Wednesday, July 7, 2010
யுத்தம் 68 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com
ராஜ்குமார் கடத்தல் வழக்கு, பக்தவத்சலம் கொலை வழக்கு என பலவற்றையும் விசாரித்தும், நக்கீரன் மீது என்ன குற்றம் சாட்டலாம் என்ற யோசனைதான் அவர்களிடம் இருந்தது. அதனால்தான், என்னை விசாரித்த அறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு அறையில் அரசு வழக் கறிஞரும் போலீஸ் உயரதிகாரிகளும் உட் கார்ந்து, அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். 9 நாட்கள் விசாரித்தும் எந்தப் பிடியும் கிடைக்கவில்லை என்பதால் டி.எஸ்.பி. நாகராஜனின் முகம் தொங்கிப் போயிருந்தது. அந்த அறையிலிருந்து எழுந்து, என்னை விசாரித்த இடத்திற்கு வந்தார் டி.எஸ்.பி.
அப்போது இன்ஸ் பெக்டர் லட்சுமணசாமி, ""நாகப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் தெரியுமா?'' என்றார்.
""என்ன?'' என்றபடியே வந்தார் டி.எஸ்.பி.
அவர்கள் குறிப்பிட்ட நாகப்பா என்பவர், ராஜ்குமாரோடு சேர்த்து வீரப்பனால் கடத்தப் பட்டவர்களில் ஒருவர். உதவி டைரக்டர். ராஜ்குமாரையும் அவரது உறவினர்களையும் தாளவாடி பகுதியில் வீரப்பனும் அவன் ஆட்களும் கடத்தியபோது, அய்யாவுக்கு உதவியாக நானும் வருகிறேன் என்று வீரப்பன் ஆட்களிடம் தானாகவே பணயக்கைதியானவர். பிறகு, காட்டிலிருந்து தப்பித்து வந்துவிட்டார். அவரைப் பற்றித்தான் இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி சொல்லிக்கொண்டிருந்தார்.
""ஏன் கஷ்டப்படுறார்?'' -டி.எஸ்.பி. கேட்டார்.
ராஜ்குமாரோட ஆட்கள் கர்நாடகாவில் அவரை ரூமில் போட்டு பூட்டிவைத்து அடிச்சிக்கிட்டிருக்காங்களாம். அவரை ஏன் அடிச்சிக்கிட்டிருக்காங்கன்னு தெரியல. "கோபால் சொன்னாதான் தெரியும்' என்று இன்ஸ்பெக்டர் மீண்டும் என்னைக் குறிவைத்து வார்த்தைகளை எறிந்தார்.
நான் அமைதியாக இருந்தேன்.
""கோபால்தான் இங்கே இருக் காரே... நாகப்பாவை இங்கே கூட்டிக் கிட்டு வந்துட்டா, என்ன விவரம்னு சொல்லிடப்போறாரு'' என்றார் டி.எஸ்.பி.
""எப்படி கர்நாடகாவுக்கு நாம போய், ராஜ்குமார் ஆட்கள்கிட்டே யிருந்து காப்பாத்திட்டு வர முடியும்? அது பெரிய ரெஸ்க்யூ ஆபரேஷன். அப்படியே தூக்கிட்டு வந்தாலும், நாகப்பா பேசுவாரான்னு தெரியாது. ஏன்னா அவருக்கு கோபால்னாலே பயம்.''
மீண்டும் என்னை நோக்கியே பொறி வைக்கப்பட்டது. நான் அமைதியாக இருந்தேன்.
""என்ன சொல்றீங்க கோபால்?'' -டி.எஸ்.பி. என்னைக் கிளறிப் பார்த்தார். நாகப்பாவிடம் நக்கீரனுக்கெதிராக 100 பக் கங்களுக்கு போலீசார் எழுதி வாங்கியிருப்பதாக நமக்கு ஏற்கனவே தகவல் வந்திருந்தது. காட்டிலிருந்து நாகப்பா தப்பிச் சென்ற பிறகு, உயர்நீதிமன்றத்தில் ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அதன் நீதிமன்ற சான்றிட்ட நகலை நாம் வாங்கியிருந்தோம்.
கடைசி நாளில் சமர்ப்பிக்கச் சொல்லி நம்மிடம் கேட்டிருந்த ஆவணங்களை தம்பிகள் ரெடிபண்ணிக் கொண்டிருந்த போது, இந்த அஃபிடவிட்டையும் அனுப்பி வைக்கும்படி தம்பி சிவக்குமாரிடம் சொல்லி யிருந்தேன். அது நமது தரப்பில்தான் இருந் தது. நாகப்பா விவகாரத்தை நக்கீரனுக்கு எதிராகத் திருப்புவதற்கு போலீசார் தீவிரமாக இருந்த நேரத்தில், நான் டி.எஸ்.பி.யிடம், ""ஒரு நிமிடம் நான் பேசலாமா?'' என்றேன்.
""என்ன விஷயம்?''
""நாகப்பா சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்று எங்ககிட்டே இருக்கு.''
""என்ன அது?''
""ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த அஃபிடவிட்.''
""எங்கே இருக்கு?''
""வெளியிலே தம்பி ஜீவான்னு ஒருத்தர் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு கவர் இருக்குது. உங்க ஆட்களை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல் லுங்க. நான் இங்கேயிருந்து கை காட்டுறேன். தம்பி ஜீவா அந்தக் கவரைக் கொடுப்பார். அந்த அஃபிடவிட்டில் எல்லா உண்மைகளும் இருக்குது.''
""கோபால்... எங்ககிட்டேயும் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் தொடர்பா நிறைய விஷயங்கள் இருக்குது. நாங்களும் ஸ்டேட்மெண்ட் வாங்கியிருக்கோம்'' என்றார் டி.எஸ்.பி.
""சார்... ஹைகோர்ட்டில் அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கும்போது, அதற்கு எதிரா ஒரு ஸ்டேட் மெண்ட் வாங்கினா ஒண்ணுக்கும் உதவாது என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.''
நான் சொன்னதும் டி.எஸ்.பி. யோசித்தார். தம்பி ஜீவாவிடமிருந்து கவரை வாங்கச் சொல்லி விட்டு, பி.பி. மற்றும் உயரதிகாரிகள் இருந்த அறைக்குச் சென்றுவிட்டார்.
வெளியில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னுடைய சிக்னல் எப்போது கிடைக்கும் என்பதை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். போலீசோ வேறு எந்த விதத்தில் நம்மை முடக்கிப் போடலாம் என்று யோசித்தது.
ஒவ்வொரு அதிகாரியாக உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார்கள். "செந்தாமரைக் கண்ணன்னு ஒரு அதிகாரி வருவார். உங்களை விசாரிப்பார்' என்று மிரட்டல் தொனியில் ஒரு இன்ஸ்பெக்டர் சொன்னார். ஒருவன் கட்டைச் சுவரில் உட்கார்ந்துகொண்டு அந்த வழியில் வருவோர் போவோரையெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தானாம். பலரும் அவனுக்குப் பயந்து, கப்பத்தை அவன் பக்கத்தில் போய் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். காசில்லாமல் வந்த ஒருவர் மட்டும், அவன்கிட்டே போய், "உனக்கு நான் எதற்கு பணம் கொடுக்கணும். தரலேன்னா என்ன பண்ணுவே?' என்று கேட்க, அப்போது அந்த கட்டைச்சுவரில் உட்கார்ந்திருந்தவன் எழுந் திருக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனுக்கு கால் இல்லை. எழுந்திருக்க முடியலை. தனக்கு கால் இல்லை என்பதைக் காட்டிக் கொள்ளாமலேயே, இத்தனை நாளும் வருவோர் போவோரையெல்லாம் மிரட்டிக்கொண் டிருந்தவனின் நிலைமை யைப் போலத்தான் போலீசின் நிலைமை யும் இருந்தது.
நக்கீரனுக்கு எதிராக அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் வெறுமனே மிரட்டிப் பார்த்தார்கள். உயரதிகாரி வந்து விசாரிப்பார் என்றார்கள். கையில் காசில்லாத மனிதரைப்போல நம்மிடமும் எந்த வில்லங்கமும் இல்லை. அதனால், "உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்' என்பதுபோல போலீசிடம், "நீங்க என்ன வேணும்னாலும் செய்துக்குங்க' என் றோம். கால் இல்லாத நபர் போன்ற போலீசுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுதான் நிஜ நிலவரம். இதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டி ருப்பதைப் புரிந்துகொண்டேன்.
பகல் 12.30 மணி. சிக்னல் காட்ட வேண்டிய டயம் வந்தது.
""சார்... எனக்கு ரொம்ப டயர்டா இருக்குது. ஒரு ஜூஸ் வேணும்'' என்றேன்.
இன்ஸ்பெக்டர் தன் பக்கத்தில் இருந்த எஸ்.ஐ.யைக் கூப்பிட்டார். ""அவர் என்ன ஜூஸ் கேட்கிறாரோ வாங்கிட்டு வாங்க'' என்றார்.
நான் குறுக்கிட்டேன்.
""உங்க ஆட்களை நான் எப்படி நம்புறது? எங்க தம்பிங்க வெளி யில இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு வாங்கிட்டு வரச்சொல்லுங்க.''
"நான் இப்படிச் சொல்வேன்' என்பதை போலீசார் எதிர்பார்க்கலை. ""எங்க போலீசை நீங்க நம்பலைன்னா, உங்க ஆட்களை நாங்க எப்படி நம்ப முடியும்?'' -இன்ஸ்பெக்டர் கேட்டார்.
""அப்படின்னா, டாக்டரை வரச்சொல்லுங்க சார். எங்க ஆள் வாங்கிட்டு வர ஜூஸை அவர் டேஸ்ட் பண்ணிட்டு அப்புறம் எனக்கு கொடுக் கட்டும்.''
கொஞ்ச நேரம் யோசித்த போலீசார், பிறகு ஒப்புக்கொண்டார்கள். தம்பி மோகனைக் கூப்பிடச் சொன்னேன். போலீசார் வெளியே போய், மோகனை அழைத்து வந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை அவர் கவனித்த படி இருந்தார்.
போலீசாருக்குத் தெரியாதபடி, தலையைத் தடவுவதுபோல செய்துவிட்டு, அரெஸ்ட் எதுவுமில்லை என்பதன் அடையாளமாக, கையை அசைத்துக்காட்டினேன். மோகன் புரிந்து கொண்டதும், எனக்கு ஜூஸ் வாங்கி வரச் சொன் னேன். அவர் வெளியே சென்றபோது, என் சிக்னலின் அர்த்தமும் வெளியில் காத்திருந்தவர் களுக்குச் சென்றுவிட்டது. அவர்கள் சந்தோஷ மாகப் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது.
ஜூஸ் வந்தது. டாக்டரும் வந்திருந்தார். அவர் அதை டெஸ்ட் செய்து பார்த்த பிறகு, நான் ஜூஸ் குடித்தேன். டி.எஸ்.பி. நாகராஜ னோ, என்ன கேஸை என் மீது போடுவது என்று தெரியாமல் தண்ணி குடித்துக்கொண்டி ருந்தார். பி.பி.யிடமும் உயரதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தியும் அவருக்கு சரியாக எதுவும் பிடிபடவில்லை. கடுகடுவென எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். 9 நாள் விசாரணை நடத்தியும் எல்லாம் ஃபெயிலியர்... மேலிடத்திற்கு என்ன சொல்வது என்பதுதான் அவரது கவலை என்று நான் யூகித்துக் கொண்டேன். ரொம்பவும் டென்ஷனாக அவர் வெளியே வந்தார்.
நேரம் நெருங்குது. இந்த விசா ரணை சனியன் இதோட முடிஞ்சு கிளம் பப் போறோம்ங்கற சின்ன சந்தோஷத்துல இருந்தேன் நான்.
அப்போது...
-யுத்தம் தொடரும்
அப்படியா?
வீடு கட்டுவதற்காக அரசு கொடுத்த நிலத்தில் பெரிய திரை தரப்பு இன்னும் வேலையை ஆரம்பிக்கவில்லை. சின்னத்திரையோ மலேசிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு கட்டிட வேலையைத் தொடங்கிவிட்டது. சின்னத்திரைக்கான ஏரியாவில் பட்டனை அழுத்தி விரைவில் வீடுகளைத் திறந்து வைக்கப் போகி றாராம் நிலம் கொடுத்த தலைவர். சின்னத் திரையின் வேகம் பெரியதிரை சங் கத் தலைவர்களை அப்செட் டாக்கியுள்ளதாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment