Sunday, July 18, 2010

24 தொகுதி! யார் யாருக்கு என்ன செல்வாக்கு?



சென்னையில் வெளிப்படும் தேர்தல் முடிவுதான் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் என்கிற தமிழக அரசியல் களம் பற்றிய கணிப்பு கடந்த சில தேர்தல்களாக மாறிக்கொண்டி ருக்கிறது. வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட் டங்கள் என தமிழகத்தின் அரசியல் போக்கு நான்கு விதமாக இருப்பதும், இவற் றிற்கிடையே உள்ள மெல்லிய வேறுபாடுகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றி, முடிவுகளை மாற்றக் கூடியனவாக இருக்கின்றன. மேற்கு மாவட்டங்களின் தலை நகராகவும் கொங்கு மண்ட லத்தின் முக்கியப் பகுதி யாகவும் விளங்கும் கோவை மண்டலத்தில் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர் தலிலும் வெளிப்பட்ட முடிவுகள் தமிழகத்தின் ஒட்டு மொத்த முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கணிச மானத் தொகுதிகளை வென்ற திலும் கொங்கு மண்டலத்தின் பங்கு மிக முக்கியமானது.

தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலமாக அரசியல் கள ஆய்வை வெளியிட்டு வரும் உங்கள் நக்கீரனின் இந்த இதழில் இடம்பெறுவது... கோவை மண்டலம்.

மேற்குதொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் நீலகிரியிலிருந்து அப்படியே கீழே இறங்கி வரும் பகுதியே நமது கள ஆய்வில் கோவை மண்டலமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

பவானி, ஆழியாறு, பரம்பிக்குளம், சிறுவாணி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்களைக் கொண்ட வளமான விவசாய பூமியும், நூற் பாலை-பின்னலாடை நிறுவனங் களும், தொழிற்கூடங் களும் நிறைந்த பொருளா தார வளர்ச்சி மிக்க பகுதி களும் இந்த மண்டலத் திற்குள் அமைகின்றன.
கோவை மண்டலத் தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பவானிசாகர், உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப் பாளையம், அவினாசி, பல்லடம், சூலூர், கவுண்டம் பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால் பாறை, உடுமலைப்பேட் டை, மடத்துக்குளம், பெருந் துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிப் பாளையம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) ஆகிய 24 சட்ட மன்றத் தொகுதிகளும் அடங்குகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்குபலம் வரை படத்தின் மூலம் காட்டப் பட்டுள்ளது.

சமுதாயரீதியாக வெள்ளாளக் கவுண்டர் இன மக்கள் அதிகமாக உள்ள மண்டலம் இது. அவர் களுக்கு அடுத்தபடியாக அருந்ததியர் சமுதாயத்தினர் உள்ளனர். தொழில்துறையில் முன்னேறியுள்ள நாயுடு சமுதாயத்தினர் பல பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைமார் ஓட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவில் இங்கு உள்ளது. முதலியார், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினரும் உள்ளனர். சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. நீலகிரி மலைப்பகுதிகளில் படுகர்கள் உள்ளிட்ட பழங்குடி இனத்தவர்களும், இலங்கையிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்களானத் தமிழர் களும் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அ.தி.மு.க தனிப்பட்ட முறையிலும் கூட்டணி பலத்திலும் செல்வாக்குடன் உள்ள மண்டலமாக கோவை மண்டலம் திகழ்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவை மாவட்டத்தில் இருந்த 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்தக் கூட்டணியே வென்றது. கவுண்டர் சமுதாயத்தினரின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு பக்கபலமாக அமைந்ததே இதற்கு காரணம். அருந்ததியர் வாக்குகளும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க பக்கம் இருப்பது வழக்கம். மற்ற சமுதாயங்களிலும் இரட்டை இலைக்கு கணிசமான ஆதரவு உள்ளது.

கட்சிப் பிரமுகர்கள் என்ற வகையிலும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சட்டமன்றம் இல்லாத நாட்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை அவர்களுடைய தொகுதியில் எளிதாக சந்திக்க முடிகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

இதற்கு நேர்மாறாக உள்ளது தி.மு.க.வின் நிலவரம். 70-களில் தி.மு.க. கோட்டையாக விளங்கிய கோவை மண்டலம், 80-களில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும்கூட தி.மு.க கணிசமான வெற்றியைப் பெறும் மண்டல மாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது தி.மு.க மிகவும் பலவீனமாக உள்ள பகுதியாக கோவை மண்டலம் உள்ளது என்பதை உள்ளூர் உடன்பிறப்புகளே ஒப்புக்கொள்கிறார்கள். மாவட்ட அமைச்சரில் தொடங்கி அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்ற நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். கட்சியின் நீண்டகாலத் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழும் தொடர் குற்றச்சாட்டுகள் தி.மு.கவின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் ஆளுந்தரப்பை பலவீனப்படுத்தியுள்ளது.





மற்ற மண்டலங்களில் தி.மு.கவுக்கு உறுதியாக உள்ள இஸ்லாமிய வாக்குவங்கி இந்த மண்டலத்தில் சிதறுகிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள், சிறைவாசங்கள் இவற்றால் முஸ்லிம் அமைப்புகள் இங்கு வளர்ச்சி பெற் றுள்ளன. தி.மு.கவுக்கு பாரம்பரியமாகப் பதிவாகி வந்த இஸ்லாமியர்களின் வாக்குகள், இப்போது இந்த அமைப்புகளுக்குப் பிரிவதுடன் அ.தி.மு.க ஆதரவு இஸ்லாமியர்களும் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளனர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் என அடுத்தடுத்துள்ள 3 எம்.பி. தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி இழந்ததிலிருந்தே இந்த மண்டலத்தில் ஆளுங்கட்சியின் செல்வாக்கும் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். இந்த மண்டலத்தில் தி.மு.க.வுக்கு நம்பிக்கையாக இருப்பது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்தான். தொகுதியின் எம்.பி.யான மத்திய அமைச்சர் ராசாவை அடிக்கடி தொகுதி மக்கள் சந்திக்க முடிகிறது.

பழங்குடி மக்களின் பிரச்சினைகள், தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள், ஆளுங்கட்சியின் செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி தொகுதியில் புதிதாக கட்டப்படும் பள்ளிக்கூடங்கள், கழிப் பிடங்கள் ஆகியவை அடிப்படைத் தேவையை நிறைவேற்றி வருகின்றன. இருப்பினும், மலைப் பகுதியிலும் உள்ளூர் பிரமுகர்களால் தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றன.

மலையிலிருந்து கீழே இறங்கி வந்தால் பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவினாசி ஆகிய 3 தொகுதிகள் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்டவையாக இருக்கின்றன. இதில் பவானிசாகர் தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதியாக இருந்தபோதும் அவினாசி தொகுதியில் அ.தி.மு.க பலமாக உள்ளது. மேட்டுப்பாளையம் தி.மு.கவை கோஷ்டிப்பூசல் ஆட்டி வைக்கிறது.

பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் இந்த மண்டலத்தில் நிறைந்திருப்பதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் வலுவாக உள்ளன. தொழிலாளர்களின் கூலி உயர்வு, பெண்களைக் கொத்தடிமையாக்கும் சுமங்கலித் திட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் , தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுகின்றன. அ.தி.மு.க அணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இங்கு பாரம்பரியமான வாக்குகள் உள்ளன. அது தி.மு.க கூட்டணிக்கு பக்கபலமாக இருந்தாலும், இந்த வாக்குகளை அதிகப்படுத்தும் அளவில் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் செயல்படவில்லை. ம.தி.மு.க.வின் தொடக்ககாலத்தில் அதற்கு நம்பிக்கை யளிக்கும் மண்டலமாக கோவை மண்டலம் இருந்தது. முக்கிய தலைகள் தாய்க்கழகத்திற்குத் திரும்பிவிட்ட நிலையில், பழைய செல்வாக்கு இல்லா விட்டாலும், அ.தி.மு.க அணிக்குத் துணை நிற்கும் விதத்தில் குறைந்தளவு வாக்குபலத்துடன் உள்ளது ம.தி.மு.க.

விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு தலித் மக்கள் மத்தியில் வாக்கு பலம் அதிகரித்துள்ளது. நாயுடு சமுதாயத் தினரின் ஆதரவு தே.மு.தி.கவுக்கு தேர்தல் நேரத்தில் உதவி செய்கிறது. விஜய காந்த்துக்கு பெரும் ஆதரவு, அ.தி. மு.க.வின் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.

கோவை மண்டலத்தில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு தலைவலியாக உருவாகியிருக்கிறது கொங்கு முன் னேற்றக் கழகம். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் கட்சி என்ற பெயரில் முதன்முதலாக களமிறங்கிய இந்த அமைப்பு, கவுண்டர் சமுதா யத்தினரின் வாக்குகளைப் பெருமளவு கவர்ந்தது. நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 15ஆயிரம், அதிகபட்சம் 25ஆயிரம் என வாக்கு களைப் பெற்ற இக்கட்சியால் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் பாதிக்கப் பட்டன என்றாலும், தி.மு.க அணியின் தோல்வியில் இந்தக் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. அடுத்துவந்த தொண்டா முத்தூர் இடைத்தேர்தலில் இக்கட்சி யால் அந்தளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த இடைத்தேர்தலில் ஈஸ்வரன் போட்டியிட்டது தொடர்பாக கொ.மு.க. நிர்வாகிகளுக்குள் உரசல் ஏற்பட்டது.

பெஸ்ட் ராமசாமி-ஈஸ்வரன் குரூப்பின் நடவடிக்கை பிடிக்காமல் தேவராஜன்-மணிகவுண்டர் அணியினர் கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து, கள் இறக்க அனுமதி கோரி நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தின்போது கைதானவர்களை விடுவிக்கக் கோரி அரசிடம் கொ.மு.க. நிர்வாகிகள் கெஞ்சியது கட்சியின் இமேஜை பெருமளவு பாதித்துள்ளது. கொ.மு.க.வினால் ஏற்படக்கூடிய வாக்கு பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் மின்வெட்டினால் நூற்பாலைகளிலும் பின்னலாடை நிறுவனங் களிலும் இதர தொழிற்சாலைகளிலும் ஏற்படுகின்ற உற்பத்தி இழப்பு முதலாளி-தொழிலாளி என இரு வர்க்கத்திடமும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை அதிகரிக்கச் செய்கிறது. வீடுகளில் ஏற்படும் மின்தடையும் பொது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. நூல் விலை யேற்றத்தால் பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் ஆளுங்கட்சிக்கு எதிரானதாக அமைந்துள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டு, கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார் ஜெ. அதில் அ.தி.மு.கவினர் பெருந் திரளாகக் கலந்துகொண்டது அக் கட்சிக்கு கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஆளுந்தரப்பிற்கு புதிய நம்பிக்கையை அளித்திருப்பது கோவையில் நடந்த செம்மொழி மாநாடு. கட்சி விழாவாக இல்லாமல் மக்கள் பங்கேற்புடன் 5 நாட்கள் கோவை பகுதி யே திணறும் அளவில் கூட்டம் பெரு கியதும், இம்மாநாட்டிற்காக கோவையில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள், புதிய பாலங்கள், கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் ஆகியவை கோவை மாவட்ட மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பும் ஓட்டு களாக மாறும் என தி.மு.க நம்புகிறது.

அருந்ததிய சமுதாயத்தினருக்கான 3% உள்ஒதுக்கீடும் அதன் மூலம் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளுங் கட்சிக்கு கைகொடுக்கும் அம்சங்களாகும். திருப்பூரைத் தனி மாவட்டமாகப் பிரித்து, அதன் வளர்ச்சிக்காக உருவாக்கப் பட்டுள்ள திட்டங்களும் தி.மு.கவுக்குப் புதிய செல்வாக்கைத் தந்துள்ளது.

முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் கோவை மண்டலத்தின் மீது தனிப்பட்ட முறையில் காட்டும் அக் கறையை லோக்கல் தி.மு.க நிர்வாகிகள் காட்டாமல் இருப்பது தி.மு.கவுக்கு இம்மண்டலத்தைச் சோதனைக் களமாக்கியுள்ளது.

தேர்தலுக்கு முன் செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்ளும் திட்டங்களில் ஆளுந்தரப்பும், செல்வாக்கு மிக்க மண்டலத்தை இழந்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிக்கூட்டணியும் வரிந்துகட்டுவதால் வரும் தேர்தலில் கோவை மண்டலத்தின் முடிவுகள் புதிய அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதே களத்தில் நாம் கண்ட யதார்த்த நிலவரமாகும்.

(வரும் இதழில் ஈரோடு மண்டலம்)

No comments:

Post a Comment