Sunday, July 18, 2010

மாமா! நான் என்ன தப்பு செஞ்சேன்


""என் மனைவி அமுதாவுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன். அவள இந்தக் கையாலயே கிணத்துக்குள்ள தள்ளி விட்டு கொன்னுட்டேன். என் மனசாட்சியே என்னைய தினம் தினம் கொன்னுட்டிருக்குதுங்கய்யா. என்னையக் கைது பண்ணி உள்ள போடுங் கய்யா'' என்று 10 வருடத்திற்கு முன்னால் தான் செய்த கொலைக்காக கோவை கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறான் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அழகர்சாமி.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸாரிடம் அவன் கொ டுத்த வாக்குமூலத்தில்... ""1995-ல நான் சிவகிரியிலிருந்து வேலை தேடி கோவைக்கு வந்தபோது கருமத்தம்பட்டியில இருக்கற துவாரகா மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். அங்கதான் என் மனசுக் குப் புடிச்ச மாதிரி இருந்த கலா சித்ரா அழகுல சொக்கிப் போய்ட்டேன். துருதுருன்னு ஓடியாடி வேலை செய்யுற அவ கூட பேச்சுக் குடுக்க ஆரம் பிச்சேன். அவளும் நாளாக நாளாக என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா, ஒரு நாளு நைட்டு முத்தத்துல தொடங்கின நான் பின்னால அவளை ஆக்கிரமிச்சேன். தொடர்ந்து ஆக்கிரமிச்சுக் கிட்டே இருந்தேன்.

வருஷம் ஓடிக்கிட்டே இருக்க... 2000-த்துல ஒருநாளு ஊருக்கு வரச் சொல்லி அம்மாகிட்ட யிருந்து போன் வந்தது. போய் பார்த்தா எனக்குன்னு ஒரு பொண்ணு பார்த்திருக்கிறதா சொல்லி பொண்ண பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. விருப்பமே இல்லாம போன எனக்கு பொண்ணப் பார்த்ததுமே புடிச்சுப் போச்சு. அவதான் அமுதா. கலா சித்ராவ கல்யாணம் பண்ண நினைச்சிருந்த எனக்கு அமுதாவப் பார்த்ததுமே அந்த எண்ணம் மாறிப் போச்சு. அதுக்கடுத்த வாரத்துலயே கல்யாணம் பண்ணிக்கிட்டு அமு தாவ கூப்புட்டுட்டு கருமத்தம்பட்டிக்கு வந்தேன்.

கலா சித்ரா கதறிட்டா. என்னையப் பாக்கறதையே நிறுத்திட்டா. வேலை செய்யும் போது போய் பேசினா மூஞ்சியில அடிக்கற மாதிரி பேசிட்டா. நானும் எதையும் கண்டுக்காம "எங்கம்மா, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து ஒரு கழுதையக் கட்டி வச் சுட்டாங்க. என்னைய மன்னிச்சிரு கலா சித்ரா... நீ இல்லாம என்னால வாழவே முடியாது'ன்னு அவ கால்ல விழுந்து கெஞ்சும்போது... அவளும் என்னைய மன்னிச்சுட்டா.

அப்படி இப்படின்னு பேசி கலா சித்ராவ திரும்பவும் மடக்கினேன். ஆனா வீட்டுல நான் சம்பாதிக்கிற பணம் குடும்பம் நடத்த போது மானதா இல்லைங்கறது னால என் மனைவி அமுதாவையும் நாங்க வேலை செய்யுற அதே மில்லுலயே வேலைக்கு சேர்த்தேன். இன்னொண்ணு என் பொண் டாட்டி நைட்டு ஷிப்ட்டுக்குப் போகும்போது நாங்க வீட்டுல ஒண்ணா இருந்துக்கலாம்ங்கிற திட்டம் போட்டுத்தான் அவள வேலைக்குச் சேர்த்தேன். அது மாதிரியே என் பொண்டாட்டி நைட் ஷிப்டுக்குப் போனதுக்குப் பிறகு கலா சித்ராவ வரச் சொல்லி விடியற வரைக்கும் இருப் போம். அவ காலையில வீட்டுக்கு கிளம்பிருவா. கலா சித்ரா வீட்டுல வயசான பாட்டி மட்டுங் கறதால எங்களோட சந்திப்புக்கு பிரச்சனை யேயில்லை. ஆனா கூட வேலை செய்றவங்க என் பொண்டாட்டிகிட்ட எங்களுக்குள்ள அந்த மாதிரி தொடர்பு இருக்குதுன்னு சொல்லிட் டாங்க. அதைக் கேட்டு பத்ரகாளியாவே மாறிட்டா அமுதா. "இனி அந்தப் பொண்ணுகூட பேசறத பாத்தாக்கூட நேரா ஊருக்குப் போய் ஆத்தா அப்பன்கிட்ட சொல்லிப்புடுவேன்'னு மிரட்ட ஆரம்பிச்சுட்டா.

கலா சித்ராவ பார்த்து "அமுதாவ ஊர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்தா என்னையக் கட்டிக்குவியா'ன்னு கேட்டேன். அவளும் சரின்னு சொன்னா, ஆனா அமுதாவ ஊர்ல கொண்டு போய் விடறது சாத்தியமில்லை. சொந்தக்காரங்க என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.

அதுனால அவள உலகத்தை விட்டே அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணி... என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு திங்கள்கிழமை காலையில அமுதாவ கூப்புட்டு... "மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. பொன்னாண் டாம்பாளையத்துல இருக்கற சென்னியாண் டவர் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்னு சொன்னேன். அமுதாவும் சந்தோஷமா கிளம்பி வந்தா. அந்தக் கோயில்ல ஜனங்க நடமாட்டமே இருக்காது. அந்தக் கோயிலையொட்டி 150 அடி ஆழத்துல சின்ன கிணறு ஒண்ணு இருக்கும். ரெண்டு பேரு ஒடம்பு நுழையற மாதிரி இருக்கற அந்த கிணத்துக்குள்ள எட்டிப் பாரு அதிசயம் ஒண்ணு தெரியும்னேன்...

அமுதாவும் ஆர்வமா எட்டிப் பார்க்கும் போது அப்படியே காலை ரெண்டையும் தூக்கி விட்டுட்டேன். அவ அந்த கிணத்துக்கு இடையில இருக்கற பைப்ப புடிச்சுட்டு "மாமா... வேண்டாம் மாமா... என்னையக் காப்பாத்துங்க'ன்னு கதறினா. கலா சித்ரா வோட உடம்பு மேலயிருந்த வெறி... தொங் கிட்டிருந்த அமுதாவோட கதறல என் காதுல கேட்க விடாம பண்ணிருச்சு. பைப்ப புடிச்சுட்டு தொங்கிட்டிருந்த அவளோட கை மேல என் காலை வச்சு நசுக்கினேன். அவ்வளவுதான் பைப்ப விட்டுட்டா. ஒரு பெரிய சத்தத்தோட அவ சத்தம் நின்னுப் போச்சு. சுத்தி முத்தியும் பார்த்தேன். யாரும் பாக்கலைன்னு உறுதிபடுத்திக்கிட்டு கீழ கிடந்த அமுதாவோட ஒரு செருப்பையும் தூக்கி கிணத்துக்குள்ள போட்டுட்டு நேரா சிவகிரிக்கு போய்ட்டேன்.

அங்க போய் அமுதாவோட அம்மா, அப்பாகிட்ட... "புள்ளைய எப்படி வளத்து வச்சிருக்கீங்க...? எவன் கூடயோ ஓடிப் போய்ட்டா'ன்னு ஒரு பிட்ட போட்டு அவுங்கள கண்டபடி பேசினேன். அவுங்களோ கொதிச்சு போய் அவமானம் பண்ணிட்டா ளேன்னு என்னையக் கூட்டிக்கிட்டு கருமத்தம்பட்டிக்கு வந்து தேட ஆரம்பிச்சு ஸ்டேஷன்ல மகளக் காணோம்னு புகார் கொடுத்தாங்க. நானும் நம்ம திட்டம் சரியாப் போய்ட்டிருக்குதுன்னு சந்தோஷப்பட்டேன். அவுங்க ரொம்பவும் வருத்தப்பட்டு ஊருக்குப் போனதுக்கப்புறம் கலா சித்ராகிட்ட போய்... "என் பொண்டாட்டிய இனி திரும்ப வரவே முடியாத உலகத்துக்கு அனுப்பி வச்சுட்டேன். இப்ப என்னையக் கல்யாணம் பண்ணிக்கிறியா? 'ன்னு கேட்டேன்.

அவ அதிர்ச்சியாகி "அடப்பாவி... கொலையே செஞ்சுட்டியா? நான் உன்ன கல்யாணம் பண்ணினா என்னை யும் ஒரு நாளு வேறொருத்திக்காக கொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்?'னு என்னைய கழட்டி விட்டுட்டா. நீ இல்லாம வாழவே முடியாதுன்னு கெஞ்சி பாத்தும் அவ ஒத்துக்காததால மில்லுக்குள்ளேயே விஷம் குடிச்சுட்டேன். ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய் போட்டவங்க அதுக்கப்புறம் என்னைய வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னையக் கட்டிக்க சம்மதிக்க மாட்டேன்னு சொன்ன கலா சித்ராகிட்ட நான் கொலை செஞ்சத யாருகிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கினேன்.

திரும்பவும் சிவகிரிக்கே போய் செங்கல் காளவாய்ல வேலைக்கு சேர்ந்து அங்கயிருந்த ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆனேன். ஆனா ஒவ்வொரு வார திங்கள்கிழமை ராத்திரியும் என் மனைவி அமுதா கனவுல வந்து "ஏன் மாமா... இப்படி பண்ணீங்க. நான் என்ன தப்பு பண்ணினே'ன்னு கேட்பா. திடீர்னு கண்ணு முழிச்சுப் பார்த்துட்டு அழுவேன். மூஞ்சியெல்லாம் வேர்த்துப் போய் ஒவ்வொருநாளும் தூங்காமலேயே கிடப்பேன். மனசாட்சி தினமும் என்னையக் கொல்றத தாங்க முடியாமதான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு சரண்டராக வந்திருக்கிறேன்'' என்றவனை சென்னியாண்டவர் கோயிலுக்கு கொண்டு போன இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான டீமின் முன் அமுதாவை எப்படி தள்ளிவிட்டேன் என்று நடித்தும் காட்டினான் அழகர்சாமி.

இதையடுத்து கொலை வழக்கு, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறான் அழகர்சாமி. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நம்மிடம்... ""தான் கொலை செய்ததை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தவனை அவன் மனசாட்சி கொடுத்த துன்புறுத்தலினால்தான் செய்த தவறை ஒப்புக் கொண்டிருக்கிறான். அமுதாவின் பெற்றோர்கள் மகளைக் காணோம் என்று கொடுத்த புகாரை ரெண்டு மூணு வருஷத்தி லேயே திரும்ப வாங்கியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தகவலைச் சொல்லி விட்டோம். அவனை கோயிலுக்குக் கூப்பிட்டு போனபோது அந்த சின்ன கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்ததால் கிணற்றை அடையாளம் காட்ட மிகவும் சிரமப்பட்டான் அழகர்சாமி. தாசில்தாரின் அனுமதி வாங்கிக் கொண்டு கூடிய சீக்கிரம் கிணற்றை தோண்டப் போகிறோம். காமம் என்ற ஓர் உணர்வு ஓர் அப்பாவி பெண்ணை பலியாக்கியிருக்கிறது'' என்கிறார் வருத்தமாய்.
""அநியாயமா எம் பொண்ணக் கொன்னு போட்டு எவன் கூடயோ ஓடிப் போய்ட்டான்னு கதை கட்டி குடும்ப மானத் தையும் கெடுத்துட்டானே அந்த படுபாவி. அமுதா... நீ எங்கயோ எவன் கூடயோ வாழ்ந்துட்டு இருப்பேன்னு நெனச்சுட்டிருந் தோம். ஆனா இப்படி பண்ணிட் டானே...'' என அந்த சின்னக் கிணத் திற்கு முன்னால் வயிற்றில் அடித்துக் கொண்டு அழும் அமுதாவின் உறவு களுக்கு அப்பாவி பெண் அமுதாவின் எலும்பாவது காணக் கிடைக்குமா என்பது கூட சந்தேகம்தான்.

No comments:

Post a Comment