Sunday, July 18, 2010
பாய்ந்து வந்த கொய்யா! பதறிய "ஜெ.'!
ஜூன் 23-ந் தேதி தொடங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு கோவை தி.மு.க. வசம் போய்விட்டது என்ற பேச்சுக்கள் கிளம்பியதை உடைக்கும் விதமாக, கோவை எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற் காகவுமே... கடந்த ஜூலை 13-ந் தேதி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார் ஜெயலலிதா.
காலை 8 மணியிலிருந்தே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஜெ.வை பார்க்கக் கூட்டம் கட்டுக் கடங்காமல் திரண்டுகொண்டேயிருக்க... இன்னிசை நிகழ்ச்சியில் கலைஞரைத் திட்டிப் பாடப்பட்ட பாடல் களுக்கு மகளிரணி போட்ட ஆட்டத்தை அனைத்துக் கேமராக்களும் முண்டியடித்துக் கொண்டு எடுத்துக் கொண்டிருந்தன.
ஜெ.மேடையில் வழக்கத்திற்கு மாறாய் ஏகப்பட்ட சேர்கள் போடப்பட்டிருந்ததை பத்திரிகையாளர்கள் உட்பட ர.ர.க்களே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டி ருந்தனர். சரியாய் மதியம் 11.55 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தவர் அங்கி ருந்து காரிலேறி சாலையெங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் வரவேற்பு கொடுக்கத் திரண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே ஜெ. மேடையேறும்போது சரியாய் மணி 12.35.
கொளுத்தும் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் அம்மா... அம்மா... என்ற கூட்டத்தின் கூப்பிடு குரல் களுக்கிடையே கை கூப்பியபடியே வந்த ஜெ., சேரில் அமர்ந்ததும் கூட்டம் அமைதியாகிப் போனது. ஜெ.வை புகைப்படமெடுக்க புகைப்படக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் புகைப்படக் காரர்களின் தலைகளுக்கு மேல் மேடையை நோக்கி கொய்யாக்கனி ஒன்று பாய்ந்து போனது.
அது ஜெ.வின் கால்களுக்கு முன்னால் விழ, சட்டென ஜெ. பதறிப் போக... உருண்டு போன அந்தக்கனியை எடுத்துக்கொண்ட செங் கோட்டையன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யார் வீசியது என்று திருதிருவென மேடை யின் கீழே இறங்கி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனிக்காத ஓ.பன்னீர்செல்வத்திடம் ""யாரோ இப்ப என்னைய நோக்கி எதையோ வீசினாங்க. யார்னு பாருங்க, போட்டோ கிராபர்களை உட்காரச் சொல்லுங்க'' என்று ஜெ. சொல்ல... ஓ.பி.எஸ். பதறிப்போய் "யார் வீசியது பாருங்க'ன்னு கீழே நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் பதறிவிட்டு புகைப் படக்காரர்களை அமர வைத்தார்.
வரவேற்புரை கொடுத்த பொள்ளாச்சி ஜெயராமனுக்குப் பிறகு ஜெ. மைக் பிடித்த போதுதான் தொண்டர்களில் சிலபேர் பெண்கள் பகுதியில் இறங்கி பெண்களின் மேல் விழுந்து கைகளைப் பிடித்து இழுக்க, அமர்ந் திருந்த சேர்களை விட்டுவிட்டு பெண்கள் எழுந்து ஒருவர் பின் ஒருவராய் முண்டியடிக்க... பயங்கர நெரிசல். பெண்கள் பகுதிக்குள் புகுந்த ஆண்களைத் தாக்கும் விதமாக வந்த ஆண்கள் சிலருக்குள் கைகலப்பு ஏற்பட... சேர்களைத் தூக்கி வீசிக்கொண்டார்கள்.
வயதான பாட்டிகள் சிக்கிக்கொண்டு அய்யோ... "காப்பாத்துங்க காப்பாத்துங்க' என்று கதறத் தொடங்கி விட்டனர். கதறலைக் கேட்டு மேடையிலிருந்து ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் ஆகியோர் பெண்கள் பகுதிக்கு கையில் தடியுடன் வந்து சேர்களை வீசிக்கொண்டிருப்பவர்களை மிரட்டினாலும் யாரும் அடங்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஓ.பி. எஸ்.சும் ஜெயக்குமாரும் திரும்பவும் மேடைக்கே திரும்பி விட்டார்கள்.
மயங்கி கீழேயே விழுந்து விட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவகாமி பாட்டிக்கு தண்ணீர் கொடுத்து அமர வைக்க ""அய்யோ... சாமீ இப்படி ஆகும்னு தெரிஞ் சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே. எல்லாம் குடிச்சுப் போட்டு வந்து பொம்பளைக மேலயே விழுகுறானுக. இங்கிருந்து எப்படியாவது காப்பாத்துங்கப்பா'' என்று கெஞ்சியவரை தூக்கி பத்திரி கையாளர்கள் பகுதிக்குள் பத்திரிகை நண்பர்களின் உதவியோடு அமர வைத்தோம். இதெல் லாம் மேடையில் பத்தடி தூரத்திற்கு முன்னால் பேசிக்கொண்டிருந்த ஜெ.வின் கண் முன்னா லேயே நடந்துகொண்டிருந்தது.
அதற்குள் ருக்குமணி என்ற வயதான பாட்டியும், ஓர் இளம்பெண்ணும் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மேடையில் பேசிக்கொண்டிருந்த ஜெ.வை நோக்கி... "அம்மா காப்பாத்துங்கம்மா... அம்மா பேசறத நிறுத்துங்கம்மா' என்றெல்லாம் கத்திப் பார்த்தார்கள். பின் பத்திரிகையாளர் பகுதிக்குள் ருக்குமணி பாட்டியையும் தூக்கி சேரில் அமர வைக்க, "இப்படி வந்து தி.மு.க.காரனுக அராஜகம் பண்றானுங்க. எங்க தலைவரைப் பத்தியா கேவலமா பேசுறீங்கன்னு அங்க இங்கப் புடிச்சு இழுக்கறானுக. கழுத்துல கிடக்கிற செயினையெல்லாம் அறுக்கிறானுக. ஆனாலும் எங்கம்மாவ யாரும் ஒண்ணும் பண்ண முடியாது' என்று அந்த நெரிசலிலும் தி.மு.க.வை குறைசொல்லிவிட்டுப் போனார் குனியமுத்தூரைச் சேர்ந்த கவிதா.
இந்த களேபரத்திற்கு இடையே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த ஜெ., "தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள். புரட்சித் தலைவர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று பேசிவிட்டுப் போக.... அரசியல் சூழல் பரபரப்பாகியிருக்கிறது.
நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைத்துக் கொடுப்பேன் என்று பேசியிருப்பதால் ர.ர.க்கள் சந்தோஷத்திலிருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.
""தே.மு.தி.க. எங்களின் கூட்டணியில் நிச்சயம் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் இப்போது நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்துத் தருவேன் என்று அம்மா உறுதியாய் சொல்லியிருப்பதால் காங்கிரஸ் எங்களின் கூட்டணிக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இது தமிழகமெங்கும் உள்ள ர.ர.க்களிடம் புது ரத்தத்தைப் பாய்ச்சியிருக்கிறது'' என்கிறார் உற்சாகமாய்.
ஆனால் தி.மு.க.வினரோ ""இல்லை... இல்லை... இது எங்களுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவில் குழப்பம் விளை விப்பதற்காக ஜெ. போடும் திட்டம்தான் இது. வெறும் கூட்டத்தை கூட்டிக் காட்டி எங்கள் கூட்டணிக்கிடையே நீளும் பாலத்தை இடிக்க முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறார் ஜெ.'' என்கிறார்கள் உறுதியாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment