Saturday, July 31, 2010
ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்-நித்யானந்தா பக்தர்கள்
சென்னை: நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவ வேண்டும் என்று நித்யானந்தாவின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தியான பீட பக்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நித்யானந்தர் ஒரு தனி நபர் அல்ல, பல லட்சம் குடும்பங்களின் உயிர்நாடி. எங்களின் மீது நடந்தேறியிருப்பது மாபெரும் மதத் தாக்குதல் . மனிதாபிமானம் துளியும் இல்லாமல் கொடூரமான உணர்வு படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது.
நித்யானந்தரையும், தியான பீட பக்தர்களாகிய எங்களையும் உண்மைக்கு புறம்பான முறையில் ஒட்டு மொத்த சமூகமும் விமர்சிக்கும் அளவிற்கு சமூக விரோதிகள் செய்த திட்டமிட்ட சதி எங்களை பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.
எங்களின் குழந்தைகளும், பெண்களும் சாலையில் நடக்க முடியவில்லை. நிம்மதியாக பள்ளி சென்று திரும்ப முடியவில்லை. வேலை செய்யும் இடங்களில் கூட நாங்கள் படும் கஷ்டங்கள் படுமோசமானவையே.
யோகா, தியானம், பூஜை, மாலை, காப்பு அனிதல் போன்ற எங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாங்கள் மைனாரிட்டியாக வாழும் சமூகம் என்பதால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைக்கிறோம். எங்களின் மத ஆன்மீக உணர்வுகளை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.
பல வருடங்களுக்கு முன் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்த, லெனின் கருப்பன் தந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு போர் கால முக்கியத்துவம் தரப்பட்டது. ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நிரபாரதி நித்யானந்தரை குற்றவாளியாகவே சமூகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டும் எங்களின் இதயத்தை கிழிக்கும் செயல்கள். சேவையையும், ஆன்மீகத்தையும் அடிப்படையாக கொண்ட எங்களின் வாழ்வு எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.
இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அஹிம்சையை கடைபிடிக்கும் லட்சக்கணக்கான தமிழ் வாழ்பக்தர்கள், கயமைத்தனம் மிக்க இந்த நவீன வன்முறை தாக்குதலால் பாதிக்கப்படுகிறோம். எங்களின் புனிததன்மை மீண்டும் உலகிற்கு சொல்லப்பட வேண்டும்.
எங்களின் வாழ்வின் ஆதாரமான குருநாதர் அவமதிக்கப்படும் ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்.
நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவும்படி வேண்டுகிறோம். சதிகாரர்களின் முகத்திரையை கிழித்து, நாங்கள் வாழ வழி செய்ய வேண்டுகிறோம். எங்களுடைய மத உணர்வுகள் தாக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்களின் குலத்தையும், குருவையும் அவமதிப்பதை ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment