Wednesday, July 28, 2010

திடீர் ஒப்பந்தம்! கைகோர்த்த சகோதரர்கள்!


""ஹலோ தலைவரே... .... தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த அபரிமிதமான நம்பிக் கையும், ஆளுங்கட்சித் தொண்டர்களுக்கு இருந்த அதிகப்படியான பயமும் ஒரே விஷயம் சம்பந்தப் பட்டதுதான்.''

""மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்குமான முட்டல் மோதல் விவகாரம்தானே!''

""அரசியலைத் தொடர்ந்து கவனித்துவர்ற எல்லாரும் இந்த விவகாரத்தைத்தான் குறிப்பிடுவாங்க. நீங்களும் சரியா சொல்லிட்டீங்க தலைவரே... அ.தி.மு.கவை மறுபடியும் ஜெயிக்க வைக்க ஜெ தேவையில்லை. இவங்க இரண்டுபேரின் உரசல்களே போதும்னு எதிர்க்கட்சித் தரப்பும், ஆட்சிக்கு எல்லாமே சாதகமா இருக்குது... இது ஒண்ணுதான் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க பாதகமா இருக்கிற ஒரே அம்சம்னு ஆளுங்கட்சி தொண்டர்களும் சொல்லிக்கிட்டிருந் தாங்க.''

""எத்தனையோ திரைப்படங்களுக்கு சூப்பரா திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞரேகூட, இந்தப் பிரச்சினைக்கு க்ளைமாக்ஸை எப்படி அமைப்பதுன்னு தெரியாமல், காலம் கனியட்டும்னு காத்திருந்ததா சொல்லப்பட்டதே!''

""இப்ப அந்தக் காலம் ஓரளவு கனிஞ்சிருக்கிறதா அரசியல் வட்டாரத்தில் சொல்றாங்க தலைவரே... தென்மாவட்டங்களில் அழகிரியின் செயல்பாடு தேவைங்கிறதை உணர்ந்த கலைஞரே அவருக்கு எம்.பி. சீட் கொடுத்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் வாங்கிக் கொடுத்தார். ஆனா, அழகிரியோ மாநில அரசியலுக்குத் திரும்புவதிலேயே கவனம் செலுத் தினார். இதுதான் ஸ்டாலினோடு அழகிரி போட்டிங்கிற சூழலை உருவாக்கிடிச்சி. டெல்லி என்னோட மன நிலைக்கு ஒத்து வரலைன்னு கலைஞர்கிட்டே அழகிரி சொல்லிக்கிட்டே இருந்தார். கலைஞரும், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடியட்டும்னு பதில் சொல்லிக் கிட்டிருந்தார்.''

""நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்போது இது சம்பந்தமான முடிவு வெளிப்படுமா?''

""கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையா இருக்கணும்ங்கி றதையும், இல்லைன்னா எதிர்க்கட்சிகளுக்குத்தான் லாபம்ங்கிறதையும் இரண்டு பேர்கிட்டேயும் கலைஞர் அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்தார். இரண்டு பேருமே எங்களுக்கிடையில் எந்த பிரச்சி னையுமில்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்ப, மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலுக்கு வர விரும்பும் அழகிரியின் முடிவை கலைஞரும் ஏற்றுக்கிட்டா ராம். இதுபற்றி ஸ்டாலின்கிட்டேயும் அழகிரி பேசியிருக்கிறார். அதன்பிறகு அழகிரி, ஸ்டாலின் இருவரும் கலைஞர் முன்னிலையில் பேசியிருக் காங்க.''

""என்ன முடிவு எடுக்கப்பட்டதாம்?''

""மாநில அரசியலுக்கு அழகிரி திரும்புவதற்கு ஓ.கே. தெரிவிக்கப்பட்டிருக்குது. மறுபடியும் தி.மு.க ஆட்சிதான் அமையும்ங்கிறதில் சகோதரர்கள் இரண்டுபேரும் உறுதியா இருக்காங்க. இருவரும் சேர்ந்து செயல்பட்டால் வெற்றியைத் தடுக்க முடியாதுன்னு நினைக்கிறாங்க. அதே நேரத்தில், தேர்தல் சமயத்தில் தென்மாவட்டத்துக்கு முக்கியத் துவம் தரணும்னும், மீண்டும் ஆட்சி அமைந்ததும் இந்த இந்த துறைகளை ஒதுக்கணும்னும் அழகிரி கேட்டிருக்கிறார். குறிப்பா, தன் அப்பா முதன் முதலில் வகித்த பொ.ப.துறையை தனக்கு தரணும்ங் கிறது அழகிரியோட வலியுறுத்தல். இது சம்பந்த மான பேச்செல்லாம் சுமூகமா முடிந்திருக்குது.''

""அதன் பிரதிபலிப்பை டெல்லியில் பார்க்க முடிந்ததே!''

""ஆமாங்க தலைவரே.. .. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் சார்பில் கலந்துக் கிறதுக்காக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் போனார். அவர் இதற்கு முன் இரண்டுமுறை துணை முதல்வரா டெல்லிக்குப் போனப்பவும், அழகிரிக்கு தகவல் கொடுத்து விட்டுத்தான் போனார். ஆனா, இரண்டு முறையும் அழகிரி டெல்லியில் இல்லை. அதனால டெல்லியில் ஸ்டாலினை அவர் சந்திக்கலை. ஆனா இந்த தடவை, டெல்லி ஏர்போர்ட்டில் ஸ்டாலினை அழகிரி வரவேற்றார். தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரும் துணை முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தாங்க.''

""கனிமொழியும் வரவேற்பில் கலந்துக்கிட்டாரே!''

""அது மட்டுமில்லீங்க தலைவரே... .. முதல்வர் கலைஞர் டெல்லிக்குப் போனால் தி.மு.க.வின் மத்திய அமைச்சர்களெல்லாம் தமிழ்நாடு இல்லத்தில் அவரை சந்திப்பது வழக்கம். அதபோல, துணை முதல்வர் ஸ்டாலினை டெல்லித் தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்தார். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவரும் ஒண்ணா பிரேக்-ஃபாஸ்ட் சாப்பிட்டாங்க. அப்ப பல விஷயங்களை மனம் விட்டுப் பேசியிருக்காங்க. இதெல்லாம் கட்சிக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்தும்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலும் துணைமுதல்வர் பல முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்காரே?''

""தலைவரே.. 23-ந் தேதியன்னைக்கு விலைவாசி உயர்வு பற்றி ஆலோசனை நடத்தும் கூட்டம் நடந்திருக் கணும். ஆனா, குஜராத் மந்திரியை சி.பி.ஐ. தேடிய விவகாரத்தால், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்த நரேந்திர மோடி டெல்லிக்கு வராததால் அந்தக் கூட்டம் கேன்சலாயிடிச்சி. அதனால, மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. கரோல் பாக்கில் ஷாப்பிங் போய் தன்னுடைய பேரன், பேத்திகளான இன்பா, நலன், நிலா மூணு பேருக் கும் பொறுப்பான தாத்தாவா பர்சேஸ் பண்ணி னார். மறுநாள்தான் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம். அதில் மு.க.ஸ்டாலின், தென்னக நதிகள் இணைப்பைப் பற்றியும், மாநிலங்களுக்கிடையி லான பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் அழுத் தம் கொடுத்ததோடு, இதற்காக ஒரு துணைக் குழு அமைக்கணும்னும் வலியுறுத்தினார்.''

""பிரதமர் என்ன சொன்னாராம்?''

""லஞ்ச் நேரத்தின்போது, எல்லாத் தலைவர் களும் இருந்தப்ப ஸ்டாலினிடம் பிரதமர், ஹவ் இஸ் அவர் கிரேட் லீடர்னு கலைஞரைப் பற்றி விசாரித்திருக்கிறார். மற்ற மாநில முதல்வர்களும் ஸ்டாலின்கிட்டே தமிழக அரசின் திட்டங்கள் பற்றி கேட்டிருக்காங்க. மகளிர் சுய உதவிக்குழுக் கள் பற்றி மராட்டிய முதல்வரும், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் பற்றி எடி யூரப்பாவும் விவரம் கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டாங்களாம். முதல் நாள் வரமுடியாமல் போனதற்காக ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் ஸாரி கேட்டிருக்கிறார் நரேந்திரமோடி. துணைமுதல்வரின் கோரிக்கையை ஏற்று மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்க துணைக் குழு அமைக்க பிரதமர் உத்தரவிட்டது, இந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி.''

""டெல்லியிலிருந்து திரும்பிய ஸ்டாலின், தனது இளைஞரணி சார்பில் ஜெ.வுக்கு எதிரா ஆர்ப்பாட்டத்தை அறிவிச்சிருக்காரே?''

""சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. வாய்தா வாங்குவதைக் கண்டித்து ஆகஸ்ட் 4-ந் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடக்குது. ஏதேதோ காரணம் சொல்லி வழக்கை இழுத்தடித்த ஜெ, கடைசியா மொழிபெயர்ப்பு தப்புன்னு சொல்லி வாய்தா கேட்க, நீதிபதியே டென்ஷனாகி ஜெ.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சி விசாரணை நடக்கும்னு உத்தரவிட்டிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பெங்களூரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் அரசுத் தரப்பு தீவிரமா இருக்குது. அதே நேரத்தில், சாட்சி சொல்லா மல் டிமிக்கி கொடுக்கவும் சில அதிகாரிகள் தீவிரமா இருக்காங்க.''

""சிறுபான்மை சமுதாயத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இந்து மாணவர்களுக்கும் வழங்கப்படணும்னு பா.ஜ.க சார்பில் பல இடங்களிலும் தீவிரமா போராட்டம் நடத்தப்பட்டதே!''

""ஆமாங்க தலைவரே.. .. 25-ந் தேதியன்னைக்கு நாகர்கோவிலில் நடந்தது. கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொந்த மாவட்டம்ங்கிறதால இரண்டு மாசத்துக்கு முன்னாடி யிருந்தே விளம்பரங்கள் செய்து, ஆர்ப்பாட்டம் பற்றிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தாங்க. போராட்டத்தில் கூட்டமும் பலமா இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு நரேந்திர மோடியை அழைச்சிட்டு வரணும்னு ராதாகிருஷ்ணன் நினைத் தார். மோடி அரசாங்கமே பல போராட்டங்களை சந்திப்பதால் அவரால வரமுடியலை. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை ராதாகிருஷ்ணன் அணுகி யிருக்கிறார். எடியூரப்பாவோ, தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும் பெற் றுள்ளவராகவும், என்னிடம் நல்ல நண்பராகவும் பழகும் கலைஞர் அரசைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தில் சக முதல்வரா என்னால் கலந்துக்க முடியாதுன்னு எடியூரப்பா சொல்லிட்டாராம்.''

""தமிழ்நாட்டின் அடுத்த தலை மைத் தேர்தல் அதிகாரி யாருங்கிற எதிர்பார்ப்பு அதிகமா இருந்ததே?''

""நரேஷ்குப்தா ரிடையர்டா வதால் 3 பெயர்களை சிபாரிசு செய்யும்படி தமிழக அரசிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. சின்ஹா, கண்ணா, ராமையான்னு 3 அதிகாரிகள் பெயரை அரசாங்கம் சிபாரிசு செய்ய, அதை தேர்தல் ஆணையம் ஏத்துக்கலை. வேற 3 பெயர்களை கேட்டது. இதையடுத்து, மத்திய அரசுப் பணியில் உள்ள மிர்த்யுங் சாரங்கி, ராகேஷ் சாகர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரத் தேவன், மூணு பேரில் யார் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரின்னு தீவிரமா பரிசீலனை நடந்தது.''

""காங்கிரஸ் தரப்பிலிருந்தும் தீவிரமான குரல்கள் கேட்டுக்கிட்டே இருக்குதே?''

""அதன் பின்னணியை நான் விசாரித்தேன்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோட பேச்சுகளில் வழக்கம்போல சூடு அதிகமா இருக்கு. இது பற்றி கேட்டால், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துச்சொல்லவும், மாநில அரசின் குறைகளை சுட்டிக் காட்டவும் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார் அதன்படி தான் நான் பேசுறேன்னு சொல்றார். இளங்கோவனைவிட வேகமா கார்த்திசிதம்பரத்தின் குரல் ஒலிக்குது. அவரைக் கேட்டாலும், தேர்தலில் அதிக சீட் கேட்கணும்னு ராகுல்தான் சொல்லியிருக்கிறார். அவர் குரலைத்தான் நான் எதிரொலிக் கிறேன்னு சொல்றார். இதுதான் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பை உண்டாக்கிக்கொண்டி ருக்குது.''

மிஸ்டுகால்!



சொந்தக் காரணங்களுக்காகவோ தொழில் நிமித்தமாகவோ இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளை யாரும் மிரட்டக்கூடாது என நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே நடிகர் சங்கம்தான் இலங்கையில் நடைபெற்ற இந்தியப் படவிழாவில் தமிழ் நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அதில் கலந்துகொள்ளும் பாலிவுட் நடிகர்களின் படங்களை இனி திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து ரஜினி, கமல், அமிதாப் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவரும் விழாவை புறக்கணித்தனர். இப்போது அசின், கருணாஸ் பிரச்சினையில் நடிகர் சங்கம் பல்டி அடித்திருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது

No comments:

Post a Comment