Sunday, July 18, 2010

திடீர் தீ! பேய் பீதியில் மக்கள்!


திகிலில் உறைந்துபோயிருக்கிறது மோழியனூர் கிராமம்.

சென்னை டூ திருச்சி நெடுஞ்சாலையில் விழுப் புரத்தில் இருந்து 25 கி.மீ.சென்று.... அங்கிருந்து வட மேற்கே நெளிந்தபடி போகும் சாலையில் 5 கி.மீ. நடக்க... மோழியனூர் நமக்கு எதிரே வரும். இப்போது இந்த கிராமம் முழுக்க இறுக்கமான இறுக்கம். அந்தப் பகல் வேளையில் தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. அவ்வப்போது ஓரிருவர் தென்பட.... அவர்கள் முகத்திலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்கிற பீதி.

காரணம்... திடீர் திடீர் என ஆட்களின் மீதும் ஆடு, மாடுகள், கூரைகள் மீதும் பரபரவென பற்றியெரியும் தீ. இந்த தீயின் மர்மம் விலகாததால் பில்லி சூனிய பயம்... ஊரையே வளைத்து ’திக்..திக்கை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

நம்மை எதிர்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் உமா கோவிந்தராஜன் ""ஒரு வருசமா எங்களை இந்த அக்கினி பகவான் போட்டு வறுத்தெடுக்கிறான். 2009 ஆரம்பத்தில் திடீர்னு 15 வீடுகள் தீப்பிடித்து எரிஞ்சிது. அப்புறம் போன ஏப்ரல் மாசம் 37 வீடுகள் எரிஞ்சிது. இப்ப கொஞ்ச நாளா பூட்டியிருக்கும் பீரோவுக்குள் இருக்கும் துணிமணிகளும் கொடியில் காயும் துணிகளும் சுருட்டி வைக்கப்பட்ட பாய், தலையணைகளும் எரிய ஆரம்பிச்சிது. அப்புறம் இந்த 6-ந் தேதி வீட்டில் தூங்கிக் கிட்டு இருந்த கற்பகம், ரேகாங்கிற ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மேல் திடீர்னு தீ. அதுக அலறித்துடிச்சி எழுந்தும் கூட உடம்பெல்லாம் காயம். இப்ப பாண்டி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவங்க இருக்காங்க. இது பற்றி அதிகாரிகளுக்கும் போலீஸுக்கும் சொல்லியும் யாரும் சீரியஸா எடுத்துக்கலை. சாலைமறியல் போராட் டம் கூட நடத்திப்பார்த் துட்டோம். எப்படி தீ பிடிக்குதுன்னு தெரி யலை. பில்லி சூனியத் தாலும் கெட்ட ஆவி களின் வேலையாலும்தான் இப்படின்னு எங்க ஜனங்க நம்பறாங்க. தனியாப் போகவே பயமா இருக்கு.. முதுகுப் பக்கம் வெயில் விழுந்தாக்கூட தீப்பிடிச்சிடிச்சோன்னு பயமா இருக்கு. ராத்திரியில் கூட யாரும் நிம்மதியா தூங்கறது இல்லை''’என்கிறார் கவலையாக.

செல்வி என்ற பெண்மணியோ ""பட்டப் பகல்ல அதிலும் பலபேர் கண்முன்னாலேயே திடீர் திடீர்னு ஆடு மாடுகள் முதுகில் கூட நெருப்பு எரியுது. கெட்ட ஆவிகள் பண்ற அட்டகாசம் தாங்க இது. இதுக்கு பயந்துக்கிட்டே என் பிள்ளைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவச்சிட்டேன். பலபேர் ஊரைக் காலிபண்ணிட்டு போக ஆரம்பிச்சிட் டாங்க. நாங்களும் வெளியூர்கள்ல வீடு தேடிக்கிட்டு இருக்கோம். உங்க ஊரு பக்கம் வீடு இருந்தாலும் சொல்லுங்க'' என்கிறார் எச்சிலை விழுங்கியபடி.

""அந்த ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மீதும் தீப்பிடிச்சதும்... அதுக அலறியடிச்சிக்கிட்டு... வீட் டைவிட்டு வெளியே ஓடிவரப் பார்க்குது... ஆனா ஏதோ ஒரு சக்தி அவங்களை பின்னாடி பிடிச்சி இழுக்குது. இதை நாங்க கண்ணால பார்த்தோம். அதேபோல் வயக்காட்டில் மேஞ்சிக் கிட்டு இருந்த ஆடுமாடுகள் முதுகில் தீ எரியறதையும் அதுக... பதறிக்கிட்டு ஓடுறதையும் பாக்குறப்ப... வயிறு கலங்கிப்போகுது. என்ன சாமிக்குத்தமோ தெரியலை. எங்க ஊரை இம்புட்டுப் போட்டு வதைக்குது''’’-இது விஜயலட்சுமி, காளியம்மாள் போன்றோரின் வேதனை.

செல்வம், கமலக்கண்ணன் போன்றோர் 2006-ல் நடந்ததாக ஒரு கதையைச் சொல்லி வியர்க்க வைத்தார் கள். ""அப்ப இதேபோலத்தான் அங்க இங்கன்னு அடிக்கடி தீப்பிடிச்சிது. ஏதோ வில்லங்கம்னு எங்களுக்குத் தெரிஞ்சிப்போச்சி. உடனே எங்க பக்கம் பிரபலமா இருந்த கொண்டியம்பாக்கம் கந்தசாமி பூசாரியைக் கூட்டிட்டு வந்தோம். ரொம்பப் பவரான ஆளு. அவர் ஆடு, கோழின்னு பலிகொடுத்து பூஜை பண்ணிப் பார்த்துட்டு... ரத்தக்காட்டேரியோட வேலைதான் இதுன்னு சொன்னார். ரொம்ப பாடுபட்டு... மந்திர மாயமெல்லாம் பண்ணி அந்த ரத்தக் காட்டேரியை விரட்டினார். ஆனா அது அவரையே காலி பண்ணிடிச்சி. இங்க இருந்து ஊருக்கு போன கையோட அவர் போய்ச் சேர்ந்துட்டார். இந்தக் கதை தெரிஞ்சதால் தனியா எந்தப் பூசாரியும் இங்கப் பேயோட்ட வரமாட்டேங்க றாங்க''’என்றார்கள் படபடப்பு குறையாமல்.

இந்த ஊரின் நிலவரம் குறித்து கேள்விப்பட்ட இந்து, முஸ்லிம், கிருத்துவ மதங்களைச் சேர்ந்த குருமார்கள் 9-ந் தேதி ஒன்று திரண்டு வந்து... வழிபாடு நடத்தி.... ஊர் முழுக்க மந்திரித்த தண்ணீரைத் தெளித்து விட்டுப் போயிருக் கிறார்கள்.

பெரியவர் முத்துசாமி யோ ""அவங்க ஊருக்குள்ளே நுழையும் போதே... தீய சக்திகள் அவங்களைத் தடுத்துச்சாம். அந்த தீய சக்திகளை மந்திரத்தால் ரொம்பப் போராடி... கட்டிவச்சிட்டுதான் ஊருக்குள்ளேயே நுழைஞ்சாங்களாம். அவங்க இதை சொல்லும்போதே அழுதுட்டாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்கு கெட்ட சக்திகள் தொல்லை கொடுத்திருக்கு. எதுக்கும் ஊரைவிட்டுப் போகும்போது ஜாக்கிரதையாப் போங்க''’என்றபடி எங்கோ வெறிக்கிறார்.

நாம் அந்த திகில் கிராமத் தை விட்டுக் கிளம்பும்போது... விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் அறிவியல் தொழில் நுட்பப் பேராசிரியர் சௌந்தர்ராஜ அய்யம்பெருமாள், வேதியியல் பேராசிரியர்கள் பாலசுப்பிர மணியன், லெனின் ஆகியோர் கொண்ட டீம் உள்ளே நுழைந்தது. எரிந்த பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்ட இந்த டீமினர்... ""பில்லி சூனியம், கெட்ட சக்திகள் என்பதெல்லாம் பொய்.. சில ரசாயனப் பொருட்களைத் தெளிச்சி விஷமிகள் உண் டாக்கும் செயற்கைத் தீ விபத்துக்கள்தான் இவை. அது என்ன பொருள் என்பது எங்கள் ஆய்வில் தெரிந்துவிடும்''’என்றார்கள் அழுத்தமாய்.

மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியோ “""இந்த கிராமத்தின் மீது காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். விரை வில்... தீ விபத்தை ஏற்படுத் தும் விஷமிகளைக் கண்டு பிடித்து கைது செய்வோம். வதந்தி மூலம் மக்களைப் பயமுறுத்தும் முயற்சி தான் இது''’என்றார் நம்மிடம்.
மோழியனூரின் திகில் முழுதாய்த் துடைக்கப்பட வேண் டும் என்பதே நமது விருப்பம்.

No comments:

Post a Comment