். இதுதவிர மோகன்லாலுடன், கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். அஜீத்தின் மங்காத்தாவிலும் நடிக்கிறார்.

'ஸ்லம்டாக்'கை மிஞ்சுமா எந்திரன்?


ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம்.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் ஆஸ்கர்களை வாங்கிக் குவித்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

எந்திரனில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும் வகையி்ல் ரஹ்மான் இசையமைத்துள்ளாராம். பாடலைக் கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அதன் இசையும், ஒலிப்பதிவும் மனதை மயக்கும்வகையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளாராம் ரஹ்மான்.

பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் பெரும் கவனம் எடுத்து வருகிறாராம் ரஹ்மான். தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்டவற்றில் ரஹ்மானும், பூக்குட்டியும் பிசியாக உள்ளனர்.

நித்தியானந்தாவுடன் என்னைத் தொடர்புப்படுத்தலாமா?-விசனத்தில் மாளவிகா


சாமியார் நித்தியானந்தாவை டிவி நடிகை மாளவிகா அவினாஷ் சந்தித்ததை, நான்தான் சந்தித்தேன் என்று கூறி விட்டார்களே என்று வருத்தப்பட்டுள்ளார் நடிகை மாளவிகா.

ரஞ்சிதா சிக்கலிலிருந்து முழுமையாக இன்னும் மீளாத நிலையில் நித்தியானந்தா மீண்டும் போதனைகளில் இறங்கி விட்டார். கோர்ட் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து சமீபத்தில் தனது ஆசிரமத்திற்குள்ளேயே சீடர்களுக்கும், தன்னைத் தேடி வந்த பக்தர்களுக்கும் ஆசி வழங்கி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு டிவி நடிகை மாளவிகா அவினாஷும் வந்திருந்தார். இவர் சிவராசன்-சுபா கதையான சயனைட் படத்தில் நடித்திருந்தவர். தமிழ் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்.

ஆனால் சினிமா நடிகை மாளவிகாதான், நித்தியானந்தாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் மாளவிகா அப்செட்டாகி விட்டாராம்.

நானே சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறேன். குடும்பம் ஆகி விட்டது. இப்படி இருக்கையில் நான் ஏன் போய் அவரைப் பார்க்க வேண்டும். எனக்கும் பெங்களூர் சொந்த ஊர் என்பதால் இப்படி எழுதி விட்டார்களோ என்னவோ. இருந்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாம் இல்லையா என்று கூறினார் மாளவிகா.

இதற்கிடையே, நித்தியானந்தாவைப் பார்த்து ஆசி வாங்கி விட்டு வந்த மாளவிகா அவினாஷைப் பார்க்கவே தமிழ் டிவி சீரியல் நடிகைகள் அஞ்சுகிறார்களாம். பார்க்கக் கூடாததைப் பார்த்தது போல அவரைக் கண்டால் சற்று விலகி போய் விடுகிறார்களாம். இதனால் இந்த மாளவிகாவும் அப்செட்டாக இருக்கிறாராம்.!

Monday, July 19, 2010

ஓவியா ரவுசு-நீக்கிய ராசு!


முளைத்து மூன்று இலை விடுவதற்குள் என்று ஒரு பழமொழி உண்டு. அது அப்படியே 'களவாணி' ஓவியாவுக்கு பொருந்தும்.

கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த சமீபத்திய 'கேங்'கில் ஓவியாவும் ஒருவர். வந்த வேகத்தில் அலம்பலை ஆரம்பித்து விட்டாராம் ஓவியா.

முதல் படமான களவாணி சூப்பர் ஹிட்டாகி விட்டதால் எல்லாம் என்னால்தான் என்ற ரேஞ்சுக்கு பார்க்க ஆரம்பித்துள்ளாராம்.

இந்தப் படத்துக்கு முன்பே ராசு மதுரவன் இயக்கத்தில் முத்துக்கு முத்தாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ரூ. 1 லட்சம் சம்பளம் பேசி, ஒரு அமவுன்ட்டை அட்வான்ஸாக வாங்கிப் போட்டிருந்தார் ஓவியா. இப்போது களவாணி மெகா ஹிட்டாகியிருப்பதால் டக்கென சம்பளத்தை ரூ. 15 லட்சமாக ஏத்தி விட்டாராம்.

கடுப்பாகிப் போன ராசு மதுரவன், மண்ணை நம்பிப் படம் எடுக்கும் என்னிடமே இப்படி வீம்பா என்று டென்ஷனாகி 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று ஓவியாவை படத்திலிருந்தே நீக்கி விட்டாராம். அட்வான்ஸையும் வாங்கி விட்டாராம்.

சமீப காலமாக கதையை நம்பி மட்டுமே நல்ல படங்கள் வருகின்றன. ஓடவும் செய்கின்றன. ஆனாலும் இப்படிப்பட்ட சில நாயகிகள் கிளம்புவதை ஆரம்பத்திலேயே 'கட்' செய்ய வேண்டும் என்று ராசு மதுரவன் தரப்பு கோபத்துடன் கூறுகிறது. தற்போது ஓவியாவுக்கு பேசிய சம்பளத்தில் மூன்று நாயகிகளை புக் செய்து படத்தையும் தடபுடலாக தொடங்கி விட்டார்களாம்.

Sunday, July 18, 2010

அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும்பல்!


இப்படியுமா ஈனத்தனமாக நடந்து கொள்வார்கள் கேரள வனத்துறையினரும்... வனப் பாதுகாவல் குண்டர்களும்...?

இதோ அந்தக் கொடூரக் காட்சி...!

கொட்டிக் கொண்டிருக்கும் கும்பாவுருட்டி அருவிக்கு முன்னால்... சுமார் 20 மீட்டர் தொலைவு...

பச்சைப் பசேல் செடி கொடிகள் மரங்கள்... கரடு முரடான சரளைப் பாதை... மனைவியோடும் மகளோடும் வருகின்ற தமிழரை, மலையாள இளைஞர்கள் இருவர் வழிமறிக்கின்றனர். பின்னணி யில், நான்கைந்து பேர் பேசுவதும் மிரட்டுவதும் கேட்கிறது.

அந்தக் குடும்பத் தலைவரை 2 பேர் அடித்து இழுத்துக் கொண்டு போகின்றனர்.

""அய்யோ... விட்ருங்க... விட்ருங்க... ப்ளீஸ்... ப்ளீஸ்... சேலை... அய்யோ... நகையையெல்லாம் தர்றேன்... என்னை விட்ருங்க... அய்யய்யோ என் மகளை...'' அலறுகிறாள் அந்தத் தாய்.

இளம்பெண்ணை பிடித்துக் கீழே தள்ளுகிறார்கள்... அந்தப் பெண்ணும் கதறுகிறார்... செல்ஃபோன் கேமரா... செடிகொடிகளில் அலைமோதுகிறது. அடுத்த காட்சி ""இந்தப் பெண்ணையும் அப்படிப் பண்ணணும்'' ஒரு ஆணின் குரல். பயந்துபோன அம்மா, மகளுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்று அந்தக் கொடூரன்கள் சொன்னபடி இடுப்புக்குக் கீழே ஆடையின்றி... ஓட்டமும் நடையுமாய் கரடு முரடான மலைப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

இந்தக் காட்சி... கடந்த ஒரு வாரமாக கேரள இணையதளமொன்றில் தொடர்ந்து காட்டப்பட்டு... கேரளத்திலும் நெல்லைச் சீமையிலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது.

இந்தக் கொடூரத்தில், வனத்துறையின் கும்பலொன்று ஈடுபட்டிருப்பதை உணர்ந்த கேரள வன அதிகாரி வர்க்கீஸ் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கொல்லம் மாவட்ட எஸ்.பி.ஹர்சிதா ""இதைப் பற்றிய ரிப்போர்ட் உடனே வேண்டும்!'' தென்மலை போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கேரள சுற்றுலா தலங்களில் ஒன்றான கும்பாவுருட்டியில், ஒரு தமிழ்க் குடும் பத்திற்கு ஏற்பட்ட இந்தக் கொடூரத்தை அறிந்த கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஸ்பெஷல் டீமை உருவாக்கிக் களமிறக்கினார்.

""இப்படிப்பட்ட ஒரு கொடுமை கும்பாவுருட்டியில் நடந்திருக்கிறதே... என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றீர்கள்... உடனே...!'' 14.7.10 அன்று கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சதீஷன் கண்டனக் குரல் எழுப்பினார்.

""நெட்டில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் உண்மைதான். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்!'' காங்கிரஸ் உறுப்பினருக்குப் பதில் சொன்னார் கேரள வனத்துறை அமைச்சர் பிளோய் விஸ்வம்.

கேரள வனக்கும்பலால் சீரழிக்கப்பட்ட அந்தக் குடும்பம் என்னாயிற்று? யாருக்கும் தெரியவில்லை.
கும்பாவுருட்டி அருவி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில் கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதை யில் 500 மீட்டர் நடந்தால்... மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.

""நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக் கும்.... ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக் காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடு வோம்... அருவிக்கு போறவங்க யாரும் சந் தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி... கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டி யில ஏறுனாங்க. அங்கே போனதும்... 1 மணி நேரத்தில் வர் றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க... ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா... மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. "யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க... தப்பி ஓடிவந்தோம்'னு சொன்னாங்க... என்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்... வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை!'' செங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.

கடந்த மே மாதம்... தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கும்பாவுருட்டியின் அழகை ரசிக்கவும், குளிக்கவும் தன் மனைவியோடும் 15 வயதான மகளோடும் காரில் சென்றார்.

கேரள வனக்குழுவினர் 6 பேர் இந்தக் குடும் பத்தை சுற்றி வளைத்து ""பாண்டிக்கார பய பொண்டாட்டியையும் குட்டி மோளையும் நமக்கு கூட்டி வந்தூ...'' என்று சுற்றி வளைத்திருக் கிறார்கள். அந்தத் தொழிலதிபரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு, அவர் கண்ணெதிரில் அவர் மனைவியையும், மகளையும் சிதைத்து அனுப்பி யிருக்கிறார்கள்.

""ஏன் போலீசில் புகார் செய்யவில்லை?''

""அங்கே போலீஸ் இல்லை. போலீசில் புகார் கொடுக்க வேண்டுமென்றால், அங்கிருந்து திரும்பி அச்சன்கோயில் வழியாக செங்கோட்டை வந்து மீண்டும் புளியரை வழியாக தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போகணுமாம்... சுமார் 100 கி.மீ. சுற்றியாகணும்... அப்புறம்... நம்ம குடும்ப கவுரவத்தையும்...'' என்று தேம்பினா ராம் அந்தத் தொழிலதிபர்.

புளியங்குடியில், கல்வி நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பிலிருக்கும் இந்த இளைஞர், கடந்த மாதம் கும்பாவுருட்டிக்கு மனைவி யோடு போயிருக்கிறார்.

அங்கே நடந்த வன்முறைப் பலாத்கார முயற்சி இவரை மிகக் கடுமையாகப் பாதித் தது. கும்பாவுருட்டியில் இருந்து ஆவேசமாக வும், பதட்டமாகவும் திரும்பிய இவர், தனது மனைவியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மைத்துனரை அழைத்துக் கொண்டு புளியரை வழியாக தென் மலைக் காவல்நிலையத்திற்கு சென்றார். செல்லுமுன் நமக்குப் போன் செய்து ""ஒரு அவசரமான, கொடுமையான செய்தி... இப்ப தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போறோம். போய் வந்து உங்களிடம் எஃப்.ஐ.ஆர். காப்பியோடு நடந்ததைச் சொல்கிறேன். காலையில் கட்டாயம் வீட்டுக்கு வாருங்கள்!'' என்றார். மறுநாள் காலையில் புளியங்குடியில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம்.

வீங்கிய முகத்தோடு நம்மை எதிர்கொண்ட அவர் ""ஸாரி... ஸாரி.. உங்களை அலைய வச்சிட்டேன்... நடந்த எல்லாத்தையும் போலீஸ்ல புகாரா கொடுக்கணும்... நக்கீரன்ட்டயும் சொல்ல ணும்னுதான் உங்களை வரச் சொன்னேன். ஆனால் சொல்ல முடியாது... சொல்லிப் பிரயோசனம் இல்லை...!''.

""சார்... உங்க மாதிரி படிச்சவங்க கூட மானம் மரியாதைனு மறைக்கிறதால்தான் கேரள வனக்கும்பலின் கொடூர அட்டகாசம் பயமில்லாமல் தொடருது... அதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார்... தென்மலை போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா... இல்லையா?'' என்றோம்.

""கும்பாவுருட்டி ஃபாரஸ்ட் கும்பலே பரவா யில்லை... தென்மலை போலீஸ்காரங்க தமிழன் னால அவ்வளவு கேவலமா நடத்துறானுங்க. கும்பாவுருட்டில நடந்தது எல்லாத்தையும் ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு போயி ருந்தோம். "இங்கிலீஸ் எழுத்தை பதிவு செய்ய முடியாது. நீ சொல்லு நாங்க மலை யாளத்தில எழுதிக்கிறோம். நீ கையெழுத்து போட்டுட்டு கிளம்பு'னு சொன்னாங்க. அவங்க மலையாளத்தில என்ன எழுதுவாங்கனு நமக்கு எப்படித் தெரியும்? எஃப்.ஐ.ஆரை ஆங்கிலத்தில்தான் எழுதணும்னு சொன்னோம். அதனால ரொம்ப கேவலமா பேசி... ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க... புகாரை திருப்பி எடுத்துட்டு வந்துட்டோம்... வேண்டாம் எதையும் எழுத வேண்டாம்... அந்தப் பாவிகளுக்கு கடவுள் கூலியைக் கொடுப்பார்!'' என்று நம்மை அனுப்பி வைத்தார் அந்தப் புளியங்குடிக்காரர்.

கடைசியில்... பாதிக்கப்பட்ட யாரும் புகார் கொடுக்காமலே... தாங்களே தங்கள் குடிபோதையில் நடத்திய கொடூரத்தை செல் கேமராவில் எடுத்தனுப்பி... கேரளாவையும், நெல்லைச் சீமையையும் கலங்கடித்திருக்கிறார்கள் கும்பாவுருட்டி வனத்துறைக் குண்டர்கள்.


கண்ணால் கண்ட ஆதிவாசிப் பெண்!




""கடந்த இரண்டாண்டுகளாக நடக்கும் இந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான்கு புகார்கள் கொளத்து புழா காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது'' என்கிறார் இந்த வீடியோ காட்சிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த அன்வேஷனம் (விசாரணை) இணைய தள இதழின் ஆசிரியர் சுல்பிகர், ""இதை அரங்கேற்றும் கொடுமைக்காரர்கள் அனைவரும் கேரள வன பாதுகாப்பு கமிட்டி என்கிற சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியினர் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய அமைப்புதான் இந்த சங்கம். இவர்களைப் பற்றி தொடர்ந்து புகார்கள் எங்களுக்கு வந்தது. இதையடுத்து அந்தச் சங்கத்தில் ஒருவரைப் பிடித்து அவரது கைகளாலேயே அந்தக் கொடுமைக் காட்சிகளை பதிவு செய்ய வைத்தோம். இக் கொடுமையைச் செய்தவர்கள் என அச்சன்கோயிலைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளான சோக்கு (எ) மணிகண்டன், அந்துருமான் ஷாஹீர், அஜயன் ஆசாரி ஆகிய மூவரை கேரள மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களின் அராஜகங்களை நான் என் கண்ணால் பார்த்தேன் என ஒரு தமிழ் ஆதிவாசி பெண்ணும் தைரியமாக சாட்சியமும் அளித்துள்ளார். புலனாய்வுச் செய்திகளில் நக்கீரனே எனக்கு ரோல்மாடல். நக்கீரன் மீது அரசுகள் காட்டிய அடக்குமுறையைப் போலவே கேரளாவை ஆளும் சி.பி.எம். அரசின் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வெளியிட்ட வீடியோ பொய் என நிரூபிக்க எங்களது அலுவலகத்தில் ரெய்டெல்லாம் நடத்தினார்கள். கடைசியில் உண்மை வென்றது'' என்கிறார்.

""ஜெ.'' அழைப்பு! "கை' கணக்கு!


""ஹலோ தலைவரே... .... தொண்டர்கள் விரும்புவதுபோல கூட்டணி அமையும்னு கோய முத்தூரில் நடந்த கண்டன கூட் டத்தில் ஜெ பேசியதுதான் இந்த வாரத்தின் அரசியல் பரபரப்பு. எந்த அடிப்படையில் கூட்டணி மாற்றம் பற்றி ஜெ பேசுறார்னு எல்லாக் கட்சிகளுமே யோசிச்சிக்கிட்டிருக்குது.''

""புதுக்கூட்டணின்னா தே.மு.தி.க. வோடா? காங்கிரசோடா?''

""எதிர்பார்ப்பிற்குரிய கூட்ட ணின்னா அது காங்கிரசோடு அமைக்கிற கூட்டணிதான். அப்படின்னா காங்கிரசில் என்ன நடக்குதுன்னு டெல்லி வட்டாரத்தில் விசாரித்தேங்க தலைவரே.. .. அங்கே நம்பர் 12, துக்ளக் லேனில் இருக்கிற இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் போன 13, 14, 15 மூணு நாட்களிலும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளோடும், 45 வயதுக்குட்பட்ட தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடும் அகிலஇந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளரான ராகுல்காந்தி தீவிரமா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.''

""என்ன சொன்னாராம்?''

""எடுத்த எடுப்பில் தன்னோட கருத்தை வெளிப்படுத்தாமல், தமிழக காங்கிரசாரைப் பேசச் சொல்லி கேட்டிருக்கிறார். படபடப்பு இல்லாம, ஃப்ரீயா பேசுங்கன்னு அருள் அன்பரசு எம்.எல்.ஏகிட்டே சொன்னதோடு, தமிழகத்தில் நம்ம கட்சி வளர்ந்திருக்கான்னு கேட்டிருக்கிறார் ராகுல். அதற்கு அருள், 15% வாக்குகள் நமக்கு நிரந்தரமா உண்டு. இது சைலண்ட் ஓட்டு. இதை சரியானபடி நாம பூத்துக்கு கொண்டு வந்து சேர்க்காததால மற்ற கட்சிக்காரங்க பர்சேஸ் பண்ணிட்டுப் போய்க்கிட்டிருந்தாங்க. நீங்க தமிழ்நாட்டுக்கு வந்துட்டுப் போனபிறகு காங்கிரஸ் கட்சியோட ஓட்டு பலம் 22 சதவீதமாக உயர்ந்திடிச்சின்னு சொல்ல, அசால்ட் டான புன்னகையோடு அருள்அன்பரசை நிமிர்ந்து பார்த்த ராகுல், அந்த பாயிண்ட்டுகளைக் குறிச்சிச் சிட்டார். விவரங்களையெல் லாம் கேட்ட பிறகுதான் ராகுல் பேச ஆரம்பித்திருக்கிறார்.''

""அவரோட கணிப்பு என்ன?''

""எம்.எல்.ஏ. காயத்ரி தேவி போன்றவங்ககிட்ட ராகுல் பேசுறப்ப, தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க- அ.தி.மு.க.வுக்கு மாற்றாக காங்கிரசைத்தான் நினைக்கிறாங்கன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்குது. காங்கிரஸ் மட்டும்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நியமிக்கப் போகுதுங்கிறதை மனசிலே வச்சிக்கிட்டு செயல்படுங் கன்னு சொல்லியிருக்கிறார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்கிட்டே வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் காங்கிரசோட பல அவதாரங்களை தமிழகம் பார்க்கப் போகுதுன்னும் ராகுல் சொல்லியுள்ளாராம்.''

""என்ன அவதாரமாம்?''

""ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் சம்பந்தமா ராகுல்காந்தி ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார். அதாவது, காங்கிரசுக்கு 100 சீட்டுன்னு நம்மோட பேரத்தை ஆரம்பிப்போம். 80 சீட்டுக்குக் குறையாமல் ஒதுக்கினால்தான் கூட்டணி. இதில் நம்மோட முதல் சான்ஸ் தி.மு.க.தான். அவங்ககிட்டேதான் சீட் கேட்கப் போறோம். சரிப்படலைன்னா அடுத்த கூட்டணி பற்றி பேசுவோம். எந்த அணியிலும் நாம் கேட்கிற சீட்டுகளை ஒதுக்க முன்வரலைன்னா, காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம்னு ராகுல் சொன்னாராம். அதிக சீட்டா, புதிய அணியா? எந்த அவதாரத்தை காங்கிரஸ் எடுக்கப்போகுதுன்னு இளைஞர் காங்கிரசார் எதிர்பார்த்துக்கிட்டிருக் காங்க. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைகளும், தமிழக காங்கிரஸ் சீனியர்களும் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர் சோனியாதானே. அவரோட கணக்கு தி.மு.க. கூட்டணிதானே! இது என்ன புது குழப்பம்னு கேட்கறாங்களாம்.''

""தேர்தல் நாள் நெருங்குகிற வரைக்கும் யூகங்களும் வியூகங்களும் தொடர்ந்து கிட்டுத்தான் இருக்கும்ப்பா...''

""ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.வும் தேர்தலை மனசிலே வச்சி பல வியூகங்களை வகுத்துக்கிட்டிருக்கிறார். கோவையில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்துக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துட்டு ரொம்ப தெம்பாகி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னோட தலைமையில் இதேபோல கண்டனக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்துறதுன்னு முடிவு செய்திருக்காராம். அடுத்த கூட்டத்தை, ஆகஸ்ட் 29-ந் தேதி மதுரையில நடத்துவது பற்றி கார்டனில் ஆலோசனைகள் நடந்துக்கிட்டிருக்குது. அதற்கடுத்த கூட்டம், செப்டம்பர் 16-ந் தேதி திருச்சியிலாம். அதற்கப்புறமா சேலம், கிருஷ்ணகிரி, சென்னைன்னு தேர்தல் தேதி அறிவிக்கிற வரைக்கும் மாதம் ஒரு பொதுக்கூட்டம் நடத்துறதா இருக்கிறாராம்.''

""தேர்தல் வருதுன்னா எல்லாத் தலைவர்களும் மக்கள்கிட்டே நெருங்கி வந்துதானே ஆகணும்!''

""நான் அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே... ... தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் அடித்துக் கொல்வதும் தொடர்ந்து கிட்டேதான் இருக்குது. ஆளுங்கட்சியான தி.மு.க.வே இதை எதிர்த்து போராட்டம் நடத்தவேண்டிய அளவுக்கு நிலைமை இருக்கிற நிலையில், ஜூலை 14-ந் தேதியன்னைக்கு வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராசேந்திரன், ம.நடராசன் இவங்க ஒண்ணாக போராட் டம் நடத்தினாங்க. சென்னையிலே இருக் கிற இலங்கைத் துணை தூதரகத்தை இழுத்து மூடணும்ங் கிறதுதான் இவங்க ஆர்ப்பாட்டத்தோட நோக்கம்.''

""ஆர்ப்பாட்டம் செய்த தலைவர்களையும் அதில் கலந்துக்கிட்டவங்களையும் கைது செய்து ரிமாண்டு பண்ணிட்டாங்களே?''

""ஆமாங்க தலைவரே... ... வைகோவை திருச்சி சிறைக்கும், நெடுமாறனை கடலூர் சிறைக்கும் மற்றவங்களை வேலூர் உள்ளிட்ட பிற சிறைச் சாலைகளுக்கும் அனுப்பிட்டாங்க. எல்லோரையும் ஒரே ஜெயிலில் அடைச்சா, அங்கே ஒன்றுசேர்ந்து ஆலோசனை செய்து அடுத்த திட்டத்தை வகுத்திடுவாங்கங்கிறதாலதான் தனித்தனி ஜெயில். இலங்கைத் துணை தூதரகத்தை கைப்பற்ற முயற்சி செய்ததா இவங்க மேலே கடுமையான செக்ஷன்களில் வழக்குப் போடப்பட்டி ருக்குது. இத்தனை செக்ஷன்களில் வழக்கு போடுவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே யில்லைன்னு ஜெயிலுக்குப் போனவங்க சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""ஏன் இத்தனை சீரியஸான நடவடிக்கையாம்?''

""ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்தப்ப, அதில் சோனியாவும் ராஜ பக்சேவும் இருக்கிற படங்களை ஆர்ப் பாட்டக்காரர்கள் செருப்பால அடிக்கிற காட்சியெல்லாம் இருக்குது. போடப் பட்டிருக்கிற 7 செக்ஷன்களில் 2 செக்ஷன்களில் மட்டும் விசாரணை நடத்தி, 4 மாதத்தில் வழக்கை முடித்து, அரசு தரப்பால் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட முடியுமாம். இதைச் சுட்டிக்காட்டும் ம.தி.மு.க வக்கீல்கள், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கிட்டிருக்கிற நேரத்திலே, போட்டி யிட விடாதபடி செய்வதற்காகத்தான் இவ்வ ளவு வேகமா நடவடிக்கை எடுக்கப்படுதுன்னு பயப்படுறாங்க.''

""தலைமைச் செயலக வட்டாரத்தில் என்ன சொல்றாங்க?''

""துரைமுருகனிடமிருந்த பொதுப் பணித்துறையை முதல்வர் தன் நேரடி பொறுப்பில் எடுத்துக்கொண்டு ஒரு வருட மாகிவிட்டது. ஜூலை 13-ந் தேதிதான் ஓராண்டு நிறைவுநாள். அதனால, பொ.ப.து. உயரதிகாரிகளெல்லாம் முதல்வரை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, நீங்களே பொ.ப.துறையை கையிலே வச்சிருக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க. ஏன்னா, போன ஜூலையில் பொறுப்பைக் கையிலெடுத்த முதல்வர் ஆகஸ்ட், செப்டம்பர் இந்த 2 மாசத்திலேயே 1500 ஃபைல்களில் கையெழுத்துப் போட்டு க்ளியர் பண்ணிட்டாராம். 3 வருசத்துக்குமேலே தேங்கியிருந்த ஃபைல்கள் 2 மாசத்திலே க்ளியரானதால பொ.ப.துறையில் பல வேலைகள் வேகமா நடந்திருக்குது. அதன்பிறகும், ஃபைல்கள் சரியா க்ளியராகி வேலைகள் தொடர்வ தால்தான், முதல்வரே பொ.ப.துறையை வச்சிக்கணும்னு அதிகாரிகள் கேட்டுக்கிட்டாங்க.''

""முதல்வர் டெல்லிக்குப் போறாராமே... அரசியல் ரீதியான முக்கிய மூவ்கள் இருக்குமா?

""டெல்லியில் ஜூலை 24-ந் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்குது. அதில் கலந்துக்கிற யோசனையில் முதல் வர் இருக்கிறார். கூட்டணி பற்றியெல்லாம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பா பேசப்படுவதால, டெல்லியில் கலைஞர்- சோனியா சந்திப்பு நடக்க லாம்னும், அரசியல் ரீதியான முக்கிய பேச்சுகள் நடக்கும் னும் டெல்லி வட்டாரங்கள் சொல்லுது.''

மிஸ்டுகால்!



அண்ணா சதுக்கத்திற்கும் எம்.ஜி.ஆர். சமாதிக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வது அங்குள்ள அணையா விளக்கு. புயல், மழை என இயற்கை சீற்றங்களை மீறி இந்த விளக்கு அணையாமல் எரியும். காமராஜர் நினைவிடத்திலும் இதே போன்ற அணையாவிளக்கு ஏற்றப்படும் என கலைஞர் அறி வித்திருக்கிறார். காமராஜர் மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த அறி விப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.



ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நித்யானந்தா சாமியார், தன் இமேஜ் டெவலப்மென்ட்டுக்காக தெய்வீக பிரச்சார பாதயாத்திரை யை தமிழகத்தில் நடத்தவிருக் கிறார். இதற்கான பேனர்கள், அவரது சொந்த ஊரான திரு வண்ணாமலையில் ரெடியாகி பல மாவட்டங்களுக்கும் அனுப்பப் பட்டு வருகிறது.



அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் செயல்பாட்டை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் கபில்சிபல், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கை கொடுத்து, மற்ற மாநிலங்க ளெல்லாம் எப்படி இந்த திட் டத்தை செயல்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டிய அள வுக்கு தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக நடக்கிறது என்று பாராட் டியதுடன், அடுத்த கல்வியமைச் சர்கள் மாநாட்டை சென்னையில் தான் நடத்தப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.



செம்மொழி மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அலாவுதீன் ஐ.ஏ.எஸ். மாநாட்டுப் பணிகளை வேகமாக நிறைவேற்றிய தற்குப் பரிசாக ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் + முதல்வரின் முதன்மைச் செயலா ளர் என இரட்டைப் பதவிகள் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது

24 தொகுதி! யார் யாருக்கு என்ன செல்வாக்கு?



சென்னையில் வெளிப்படும் தேர்தல் முடிவுதான் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் என்கிற தமிழக அரசியல் களம் பற்றிய கணிப்பு கடந்த சில தேர்தல்களாக மாறிக்கொண்டி ருக்கிறது. வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட் டங்கள் என தமிழகத்தின் அரசியல் போக்கு நான்கு விதமாக இருப்பதும், இவற் றிற்கிடையே உள்ள மெல்லிய வேறுபாடுகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றி, முடிவுகளை மாற்றக் கூடியனவாக இருக்கின்றன. மேற்கு மாவட்டங்களின் தலை நகராகவும் கொங்கு மண்ட லத்தின் முக்கியப் பகுதி யாகவும் விளங்கும் கோவை மண்டலத்தில் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர் தலிலும் வெளிப்பட்ட முடிவுகள் தமிழகத்தின் ஒட்டு மொத்த முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கணிச மானத் தொகுதிகளை வென்ற திலும் கொங்கு மண்டலத்தின் பங்கு மிக முக்கியமானது.

தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலமாக அரசியல் கள ஆய்வை வெளியிட்டு வரும் உங்கள் நக்கீரனின் இந்த இதழில் இடம்பெறுவது... கோவை மண்டலம்.

மேற்குதொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் நீலகிரியிலிருந்து அப்படியே கீழே இறங்கி வரும் பகுதியே நமது கள ஆய்வில் கோவை மண்டலமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

பவானி, ஆழியாறு, பரம்பிக்குளம், சிறுவாணி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்களைக் கொண்ட வளமான விவசாய பூமியும், நூற் பாலை-பின்னலாடை நிறுவனங் களும், தொழிற்கூடங் களும் நிறைந்த பொருளா தார வளர்ச்சி மிக்க பகுதி களும் இந்த மண்டலத் திற்குள் அமைகின்றன.
கோவை மண்டலத் தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பவானிசாகர், உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப் பாளையம், அவினாசி, பல்லடம், சூலூர், கவுண்டம் பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால் பாறை, உடுமலைப்பேட் டை, மடத்துக்குளம், பெருந் துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிப் பாளையம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) ஆகிய 24 சட்ட மன்றத் தொகுதிகளும் அடங்குகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்குபலம் வரை படத்தின் மூலம் காட்டப் பட்டுள்ளது.

சமுதாயரீதியாக வெள்ளாளக் கவுண்டர் இன மக்கள் அதிகமாக உள்ள மண்டலம் இது. அவர் களுக்கு அடுத்தபடியாக அருந்ததியர் சமுதாயத்தினர் உள்ளனர். தொழில்துறையில் முன்னேறியுள்ள நாயுடு சமுதாயத்தினர் பல பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைமார் ஓட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவில் இங்கு உள்ளது. முதலியார், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினரும் உள்ளனர். சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. நீலகிரி மலைப்பகுதிகளில் படுகர்கள் உள்ளிட்ட பழங்குடி இனத்தவர்களும், இலங்கையிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்களானத் தமிழர் களும் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அ.தி.மு.க தனிப்பட்ட முறையிலும் கூட்டணி பலத்திலும் செல்வாக்குடன் உள்ள மண்டலமாக கோவை மண்டலம் திகழ்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவை மாவட்டத்தில் இருந்த 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்தக் கூட்டணியே வென்றது. கவுண்டர் சமுதாயத்தினரின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு பக்கபலமாக அமைந்ததே இதற்கு காரணம். அருந்ததியர் வாக்குகளும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க பக்கம் இருப்பது வழக்கம். மற்ற சமுதாயங்களிலும் இரட்டை இலைக்கு கணிசமான ஆதரவு உள்ளது.

கட்சிப் பிரமுகர்கள் என்ற வகையிலும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சட்டமன்றம் இல்லாத நாட்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை அவர்களுடைய தொகுதியில் எளிதாக சந்திக்க முடிகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

இதற்கு நேர்மாறாக உள்ளது தி.மு.க.வின் நிலவரம். 70-களில் தி.மு.க. கோட்டையாக விளங்கிய கோவை மண்டலம், 80-களில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும்கூட தி.மு.க கணிசமான வெற்றியைப் பெறும் மண்டல மாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது தி.மு.க மிகவும் பலவீனமாக உள்ள பகுதியாக கோவை மண்டலம் உள்ளது என்பதை உள்ளூர் உடன்பிறப்புகளே ஒப்புக்கொள்கிறார்கள். மாவட்ட அமைச்சரில் தொடங்கி அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்ற நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். கட்சியின் நீண்டகாலத் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழும் தொடர் குற்றச்சாட்டுகள் தி.மு.கவின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் ஆளுந்தரப்பை பலவீனப்படுத்தியுள்ளது.





மற்ற மண்டலங்களில் தி.மு.கவுக்கு உறுதியாக உள்ள இஸ்லாமிய வாக்குவங்கி இந்த மண்டலத்தில் சிதறுகிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள், சிறைவாசங்கள் இவற்றால் முஸ்லிம் அமைப்புகள் இங்கு வளர்ச்சி பெற் றுள்ளன. தி.மு.கவுக்கு பாரம்பரியமாகப் பதிவாகி வந்த இஸ்லாமியர்களின் வாக்குகள், இப்போது இந்த அமைப்புகளுக்குப் பிரிவதுடன் அ.தி.மு.க ஆதரவு இஸ்லாமியர்களும் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளனர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் என அடுத்தடுத்துள்ள 3 எம்.பி. தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி இழந்ததிலிருந்தே இந்த மண்டலத்தில் ஆளுங்கட்சியின் செல்வாக்கும் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். இந்த மண்டலத்தில் தி.மு.க.வுக்கு நம்பிக்கையாக இருப்பது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்தான். தொகுதியின் எம்.பி.யான மத்திய அமைச்சர் ராசாவை அடிக்கடி தொகுதி மக்கள் சந்திக்க முடிகிறது.

பழங்குடி மக்களின் பிரச்சினைகள், தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள், ஆளுங்கட்சியின் செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி தொகுதியில் புதிதாக கட்டப்படும் பள்ளிக்கூடங்கள், கழிப் பிடங்கள் ஆகியவை அடிப்படைத் தேவையை நிறைவேற்றி வருகின்றன. இருப்பினும், மலைப் பகுதியிலும் உள்ளூர் பிரமுகர்களால் தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றன.

மலையிலிருந்து கீழே இறங்கி வந்தால் பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவினாசி ஆகிய 3 தொகுதிகள் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்டவையாக இருக்கின்றன. இதில் பவானிசாகர் தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதியாக இருந்தபோதும் அவினாசி தொகுதியில் அ.தி.மு.க பலமாக உள்ளது. மேட்டுப்பாளையம் தி.மு.கவை கோஷ்டிப்பூசல் ஆட்டி வைக்கிறது.

பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் இந்த மண்டலத்தில் நிறைந்திருப்பதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் வலுவாக உள்ளன. தொழிலாளர்களின் கூலி உயர்வு, பெண்களைக் கொத்தடிமையாக்கும் சுமங்கலித் திட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் , தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுகின்றன. அ.தி.மு.க அணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இங்கு பாரம்பரியமான வாக்குகள் உள்ளன. அது தி.மு.க கூட்டணிக்கு பக்கபலமாக இருந்தாலும், இந்த வாக்குகளை அதிகப்படுத்தும் அளவில் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் செயல்படவில்லை. ம.தி.மு.க.வின் தொடக்ககாலத்தில் அதற்கு நம்பிக்கை யளிக்கும் மண்டலமாக கோவை மண்டலம் இருந்தது. முக்கிய தலைகள் தாய்க்கழகத்திற்குத் திரும்பிவிட்ட நிலையில், பழைய செல்வாக்கு இல்லா விட்டாலும், அ.தி.மு.க அணிக்குத் துணை நிற்கும் விதத்தில் குறைந்தளவு வாக்குபலத்துடன் உள்ளது ம.தி.மு.க.

விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு தலித் மக்கள் மத்தியில் வாக்கு பலம் அதிகரித்துள்ளது. நாயுடு சமுதாயத் தினரின் ஆதரவு தே.மு.தி.கவுக்கு தேர்தல் நேரத்தில் உதவி செய்கிறது. விஜய காந்த்துக்கு பெரும் ஆதரவு, அ.தி. மு.க.வின் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.

கோவை மண்டலத்தில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு தலைவலியாக உருவாகியிருக்கிறது கொங்கு முன் னேற்றக் கழகம். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் கட்சி என்ற பெயரில் முதன்முதலாக களமிறங்கிய இந்த அமைப்பு, கவுண்டர் சமுதா யத்தினரின் வாக்குகளைப் பெருமளவு கவர்ந்தது. நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 15ஆயிரம், அதிகபட்சம் 25ஆயிரம் என வாக்கு களைப் பெற்ற இக்கட்சியால் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் பாதிக்கப் பட்டன என்றாலும், தி.மு.க அணியின் தோல்வியில் இந்தக் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. அடுத்துவந்த தொண்டா முத்தூர் இடைத்தேர்தலில் இக்கட்சி யால் அந்தளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த இடைத்தேர்தலில் ஈஸ்வரன் போட்டியிட்டது தொடர்பாக கொ.மு.க. நிர்வாகிகளுக்குள் உரசல் ஏற்பட்டது.

பெஸ்ட் ராமசாமி-ஈஸ்வரன் குரூப்பின் நடவடிக்கை பிடிக்காமல் தேவராஜன்-மணிகவுண்டர் அணியினர் கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து, கள் இறக்க அனுமதி கோரி நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தின்போது கைதானவர்களை விடுவிக்கக் கோரி அரசிடம் கொ.மு.க. நிர்வாகிகள் கெஞ்சியது கட்சியின் இமேஜை பெருமளவு பாதித்துள்ளது. கொ.மு.க.வினால் ஏற்படக்கூடிய வாக்கு பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் மின்வெட்டினால் நூற்பாலைகளிலும் பின்னலாடை நிறுவனங் களிலும் இதர தொழிற்சாலைகளிலும் ஏற்படுகின்ற உற்பத்தி இழப்பு முதலாளி-தொழிலாளி என இரு வர்க்கத்திடமும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை அதிகரிக்கச் செய்கிறது. வீடுகளில் ஏற்படும் மின்தடையும் பொது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. நூல் விலை யேற்றத்தால் பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் ஆளுங்கட்சிக்கு எதிரானதாக அமைந்துள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டு, கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார் ஜெ. அதில் அ.தி.மு.கவினர் பெருந் திரளாகக் கலந்துகொண்டது அக் கட்சிக்கு கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஆளுந்தரப்பிற்கு புதிய நம்பிக்கையை அளித்திருப்பது கோவையில் நடந்த செம்மொழி மாநாடு. கட்சி விழாவாக இல்லாமல் மக்கள் பங்கேற்புடன் 5 நாட்கள் கோவை பகுதி யே திணறும் அளவில் கூட்டம் பெரு கியதும், இம்மாநாட்டிற்காக கோவையில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள், புதிய பாலங்கள், கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் ஆகியவை கோவை மாவட்ட மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பும் ஓட்டு களாக மாறும் என தி.மு.க நம்புகிறது.

அருந்ததிய சமுதாயத்தினருக்கான 3% உள்ஒதுக்கீடும் அதன் மூலம் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளுங் கட்சிக்கு கைகொடுக்கும் அம்சங்களாகும். திருப்பூரைத் தனி மாவட்டமாகப் பிரித்து, அதன் வளர்ச்சிக்காக உருவாக்கப் பட்டுள்ள திட்டங்களும் தி.மு.கவுக்குப் புதிய செல்வாக்கைத் தந்துள்ளது.

முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் கோவை மண்டலத்தின் மீது தனிப்பட்ட முறையில் காட்டும் அக் கறையை லோக்கல் தி.மு.க நிர்வாகிகள் காட்டாமல் இருப்பது தி.மு.கவுக்கு இம்மண்டலத்தைச் சோதனைக் களமாக்கியுள்ளது.

தேர்தலுக்கு முன் செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்ளும் திட்டங்களில் ஆளுந்தரப்பும், செல்வாக்கு மிக்க மண்டலத்தை இழந்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிக்கூட்டணியும் வரிந்துகட்டுவதால் வரும் தேர்தலில் கோவை மண்டலத்தின் முடிவுகள் புதிய அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதே களத்தில் நாம் கண்ட யதார்த்த நிலவரமாகும்.

(வரும் இதழில் ஈரோடு மண்டலம்)

யுத்தம் 71 - நக்கீரன் கோபால்


""நக்கீரன்தான்...''

""நீங்கதாண்ணே...''

""உங்களை விட்டுவைக்கப் போறதில்லைன்னு அந்தம்மா கொக்கரிச்சிக்கிட்டிருக்குது.''

-பொடா நட வடிக்கை பற்றி நமக்குத் தெரிந்த சோர்ஸ்களில் இருந்து வந்த தகவல்கள்தான் இவை. வைகோவைத் தொடர்ந்து பொடாவில் நம்மை உள்ளே தள்ள வேண்டும்ங்கிறதுதான் ஜெயலலிதா அரசின் அடுத்த டார்கெட். அதற்கான வேலைகளில் அதிகார வர்க்கம் ஈடுபட்டுக்கொண்டிருப்பது நம் காதுகளுக்கு வந்த படியே இருந்தது.

மூத்த பத்திரிகையாளர் சோலை அண்ணன், எனக்கு போன் செய்தார்.

""தம்பி கோபால்... உங்ககிட்டே நேரிலே பேசணும். ரொம்ப அவசரம்'' என்றார். அவர் வசிக்கும் பெருங்களத்தூருக்கு கிளம்பிப் போனேன்.

""சொல்லுங்கண்ணே... அவசரமா வரச்சொன்னீங்களே''-என்றதும் சோலையண்ணன் ஒரு குண்டை வீசினார்.

""வைகோவுக்கு அடுத்தபடியா உங்களைத்தான் பொடாவில் குறி வைக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்ச சோர்ஸ் மூலமா கிடைச்ச தகவல் இது.''

""எங்களுக்கும் இந்த தகவல் கிடைச்சுதுங் கண்ணே... வைகோ அரெஸ்ட் நடவடிக்கை எப்படி போகுதுன்னு பார்ப்போம்.''

""நீங்க ஜாக்கிரதையா இருக்கணும் கோபால்...''-சக பத்திரிகையாளர் மீது மூத்த பத்திரிகையாளருக்குள்ள அக்கறையும் கவலையும் சோலையண்ணனின் குரலில் ஒலித்தது. அலுவலகத்திற்குத் திரும்பினேன். நிருபர் தம்பி பிரகாஷ் என்னிடம், ""அண்ணே.... உங்கள தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணப் போ றாங்கங்கிறதுதான் பத்திரிகைக்காரங்களோட பேச்சாக இருக்குது'' என்றார். இது என்ன புது குண்டு. சரி வரட்டும் அதையும் பார்த்துரு வோம். எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பிற்குரியதாக மாறியிருந்தது நக்கீரன்.

நாம் சட்டரீதியானப் போராட்டங்களில் கவனம் குவித்திருந்தோம். சுப்ரீம் கோர்ட்டில் தம்பி சிவசுப்ர மணியத்தின் கூடுதல் அஃபிடவிட்டைத் தாக்கல் செய்வதற் காக அட்வகேட் பெருமாள் சார் தயாராகிக் கொண்டி ருந்தார். அதனால் தம்பிகள் சிவக்குமார், சிஸ்டம் ஆபரேட்டர் கணேசன் ஆகியோர் பெருமாள் சாருடன் இரவு பகலாக டாக்குமென்ட்டுகள் தயாரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தார்கள். அந்த அஃபிடவிட்டில் கோவை சிறை யில் உள்ள சிவசுப்ரமணியத்திடம் கையெழுத்து வாங் கச் சொல்லிவிட்டு, அதிகாலை ஃப்ளைட்டில் டெல்லிக் குப் புறப்பட்டார் அட்வகேட் பெருமாள். அவரை தம்பி கவுரி ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அட்வகேட்டை வழியனுப்பிவிட்டு, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் கேன்ட்டீன் பொறுப்பில் இருந்த ஒருவரிடம், அஃபிடவிட்டைக் கொடுத்து, அதை நமது கோவை நிருபர் தம்பி மகரன் கையில் சேர்க்கச் சொன்ன கவுரி, மகரனையும் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்துவிட்டார். மதியம் தம்பி மகரன் எனக்குப் பேசினார்.

""அண்ணே... கோவை எக்ஸ்பிரசில் அந்த அஃபிடவிட்டை வாங்கிட்டேன்.''

""தம்பி.. நீங்க அதை வக்கீல் அபுபக்கரிடம் கொடுத்து, ஜெயிலுக்குப் போய் சிவாவைப் பார்க் கச் சொல்லி கையெழுத்து வாங்கச் சொல்லுங்க. கையெழுத்து வாங்கியதும் அதை டெல்லியில் உள்ள பெருமாள்சார்கிட்டே எப்படியாவது சேர்க்கணும். கவனம் தம்பி.''

அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாக எவ்வளவு வேகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததோ, அதைவிட வேகத்துடன் நமது சட்டப்போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. டெல்லியிலிருந்து அட்வகேட் பெருமாள் பேசினார்.

""அண்ணாச்சி... இங்கே சர்மாஜியைப் பார்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் அட்வகேட் மூலம் அஃபிடவிட் ஃபைல் பண்றது பற்றிப் பேசிட்டேன். சாந்திபூஷண் சரியா இருப்பாருன்னு எல்லாரும் சொல்றாங்க'' என்றார். உச்சநீதிமன்றத் தில் அஃபிடவிட் தாக்கல் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பெட்டிஷன் தொடர்பான நடவடிக்கைகள் இன்னொருபுறம் வேகமெடுத்தன.

பெருமாள் சார் மீண்டும் லைனில் வந்தார். ""சர்மாஜி மூலமா சாந்திபூஷண்கிட்டே பேசி யாச்சுங்க அண்ணாச்சி. சாயங்காலம் அப்பாயிண்ட் மென்ட். கேஸை ஒத்துக்குவாரான்னு அப்பதான் தெரியும்.''

""நீங்க அதை கவனிச்சுக்குங்க சார்'' என்றேன். அதற்குள் கோவையிலிருந்து ஒரு தகவல்.

அஃபிடவிட்டில் கையெழுத்து வாங்கு வதற்காக கோவை சிறைக்கு சென்ற அட்வகேட் அபுபக்கரிடம், ""சிவசுப்ரமணியத்தை வேற கேசுக்காக மைசூருக்கு கொண்டு போயிட்டாங்க. நீங்க சந்திக்க முடியாது'' என்று சொல்லிவிட்டது சிறை நிர்வாகம். அபுபக்கர் அங்கிருந்து எனக்கு போன் செய்து விவரம் சொன்னார்.

""என்ன வழக்கு? ஏன் மைசூருக்கு அழைச் சிட்டுப் போகணும்?'' -பதட்டத்தோடு நான் நமது பெங்களூரு நிருபர் ஜெ.பிக்கு போன் செய்து விசாரிக்கச் சொல்கிறேன். தம்பி சிவக்குமார் ஒரு பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அட்வ கேட் ப.பா.மோகன் இன்னொரு பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். சிவாவை மைசூரில் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்க வில்லை.

எனக்கு சட்டென யோசனை. மகரனை லைனில் பிடித்தேன். ""தம்பி... உங்க சோர்ஸ் மூலமா கோவை சிறை வட்டாரத்தில் விசாரித்துப் பாருங்க. உண்மை என்னன்னு தெரியணும்.''

""சரிங்கண்ணே...''

-அடுத்த ஒரு மணி நேரம் கழித்து லைனில் வந்தார் மகரன். ""சிவா கோவையிலதானுங் கண்ணே இருக்காராம். அட்வகேட்கிட்ட ஜெயில் அதிகாரிகள் தப்பா டைவர்ட் பண்ணி யிருக்காங்க'' என்றார். நாம் மீண்டும் அட்வகேட் அபுபக்கரிடம் சொல்லி, அபுபக்கரை கோவை சிறைக்கு அனுப்பி, அஃபிடவிட்டில் சிவாவிடம் கையெழுத்து வாங்கி, அதை டெல்லியில் உள்ள அட்வகேட் பெருமாளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.

அஃபிடவிட் தன் கைக்கு கிடைத்ததும் பெருமாள் சார் போன் செய்தார். ""அண்ணாச்சி... நம் கேஸ் சம்பந்தமான விவரங்களையெல்லாம் நோட் போட்டுத் தரும்படி சாந்திபூஷண், சர்மாஜிகிட்டே சொல்லியிருக்காரு'' என்றார். நக்கீரன் அலுவலகத்தின் சுறுசுறுப்பு மேலும் அதிகமானது. இரவு பகலாக நக்கீரன் தம்பிகள் எல்லா விவரங்களையும் தொகுத்து டீடெய்லாக டெல்லிக்கு இ-மெயில் செய்தனர். ஃபேக்சும் அனுப்பப்பட்டது.

எல்லா விவரங்களையும் பெற்றுக் கொண்ட அட்வகேட் பெருமாள் உடனே லைனில் வந்தார். ""அண்ணாச்சி... சாந்தி பூஷணுக்கு என்.ராம் சாரை நல்லாத் தெரியும். அவர் ஒரு வார்த்தை சொன்னால் நல்லா இருக்கும்'' என்றார்.

நான் உடனே என்.ராமைத் தொடர்பு கொண்டேன். அவரும், சாந்தி பூஷணிடம் பேசுவதாகச் சொன்னார். அடுத்த சிறிது நேரத்தில், என்.ராமிடமிருந்து போன்.

""கோபால்... சாந்தி பூஷண்ங்கிறது பெஸ்ட் சாய்ஸ். அவர்கிட்டே பேசிட்டேன். உங்க விஷயங்களை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டார். கேஸைப் பொறுத்த வரைக்கும் ஸ்ட்ராங் கேஸ்னு சொன்னார். கட்டாயம் சுப்ரீம்கோர்ட்டில் அட்மிட்டாகி நோட்டீஸாகும்னு சொன்னார். உங்க கேஸ் பற்றி மீடியாக்களில் வந்ததையெல்லாம் படிச்சிக்கிட்டிருக்கிறதா சொன்னார்'' என்றார் ராம்.

அட்வகேட் பெருமாளும் சர்மாஜியும் சாந்திபூஷணை சந்தித்து, நாம் அனுப்பியிருந்த டீடெய்ல்களைக் கொடுத்து, வழக்கு பற்றி விவரிக்க அவரும் ஆஜராக ஒப்புக்கொண்டார். சிவா கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த அஃபிடவிட்டும் சாந்திபூஷணிடம் தரப்பட்டது. பெருமாள் சார் போன் செய்து, நமது கேஸில் ஆஜராவதற்கு சாந்திபூஷண் ஒப்புக்கொண்டதை சந்தோஷத்துடன் சொன்னார். சோனை முத்து மச்சானின் நண்பரான செங்கோட்டு வேலு டெல்லியில் இருந்தார். உடனடியாக அவர் ஃபீஸ் தொகையை கடனாகக் கொடுத்து உதவினார்.

ஜூலை 8ஆம் தேதி. காலை 11 மணி.

அட்வகேட் பெருமாள் சார் போன் செய்தார். ""அண்ணாச்சி... க்ஷஹக் ய்ங்ஜ்ள். நம்ம பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆயிடிச்சி. சாந்தி பூஷண் ரொம்ப நல்லா ஆர்க்யூ பண்ணினார். ஆனா, சுப்ரீம்கோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ஆனா ஹைகோர்ட்டை மூவ் பண்ணச் சொல்லியிருக்குது. கெட்டதிலும் ஒரு நல்லதுங்க அண்ணாச்சி.''

சுப்ரீம் கோர்ட்டில் நமது முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கோர்ட் உத்தரவுப்படியே ஹை கோர்ட்டில் பெட்டி ஷனை மூவ் பண் ணத் தயாராகிக் கொண்டிருந் தோம். தம்பி காமராஜ் போன் செய்து, ""அண் ணே... ரெய்டுக்கு வரப்போறாங்களாம். ஒரு இன்ஃபர்மேஷன் கிடைத்திருக்குது'' என்றார்.

ஆடிட்டர் மோரீஸ் அவசரமாக அலுவலகத்துக்கு வந்தார். தனது சோர்ஸ்களிலிருந்து கிடைத்த தகவல்களை அவர் சொல்லத் தொடங்கினார்.

""ரெய்டு நிச்சயம்னு சொன்னாங்க. அடுத்தது பொடாதானாம். முதலில் உங்களையும் அப்புறம் ஆஃபீசில் இருக் கிறவங்களையும் தேவைப்பட்டால் பொடா வில் தள்ளுவதுன்னு ப்ளான் பண்ணி யிருக்காங்களாம். வைகோவை அரெஸ்ட் செய்ததா, மீடியாவின் கவனத்தையெல் லாம் அவர் பக்கம் திருப்பிட்டு, நக்கீரன் மீது சத்தமில்லாம நடவடிக்கை எடுப்பது தான் கவர்மென்ட்டோட திட்டமாம்'' என்றார்.

எல்லாத் தரப்பிலிருந்தும் நமக்கு இதுபோன்ற தகவல்களே வந்துகொண் டிருந்தன.

ஜூலை 9-ந் தேதி அதிகாலை. என்னுடைய செல்போன் ஒலிக்கிறது. எதிர்முனையில் ரஜினி.

""ஏதோ பொடா கேஸ்னெல்லாம் பேச்சு வருதே கோபால். எப்படி இருக்கீங்க? எப்படி சமாளிக்கிறீங்க?''

""போராட்டம்தான்... எல்லாத்தையும் சட்டரீதியா எதிர்கொண்டுக்கிட்டிருக் கோம்.''

""எல்லாமே பார்ட் ஆஃப் தி கேம்னு சொல்லுவீங்க. அதைத்தான் ஃபீல் பண்ணிப் பார்த்தேன். ஃப்ரீயா ஒரு நாள் பேசணும் கோபால். இவ்வளவு டென்ஷனை யும் எப்படி தாக்குப்பிடிக்கி றீங்க?''

""இதெல்லாம் நடக் கும்ங்கிறது எதிர் பார்த்ததுதானே.. எதிர்கொண்டுதான் ஆகணும்'' என்றேன் ரஜினியிடம்.

எதிர்கொள் வதற்கான களம் மிகப்பெரியதாகவும் மிக பயங்கரமான தாகவும் உருவாகிக் கொண்டிருந்தது.

-யுத்தம் தொடரும்

திரைக்கூத்து!

காலில் விழுந்த ஐஸ்!

பாடல் காட்சி எடுக்கப்பட்டதோடு ‘"எந்திரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஷங்கர். கடைசிநாள் படப்பிடிப்பில் கடைசி ஷாட் எடுத்து முடிந்ததும் ரஜினியே எதிர் பாராதவிதமாக ரஜினியின் காலில் விழுந்து வணங்கினார் ஐஸ்வர்யா ராய். ஷாக்கான ரஜினி "எந்திரிங்கம்மா' என ஐஸ்வர்யாவை தூக்கி "நீங்க அமிதாப் சார் மருமகன்னாலும் எனக்கும் மருமகள் மாதிரித்தான். நல்லா இருங்கம்மா' என வாழ்த்தியிருக்கிறார். ஐஸின் அடக்கமும், ரஜினியின் வாழ்த்தும் நெகிழ வைத்திருக்கிறது யூனிட்டை.

பிரபலங்கள் ஷாக்!

இங்க இருந்துக்கிட்டு பேசுனா எப்படி? இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்டவங்கள சந்திச்சு ஆறுதல் சொல்லணும். அந்த தமிழ் மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க' என அசின் போட்ட நியாயமான போடில் தமிழ் சினிமா பிரபலங்கள் நெஜமாவே ஷாக்கடிச்சுத்தான் போய்ட்டாங்களாம்.


விஜய் படத்துக்கு தடை!





விஜய்யிடம் தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு வருவதையும், அதற்காக தியேட்டர் அதிபர் சங்க செயற்குழு கூட விருப்பதையும் ஏற்கனவே கூவியிருந்தேன். 13-ந் தேதி சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. தமிழகம் முழுவதிலிருந்தும் 60 தியேட்டர் உரிமையாளர்கள் கூடி விவாதித்த னர். "வில்லு', "குருவி', "சுறா' படங்களின் நஷ்டத்தை சரிக்கட்டும் விதமாக 35 சதவிகித பணத்தை விஜய் திருப்பித்தர வேண்டும் என முடிவு செய்தனர். அதாவது மூன்றேகால் கோடி ரூபாய். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலரின் வாயைக் கிளறியபோது... "நாங்க கேக்குற தொகையை கொடுக்கலேன்னாலும் பரவால்ல. மூணுங்கிற எடத்துல ஒண்ண வாவது கொடுத்தா அதை பாதிக்கப் பட்டவங்களுக்கு பிரிச்சுக் கொடுப்போம். ஆனா விஜய் தரப்பு பிடிவாதமா இருக்கு. "அடுத்து வரப்போகும் விஜய்யின் "காதல் காவல்' படத்தை வெளியிடுறதில்லைனு முடிவு செஞ்சிருக்கோம்' என்றனர்.

ஆனால் விஜய் தரப்பு அசரவில்லை. ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் ரவி மிக பிரமாண்டமாக தயாரிக்கும் "வேலாயுதம்' படத்தில் பிஸியாகவும், குஷியாகவும் ஈடுபட்டிருக்கிறார்.

அமோக வெற்றி!

"என்னா கோழி... தயா ரிப்பாளர் சங்க தேர்தலில் இராம.நாராயணன் அணி ரொம்ப தெம்பா இருக் காங்கன்னு சொல் லீருந்த... அந்த டீம் அமோகமா ஜெயிச்சிருச்சே!'னு தட்டிக் கொடுத்தார் கவுன்சில் கண்ணாயிரம்.

ஆக்டோபஸ் ஆருடமே பலிக்கிறப்ப... கோழியோட கணிப்பு தோக்குமா என்ன?!

படமாகும் கள் தொழிலாளி!

"கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விட... ‘"கள்ளை இறக்கவும் வேண்டாம், கள்ளால் இறக்கவும் வேண்டாம்' என பனைவாரியத் தலைவர் குமரி அனந்தன் சொல்ல...‘"விரைவில் கள் இறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என கலைஞர் சொல்ல... அப்பப்பா.. இப்பவே சுத்துதே. கள் இறக்கிவிற்கும் தொழிலாளியை வைத்து "காண்டீபன்'' என்கிற படத்தை இயக்கி வருகிறார் சலங்கை துரை.

அர்ஜுனனோட வில்லு காண்டீபம். வில்லுக்கும் கள்ளுக்கும் முடிச்சப் போடுறீகளே...னு கேட்டா ‘"இப்போதைக்கு சஸ்பென்ஸ்'னு கண்ண சிமிட்றாரு சலங்கை.

எஸ்.ஜே.சூர்யா ஜோடி!





தன் படத்தில் அறிமுகப் படுத்தும் நடி கையோடு ஸ்கிரீனுக்கு வெளியேயும் ஒரு வல்லிய ரவுண்ட் வருவது எஸ்.ஜே. சூர்யா வழக்கம். தெலுங்கில் "கொமரம் புலி' படத்தை இயக்கி முடித்திருக் கும் சூர்யா அந்தப் படத்தின் நாயகி நிகிஷா பட்டேலுடன் பட்டயக் கிளப்புவதாக செப்புறாங்கய்யா செப்புறாங்க.

பாய்ந்து வந்த கொய்யா! பதறிய "ஜெ.'!


ஜூன் 23-ந் தேதி தொடங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு கோவை தி.மு.க. வசம் போய்விட்டது என்ற பேச்சுக்கள் கிளம்பியதை உடைக்கும் விதமாக, கோவை எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற் காகவுமே... கடந்த ஜூலை 13-ந் தேதி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார் ஜெயலலிதா.

காலை 8 மணியிலிருந்தே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஜெ.வை பார்க்கக் கூட்டம் கட்டுக் கடங்காமல் திரண்டுகொண்டேயிருக்க... இன்னிசை நிகழ்ச்சியில் கலைஞரைத் திட்டிப் பாடப்பட்ட பாடல் களுக்கு மகளிரணி போட்ட ஆட்டத்தை அனைத்துக் கேமராக்களும் முண்டியடித்துக் கொண்டு எடுத்துக் கொண்டிருந்தன.

ஜெ.மேடையில் வழக்கத்திற்கு மாறாய் ஏகப்பட்ட சேர்கள் போடப்பட்டிருந்ததை பத்திரிகையாளர்கள் உட்பட ர.ர.க்களே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டி ருந்தனர். சரியாய் மதியம் 11.55 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தவர் அங்கி ருந்து காரிலேறி சாலையெங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் வரவேற்பு கொடுக்கத் திரண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே ஜெ. மேடையேறும்போது சரியாய் மணி 12.35.

கொளுத்தும் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் அம்மா... அம்மா... என்ற கூட்டத்தின் கூப்பிடு குரல் களுக்கிடையே கை கூப்பியபடியே வந்த ஜெ., சேரில் அமர்ந்ததும் கூட்டம் அமைதியாகிப் போனது. ஜெ.வை புகைப்படமெடுக்க புகைப்படக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் புகைப்படக் காரர்களின் தலைகளுக்கு மேல் மேடையை நோக்கி கொய்யாக்கனி ஒன்று பாய்ந்து போனது.

அது ஜெ.வின் கால்களுக்கு முன்னால் விழ, சட்டென ஜெ. பதறிப் போக... உருண்டு போன அந்தக்கனியை எடுத்துக்கொண்ட செங் கோட்டையன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யார் வீசியது என்று திருதிருவென மேடை யின் கீழே இறங்கி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனிக்காத ஓ.பன்னீர்செல்வத்திடம் ""யாரோ இப்ப என்னைய நோக்கி எதையோ வீசினாங்க. யார்னு பாருங்க, போட்டோ கிராபர்களை உட்காரச் சொல்லுங்க'' என்று ஜெ. சொல்ல... ஓ.பி.எஸ். பதறிப்போய் "யார் வீசியது பாருங்க'ன்னு கீழே நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் பதறிவிட்டு புகைப் படக்காரர்களை அமர வைத்தார்.

வரவேற்புரை கொடுத்த பொள்ளாச்சி ஜெயராமனுக்குப் பிறகு ஜெ. மைக் பிடித்த போதுதான் தொண்டர்களில் சிலபேர் பெண்கள் பகுதியில் இறங்கி பெண்களின் மேல் விழுந்து கைகளைப் பிடித்து இழுக்க, அமர்ந் திருந்த சேர்களை விட்டுவிட்டு பெண்கள் எழுந்து ஒருவர் பின் ஒருவராய் முண்டியடிக்க... பயங்கர நெரிசல். பெண்கள் பகுதிக்குள் புகுந்த ஆண்களைத் தாக்கும் விதமாக வந்த ஆண்கள் சிலருக்குள் கைகலப்பு ஏற்பட... சேர்களைத் தூக்கி வீசிக்கொண்டார்கள்.

வயதான பாட்டிகள் சிக்கிக்கொண்டு அய்யோ... "காப்பாத்துங்க காப்பாத்துங்க' என்று கதறத் தொடங்கி விட்டனர். கதறலைக் கேட்டு மேடையிலிருந்து ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் ஆகியோர் பெண்கள் பகுதிக்கு கையில் தடியுடன் வந்து சேர்களை வீசிக்கொண்டிருப்பவர்களை மிரட்டினாலும் யாரும் அடங்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஓ.பி. எஸ்.சும் ஜெயக்குமாரும் திரும்பவும் மேடைக்கே திரும்பி விட்டார்கள்.

மயங்கி கீழேயே விழுந்து விட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவகாமி பாட்டிக்கு தண்ணீர் கொடுத்து அமர வைக்க ""அய்யோ... சாமீ இப்படி ஆகும்னு தெரிஞ் சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே. எல்லாம் குடிச்சுப் போட்டு வந்து பொம்பளைக மேலயே விழுகுறானுக. இங்கிருந்து எப்படியாவது காப்பாத்துங்கப்பா'' என்று கெஞ்சியவரை தூக்கி பத்திரி கையாளர்கள் பகுதிக்குள் பத்திரிகை நண்பர்களின் உதவியோடு அமர வைத்தோம். இதெல் லாம் மேடையில் பத்தடி தூரத்திற்கு முன்னால் பேசிக்கொண்டிருந்த ஜெ.வின் கண் முன்னா லேயே நடந்துகொண்டிருந்தது.

அதற்குள் ருக்குமணி என்ற வயதான பாட்டியும், ஓர் இளம்பெண்ணும் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மேடையில் பேசிக்கொண்டிருந்த ஜெ.வை நோக்கி... "அம்மா காப்பாத்துங்கம்மா... அம்மா பேசறத நிறுத்துங்கம்மா' என்றெல்லாம் கத்திப் பார்த்தார்கள். பின் பத்திரிகையாளர் பகுதிக்குள் ருக்குமணி பாட்டியையும் தூக்கி சேரில் அமர வைக்க, "இப்படி வந்து தி.மு.க.காரனுக அராஜகம் பண்றானுங்க. எங்க தலைவரைப் பத்தியா கேவலமா பேசுறீங்கன்னு அங்க இங்கப் புடிச்சு இழுக்கறானுக. கழுத்துல கிடக்கிற செயினையெல்லாம் அறுக்கிறானுக. ஆனாலும் எங்கம்மாவ யாரும் ஒண்ணும் பண்ண முடியாது' என்று அந்த நெரிசலிலும் தி.மு.க.வை குறைசொல்லிவிட்டுப் போனார் குனியமுத்தூரைச் சேர்ந்த கவிதா.

இந்த களேபரத்திற்கு இடையே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த ஜெ., "தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள். புரட்சித் தலைவர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று பேசிவிட்டுப் போக.... அரசியல் சூழல் பரபரப்பாகியிருக்கிறது.

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைத்துக் கொடுப்பேன் என்று பேசியிருப்பதால் ர.ர.க்கள் சந்தோஷத்திலிருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.

""தே.மு.தி.க. எங்களின் கூட்டணியில் நிச்சயம் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் இப்போது நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்துத் தருவேன் என்று அம்மா உறுதியாய் சொல்லியிருப்பதால் காங்கிரஸ் எங்களின் கூட்டணிக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இது தமிழகமெங்கும் உள்ள ர.ர.க்களிடம் புது ரத்தத்தைப் பாய்ச்சியிருக்கிறது'' என்கிறார் உற்சாகமாய்.

ஆனால் தி.மு.க.வினரோ ""இல்லை... இல்லை... இது எங்களுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவில் குழப்பம் விளை விப்பதற்காக ஜெ. போடும் திட்டம்தான் இது. வெறும் கூட்டத்தை கூட்டிக் காட்டி எங்கள் கூட்டணிக்கிடையே நீளும் பாலத்தை இடிக்க முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறார் ஜெ.'' என்கிறார்கள் உறுதியாய்.

பத்து மார்க்குக்கு 2 லட்சம்! +2 ரிசல்ட் மோசடி!


மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ரொம்பவே திடுக்கிட வைத்திருக்கிறது +2 போலி மதிப்பெண் விவகாரம்.

மருத்துவ சீட் கேட்டு... குவிந்த விண்ணப்பங்களை ஆராய்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள்... மறுகூட்டல் மூலம் ப்ளஸ் டூவில் பாஸான 10 பேரின் மார்க் ஷீட்டைப் பார்த்துக் குழம்பினர். குறிப்பாக ஒரு மாணவரின் கட் ஆஃப் மார்க் ரீ டோட்டலிங்கிற்கு முன்பு 140 ஆக இருந்தது. ஆனால் ரீடோட்டலுக்கு பிறகு கட் ஆஃப் மார்க் 195 ஆனது. இதைப் பார்த்து அதிர்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் மொத்த சான்றிதழ்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் பல மார்க் ஷீட்களில் சீக்ரெட் குறியீடாக இருக்கும் வாட்டர் மார்க் இல்லாமல் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அத்துடன் மறுகூட்டலின் மார்க்ஷீட் வெளியீட்டு நாளான ஜூன் 25-க்கு பதில்... பொதுத் தேர்வு மார்க்ஷீட் விநியோக நாளான மே 14-ஐ பொறித்திருந்தனர்.

இதனால் சந்தேகப்பட்ட அதிகாரிகள்... மதிப்பெண்களை அச்சிடும் டேட்டா சென்டருக்கு அவற்றை அனுப்பி வைத்தனர்.

அவை அச்சு அசல் போல் உருவாக்கப்பட்ட போலி மார்க்ஷீட் என்பதை உறுதிசெய்த... டேட்டா நிறுவன அதிகாரிகள், இவை டுபாக்கூர் மார்க் ஷீட்டுகள்தான் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்ததோடு.... பொறியியல் கல்லூரி களுக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தையும் தொடர்புகொண்டு... விபரத்தைக் கூறி... எச்சரிக்கை செய்தனர்.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம்... தன்னிடம் வந்த அத்தனை மார்க் ஷீட்டுகளையும் கண்களில் விளக்கெண் ணையை ஊற்றிக்கொண்டு சோதித்தது. இதில் 41 பேர் போலி மார்க்ஷீட் அனுப்பியிருப்பதும்... அவர்களில் 4 பேருக்கு பிரபல கல்லூரிகளில் தான் இடம் ஒதுக்கி விட்டதையும் கண்டுபிடித்து அண்ணா அதிர்ந்தது. உடனடியாக... அந்த 4 பேரின் இட ஒதுக்கீட்டையும் நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.

போலி மார்க்ஷீட் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே அதிர்ச்சியடைந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வந்து விசாரித்தார். பின்னர் ""போலி மார்க்ஷீட்டைக் கொடுத்த மாணவ-மாணவிகள் 5 வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது என்றதோடு... போலி களைக் தயாரித்த டுபாக்கூர் ஆசாமிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுகக்கப்படும்'' என்றும் எசசரித்தார்.

இந்த விவகாரம் பெரிய அதிர்வலை களை ஏற்படுத்த ஆரம்பித்ததால்.. தேர்வுத் துறை ஆணையர் வசுந்தராதேவி காவல் துறையிடம் புகார் செய்ய... விசாரணைக் களத்தில் தீவிரமாகக் குதித்திருக்கிறது காவல்துறை.

நாம் விசாரணை அதிகாரிகளிடம் இது குறித்துக்கேட்டபோது ""ஒரு பெரிய கும்பலே இந்த போலி மார்க்ஷீட் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப் படறோம். ஒரு மாணவி ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் நல்லா படிச்சி... 1200-க்கு 1,101 மார்க் வாங்கியிருந்தார்.

ரீ-டோட்டலுக்கு அப்ளை பண்ணினா... மேலும் மார்க் கிடைக்கும்னு இந்த மாணவி நினைச்சி பணம் கொடுத்திருக்கா. 1115 மார்க் வந்திருக்கு. இப்ப போலி சான்றிதழில் மாட்டிக்கிட்டா. இன்னொருவன் டி.பி.ஐ. வளாகத்தில் வேலை பார்க்கிற ஒரு நபரிடம் பேசியிருக்கான். 2 லட்ச ரூபா கொடுத்தா ரீ-டோட்டல்ல 10 மார்க் அதிகமா போட ஏற்பாடு பண்றேன். ஒரு மார்க்குக்கு 20 ஆயிரம் ரூபான்னு ஆசை காட்டியிருக்கார். நல்ல காலேஜ்ல அதிலும் சென்னைலயே சீட் வாங்கறதுன்னா ஏழெட்டு லட்ச ரூபாயைக் கொட்டிகொடுத்தாகணும். அதுக்கு ரெண்டு மூணு லட்சத்தை ரீ-டோட்டல் மார்க்குக்கு கொடுத்துடுவோம்னு அந்த மாணவனும் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கான்.

ஆனா அந்த டுபாக்கூர் ஆசாமி... ரீ டோட்டலுக்குப் போகாமலே போனமாதிரி... டுபாக்கூர் மார்க் ஷீட்டை ரெடி பண்ணிக் கொடுத்திருக்கான். அதிக மார்க்குக்கு ஆசைப்பட்டு... தவறான வழியில் அதை அடைய முயற்சி செஞ்ச அந்த மாணவ, மாணவிகள்... இன்னும் 5 வருஷத்துக்கு தேர்வே எழுத முடியாது. போலி மார்க் ஷீட் கொடுத்த மாணவ மாணவிகளை எல்லாம் எங்க விசாரணை வளையத்துக்கு உட்படுத்துவோம். அதே போல்... இந்த போலி மார்க் ஷீட்டுகளை தயார் பண்ணுகிற கிரிமினல்கள், இதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் புரோக்கர்கள் போன்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்போம். இப்ப டி.பி.ஐ.யில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் என்ற ஊழியரை நாங்க மடக்கியிருக்கோம். தீவிர விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரலாம்'' என்றார்கள் மீசையை முறுக்கி விட்டபடியே.

எத்தனை ஆண்டுகளாய் இப்படி நடக்கிறதோ என போலி மார்க்ஷீட் விவகாரம் பகீரூட்ட... இன்னொரு பக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில மாணவ- மாணவிகள் சிலர்... தமிழக மாணவர்களின் கோட்டாவில் இடம்பிடிக்க... போலி இருப்பிட சான்றிதழ் களைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரமும் பல்கலைக் கழகங்களுக்குத் தலைவலியை உண்டாக்க ஆரம்பித்திருக்கிறது.

கேரள மாணவி ஒருவருக்கு... அம்பத்தூர் தாசில்தார் போலி இருப்பிட சான்று வழங்கி அவரைத் தமிழ்நாட்டு மாணவியாக்கியிருந்தார். தமிழக மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கவேண்டிய சீட்டை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்க்க அதிகாரிகள் துணைபோயிருப்பது வெட்கக்கேடு.
போலி மார்க் ஷீட் விவகாரம் எல்லா மட்டத்திலும் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

லஞ்சம் வாங்கி சிக்கிய மத்திய அமைச்சரின்...


இரவு 7.30 மணி இராசிபுரம் சுப்ர மணிய நகர் தெருவிளக்கு களின் மங்கிய ஒளியில் மினுக்கிக் கொண்டிருக்கும் அந்த மாடரேட் நகரில் ஓர் அடுக்கு மாடியில் டிப்-டாப் சஃபாரி சூட் பார்ட்டியிடம் சாதாரண உடையில் ஒருவர் பவ்வியமாய்...’"அய்யா நீங்க கேட்ட ஒண்ணரை லட்சத்தை கொண்டாந் திருக்கேன்' என்றார். முகம் மலர்ந்த சஃபாரி வெரிகுட். இத மொதல்லயே கொண்டு வந்திருக்கலாமில்ல... சரி... சரி... இனி கவலைப்படாதே. பணத்தை பி.ஏ. சுப்ரமணிகிட்ட கொடு' என்றார் மிடுக்காக. பணம் கை மாறுகிறது. அடுத்த வினாடி திபுதிபுவென தன் டீமோடு நுழைந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.பெரியசாமி ""போத் ஆர் அரெஸ்ட்'' என்று கர்ஜிக்க... முகம்வெளிறிப் போனார் அந்த சஃபாரி. அவர் வேறு யாருமல்ல; நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்.

எதற்காக இந்த கைது? லஞ்ச ஒழிப்பு டீமிடம் கேட்டோம். ""நாகப்பட்டிணம் ஆரோக்கியராஜுக்கு இங்க இருக்கும் கங்கநாயக்கன்பட்டி, புதுப்பட்டியில ரெண்டு கோழி பண்ணைகள் இருக்கு. அதில் சேக் என்பவர் ஒர்க்கிங் பார்ட்னராகியிருக்கார். அவங்களுக்குள் பிரச்சினை ஏற்படுது. அதைத் தொடர்ந்து கடந்த 6-ந்தேதி 85 ஆயிரம் கோழிகளை சேக் தனியா கொண்டுபோக.. அவர்மேல் ஆரோக்கிய ராஜ் கோழிகளைத் திருடியதா புகார் கொடுக்கறார். டி.எஸ்.பி. சீனிவாசன்... இதை கையில் வச்சிக்கிட்டுதான் "உன்னைக் கைது பண்ணாம விட்டுடறேன்'னு முதல்ல ஒரு லட்சமும், பிற்பாடு 7-ந்தேதி 50 ஆயிரமும் கறந்திட்டாரு. அதுக்கப்புறமும் ஒன்றரை லட்சம் வேணும்னு மிரட்டவும்தான் எங்ககிட்ட ஓடிவந்தாரு சேக். திருட்டுப் பூனை யை பிடிச்சிட்டோம்ல'' என்றனர் பெருமிதமாக.

சீனிவாசன் கைது என்றதும் அ.தி. மு.க. கரைவேட்டிகள் அங்கே கூடி பத்திரி கையாளர்களைப் படம் எடுக்கவிடாது தடுத் தனர். "ஒரு காக்கிக்கு இத்தனை கரை வேட்டிகளின் சப்போர்ட் டா?' என்ற போது...

""சசிகலா குடும்ப உறவினர் புலவர் கலியபெருமாள் கண்காணிப்பிலுள்ள 7 மாவட்டத்திலும் சீனிவாசன் சொல்லாமல் ஒரு அணுவும் அசையாது. யாராவது கட்சியில பொறுப்பு கேட்டு போனா கூட மொதல்ல சீனிவாசனை பாருன்னுதான் கலியபெருமாளே சொல்வாரு'' என்கிறார்கள் லோக்கல் புள்ளிகள்.

இப்போது லஞ்சத்துக்காக நீண்ட சீனிவாசனின் கை... சேலம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.

’’""சீனிவாசன் சசிகலா உறவினர் மட்டுமில்லீங்க, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றின் பெயர் கொண்ட மத்திய அமைச்சரின் உறவினரும் கூட. தி.மு.க. ஆட்சியில் அமைச்சரின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். எவ்வளவு தப்பு செஞ்சாலும் தப்பிச்சி வர்ற இவர்... இந்த முறை வசமா மாட்டிக்கிட்டாரு'' என ஒரு ர.ர.வே நம்மிடம் கிசுகிசுத்தார்.

இந்த சீனிவாசன் உத்தமர் காந்தி பெயரில் விருது பெற்றவர் என்பதுதான் தலைகுனியத் தக்க உபரித் தகவல்.

திடீர் தீ! பேய் பீதியில் மக்கள்!


திகிலில் உறைந்துபோயிருக்கிறது மோழியனூர் கிராமம்.

சென்னை டூ திருச்சி நெடுஞ்சாலையில் விழுப் புரத்தில் இருந்து 25 கி.மீ.சென்று.... அங்கிருந்து வட மேற்கே நெளிந்தபடி போகும் சாலையில் 5 கி.மீ. நடக்க... மோழியனூர் நமக்கு எதிரே வரும். இப்போது இந்த கிராமம் முழுக்க இறுக்கமான இறுக்கம். அந்தப் பகல் வேளையில் தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. அவ்வப்போது ஓரிருவர் தென்பட.... அவர்கள் முகத்திலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்கிற பீதி.

காரணம்... திடீர் திடீர் என ஆட்களின் மீதும் ஆடு, மாடுகள், கூரைகள் மீதும் பரபரவென பற்றியெரியும் தீ. இந்த தீயின் மர்மம் விலகாததால் பில்லி சூனிய பயம்... ஊரையே வளைத்து ’திக்..திக்கை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

நம்மை எதிர்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் உமா கோவிந்தராஜன் ""ஒரு வருசமா எங்களை இந்த அக்கினி பகவான் போட்டு வறுத்தெடுக்கிறான். 2009 ஆரம்பத்தில் திடீர்னு 15 வீடுகள் தீப்பிடித்து எரிஞ்சிது. அப்புறம் போன ஏப்ரல் மாசம் 37 வீடுகள் எரிஞ்சிது. இப்ப கொஞ்ச நாளா பூட்டியிருக்கும் பீரோவுக்குள் இருக்கும் துணிமணிகளும் கொடியில் காயும் துணிகளும் சுருட்டி வைக்கப்பட்ட பாய், தலையணைகளும் எரிய ஆரம்பிச்சிது. அப்புறம் இந்த 6-ந் தேதி வீட்டில் தூங்கிக் கிட்டு இருந்த கற்பகம், ரேகாங்கிற ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மேல் திடீர்னு தீ. அதுக அலறித்துடிச்சி எழுந்தும் கூட உடம்பெல்லாம் காயம். இப்ப பாண்டி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவங்க இருக்காங்க. இது பற்றி அதிகாரிகளுக்கும் போலீஸுக்கும் சொல்லியும் யாரும் சீரியஸா எடுத்துக்கலை. சாலைமறியல் போராட் டம் கூட நடத்திப்பார்த் துட்டோம். எப்படி தீ பிடிக்குதுன்னு தெரி யலை. பில்லி சூனியத் தாலும் கெட்ட ஆவி களின் வேலையாலும்தான் இப்படின்னு எங்க ஜனங்க நம்பறாங்க. தனியாப் போகவே பயமா இருக்கு.. முதுகுப் பக்கம் வெயில் விழுந்தாக்கூட தீப்பிடிச்சிடிச்சோன்னு பயமா இருக்கு. ராத்திரியில் கூட யாரும் நிம்மதியா தூங்கறது இல்லை''’என்கிறார் கவலையாக.

செல்வி என்ற பெண்மணியோ ""பட்டப் பகல்ல அதிலும் பலபேர் கண்முன்னாலேயே திடீர் திடீர்னு ஆடு மாடுகள் முதுகில் கூட நெருப்பு எரியுது. கெட்ட ஆவிகள் பண்ற அட்டகாசம் தாங்க இது. இதுக்கு பயந்துக்கிட்டே என் பிள்ளைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவச்சிட்டேன். பலபேர் ஊரைக் காலிபண்ணிட்டு போக ஆரம்பிச்சிட் டாங்க. நாங்களும் வெளியூர்கள்ல வீடு தேடிக்கிட்டு இருக்கோம். உங்க ஊரு பக்கம் வீடு இருந்தாலும் சொல்லுங்க'' என்கிறார் எச்சிலை விழுங்கியபடி.

""அந்த ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மீதும் தீப்பிடிச்சதும்... அதுக அலறியடிச்சிக்கிட்டு... வீட் டைவிட்டு வெளியே ஓடிவரப் பார்க்குது... ஆனா ஏதோ ஒரு சக்தி அவங்களை பின்னாடி பிடிச்சி இழுக்குது. இதை நாங்க கண்ணால பார்த்தோம். அதேபோல் வயக்காட்டில் மேஞ்சிக் கிட்டு இருந்த ஆடுமாடுகள் முதுகில் தீ எரியறதையும் அதுக... பதறிக்கிட்டு ஓடுறதையும் பாக்குறப்ப... வயிறு கலங்கிப்போகுது. என்ன சாமிக்குத்தமோ தெரியலை. எங்க ஊரை இம்புட்டுப் போட்டு வதைக்குது''’’-இது விஜயலட்சுமி, காளியம்மாள் போன்றோரின் வேதனை.

செல்வம், கமலக்கண்ணன் போன்றோர் 2006-ல் நடந்ததாக ஒரு கதையைச் சொல்லி வியர்க்க வைத்தார் கள். ""அப்ப இதேபோலத்தான் அங்க இங்கன்னு அடிக்கடி தீப்பிடிச்சிது. ஏதோ வில்லங்கம்னு எங்களுக்குத் தெரிஞ்சிப்போச்சி. உடனே எங்க பக்கம் பிரபலமா இருந்த கொண்டியம்பாக்கம் கந்தசாமி பூசாரியைக் கூட்டிட்டு வந்தோம். ரொம்பப் பவரான ஆளு. அவர் ஆடு, கோழின்னு பலிகொடுத்து பூஜை பண்ணிப் பார்த்துட்டு... ரத்தக்காட்டேரியோட வேலைதான் இதுன்னு சொன்னார். ரொம்ப பாடுபட்டு... மந்திர மாயமெல்லாம் பண்ணி அந்த ரத்தக் காட்டேரியை விரட்டினார். ஆனா அது அவரையே காலி பண்ணிடிச்சி. இங்க இருந்து ஊருக்கு போன கையோட அவர் போய்ச் சேர்ந்துட்டார். இந்தக் கதை தெரிஞ்சதால் தனியா எந்தப் பூசாரியும் இங்கப் பேயோட்ட வரமாட்டேங்க றாங்க''’என்றார்கள் படபடப்பு குறையாமல்.

இந்த ஊரின் நிலவரம் குறித்து கேள்விப்பட்ட இந்து, முஸ்லிம், கிருத்துவ மதங்களைச் சேர்ந்த குருமார்கள் 9-ந் தேதி ஒன்று திரண்டு வந்து... வழிபாடு நடத்தி.... ஊர் முழுக்க மந்திரித்த தண்ணீரைத் தெளித்து விட்டுப் போயிருக் கிறார்கள்.

பெரியவர் முத்துசாமி யோ ""அவங்க ஊருக்குள்ளே நுழையும் போதே... தீய சக்திகள் அவங்களைத் தடுத்துச்சாம். அந்த தீய சக்திகளை மந்திரத்தால் ரொம்பப் போராடி... கட்டிவச்சிட்டுதான் ஊருக்குள்ளேயே நுழைஞ்சாங்களாம். அவங்க இதை சொல்லும்போதே அழுதுட்டாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்கு கெட்ட சக்திகள் தொல்லை கொடுத்திருக்கு. எதுக்கும் ஊரைவிட்டுப் போகும்போது ஜாக்கிரதையாப் போங்க''’என்றபடி எங்கோ வெறிக்கிறார்.

நாம் அந்த திகில் கிராமத் தை விட்டுக் கிளம்பும்போது... விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் அறிவியல் தொழில் நுட்பப் பேராசிரியர் சௌந்தர்ராஜ அய்யம்பெருமாள், வேதியியல் பேராசிரியர்கள் பாலசுப்பிர மணியன், லெனின் ஆகியோர் கொண்ட டீம் உள்ளே நுழைந்தது. எரிந்த பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்ட இந்த டீமினர்... ""பில்லி சூனியம், கெட்ட சக்திகள் என்பதெல்லாம் பொய்.. சில ரசாயனப் பொருட்களைத் தெளிச்சி விஷமிகள் உண் டாக்கும் செயற்கைத் தீ விபத்துக்கள்தான் இவை. அது என்ன பொருள் என்பது எங்கள் ஆய்வில் தெரிந்துவிடும்''’என்றார்கள் அழுத்தமாய்.

மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியோ “""இந்த கிராமத்தின் மீது காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். விரை வில்... தீ விபத்தை ஏற்படுத் தும் விஷமிகளைக் கண்டு பிடித்து கைது செய்வோம். வதந்தி மூலம் மக்களைப் பயமுறுத்தும் முயற்சி தான் இது''’என்றார் நம்மிடம்.
மோழியனூரின் திகில் முழுதாய்த் துடைக்கப்பட வேண் டும் என்பதே நமது விருப்பம்.