Sunday, July 25, 2010

திருச்சி மண்டலம்


கூட்டணி தொடர்பான வியூகங்களும், நேரடி- மறைமுகப் பேச்சு வார்த்தைகளும் தமிழக அரசியல் களத்தை விறு விறுப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் வரிசையாக போராட்டக் களத்தில் அணிவகுத்து நிற்கின்றன. இந்தப் போராட்டத்தை மக்கள் நலத் திட்டங்களால் எதிர்கொள்ள முடியும் என ஆளுந்தரப்பு நம்பிக்கையுடன் இருக்கிறது.


மக்களின் ஆதரவும், கூட்டணி பலமுமே தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக் கும் முக்கிய காரணிகளாக இருப்பதால் மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும், கூட்டணியைப் பலப்படுத்தவும் இரு தரப்பிலும் தீவிர காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான், நக்கீரனில் தொடர்ச்சியாக வெளிவரும் தேர்தல் களஆய்வு நிலவரம் அரசியல் கட்சியின ரிடமும் பொதுமக்களிடமும் பெரும் வர வேற்பைப் பெற்று, இது தொடர்பான அலசல்களும் விவாதங்களும் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன.

மண்டலவாரியாக நக்கீரன் வழங்கிவரும் இந்த கள ஆய்வு முடிவுகளில் இந்த இதழில் இடம்பெறுவது, திருச்சி மண்டலம்.

தமிழகத்தின் மையப் பகுதி என்றும் இரண்டாவது தலைநகரம் என்றும் பெயர் பெற்ற திருச்சியை உள்ளடக்கிய இந்த மண்ட லம்தான், மாநிலத்தின் வடக்கு- தெற்கு மாவட்டங்களைப் பிரிக்கும் அளவுகோலாக உள்ளது. திருச்சி, பெரம்பலுர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட் டை, புதுக்கோட்டை, குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகள் இம்மண்டலத்திற்குள் வரையறுக்கப் பட்டுள்ளன.

அகண்ட காவிரி பாயும் வளமான மண்டலம். நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் விளையும் விவசாய பூமி. பாரத மிகுமின் நிலையம், துப் பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி. சிமெண்ட் ஆலை, சர்க்கரை ஆலை உள்ளிட்ட ஆலைகள், வணிக நிறுவனங்கள், ஆர்.இ.சி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்ஆகியவை அடங்கிய இந்த மண்டலத்தில் இரு பெரும் கழகங்களும் தங்கள் சக்தியை மாறி மாறி காட்டிவருவதை தமிழக தேர்தல் வரலாற்றைப் புரட்டினால் தெரியும்.


திருச்சி மண்டலத்தில் தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அ.தி. மு.க.வும் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.கவும் வெற்றி பெற்றன. கள்ளர், தலித், முத்தரையர், பிள்ளைமார், உடையார், கோனார், பிராமணர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய சமுதாயத்தினர் நிறைந்துள்ள இந்த மண்டலத்தில் சாதிரீதியான வாக்குகளைக் கவர்வதில் இரு பெரிய கட்சிகளும் போட்டி போட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மண்டலத்தில் இரண்டு மத்திய அமைச் சர்கள், இரண்டு மாநில அமைச்சர்கள் இருப்பதால் ஆளுந்தரப்பில் தனிப்பட்ட செல்வாக்குடன் கட்சிப் பணிகள் நடைபெறுவதும், அதை எதிர் கொள்ளும் விதத்தில் எதிர்த்தரப்பு செயல்படுவதும் தொடர்ந்த படியே இருக்கிறது.

திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றுள்ள பழைய திருச்சி 1-வது தொகுதியில் பிள் ளைமார் வாக்கு கள் அதிகமாகவும் அவர்களின் தொ ழில் செல்வாக்கு கூடுதலாகவும் இருந்தாலும் கள்ளர் இனத்தவர்களே இங்கிருந்து தேர்ந்தெடுக் கப்படுகின்றனர். சட்டமன்றத் தொகுதி தி.மு.க வசமிருந்தாலும் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.கவே இங்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றது. திருச்சி மேற்கு என மாறியுள்ள பழைய திருச்சி-2தான் இம்மண்டலத்தின் ஸ்டார் தொகுதி. காரணம், இதன் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமைச்சர் கே.என்.நேரு.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம், தலித், பிள்ளைமார், முத்துராஜா, கள்ளர் என்ற வரிசையில் இத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அமைந்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சரான நேரு தன் சொந்த தொகுதிக்கு செய்துள்ள போக்கு வரத்து-சாலை வசதிகள், குடிநீர் வசதி, கல்விக் கடனுதவிகள், ஏழைகளுக்கான வீடுகள், சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி, தி.மு.க அரசின் மற்ற இலவச திட்டங்கள் ஆகியவை அமைச்சருக்கு கட்சி-சாதி இவற்றைக் கடந்த செல்வாக்கைப் பெற்றுத் தந்துள்ளது. அமைச்சரை பொதுமக்கள் எளிதாக அணுகமுடிகிற அதே நேரத்தில், அவரைச் சுற்றி இருப்ப வர்கள் அமைச்சரின் பெயரைச் சொல்லி பொதுமக்களிடம் கறப்பது அதிருப்தியை உண்டாக்குகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பி டும்போது எம்.பி. தேர் தலில் இத் தொகுதியில் தி.மு.கவின் பழைய வாக்குபலத்தில் 10ஆயிரம் வாக்குகள் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, அ.தி.மு.க 400-க்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்றது. இது அ.தி. மு.கவுக்கு நம்பிக்கையளிக்கும் அம்சமாக உள்ளது.

திருச்சி கிழக்கு, மேற்கு இரண்டு தொகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தின் தாக்கம், தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்பது கடந்த எம்.பி. தேர்தலின்போதே தெரிந்தது. மேயராக இருந்த சாருபாலாதான் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். அவர் தலைமையிலான திருச்சி மாநகராட்சி மீது வாக்காளர்களுக்கு இருந்த அதிருப்தி, அவரது தோல்வியை உறுதி செய்தது. புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகும் மாநகராட்சி நிர் வாகம் சீரடையவில்லை. எனினும்,அமைச்சரின் அயராத கட்சிப்பணி, மக்கள் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட அம்சங்கள், தேர்தல் நேரத்தில் தி.மு.கவுக்கே சாதகமாக அமையும் என்கி றார்கள் தொகுதிவாசிகள்.

தொழிற்சாலைகள் நிறைந்த திருவெறும் பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குவங்கி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனாலும் இங்கும் ஆளுந்தரப்பு செல்வாக் கோடு உள்ளது. தலித் சமுதாயத்தினர் அதிக மாகவும், கள்ளர்கள் அடுத்தபடியாகவும் உள்ள இந்த தொகுதியில் தலித் மக்களை அனுசரித்து, கள்ளர் இன வேட்பாளரை நிறுத்துவது ஆளுந்தரப்பின் தேர்தல் அணுகுமுறையாக உள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் முத்துராஜா சமுதாயத் தினரின் வாக்குகள் அதிகமாகவும் உள்ளது. உடையார், தலித் சமுதாய வாக்குகள் முக்கியத்துவம் உடைய தாகவும் இருக்கின்றன. ஸ்ரீரங்கம் நகரத்தில் பிராமணர்கள் நிறைந்திருக்கிறார்கள். இத்தொகுதியில் ஜெ. போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ர.ர.க்களிடம் இருப்பதிலிருந்தே இங்கு அ.தி.மு.கவுக்கு உள்ள செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை இரண்டும் பக்கத்து மாவட்டத்திலிருந்து திருச்சியுடன் சேர்ந் தவை. புதுக்கோட்டை எம்.பி தொகுதி பறிபோனதில் ஆளுந்தரப்பு மீது அம் மாவட்ட மக்களுக்கு இருக்கும் வருத்தத்தை சாதகமாக்கிக்கொள்ள அ.தி.மு.க தரப்பு முயற்சிக்கிறது. கள்ளர், முத்தரையர், தலித் மக்கள் நிறைந்துள்ள இவ்விரு தொகுதிகளின் வாக்குகளைக் கவர்வதற்கு ஆளுந்தரப்பும் தீவிரமாக உள்ளது. திருச்சி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள், தே.மு.தி.க.வின் கணிசமான வளர்ச்சி ஆகியவை தவிர்க்க முடியாத சக்திகளாக உள்ளன. எனினும், பெரிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் விடாக்கண்டன்-கொடாக்கண்டனாக இருப்பதை களஆய்வின்போது அறிய முடிந்தது.

பெரம்பலூர் எம்.பி. தொகுதிக் குட்பட்ட முக்கிய சட்டமன்ற தொகுதி பெரம்பலூர்தான். மறுசீரமைப்புக்குப் பிறகும் தனித்தொகுதியாக உள்ள இது, மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பூர்வீகம் என்பதால் தி.மு.க கொடி உயரப் பறக்கிறது. தலித் மக்களுக்கு அடுத்தபடியாக இங்கு உள்ள உடையார், கவுண்டர், ரெட்டியார் உள்ளிட்ட சமுதாயத்தினரிடமும் ஆளுந் தரப்புக்கு செல்வாக்கு உள்ளது. தனது பழைய செல்வாக்கை மீண்டும் பிடிக்க வேண்டும் என அ.தி.மு.க போராடுகிறது. உப்பிலியபுரமாக இருந்து துறையூராகியுள்ள சட்டமன்றத் தொகுதியில் தலித், பழங்குடியினர், முத்துராஜா, ரெட்டியார் சமுதாயத்தினர் நிறைந்துள்ளனர். இங்கும் தி.மு.க. முன்னணியில் உள்ளது. அ.தி.மு.க. தனது பாரம்பரியமான வாக்குகளை நம்பியுள்ளது.

லால்குடியில் முத்துராஜா, உடையார், தலித் வாக்குகள் ஒன்றுக்கொன்று சளைக் காமல் முக்கியத்துவம் பெறுகின்றன. அமைச்சர் நேருவின் சொந்த ஊர் என்பதால், சாதி பேதமில்லாமல் கோரிக்கைகள் நிறை வேற்றப்படுகின்றன. இதை அமைச்சரின் அம்மாவி னுடைய இறுதி ஊர்வலத்தில் திரண்ட கூட்டமே உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

தொட்டியம் தொகுதி இப்போது மண்ணச்சநல்லூ ராகிவிட்டது. முத்துராஜா சமுதாயத்தினர் செல்வாக் காக உள்ள இத்தொகுதியில் தி.மு.க. ஜாதி அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. முத்துராஜா மக்கள் அதிகமாக உள்ள மற்ற இரு தொகுதிகள், குளித்தலை யும் முசிறியும். இங்கே ரெட்டியார், வெள்ளாளர், தலித் ஓட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முத்து ராஜா இனத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்வராஜ், தனது சமுதாயத்தினரை மட்டும் கவனிக்கிறார் என்ற புகார் உள்ளது. இது அ.தி.மு.கவுக்கு சாதகமாக அமை கிறது. அரசியல்ரீதியாக முக்கியத்துவமும் போட்டியும் நிறைந்த குளித்தலை தொகுதியில் தி.மு.கவின் செல்வாக்குக்கு இணையாக நிற்க முயற்சிக்கும் அ.தி.மு.கவுக்கு ம.தி.மு.க பக்க பலமாக உள்ளது. இந்த மண்டலத்தில் ம.தி.மு.கவின் வாக்குவங்கி குறிப்பிடும் படியாக அமைந்திருப்பது இங்குதான்.

கிராமப்புறங்களில் பாரம்பரியமாக உள்ள காங்கிரஸ் வாக்குகளும், புதிய வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள தே.மு.தி.க.வும் முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளன.



திருச்சி மண்டலத்தில் அகண்ட காவிரி ஓடியும் முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய தொகுதிகள் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளன. காவிரிக் கரையில் உள்ள குளித்தலைத் தொகுதியில் ஒரு பகுதி மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. போதிய தடுப்பணைகள் கட்டி பாசன வசதியைப் பெருக்கவேண்டும் என்கிற இம்மண்டலத்து மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப் படாம லேயே இருக்கிறது.

துறையூர், முசிறி பகுதிகளில் பருத்தி விளைச்சல் நன்றாக இருப்பதால் நூல் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. காவிரி ஆற்று மணலை அளவுக்கதிகமாக அள்ளுவதைக் கட்டுப்படுத்தாததால் விவ சாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவது பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் யாரும் சிந்திப்பதில்லை என்ற கோபம் மக்க ளிடம் உள்ளது. நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் அரசின் இலவச திட்டங்கள் சில இடங்களில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கேஸ், கலர் டி.வி. கிடைக்கவில்லை என்ற குரல்களும் சில இடங்களிலிருந்து கேட் கிறது. விவசாயத்திற்கானத் தண்ணீர் போது மான அளவில் இல்லாத நிலையில், 100 நாள் வேலைத்திட்டம் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் கையில் பணம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. மத்திய-மாநில அமைச் சர்களின் நேரடி கவனிப்பால் திருச்சி- பெரம்பலூர் மாவட்டங்களில் ஆளுந்தரப்பு தன் செல்வாக்கைப் பெருக்க, பழைய செல்வாக்கை இழக்கக்கூடாது என அ.தி.மு.க தரப்பு வரிந்துகட்டுவதால் இம்மண்டலம் கடும்போட்டிக்குரியதாக மாறியுள்ளதை நேரில் காண முடிந்தது.

(வரும் இதழில் தஞ்சை மண்டலம்)

No comments:

Post a Comment