Sunday, July 4, 2010
அரையிறுதியில் ஜெர்மனி! * பிரேசில் சரிந்தது ஏன்? *சோகத்தில் மீளாத ரசிகர்கள்
shockan.blogspot.com
கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. நேற்று நடந்த விறுவிறுப்பான காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. அபாரமாக ஆடி 2 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ், அர்ஜென்டினாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதியில் உலக ரேங்கிங் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை(7வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள். தவிர, ஐரோப்பாவின் சிறந்த அணிகள் என்பதால் "பைனல்' போன்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஜெர்மனி ஆதிக்கம்:
முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 3வது நிமிடத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் பந்தை அடித்தார். அதனை தலையால் முட்டி முல்லர் சூப்பராக கோல் அடிக்க, ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஓசில், கெதிரா, டெமிக்லஸ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஆட, அர்ஜென்டினா அணி செய்வதறியாமல் திணறிப் போனது. பின் 24வது நிமிடத்தில் முல்லர் பந்தை "பாஸ்' செய்தார். அதனை குளோஸ் அடித்தார். ஆனால், நூலிழையில் விலகிச் சென்றது. 37வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் பந்தை கோல் போஸ்டுக்குள் அடித்தார். ஆனால், நடுவர் "ஆப்சைடு' என அறிவிக்க, நொந்து போனாம்ர். 39வது நிமிடத்தில் ஜெர்மனியின் பொடோல்ஸ்கி அடித்த "ஷாட்' இலக்கு தவறி பறந்தது. 44வது நிமிடத்தில் முல்லார் அரிய வாய்ப்பை வீணாக்கினார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.
மெஸ்சி ஏமாற்றம்:
இரண்டாவது பாதியில் துவக்கத்தில் அர்ஜென்டினா வீரர்கள் போராடினர். ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சி ஏமாற்றம் அளித்தார்.
கோல் மழை:
இதற்கு பின் ஜெர்மனி கோல் மழை பொழிந்தது. 68வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் "பெனால்டி ஏரியா'வுக்குள் பாய்ந்து சென்றார் பொடோல்ஸ்கி. பின் சுயலநலம் இல்லாமல் பந்தை குளோஸ் இருக்கும் திசையில் அருமையாக "பாஸ்' செய்தார். தன் கண் முன்னே வந்த பந்தை அப்படியே நடந்து சென்றவாறு சுலபமாக குளோஸ் கோல் அடிக்க, ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் அடுத்த தாக்குதலை ஜெர்மனி படை தொடுத்தது. இம்முறை ஸ்கீவன்ஸ்டீகர் "பாஸ்' செய்ய, பிரடரிக் அற்புதமான கோல் அடித்து மைதானத்தில் அப்படியே படுத்து மகிழ்ந்தார். இதையடுத்து ஜெர்மனி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. 89வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி பந்தை ஓசிலுக்கு "பாஸ்' செய்தார். அதனை பெற்ற குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை <உறுதி செய்தார். இறுதியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மாரடோனா பயிற்சியில் தேறாத அர்ஜென்டினா அணி, பரிதாபமாக வெளியேறியது.
ஆட்ட நாயகன் விருதை ஜெர்மனியின் ஸ்கீவன்ஸ்டீகர் வென்றார்.
அவமானம்:
உலக கோப்பை வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என சவால் விடுத்தார் பயிற்சியாளர் மாரடோனா. தற்போது அர்ஜென்டினா காலிறுதியுடன் வெளியேறியதால், அந்த நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளார். மாறாக படுதோல்வி அடைந்த அவமானத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது.
சபாஷ் "ஆக்டோபஸ்'
அர்ஜென்டிம்வுக்கு எதிராக ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்ற "ஆக்டோபஸ்' கணிப்பு உண்மையாகி உள்ளது.
ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள "ஆக்டோபஸ்', கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. இம்முறை உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்று சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று சரியாக சொன்னது. இதே போல காலிறுதியில் ஜெர்மனி வெற்றி பெறும் என்று கணித்தது. இது தற்போது பலித்துள்ளது.
இரண்டாவது வீரர்
அர்ஜென்டினா அணிக்கு எதிரான காலிறுதியில் விளையாடியதன்மூலம், ஜெர்மனி நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 100வது போட்டியில் பங்கேற்றார். இதுவரை இவர் 100 போட்டியில் விளையாடி 52 கோல் அடித்துள்ளார்.* நேற்றைய போட்டியில் இரண்டு கோல் அடித்த குளோஸ், உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை, சகவீரர் ஜெர்டு முல்லருடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.
200வது கோல்
அர்ஜென்டினாவுக்கு எதிரான நேற்றைய காலிறுதியில், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் முதல் கோல் அடித்தார். இது உலக கோப்பை கால்பந்து அரங்கில், ஜெர்மனி அணியின் 200வது கோல். இதுவரை 97 போட்டியில் விளையாடியுள்ள ஜெர்மனி அணி, 203 கோல் அடித்து, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அர்ஜென்டினா (97 போட்டி, 211 கோல்) உள்ளது.
* நேற்று 4 கோல் அடித்த ஜெர்மனி அணி, இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதுவரை 5 போட்டியில் விளையாடிய ஜெர்மனி, 13 கோல் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா (5 போட்டி, 10 கோல்), நெதர்லாந்து, பிரேசில் (தலா 5 போட்டி, தலா 9 கோல்) அணிகள் உள்ளன.
பழிதீர்க்க முடியவில்லை
கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில், ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை அர்ஜென்டினா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் வெளியேறியது.
போராடி வென்றது ஸ்பெயின் *சோகத்துடன் வெளியேறியது பராகுவே
ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடந்த பராகுவேக்கு எதிரான காலிறுதியில், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தவிர, சுமார் 60 ஆண்டுகளுக்கு பின், ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. கடைசிவரை போராடிய பராகுவே, சோகத்துடன் வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் <உலக கோப்பை கால்பந்து தொடரின் கடைசி காலிறுதி போட்டி, இன்று நடந்தது. இதில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், 31வது இடத்திலுள்ள பராகுவே அணியை சந்தித்தது.போட்டியின் முதல் நிமிடத்தில் இருந்தே ஸ்பெயின் அணியினர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பெரும்பாலும் பந்து, இந்த அணியினர் வசமே இருந்து வந்தது. 41வது நிமிடத்தில் கார்டஜோ, பராகுவே அணிக்கு முதல் கோல் அடித்தார். ஆனால் இது நடுவரால் "ஆப்-சைடு' கோல் என அறிவிக்கப்பட, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமமாக (0-0) முடிந்தது.
பராகுவே ஏமாற்றம்:
இரண்டாவது பாதியில், 57வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஜெரார்டு பிக்யூ, பராகுவே வீரர் கார்டஜோவை, கையை பிடித்து இழுக்க, நடுவர் "எல்லோ கார்டு' கொடுத்து எச்சரித்தார். தவிர, பராகுவேக்கு "பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கார்டஜோ அடித்த இந்த பந்தை, ஸ்பெயின் கோல் கீப்பர் இகர் கேசில்லாஸ் அருமையாக தடுக்க, "சூப்பர்' வாய்ப்பு கைவிட்டு போனது.
ஸ்பெயின் சொதப்பல்:
அடுத்த சில நிமிடத்தில் அல்காரஸ், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பிடித்து தள்ளிவிட்டு, "எல்லோ கார்டு' பெற்றார். இதற்காக ஸ்பெயினுக்கு "பெனால்டி-கிக்' கிடைத்தது. இதை அலோன்ஸ்கா கோலாக மாற்றினார். ஆனால் சரியான இடத்தில் வைத்து பந்தை அடிக்கவில்லை என நடுவர் மறுத்து, மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இம்முறை சுதாரித்த பராகுவே கோல் கீப்பர் வில்லர், அலோன்ஸ்கா சொதப்பலாக அடித்த பந்தை அருமையாக தடுத்துவிட்டார்.
வெற்றி கோல்:
போட்டியின் 83வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில், பராகுவேயின் கோல் பகுதிக்குள் அடித்தார். ஆனால் பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது. அப்போது அங்கிருந்த டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடித்தார். ஆனால் இம்முறை பந்து கோல் போஸ்ட்டில் பட்டு, கோலாக மாற, ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல் ஆகும்.
இதை சமன்செய்ய, பராகுவே வீரர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆட்டநேர ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
60 ஆண்டு சாதனை:
ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 1950ல் பிரேசிலில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடம் பிடித்திருந்தது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. இதையடுத்து வரும் 7ம் தேதி டர்பனில் நடக்கும் அரையிறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
நிறைவேறாமல் போன ஆசை
பராகுவேயின் முன்னணி மாடல் அழகி லாரிசா ரிகில்ம். தங்கள் அணி பங்கேற்கும் போட்டிகளின் போது "கிளுகிளு' உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இம்முறை பராகுவே அணி கோப்பை வென்றால், ஆடை இல்லாமல், பிறந்த மேனியாக முக்கிய தெருக்களில் ஓடத் தயார் என அதிரடியாக அறிவித்து இருந்தார். அதாவது ஆடைக்கு பதில் உடல் முழுவதும் பராகுவே அணியின் வண்ணங்களை "பெயின்ட்' மூலம் தீட்டிக் கொண்டு ஓட தயாராக உள்ளேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் காலிறுதியில் பராகுவே தோற்று வெளியேறியதால், இவரது ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.
பிரேசில் சரிந்தது ஏன்? *சோகத்தில் மீளாத ரசிகர்கள்
போர்ட் எலிசபெத்: உலக கோப்பை தொடரில் "கால்பந்து இமயம்' பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இம்முறை "நம்பர்-1' அணியாக களமிறங்கிய பிரேசில், கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலிறுதியுடன் "குட்பை' சொன்னது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
துங்கா தவறு:
இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு...? முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.
தற்காப்பு பலவீனம்:
தவிர, பிரேசில் அணி வழக்கமாக தாக்குதல் பாணியிலான ஆட்டத்துக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும். இது துங்கா வந்த பிறகு தலைகீழாக மாறியது. தற்காப்பு பகுதியை பலப்படுத்தினார். ஆனால், முக்கியமான காலிறுதியில் பலமாக கருதப்பட்ட தற்காப்பு பகுதியே பலவீனமாக மாறியது. பிலிப் மெலோ "சேம்சைடு' கோல் அடித்தார். கோல்கீப்பர் ஜூலியோ சீசரும் மோசமாக செயல்பட்டார்.
கடந்த 1994ல் கேப்டனாக இருந்து அணிக்கு கோப்பை பெற்று தந்த துங்கா, இம்முறை தனது தவறான உத்திகளால், அணியின் கோப்பை கனவை தகர்த்து விட்டார்.
ரசிகர்கள் சோகம்:
வழக்கமாக "சம்பா' நடனத்துடன் வெற்றியை கொண்டாடும் பிரேசில் ரசிகர்கள், இம்முறை உலக கோப்பை தொடரில் இருந்து தங்களது அணி வெளியேறியதும் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கடும் சோகத்தில் காணப்பட்டனர். பாலோ காமா என்ற ரசிகர் கூறுகையில்,"" எல்லாம் முடிந்து விட்டது. எதையும் நம்ப முடியவில்லை. வீரர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை,''என்றார்.
விலகுகிறார் துங்கா
தோல்விக்கு முழு பொறுப்பேற்று பிரேசில் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து துங்கா விலகுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,""மிகவும் கவலையாக இருக்கிறது. யாரும் தோற்பதற்காக விளையாடுவதில்லை. அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்,''என்றார்.
இனி சொந்த மண்ணில்...
கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரசிகர் தற்கொலை
பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment