ஒசூரில் இரண்டு நபர்களுக்கிடையே நடந்துவரும் கேபிள் யுத்தம் உச்சகட்டத்தை எட்ட.... எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திக்திக்கில் இருக்கிறார்கள் ஏரியாவாசிகள்.
ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் சிட்டி என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் வேலு. இவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். இதேபோல் ஒசூரில் ஏ-1 என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் சூரி. இந்த இருவருக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டிதான் தற்போது தீவிரம் பெற்று பலரையும் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.
""சூரியாவது சுண்டைக்காயாவது. இனி எவனும் சூரிக்கிட்ட கேபிள் இணைப்பைப் பெறக்கூடாது. மீறிப் பெற்றால்... விபரீதத்தைத்தான் சந்திக்கணும்னு ஒரு பக்கம் வேலு தரப்பு மிரட்டுது. இன்னொரு பக்கம் "வேலுவாவது வெங்காயமாவது.... இனி வேலுவிடம் இணைப்பை வாங்காதே. என்னிடமிருந்துதான் வாங்கணும். இல்லைன்னா நடக்கறதே வேற' என சூரித்தரப்பு மிரட்டுது. இப்படி இவங்க மாறி, மாறி மிரட்டிக்கிட்டு இருப்பதால் என்னை மாதிரி மற்ற கேபிள் ஆபரேட்டர்களும் பொதுமக்களும்தான் மிரண்டுபோய்க் கிடக்குறோம். இது சம்பந்தமா போலீஸுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு. இருந்தும் இவங்க ஆட்டம் அடங்கலைங்க''’என மிரட்சி விலகாமலே சொல்கிறார் அந்த கேபிள் ஆபரேட்டர்.
இன்னொரு கேபிள் ஆபரேட்டரோ ""சூரிமேல் கொலை வழக்கு உட்பட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஒசூர் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தணுங்கிற எண்ணத்தில் அவர் வேலுக்கிட்ட இணைப்பு வாங்கிய ஆபரேடர்களை மிரட்டறார். கொஞ்சம்கூட அவகாசம் தராமல்... அங்கங்கே கேபிள் வயரை 300 முதல் 500 அடிவரை அவர் ஆளுங்க துண்டிச்சிட்டுப் போயிடறாங்க. சன் கிட்ட ஒசூர் இணைப்பை வாங்கிய சூரி... அளவுக்கு மீறி இணைப்புக் கொடுத்ததால்... சன்.. தன் கேபிள் இணைப்பைத் துண்டிச்சிடிச்சி. இது தொடர்பா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடக்குது. இப்படி இந்த ரெண்டு தரப்பும் பண்ணி வருகிற அட்டகாசத்தால்... சமீபத்தில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கூட பார்க்க முடியாம ஒசூர் மக்கள் ரொம்பவே அவஸ்தைப் பட்டாங்க. விரைவில் ஒசூரே ரத்தக்களறியா ஆகுமோங்கிறதுதான் எங்க பயமே''’என்கிறார் பீதியோடு.
இவர்களின் யுத்தம் குறித்து ஒசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரிடம் நாம் கேட்டபோது “""இந்த இரண்டு தரப்புமே மாறி மாறி புகார் மனுக்களை எங்களிடம் குவித்து வருகிறது. எனவே ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக் கிறோம்'' என்று முடித்துக்கொண் டார்.
நாம் ஆர்.டி.ஓ செல்வராஜையும் விடாமல் துரத்திப்பிடித்தோம்.. அவர் நம்மிடம் ""சன் டி.வி.மீது சூரித் தரப்பு வழக்குப் போட்டிருக்கு. வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் பேச்சுவார்த் தைக்கு வருவோம்னு அவர் சொல்றார். வேலு தரப்பும்... வழக்குக்குப் பிறகு பேசுறதுதான் முறைன்னு சொல்லுது. அதனால் கோர்ட்டின் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம். அதற்கிடையே இவர்கள் வன்முறை போன்ற நடவடிக்கைகளில் இறங்கினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கடுமையாக நடவடிக்கை எடுப்போம்''’என்றார் எச்சரிக்கைக் குரலில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment