Sunday, July 18, 2010

மாமா! நான் என்ன தப்பு செஞ்சேன்


""என் மனைவி அமுதாவுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன். அவள இந்தக் கையாலயே கிணத்துக்குள்ள தள்ளி விட்டு கொன்னுட்டேன். என் மனசாட்சியே என்னைய தினம் தினம் கொன்னுட்டிருக்குதுங்கய்யா. என்னையக் கைது பண்ணி உள்ள போடுங் கய்யா'' என்று 10 வருடத்திற்கு முன்னால் தான் செய்த கொலைக்காக கோவை கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறான் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அழகர்சாமி.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸாரிடம் அவன் கொ டுத்த வாக்குமூலத்தில்... ""1995-ல நான் சிவகிரியிலிருந்து வேலை தேடி கோவைக்கு வந்தபோது கருமத்தம்பட்டியில இருக்கற துவாரகா மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். அங்கதான் என் மனசுக் குப் புடிச்ச மாதிரி இருந்த கலா சித்ரா அழகுல சொக்கிப் போய்ட்டேன். துருதுருன்னு ஓடியாடி வேலை செய்யுற அவ கூட பேச்சுக் குடுக்க ஆரம் பிச்சேன். அவளும் நாளாக நாளாக என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா, ஒரு நாளு நைட்டு முத்தத்துல தொடங்கின நான் பின்னால அவளை ஆக்கிரமிச்சேன். தொடர்ந்து ஆக்கிரமிச்சுக் கிட்டே இருந்தேன்.

வருஷம் ஓடிக்கிட்டே இருக்க... 2000-த்துல ஒருநாளு ஊருக்கு வரச் சொல்லி அம்மாகிட்ட யிருந்து போன் வந்தது. போய் பார்த்தா எனக்குன்னு ஒரு பொண்ணு பார்த்திருக்கிறதா சொல்லி பொண்ண பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. விருப்பமே இல்லாம போன எனக்கு பொண்ணப் பார்த்ததுமே புடிச்சுப் போச்சு. அவதான் அமுதா. கலா சித்ராவ கல்யாணம் பண்ண நினைச்சிருந்த எனக்கு அமுதாவப் பார்த்ததுமே அந்த எண்ணம் மாறிப் போச்சு. அதுக்கடுத்த வாரத்துலயே கல்யாணம் பண்ணிக்கிட்டு அமு தாவ கூப்புட்டுட்டு கருமத்தம்பட்டிக்கு வந்தேன்.

கலா சித்ரா கதறிட்டா. என்னையப் பாக்கறதையே நிறுத்திட்டா. வேலை செய்யும் போது போய் பேசினா மூஞ்சியில அடிக்கற மாதிரி பேசிட்டா. நானும் எதையும் கண்டுக்காம "எங்கம்மா, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து ஒரு கழுதையக் கட்டி வச் சுட்டாங்க. என்னைய மன்னிச்சிரு கலா சித்ரா... நீ இல்லாம என்னால வாழவே முடியாது'ன்னு அவ கால்ல விழுந்து கெஞ்சும்போது... அவளும் என்னைய மன்னிச்சுட்டா.

அப்படி இப்படின்னு பேசி கலா சித்ராவ திரும்பவும் மடக்கினேன். ஆனா வீட்டுல நான் சம்பாதிக்கிற பணம் குடும்பம் நடத்த போது மானதா இல்லைங்கறது னால என் மனைவி அமுதாவையும் நாங்க வேலை செய்யுற அதே மில்லுலயே வேலைக்கு சேர்த்தேன். இன்னொண்ணு என் பொண் டாட்டி நைட்டு ஷிப்ட்டுக்குப் போகும்போது நாங்க வீட்டுல ஒண்ணா இருந்துக்கலாம்ங்கிற திட்டம் போட்டுத்தான் அவள வேலைக்குச் சேர்த்தேன். அது மாதிரியே என் பொண்டாட்டி நைட் ஷிப்டுக்குப் போனதுக்குப் பிறகு கலா சித்ராவ வரச் சொல்லி விடியற வரைக்கும் இருப் போம். அவ காலையில வீட்டுக்கு கிளம்பிருவா. கலா சித்ரா வீட்டுல வயசான பாட்டி மட்டுங் கறதால எங்களோட சந்திப்புக்கு பிரச்சனை யேயில்லை. ஆனா கூட வேலை செய்றவங்க என் பொண்டாட்டிகிட்ட எங்களுக்குள்ள அந்த மாதிரி தொடர்பு இருக்குதுன்னு சொல்லிட் டாங்க. அதைக் கேட்டு பத்ரகாளியாவே மாறிட்டா அமுதா. "இனி அந்தப் பொண்ணுகூட பேசறத பாத்தாக்கூட நேரா ஊருக்குப் போய் ஆத்தா அப்பன்கிட்ட சொல்லிப்புடுவேன்'னு மிரட்ட ஆரம்பிச்சுட்டா.

கலா சித்ராவ பார்த்து "அமுதாவ ஊர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்தா என்னையக் கட்டிக்குவியா'ன்னு கேட்டேன். அவளும் சரின்னு சொன்னா, ஆனா அமுதாவ ஊர்ல கொண்டு போய் விடறது சாத்தியமில்லை. சொந்தக்காரங்க என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.

அதுனால அவள உலகத்தை விட்டே அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணி... என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு திங்கள்கிழமை காலையில அமுதாவ கூப்புட்டு... "மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. பொன்னாண் டாம்பாளையத்துல இருக்கற சென்னியாண் டவர் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்னு சொன்னேன். அமுதாவும் சந்தோஷமா கிளம்பி வந்தா. அந்தக் கோயில்ல ஜனங்க நடமாட்டமே இருக்காது. அந்தக் கோயிலையொட்டி 150 அடி ஆழத்துல சின்ன கிணறு ஒண்ணு இருக்கும். ரெண்டு பேரு ஒடம்பு நுழையற மாதிரி இருக்கற அந்த கிணத்துக்குள்ள எட்டிப் பாரு அதிசயம் ஒண்ணு தெரியும்னேன்...

அமுதாவும் ஆர்வமா எட்டிப் பார்க்கும் போது அப்படியே காலை ரெண்டையும் தூக்கி விட்டுட்டேன். அவ அந்த கிணத்துக்கு இடையில இருக்கற பைப்ப புடிச்சுட்டு "மாமா... வேண்டாம் மாமா... என்னையக் காப்பாத்துங்க'ன்னு கதறினா. கலா சித்ரா வோட உடம்பு மேலயிருந்த வெறி... தொங் கிட்டிருந்த அமுதாவோட கதறல என் காதுல கேட்க விடாம பண்ணிருச்சு. பைப்ப புடிச்சுட்டு தொங்கிட்டிருந்த அவளோட கை மேல என் காலை வச்சு நசுக்கினேன். அவ்வளவுதான் பைப்ப விட்டுட்டா. ஒரு பெரிய சத்தத்தோட அவ சத்தம் நின்னுப் போச்சு. சுத்தி முத்தியும் பார்த்தேன். யாரும் பாக்கலைன்னு உறுதிபடுத்திக்கிட்டு கீழ கிடந்த அமுதாவோட ஒரு செருப்பையும் தூக்கி கிணத்துக்குள்ள போட்டுட்டு நேரா சிவகிரிக்கு போய்ட்டேன்.

அங்க போய் அமுதாவோட அம்மா, அப்பாகிட்ட... "புள்ளைய எப்படி வளத்து வச்சிருக்கீங்க...? எவன் கூடயோ ஓடிப் போய்ட்டா'ன்னு ஒரு பிட்ட போட்டு அவுங்கள கண்டபடி பேசினேன். அவுங்களோ கொதிச்சு போய் அவமானம் பண்ணிட்டா ளேன்னு என்னையக் கூட்டிக்கிட்டு கருமத்தம்பட்டிக்கு வந்து தேட ஆரம்பிச்சு ஸ்டேஷன்ல மகளக் காணோம்னு புகார் கொடுத்தாங்க. நானும் நம்ம திட்டம் சரியாப் போய்ட்டிருக்குதுன்னு சந்தோஷப்பட்டேன். அவுங்க ரொம்பவும் வருத்தப்பட்டு ஊருக்குப் போனதுக்கப்புறம் கலா சித்ராகிட்ட போய்... "என் பொண்டாட்டிய இனி திரும்ப வரவே முடியாத உலகத்துக்கு அனுப்பி வச்சுட்டேன். இப்ப என்னையக் கல்யாணம் பண்ணிக்கிறியா? 'ன்னு கேட்டேன்.

அவ அதிர்ச்சியாகி "அடப்பாவி... கொலையே செஞ்சுட்டியா? நான் உன்ன கல்யாணம் பண்ணினா என்னை யும் ஒரு நாளு வேறொருத்திக்காக கொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்?'னு என்னைய கழட்டி விட்டுட்டா. நீ இல்லாம வாழவே முடியாதுன்னு கெஞ்சி பாத்தும் அவ ஒத்துக்காததால மில்லுக்குள்ளேயே விஷம் குடிச்சுட்டேன். ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய் போட்டவங்க அதுக்கப்புறம் என்னைய வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னையக் கட்டிக்க சம்மதிக்க மாட்டேன்னு சொன்ன கலா சித்ராகிட்ட நான் கொலை செஞ்சத யாருகிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கினேன்.

திரும்பவும் சிவகிரிக்கே போய் செங்கல் காளவாய்ல வேலைக்கு சேர்ந்து அங்கயிருந்த ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆனேன். ஆனா ஒவ்வொரு வார திங்கள்கிழமை ராத்திரியும் என் மனைவி அமுதா கனவுல வந்து "ஏன் மாமா... இப்படி பண்ணீங்க. நான் என்ன தப்பு பண்ணினே'ன்னு கேட்பா. திடீர்னு கண்ணு முழிச்சுப் பார்த்துட்டு அழுவேன். மூஞ்சியெல்லாம் வேர்த்துப் போய் ஒவ்வொருநாளும் தூங்காமலேயே கிடப்பேன். மனசாட்சி தினமும் என்னையக் கொல்றத தாங்க முடியாமதான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு சரண்டராக வந்திருக்கிறேன்'' என்றவனை சென்னியாண்டவர் கோயிலுக்கு கொண்டு போன இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான டீமின் முன் அமுதாவை எப்படி தள்ளிவிட்டேன் என்று நடித்தும் காட்டினான் அழகர்சாமி.

இதையடுத்து கொலை வழக்கு, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறான் அழகர்சாமி. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நம்மிடம்... ""தான் கொலை செய்ததை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தவனை அவன் மனசாட்சி கொடுத்த துன்புறுத்தலினால்தான் செய்த தவறை ஒப்புக் கொண்டிருக்கிறான். அமுதாவின் பெற்றோர்கள் மகளைக் காணோம் என்று கொடுத்த புகாரை ரெண்டு மூணு வருஷத்தி லேயே திரும்ப வாங்கியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தகவலைச் சொல்லி விட்டோம். அவனை கோயிலுக்குக் கூப்பிட்டு போனபோது அந்த சின்ன கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்ததால் கிணற்றை அடையாளம் காட்ட மிகவும் சிரமப்பட்டான் அழகர்சாமி. தாசில்தாரின் அனுமதி வாங்கிக் கொண்டு கூடிய சீக்கிரம் கிணற்றை தோண்டப் போகிறோம். காமம் என்ற ஓர் உணர்வு ஓர் அப்பாவி பெண்ணை பலியாக்கியிருக்கிறது'' என்கிறார் வருத்தமாய்.
""அநியாயமா எம் பொண்ணக் கொன்னு போட்டு எவன் கூடயோ ஓடிப் போய்ட்டான்னு கதை கட்டி குடும்ப மானத் தையும் கெடுத்துட்டானே அந்த படுபாவி. அமுதா... நீ எங்கயோ எவன் கூடயோ வாழ்ந்துட்டு இருப்பேன்னு நெனச்சுட்டிருந் தோம். ஆனா இப்படி பண்ணிட் டானே...'' என அந்த சின்னக் கிணத் திற்கு முன்னால் வயிற்றில் அடித்துக் கொண்டு அழும் அமுதாவின் உறவு களுக்கு அப்பாவி பெண் அமுதாவின் எலும்பாவது காணக் கிடைக்குமா என்பது கூட சந்தேகம்தான்.

கொலைகார டாக்டர்கள்!

கொலைகார டாக்டர்கள்!


போலி டாக்டர்களை அரசு ஒரு பக்கம் தீவிரமாகக் களையெடுத்துவரும் நிலையில்... இன்னொரு பக்கம் ஒரு சில அரசு டாக்டர்களை எதிர்த்து அங்கங்கே பொதுமக்கள் ஆவேசப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக் கிறார்கள்.

சம்பவம்-1 :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் ஆவேசத்துடன் திரண்டிருக்க.. என்ன... ஏது என்று விசாரித்தோம். அப்போது கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளித்த சாந்தி ""நல்லா இருந்த என் வீட்டுக்காரர் ராமு... திடீர்னு ஜுரம் வர்றமாதிரி உடம்பு அனத்துதுன்னு சொன்னார். உடனே அவரை இங்க அழைச்சிக்கிட்டு வந்தேன். ரொம்ப அலட்சியமா எங்களைப் பார்த்த ஒரு நர்ஸ்... என் வீட்டுக்காரருக்கு ஒரு ஊசியைபோட்டு மூலையில் உட்காரவச்சிட்டுப் போனாங்க. கொஞ்ச நேரத்தில் அவருக்கு கைகால்கள் இழுக்க ஆரம்பிச்சிடிச்சி.. ஓடிப்போய் டாக்டர்களைத் தேடினா யாரும் இல்லை. அங்க இருந்த நர்ஸோ செல்போன்ல பேசறதிலேயே மும்முரமா இருந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டதுக்கு... "உன் புருஷந்தான் அதிசயமா? எல்லாரையும்தான் நாங்க பார்க்கணும். நல்ல டிரீட்மெண்ட் வேணும்னா பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியதுதானே'ன்னு ரொம்ப அலட்சியமா சொன்னாங்க. அவங்க வந்து பாக்கறதுக்குள்ள என் வீட்டுக்காரரோட உயிர் போயிடுச்சிங்க''’என்றார் கதறலாய். அங்கிருந்த அவரது உறவினர்களும் பொதுமக்களும் “""அரசு மருத்துவமனை வியாபார ஸ்பாட்டா மாறிடிச்சி. காசு இருந்தாத்தான் மதிக்கிறாங்க. ஏழைகள்னா அவங்களுக்கு இளக்காரமா இருக்கு. அந்த நர்ஸோட அலட்சியத்தால்தான் ராமுவின் உயிர் போயிருக்கு. அதனால் அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்''’என்றார்கள் காட்டமாய். மருத்துவமனை வட்டாரமோ துறை ரீதியான விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்கிறது.

சம்பவம்-2 :

தஞ்சைமாவட்டம் பெரப்படியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் 13 வயது மகள் பரணி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு தொண்டையில் கட்டி ஒன்று தோன்ற.. மகளை நாச்சியார்கோயி லில் இருக்கும் டாக்டர் அருள்மணியிடம் அழைத்துச்சென்றார். பிறகு? செல்வ ராஜே கண்ணீருடன் விவரிக்கிறார்...

""தொண்டையில் இருக்கும் கட்டியை ஆபரேசன் பண்ணி எடுத்துடலாம். அதுக்கு 20 ஆயிரம் ரூபா செலவாகும்னு டாக்டர் அருள்மணி சொன் னார். அவ்வளவு பணம் புரட்ட... வசதி இல்லைங்க, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பண்ணிக்கி றோம்னு சொன்னேன். அதுக்கு அவர்... "நீ கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்குதானே வரணும். அங்கயும் நான்தான் ஆப ரேசன் பண்ணனும்'னு மிரட்ட லாச் சொன்னார் காசு இல்லாத குத்தத்துக்கு என்ன பண்றதுன்னு... கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்கு எங்க பரணியைக் கூட்டிட்டுப்போனேன். அங்க இருந்த அருள் மணி டாக்டர்... ஆபரேசன் தியேட்டர் வாசல்ல வச்சி... "கடைசியாக் கேட்கறேன். ஒரு பத்தாயிரம் ரூபாயாவது கொடு. உன் பிள்ளையை குணமாக்கிடறேன்'னு சொன்னார். என் கிட்ட பணமில்லை சாமின்னு சொன்னேன். ரொம்பக் கோபமா ஆப ரேசன் தியேட்டருக்குள்ளே போன டாக்டர்... அடுத்த பத்தாவது நிமிசம் என் பொண்ணைக் கொன்னுட்டார். கேட்டதுக்கு ஆபரேசன் பெயிலியர்னு சொல்றார். என் மகளைக் கொன்ன டாக் டரை கூண்டில் ஏற்றாமல் விடமாட்டேன்''’என்கிறார் கதறிய படியே. உறவினர்களோ கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

சம்பவம்-3 :

புதுக்கோட்டை ஜி.ஹெச்.வாசலில் பரபரப்பான பரபரப்பு. ஒரு பெண்மணியின் சவத்தை வாசலில் கிடத்தியிருந்தனர். அது குறித்து நாம் விசாரித்தபோது... ""எங்க பெரியம்மா செல்லாயி... 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போது மயக்கமா இருக்கும்னு சொன்னாங்க. இங்க கூட்டி வந்தோம். டாக்டர் ஒரு ஊசியப் போட்டுட்டு நீங்க போகலாம் னார். எங்க பெரியம்மாவோ... "எனக்கு உடம்பு சரியா இல்லை. ஒருநாள் பெட்ல இருக்கேன்'னு சொல்ல... "அதெல்லாம் வேணாம் நீங்க கிளம்புங்க'ன்னு டாக்டர் வலுக்கட்டாயமா எங்களைத் துரத்திவிட்டுட்டார். பஸ்ஸ்டாண்டுக்கு வந்ததும், மறுபடியும் மயக்கமா இருக்குன்னு எங்க பெரியம்மா சொல்ல.. மீண்டும் ஆட்டோ பிடிச்சி ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இங்க வந்தா டாக்டர் இல்லை. இங்க இருக்கும் நர்ஸ் டாக்டர்ட்ட போன்ல யோசனை கேட்டுட்டு ஒரு ஊசியைப் போட்டாங்க. அவ்வளவுதான் ரெண்டே நிமிசத்தில் எங்க பெரியம்மாவின் உயிர் போயிடுச் சிங்க''’என்றார் செல்லையா பெருகிவழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே.

இந்த அலட்சிய மர ணங்கள் குறித்து பேராசிரி யர் முரளிதரன் இப்படி சொல்கிறார் ""அரசு டாக் டர்கள் தனியா கிளினிக் வச்சுக்கிட்டு பெரும்பா லான நேரம் அங்கேயே இருக்காங்க. அவங்களுக்கு பதில் நர்ஸ்கள் டிரீட் மெண்ட் கொடுக்கறாங்க. இந்த நிலையால்தான் மரணங்கள் அதிகமாகுது. இன்னும் சில டாக்டர்கள் ஆஸ்பத்திரி பக்கமே தலைவச்சிப் படுக்குறதில்லை. என்னைக்காவது ஒரு நாள் போய் கையெழுத்து மட்டும் போட்டுட்டு வந்திடுவாங்க. நாகை மாவட்டம் வில்லிய நல்லூர், தஞ்சை மாவட்ட கீழக்காட்டூர், பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்குப் போய்ப் பாருங்க. அங்க இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எல்லாம் எல்லா நேரத்திலும் பூட்டியே கிடக்கும். டாக்டர் களைக் கண்காணிச்சி... அவங் களை தனியார் மருத்துவமனை நடத்தறதைத் தடுத்தாதான் நிலைமை சீராகும். இல் லைன்னா... அலட்சிய மரணங் கள் தொடர் கதையாத்தான் இருக்கும்'' அவரது குரலில் கவலை வழிந்தது..

கொடுமைக்கார டாக் டர்களை சுகாதாரத்துறை கவனிக்குமா?

பத்து கோடி மாணவ - மாணவிகளுக்கு மனநலம்...


மாணவ - மாணவிகளின் மன நலம் காக்க வேண்டிய ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் அது. கலெக்டர் வள்ளலாரின் முயற்சியால், திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ. கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தப் பயிற்சி முகாமுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 292 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 195 ஆசிரிய-ஆசிரியை கள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

பயிற்சி முடிந்து வெளியே வந்த பழனியைச் சேர்ந்த ஆசிரியை செல்லம்மா ளிடம் ""பயனுள்ள பயிற்சிதானே?'' என்றோம்.

""வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் பால்ரஸல் தலைமையிலான குழுவினர்தான் எங்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்தார்கள். இப்படிப்பட்ட பயிற்சி எங்களுக்கு முன்பே கிடைத்திருந் தால் எத்தனையோ மாணவ-மாணவிகளை காப்பாற்றியிருப்போம்'' என்றார்.

""அப்படியொரு மாணவரைச் சொல்ல முடியுமா?'' என்றோம்.

""எங்க பள்ளியில் பயின்ற மாணவி ரூபா... அநாதை என்று சொல்லி, அவளைக் கூட்டி வந்து +1ல் சேர்த்தார் ஒரு பாதிரியார். 6 மாதத் திற்குப் பிறகு ஒருநாள், ஒரு அம் மாவிடம் உரிமை யோடு பேசிக் கொண் டிருந்தாள் ரூபா. விசாரித்தபோது... அந்த அம்மாதான் தன்னைப் பெற்றவர் என்றும், யாரோ ஒரு வருடன் ஓடிவிட்ட அம்மா இப்போது திரும்பி வந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு சொன்னாள். +2 தேர்வு நெருங்கிய சமயத்தில், ஒருநாள் தனியே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள் ரூபா. விசாரித்தேன். அம்மா இன்னொருவனோடு ஓடிவிட்டதாகச் சொல்லி அழுதாள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆறுதல் சொன்னோம். அடுத்த சில நாளில் ரூபா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். இன் றைக்கு நான் பெற்ற மனநலப் பயிற்சியை அப் போது பெற்றிருந்தால் ரூபாவுக்கு கவுன்சிலிங் கொடுத்திருப்பேன்'' -கலங்கிய விழிகளோடு சொன்னார் ஆசிரியை செல்லம்மாள்.

மாணவர் மனநலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற மற்றொரு ஆசிரியரான ஜம்புளியம் பட்டி சுரேஷ்பாபு, தான் பணியாற்றும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் குமாரின் நிலையை விவரித்தார்.

""தன் அம்மா மீது பேரன்பு கொண்ட மாணவன் குமார். திடீரென இறந்துவிட்டார் அவன் அம்மா. கொஞ்ச நாளில் பள்ளிக்கு வருவதையும் நிறுத்திவிட்டான். அவனுடைய நண்பர் களிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக. அம்மாவைப் பற்றிப் புலம்பியபடி தெருக்களில் அலைவதாகச் சொன்னார்கள். இப்போது எனக்குக் கிடைத்த பயிற்சி அப்போது இருந்திருந்தால் குமாரை மனநிலை பிறழாமல் காப்பாற்றியிருக்க முடியும்'' என்றார் சுரேஷ்பாபு.

மாணவர்களுக்கான மனநலத்திற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யும் எண்ணம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலாருக்கு எப்படி ஏற்பட்டது?

""ஏற்கனவே குழந்தைகளுக்கான மனநலத் திட்டத்தை தொடங்கி நடத்தியபோதுதான்... இளம் பருவ மாணவ-மாணவிகளின் மனநலம் குறித்து ஆய்வு செய்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் மாணவர்களில் 75 ஆயிரம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அத னால்தான் டாக்டர் பால்ரஸல் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தேன். ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த வழி செய்திருக் கிறேன்'' என்கிறார் கலெக்டர் வள்ளலார். திண் டுக்கல் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் மாண வர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால்...?

பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திய வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் பால்ரஸலிடம் கேட்டோம்...

""12 முதல் 19 வயது வரையிலான இளம் பருவ மாணவ-மாணவிகளில் சிலர் பாடத்தைக் கவனிக்காமல் தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அல்லது, சம்பந்தமே இல்லாமல் நோட்டில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கு மனநோய், மன அழுத்த நோய், மனச்சிதைவு நோய் உட்பட 7 வகையான நோய்கள் தாக்கியிருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவர்களை அப்படியே விட்டுவிட்டால் மனநலப் பாதிப்பு அதிகமாகிவிடும்.

உலக சுகாதார மைய ஆய்வுக் கணக்கின்படி இந்தியாவில் உள்ள 10 கோடி இளம் பருவ மாணவ- மாணவிகளை இப்படிப்பட்ட நோய்கள் தாக்கியுள்ளன. இவர்களுக்கு தொடக்கத்திலேயே மருத்துவ சிகிச்சை தந்து அந்த நோயைத் தடுக்கவேண் டும்.

மேலை நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு 2 மனநல டாக்டர்கள் இருக்கி றார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 2 மன நல டாக்டர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவக் கழகமும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில்தான் கலெக்டர் வள்ளலார் என்னைத் தொடர்புகொண்டு, இந்தச் சிறப்பு மனநலப் பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடு செய்தார். இந்தியாவில் முதல் சிறப்பு மனநல முகாம் இது'' -பெருமையோடு சொன்னார் டாக்டர் பால்ரஸல்.
மற்ற மாவட்டங்களிலும் கட்டாயம் நடத்தப்படவேண்டிய மனநல முகாம் இது.

கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாகிறார்


சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாக வாழ முடிவெடுத்துள்ளார்.



ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார்கள்.


இத்தம்பதிகளுக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.

தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

தீபா வரும் 20ம் தேதி கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.



மறுநாள் 21-ம் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறவிருக்கிறார்.

21-ம்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் உலகை சுற்ற தொடங்கி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



துறவுக்கோலம் பற்றி தீபா, ’’தனியாக வந்தோம்;கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை.



என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.

போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.

துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை. எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’’ என்று கூறியுள்ளார்.

Saturday, July 17, 2010

நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???


shockan.blogspot.com

இவ்வளவு அப்பட்டமாக தொலைகாட்சிகளில் காட்டியும்....நம்ம ஊரு ஆசாமிங்க அசராம பாதயாத்திரை....குரு பூஜை..
யாகம்....தங்க செருப்பு காணிக்கை என்று திரும்பவும் கிளம்பிவிட்டார்கள்......


இதில எங்கே தவறு இருக்கிறது....?


நமது மனதுக்குள் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று அடி மனதில் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது .... (15 minutes fame - எழுத்தாளர் சுஜாதா சொல்லித்தான் தெரியும் )


குடும்ப பெண்கள் அல்லது பணிபுரிபவர்கள் காலப்போக்கில் குடும்ப பொறுப்புகளால் தங்களது திறமைகள் முடக்கப்படுவதாக உணர்கிறார்கள்.... அவர்கள் போன்ற அம்மாஞ்சிகளாக பொருக்கி எடுத்து க்ரூப் சேர்ப்பதுதான் இந்த மாதிரி சாமியார்கள் செய்யும் வேலை... லீலை... இன்னபிற கன்றாவி எல்லாம்.....


இன்றைய தேதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள்.... சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான்.


இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக் ....அவர்களுக்கு என்று இணைய தளம் ....பூஜைகள் நேரடி ஒலி ஒளி பரப்பு...மாதா மாதம் பாப் பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு....Land rover car....Black berry cell phone with 3g connection. இவர்கள் சொற்பொழிவு அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்...


நம்ம பாப்பையா பட்டிமன்றதில் திரு . ராஜா அவர்கள் எப்படி காலத்திற்கு தகுந்தாற்போல நகைச்சுவை கலந்து பேசுவாரோ அப்படி...


இது போன்ற சாமியார் போலிகள் பொதுவாக படித்த இளைய தலைமுறைகளை கவர்வதில்லை.... அதனாலேயே பொது அறிவு ரொம்ப கம்மியாக இருக்கும் குடும்பப் பெண்களையும்.... சில அம்மாஞ்சி கணவர்மார்களையும் இது போன்ற அமைப்பு
கவர்ந்து விடுகிறது....


பொதுவா கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்... முயல் பிடிக்கிற .....................(பிராணி) எது என்று? கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்க.

அப்படியும் இந்த பால் வடியும் முகத்தை பார்த்து எப்படி பரவசம் வருகிறதோ ?
அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...


சில பேர் தவறான ஆளை பின்பற்றிவிட்டோமே என வருந்தி திருந்துகின்றனர்... சிலர் தன் தவறை நியாயப்படுத்தவே முயல்கின்றனர்.... அப்படி என்ன தவறு செய்து விட்டார்? ஹா ஹா ஹா
ரொம்ப சுலபமான கேள்வி தான்..


அவர் எங்களுக்கு யோகா முறைப்படி ... சக்கரங்களின் அமைப்பையும் ... உடல் கூறுகளின் இயக்கங்களையும்... ஆன்மாவை மேன்மை அடைய வழியும் சொல்லித்தரும் குரு.... என்று சொல்லி சமாளிகின்றனர்...


இதெல்லாம் நாங்க சக்திமான் சீரியல்லையே பாத்துடோமப்பு.... இந்த கதையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்...




விவேகானந்தரும், வள்ளலாரும், ரமண மகரிஷியும் வாழ்ந்த நமது தேசத்தில் ஆன்மிகத்தை தேடி ஏன் போலிகளிடம் போய் விழுகிறீர்கள்...?


நல்லது செய்ய நினைத்தால் ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கிறது....அதில் சேர்ந்து செய்யலாமே....


உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ...


இது போன்ற போலி ஆ-சாமிகள் ...குரு பூஜை ...சொற்பொழிவு...என்று சொல்லி ஊருக்கு மையத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்து ஒரு ஆளுக்கு தீட்சை அளிக்க 5000 ரூபாயில் இருந்து வசூலிக்கின்றனர் ....


இது போக இந்த சாமியாரின் கைப்பட்ட புத்தகம்....பேனா.... செடி...குத்து விளக்கு... மாணவர்கள் பரீட்சைக்கு எடுத்து செல்ல படம் , பேனா... மற்றும்


இந்த பால் வடியும் மூஞ்சி படம் பொறித்த டாலர் இதை பெண்கள் தாலி போல அணிய வேண்டுமாம்...தனது (கணவன் படத்தை கூட அணிந்திருக்க மாட்டார்கள்!) ...மணிக்கட்டில் அணியக்கூடிய செப்பு தகடு....என்று வியாபார லிஸ்ட் நீள்கிறது....


எங்கே செல்கிறீர்கள் ஆன்மிகத்தை தேடி....????


கொஞ்சமாவது பகுத்தறிவுன்னு இருந்தால் இதையெல்லாம் உங்கள் மனசிடம்
கேட்டு பாருங்கள்...


1) ஒரு சாமியாருக்கு எதற்கு குஷன் சோபாவும். ஆடம்பர கார்களும்?



2) ஒரு ஆன்மிகத்தை போதிப்பவன் எதற்கு அவனது படத்தை பொறித்த பொருட்களை அணிவிக்கவோ அல்லது பூஜை செய்யவோ சொல்ல வேண்டும்...?


3) ஒரு சினிமா நட்சத்திரம் போல எதற்கு இவ்வளவு விளம்பரம் ? ஆடம்பரம் ?


4) உங்களை எது ஈர்க்கிறது ..... புதிதாக எதையும் இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு அவன் கொடுத்துவிட போவதில்லை...பின்பு எதை தேடி இந்த போலிகளிடம் சிக்குகிறீர்கள்...?


உண்மையான ஆன்மிகம் எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இருக்கிறது.... இவையெல்லாம் உங்களை மூடர்களாய் ஆக்கி பணம் சம்பாதிக்கும் உத்திகள் அன்றி சத்தியமாய் ஆன்மீகமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.....

தலைக்கு 200! தி.மு.க. கூட்டணியில் தே.மு.திக.! சிரஞ்சீவி மூலம் விஜயகாந்த் புது மூவ்!




""ஹலோ தலைவரே... .... ரொம்ப நாள் ஓய்வுக்குப்பிறகு கொட நாட்டிலிருந்து ரிட்டன் ஆன ஜெ.வின் கோவை பொதுக்கூட்டம் தான் இந்த வார ஹைலைட்.''

""கண்டன ஆர்ப்பாட்டம்னுதானே ஜெயா டி.வி.யில் 10 நிமிசத்துக்கொருமுறை விளம்பரம் வந்துக்கிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் எப்படி கண்டனப் பொதுக்கூட்டமானது?''

""கோவையில் அ.தி.மு.க. தேர்ந்தெடுத்த இடத்தில், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிக்கிறதில்லைன்னு போலீஸ் சொல்லிட்டதால, ஜெ. டென்ஷனாயிட்டார். இவ்வளவு விளம்பரங்கள் செய்தபிறகு என்ன செய்வதுன்னு மாவட்ட கட்சி நிர்வாகத்தோடு ஆலோசித்ததில்தான் பொதுக்கூட்டம் நடத்துவதுன்னு முடிவானது. ஆர்ப்பாட்ட நேரமான மதியம் 2 மணிக்கே பொதுக்கூட்டம் நடத்தலாம்னு தீர்மானிக்க, ஜெ.வும் சரின்னு சொல்லிட்டார்.''

""கோவையில் பொதுக்கூட்டம்னாலும் தமிழகம் முழுக்க இருந்து ர.ர.க்களைத் திரட்டும் வேலை முதல்நாள் வரைக்கும் நடந்துக்கிட்டிருந்ததே...''

""ஆமாங்க தலைவரே... கூட்டத்தைக் கூட்டுறது தொடர்பா ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் ஸ்ட்ராங்கா உத்தரவு போடப்பட்டிருந்தது. சில மா.செ.க்கள் அப்படி இப்படின்னு ஆரம்பத்தில் அலட்சியமா இருந்தாங்க. ஆனா, மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 20 வண்டி களாவது ரெடி பண்ணி ஆட்களை அழைச்சிட்டு வரணும்னும், எத்தனை வண்டிகளை ரெடி பண்ணுறாங் களோ அதற்குத் தகுந்தபடிதான் கட்சியில் மதிப்பு மரியாதை இருக்கும்னும் மேலிடம் சொன்னதால அ.தி.மு.க மா.செ.க்களெல்லாம் கோவை பொதுக் கூட்டத்துக்காக வரிஞ்சி கட்டிட்டு இறங்கிட்டாங்க.''

""அ.தி.மு.க தொண்டர்களோட ரியாக்ஷன் எப்படி?''

""ஜெ கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு வந்தாகணும்னு கட்சிக்காரங்களை மா.செ.க்கள் கூப்பிட்டப்ப, உங்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு வேணும்ங்கிறதுக்காக எங்களை கூப்புடுறீங்களா... விலைவாசி உயர்வு திடீர்னா ஏற்பட்டிச்சி. இத்தனை நாளா அந்தம்மா ரெஸ்ட் எடுத்துட்டு இப்ப வந்து போராட்டம், பொதுக்கூட்டம்னு எங்களை கூப்பிட்டா, எங்க பொழைப்பு என்னாகுறதுன்னு தொண்டர்கள் பலரும் ரியாக்ஷன் காட்டியிருக்காங்க. அதற்கப்புறம் தான், சொகுசான வண்டி ஏற்பாடு, நல்ல பிரியாணி சாப்பாடு, தலைக்கு 200 ரூபாய்னு வசதிகளை அதிகப்படுத்தி ர.ர.க்களை மா.செ.க்கள் அழைச்சிட்டுப் போனாங்க. எல்லா செலவும் மா.செ.க்க ளோடது தான். காங்கிரஸ்-தே.மு.தி.க கட்சிகளோட கார்டன் பேசிக்கிட்டிருப்பதா தகவல் வர்றதால நல்ல கூட்டணி அமையும்னும், அப்ப தங்களுக்கு சீட் கிடைக்கும்னும் எதிர்பார்ப்போடுதான் அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தைச் சேர்த்தாங்க.''

""கூட்டணி நிலவரம் எப்படி இருக்குது? காங்கிரஸ் தரப்பிலிருந்து கார்டனுக்கு ஏதாவது சிக்னல் வந்திருக்கா?''

""அ.தி.மு.க தரப்பில் எல்லாவிதமான முயற்சி களும் நடந்துக்கிட்டிருக்குது. ஆனா, டெல்லியில்தான் காங்கிரஸ் தரப்பில் இதை சீரியஸா கவனிக்கக்கூடிய யாரும் இதுவரை கவனிக்கலை. டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் இது பற்றி விசாரித்தேங்க தலைவரே... அவங்க என்ன சொல்றாங்கன்னா, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ஜெ தோல்வியை சந்தித்தால் அதற்கப்புறம் அரசியலில் அவர் நீடிக்க மாட்டார். அதற்கப்புறம் நாங்களா, தி.மு.க.வாங்கிறதுதான் தமிழக அரசியலின் நிலவரமா இருக்கும். முக்கியமான ஒரு போட்டியே தேர்தல் களத்தில் இல்லாமல் போகக்கூடிய நிலையில், ஜெ.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து அவருக்கு ஏன் நாங்க அரசியல் வாழ்க்கை தரணும்னு கேட்குறாங்க.''

""தே.மு.தி.க.வுடனான கூட்டணி முயற்சிகள் எப்படி இருக்குது? கொடநாட்டில் ஜெ.வை பிரேமலதா சந்திச்சதா நியூஸ் வந்ததே?''



""இப்பவும் பல ஸ்கூப் நியூஸ் வந்துக்கிட்டுத் தான் இருக்குது. லேட்டஸ்ட் தகவலைச் சொல்றேன்... கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் தன்னோட கட்சிக்காரங்களையோ தமிழக காங்கிரஸ் பிரபலங்களையோ நம்பலையாம். சோனியாகிட்டே ஒரு முக்கியமான பிரமுகர் மூலமா தன்னோட நிலையை தெரிவிச்சிடுறாராம். அந்த பிரமுகர் யாருன்னா, விஜயகாந்த்தைப் போலவே நடிகரா இருந்து அரசியல்வாதியான பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவிதான். ஆந்திராவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால், சிரஞ்சீவியின் தயவு தேவைப்படுது. சமீபத்தில், சோனியாவிடம் சிரஞ்சீவி பேசியபோது, விஜயகாந்த் பற்றி பேசியிருக்கிறார்.''

""சோனியா என்ன சொன்னாராம்?''

""தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாங்களும் தி.மு.க.வும் கூட்டணியில் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முடியும்னு சோனியா சொல்லியிருக்கிறார். அதற்கு சிரஞ்சீவி, பா.ம.க இல்லாதபட்சத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற விஜயகாந்த் ரெடியா இருக்காருன்னு சொல்லியிருக்காரு. அ.தி.மு.க கூட்டணியிலும்தான் பா.ம.க இல்லை, அங்கே போவாரான்னு சோனியா கேட்க, அவரோட சாய்ஸ் காங்கிரஸ்தான். மேடம் தரப்பிலிருந்து சிக்னல் கிடைத்தால் மற்ற விஷயங்கள் பற்றிப் பேச விஜயகாந்த் ரெடியா இருக்காருன்னு சிரஞ்சீவி சொன் னாராம். சரி..பார்ப்போம்னு சோனியாவிட மிருந்து பதில் வந்திருக்குது. 30-ந் தேதி வரைக்கும் விஜயகாந்த்துக்கு மலேசியாவில் ஷூட்டிங். அதனால அங்கிருந்தபடியே சிரஞ்சீவியை அடிக்கடி காண்டாக்ட் பண்ணி கூட்டணி விஷயமா பேசிக்கிட்டிருக்காராம்.''

""ஒரே கூட்டணியில் இருந்தாலும் ஜெ.வை வைகோ சந்திச்சிப் பேசியது அபூர்வமான செய்தியா வெளியாகுதே?''

""ஜெ.தான் வைகோவை கார்டனுக்கு வரச்சொல்லி பேசியிருக்கிறார். கோவையில் ஆர்ப்பாட்டத்தை பொதுக் கூட்டமா செ.ம.வேலுச்சாமி மாத்திட்டாருன்னும் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடானதையும் பற்றி வருத்தத்தோடு வைகோகிட்டே பேசிய ஜெ, மீனவர் பிரச்சினைக்காக ஆளுங்கட்சியான தி.மு.க.வே ஆர்ப்பாட்டம் நடத்துது. நாம எப்படி ஸ்கோர் பண்ணுவதுன்னு கேட்டிருக்கிறார். அதற்கு வைகோ, சிங்கள ராணுவத்தின் அட்டகாசத்தைத் தாங்க முடியாம தமிழக மீனவர்கள் கொதிச்சுப்போயிருக்காங்க. முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதிக்கிட்டிருக்கிறார். நாம நேரடியாக வே பிரதமரை சந்திச்சி மனு கொடுக்கலாம்னு சொல்லி யிருக்கிறார். ஜெ.வுக்கு இந்த ஐடியா பிடிச்சுப்போச்சு.''

""டெல்லிக்குப்போய் பிரதமரை சந்தித்தால் அதுவும் கூட்டணிக்கான அச்சாரம்னு மீடியாக்களில் செய்தி வரும். ஜெ எதிர்பார்க்கிறபடி அ.தி.மு.க ஸ்கோர் பண்ணுமே?''

""அதனாலதான் உடனடியா சி.பி.எம் பிரகாஷ்காரத்தையும் சி.பி.ஐ.யின் டி.ராஜாவையும் தொடர்புகொண்டு மீனவர் பிரச்சினைக்காக பிரதமரை சந்திப்பது பற்றி சொல்லியிருக்கிறார். அவங்களும் சந்திப்புக்கு ரெடி. சனிக்கிழமை மாலைக்குள் பிரதமரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு ஏற்பாடுகள் நடந்தது. காஷ்மீர் பிரச்சினையில் சீரியஸா இருந்த பிரதமர், ஜெ.தரப்பின் அப்பாயிண்ட்மென்ட் பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்டிருக்கிறார். ப.சி.யோ, மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி கலைஞர் உங்களுக்கு எழுதியிருந்தார். அதன்படி, இலங்கை அரசை வலியுறுத்தி, மீனவர்களின் நலன் காப்பாற்றப்படும்னு நீங்களும் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கீங்க. இதற்கப்புறமும், மீனவர் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யணும்னுதான் இந்த சந்திப்பு முயற்சின்னு சொல்லியிருக்கிறார். இதையடுத்து, காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் பிஸின்னு சொல்லி, ஜெ.வுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அப்பாயிண்ட்மென்ட் தரலை.''

""இலங்கையைப் பற்றி பேசியதும், நடிகை அசின் சர்ச்சை ஞாபகத்துக்கு வருதுப்பா... தமிழ்த் திரையுலகத்தின் தடையை மீறி இலங்கையில் படப்பிடிப்பில் கலந்துக்கிட்டதோடு, ராஜபக்சே மனைவியோடு அசின் இருக்கும் படங்கள் வெளியாகியிருக்குதே..''

""தலைவரே... தமிழ்த்திரையுலகமும் தமிழ் உணர்வாளர்களும் வெளிப்படுத்திய எதிர்ப்பினால் இலங்கையில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்படவிழாவுக்கு அமிதாப் போகலை. அவருக்குப் பதிலா சல்மான் கான் போனார். அந்த சல்மான்கானோடுதான் இந்தி படத்தில் அசின் நடிக்கிறார். அந்த நெருக்கத்தில், தன் அப்பாவைக்கூட அசின் கண்டுக்கிற தில்லையாம். ஷூட்டிங்கிற்கோ அவுட்டோருக்கோ அப்பாவை அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு சல்மான்கான் போட்ட கண்டிஷனால், அப்பாவையே கழற்றிவிட்டுவிட்டு, சல்மானோடு பயணித்துக்கொண்டிருக்கிறார் அசின். சல்மானோடு இலங்கைக்குப் போய் ராஜபக்சே மனைவியை சந்தித் திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவரான அசின், தமிழ்த் திரையுலகினரின் கட்டுப்பாட்டையும் அவங்க உணர்வையும் கண்டுக்கலை.''

""இலங்கைக்கு ரஷ்யா உதவி செய்யக்கூடாதுன்னு உணர்வோடு போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தின் சீமான், வன்முறையைத் தூண்டி விடும்படி பேசினாருங்கிறதுக்காக அவரைத் தேடித்தேடி கைது செய்திருக்கிறதே போலீஸ்?''

""தன்னை யாரும் தேட வேண்டியதில்லைன்னு சொல்லி, திங்கட் கிழமையன்னைக்கு, சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளிக்கப்போவதாக சீமான் அறிவித்தார். இதையடுத்து, பிரஸ் கிளப் ஏரியாவில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டாங்க. அங்கே வந்த சீமானை போலீஸ்படை முற்றுகையிட்டு கைது செய்ததால் பெரும் பரபரப்பாயிடிச்சி. அவரை புழல் சிறையின் வாசல் வரைக்கும் கொண்டு போயிட்டு, அதன்பிறகு வேலூர் சிறைக்கு கொண்டுபோனதால கூடுதல் பரபரப்பு.''

""வன்முறையைத் தூண்டும் பேச்சுங்கிற வழக்கின் அடிப்படையில் இயக்குநர் சீமானை கைது செய்றதுக்காக இந்தளவுக்கு போலீசாரைக் குவித்து பரபரப்பை உண்டாக்கணுமா? பேசறதாலேயே வன்முறை உருவாயிடுமா?''

""நானும் அதைப்பற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட் டேன்.... விழுப்புரத்தில் ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், ஏற்கனவே பல கூட்டங்களில் சீமான் பேசிய பேச்சுகள்தான் குண்டு வைக்கத் தூண்டுதலாக இருந்ததுன்னு தெரியவந்திருக்குதாம். அது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடந்திடக்கூடாதுங்கிறதுக் காகத்தான் இத்தனை பாதுகாப் போடு கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாம்.''

Friday, July 16, 2010

'டீலுக்கு' வருவாரா நயனதாரா?


சன் டிவியின் கேம் ஷோக்களிலேயே பிரமாண்டமானதாக பேசப்பட்ட டீலா நோ டீலா, டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டவில்லையாம். இதனால் அப்செட் ஆகியுள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு சினிமா நடிகைகள் மூலம் புது மெருகூட்ட களம் இறங்கியுள்ளனர்.

நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி.

இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம். டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம்.

நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம்.இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம்.

இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயனதாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம்.

சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயனதாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.

டீலுக்கு ஒத்து வருவாரா நயனதாரா...?

Thursday, July 15, 2010

ஆக்டோபஸ்! சில சுவாரஸ்யங்கள்!


உலக கால்பந்து விளையாட்டில் முதல் முறை யாக இறுதிப் போட்டிக் குள் நுழைந்து உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது ஸ்பெயின்.

தென் ஆப்பிரிக்காவில் ஒருமாத காலம் நடந்த இந்த கால்பந்து திருவிழாவில் 32 நாடுகள் கலந்து கொண்டன. முதல்நாள் ஆட்டம் துவங்கிய ஜூன் 11 முதல் இறுதிப் போட்டி நடந்த ஜூலை 11 வரை ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப் பாகவும் த்ர்லிங்காகவும் ஆக்ரோஷ மாகவும் இருந்தன.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களான இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரே சில், ஜெர்மனி, அர்ஜென்டி னா ஆகிய நாடுகளில் இரண்டுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்று உலக ரசிகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் கணிக்கப்பட்டிருந்தன.

பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க் கப்பட்ட உலக ஜாம்பவான் நாடுகள் எதுவும் இந்த முறை சோபிக்கவில்லை. இத்தாலி (கடந்த வருட சாம்பியன்), இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் லீக் போட்டிகளிலேயே தோல்வியுற்று மைதா னத்தை விட்டு வெளி யேறின. காலிறுதிப் போட்டியில் பரிதாப மாகத் தோற்றுப்போனது பிரேசிலும் அர்ஜென்டினாவும். அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியோ அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் மண்ணைக் கவ்வியது. ஆனால், மூன்றாம் இடத்துக்கு நடத்தப்பட்ட போட்டியில் மிகக்கடுமையாக உருகுவேயிடம் போராடி வெற்றிபெற்று ஆறுதலை அடைந்தது ஜெர்மனி.

இப்படி... உலக ஜாம்பவான் நாடுகள் தோல்வி யடைந்தது ஒருபுறம் இருக்க... இந்தமுறை அதிக கோல்களை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் களான இங்கிலாந்து ரூணி, பிரேசில் ககா, அர்ஜென்டினா மெஸ்ஸி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ, ரொ னால்டோ உள்ளிட்டோர் ரசிகர்களை ஏமாற்றினர்.





ஒன்றரை லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த சாக்கர்சிட்டி மைதானத்தில் மிக உற்சாகமாகத் துவங்கியது இறுதிப்போட்டி. இந்தப் போட்டியை தொலைக்காட்சிகள் மூலம் உலக அளவில் 100 கோடி பேர் ரசித்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரபல பாப் பாடகி சாகிரா, தனது கவர்ச்சிக் குரலில் பாட்டுப்பாடி நடனமாடி விழாவை கோலாகல மாக்கினார்.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகள் ஆகி முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின், மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இரு நாடுகளும் தங்களது ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தின. நெதர்லாந்து வெஸ்ஸி, மார்க்வான், ராபென் அர்ஜென், ஸ்பெயினின் கார்லஸ் புயோல், டேவிட்வில்லா ஆகிய முன்னணி வீரர்கள் தங்களின் ஆக்ரோ ஷத்தை ஒவ்வொரு "கிக்'கிலும் காட்டினர். ஆனால் அதைவிட ஆக்ரோஷமாக பந்தை தடுத்து எதிர்முனைக்குக் கடத்திச் சென்றது எதிர் அணி.

இப்படி இரு அணிகளும் தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தின் முதல் பாதியில் யாருமே கோல் அடிக்க முடியவில்லை. முதல் கோலை அடிக்க 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்டது ஸ்பெயின்.

முதல் பாதியில் நிகழ்ந்த அதே ஆக்ரோ ஷத்தை இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர். ஆனாலும் இரண்டாவது கூடுதல் நேரம் முடிய மூன்று நிமிடம் இருக்கும் போது ஒரு கோல் அடித்து கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது ஸ்பெயின். இதனைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், உற்சாகம் என களை கட்டியது சாக்கர் சிட்டி மைதானம்.

ஒருமாத காலம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்யங் களும் த்ர்லிங்குகளும் நடக்க, எந்த நாடு வெற்றி பெறும் என முன்கூட்டியே கணித்த ஆக்டோபஸ் என்கிற கடல்வாழ் உயிரினம்தான் சுவாரஸ்யத் தின் உச்சம். ஆக்டோபஸை போல, சிங்கப்பூர் கிளி ஒன்றும் போட்டிகளின் முடிவுகளை கணித்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நெதர்லாந்தும் மோத... ஸ்பெயின்தான் ஜெயிக்கும் என்று ஆக்டோபஸும் நெதர்லாந்த் தான் ஜெயிக்குமென்று கிளியும் ஆருடம் சொல்லின. இதனால் ஆக்டோபஸா? கிளியா? யாரின் கணிப்பு வெற்றி பெறும்? என ரசிகர்களிடையே பந்தயம் வேறு நடந்தது.

ஆக்டோபஸின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் ஆக்டோபஸின் குணா திசயங்கள் குறித்து மத்திய கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதுநிலை மற்றும் பொறுப்பு விஞ்ஞானியும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான முனைவர் முகமத் காசிமிடம் கேட்டபோது... ""எலும்புகளே இல்லாத உயிரினம் ஆக்டோபஸ். தண்ணீரிலும் தண்ணீரை விட்டு வெளியிலும் சுவாசித்து வாழ ஆக் டோபஸினால் முடியும். இதன் உணவு என்று பார்த்தால் சின்னச் சின்ன மத்தி மீன்கள், ஆழி மீன்கள், நண்டுகள், கிளிஞ்சல்கள்தான். கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் ஐ-க்யூ கொண்டதாக ஆக்டோ பஸ் இருக்கிறது.

சென்ஸிட்டிவ்வான தசைகள் மூலம் தனக்கான உணவுகள் எங்கு, எந்த நேரத்தில் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் ஆக்டோபஸிற்கு உண்டு.

புத்தி கூர்மையுள்ள இந்த ஆக்டோபஸிற்கு பயிற்சி கொடுத்தோ மேயானால் அதன் புத்திசாலித்தனத்தை வெளிக்கொண்டு வர முடியும். அதுதான் உலக கால்பந்து விளையாட்டிலும் நடந்துள்ளது. அதற்கேற்ப ஆக்டோபஸ் கணிப்பு சரியாக இருக்கவும் சுவாரஸ்யம் மேலும் அதிகமாகி விட்டது. ஆக்டோபஸ் புத்திசாலியான சென் ஸிட்டிவ்வான கடல் வாழ் உயிரினம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது தீர்க்கதரிசி அல்ல. காகா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான் ஆக்டோபஸ் உட்கார வெற்றி நிகழ்ந்திருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ளும் 2 நாடுகளின் பெட்டிகளோடு கலந்துகொள்ளாத மற்ற நாடுகளின் பெட்டிகளையும் வைத்து வெற்றியைத் தீர்மானி என்று ஆக்டோபஸிற்கு உத்தர விட்டிருந்தால்... அப்போது தெரிந்திருக்கும் ஆக்டோபஸின் ஆற்றல். அப்படி சோதித்துப் பார்க்காத நிலையில், ஆக்டோபஸ் கணிப்பை ஒரு சுவாரஸ்யமாக பார்ப்பதே போதுமானது'' என்று சுட்டிக் காட்டுகிறார்.

அப்பா-தம்பி சிறையில்! என்ன சொல்கிறார் தீபா?


சென்னையை பரபரப்பில் மூழ்கடித்திருக்கிறது அந்தப் படுகொலை. படுகொலைக்குக் காரணம் தகாத உறவு என்கிறது காக்கிகள் தரப்பு. என்ன நடந்தது?

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் பல இடங்களில் கார்கோ கிளியரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகள் தீபாவையும் மகன் பிரதீக்கையும் தன் நிறுவனத்தின் டைரக்டர்களாக்கி தன்னுடனே வைத்திருந்தார்.

தீபாவுக்கு தினேஷ் என்பவரோடு திருமணமாகி கவ்ரவ் என்ற 4 வயது மகனும் உள்ள நிலையில்... கணவன்- மனைவிக்கு இடையில் பிரச்சினை உண்டாக... வேலையை டெல்லிக்கு மாற்றிக்கொண்டு அங்கேயே போய் செட்டிலாகிவிட்டார் தினேஷ். இதனால் தீபா சென்னை வேளச்சேரியில் அபார்ட்மெண்ட் ஒன்றில் தன் மகனுடன் தனியாக வசித்துவருகிறார்.

இந்த நிலையில் தீபாவிடம் டிரைவராக இருந்த பாபு என்பவர் கடந்த 30-ந் தேதி திடீரென காணாமல்போக... பாபுவின் அப்பா அன்பழகன்... அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். பாபுவைப் பற்றி போலீஸ் துருவ ஆரம்பித்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் டிரைவரான கண்ணன், தனது சகாக்களான விஜயகுமார், ஜான், செந்தில் ஆகியோருடன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராகி "நாங்கள்தான் பாபு வைக் கொன்று உடலைக் கொடைக்கானல் மலையில் இருந்து வீசினோம்' என்று அதிரவைத்தார்கள்.


எதற்கு இந்தக் கொலை என அவர்களிடம் காக்கிகள் துருவியபோது “""தீபாவின் டிரைவராக இருந்த பாபு... தீபாவை வசப்படுத்திவிட்டான். இந்த விசயம் தீபாவின் அப்பா கிருஷ்ண மூர்த்திக்கு தெரிந்ததால்.. தன் மகன் பிரதீக்கைவிட்டு பாபுவைக் கண்டிக் கச் சொன்னார். பிரதீக்கோ பாபு வைக் கண்டிக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். நாங்கள் பாபுவை சானடோரியத்தில் இருக் கும் கிருஷ்ணமூர்த்தியின் இன் னொரு அலுவலகத்துக்கு அழைத் துச் சென்றோம். அவனுக்கு மது வாங்கிக் கொடுத்தோம். தீபா வோடு பழகுவதை நிறுத்தும்படி கண்டித்தோம். அவனோ... "தீபா வை நியூடா விதவிதமா படமெல்லாம் எடுத்து வச்சி ருக்கேன்'னு திமிராப் பேசினான். அந்தப் படங் களைக் கொடுத்துடுன்னு கேட்டோம். முடியாதுன்னு சொன்னவனை அடிச்சோம். அப்பவும் அவன் திமிராவே பேச... உணர்ச்சிவசப்பட்டு... கத்தியால் அவனைக் குத்திக்கொன்னுட் டோம். கிருஷ்ணமூர்த்தியும் பிரதீக் கும் பாபுவைக் கண்டிக்கத்தான் சொன்னார்கள். நாங்கள் கொல் லும்படி ஆகிவிட்டது'' என்றார்கள் பதட்டமே இல்லாமல்.

இந்த நிலையில் தீபாவிடம் நாம்... "மகனைப் பறிகொடுத்த பாபுவின் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு? அதேபோல் கணவரைப் பிரிந்து வாழும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த உங்க அப்பாவும் தம்பியும் சிறைக்குப் போகவேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் உங்களின் தகாத உறவுதானே?' என்றோம்.

தீபாவோ ""தேவையில்லாத சந்தேகத்தின் விளைவு தான் இது. என் அப்பாவிடமும் தம்பியிடமும் பாபு வைச் சந்தேகப்படவேண்டாம் என்று சொன்னேன். அவங்க கேட்கலை. இதுக்கு கூலிப்படையையா அனுப்பறது?''’என்றார் ஆதங்கமாய்.

"உங்கள் கன்னத்தில் அறையும் அளவிற்கு அந்த பாபு உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே பார்த்திருக்கிறார் களே' என்றோம் அவரிடமே. தீபாவோ ""அதெல்லாம் இல்லைங்க'' என்றவர் லைனை உடனடியாக துண்டித்துவிட்டார்.

டெல்லியில் இருக்கும் தீபாவின் கணவர் தினே ஷைத் தொடர்புகொண்டு "உங்கள் மனைவிக்கும் உங்க ளுக்கும் என்ன பிரச்சினை? ஒரு உயிர் அநியாயமாகப் போவதற்கும்.... உங்கள் மாமனாரும் மைத்துனரும் சிறைக்கம்பி எண்ணுவதற்கும்.... உங்கள் மனைவியின் தகாத உறவுதான் காரணம் என்று கூறப்படுகிறதே?' என்றோம். குரல் கம்ம பேச ஆரம்பித்த தினேஷோ ""என் மனைவி தொடர்பான விவகாரங்களை நான் மறக்க விரும்பறேன். அதே சமயம் பெத்த அப்பாவும் கூடப்பிறந்த தம்பியும்... தகாத உறவு இருக்குன்னு சொல்லும்போது... இங்க இருக்கும் நான் என்ன சொல்ல முடியும்?'' என்று முடித்துக்கொண்டார்.

வழக்கை விசாரித்துவரும் டி.சி.பெரியய்யாவோ ""பொதுவா சென்னையில் நடந்த சில க்ரைம்களுக்கு கார் டிரைவர்கள் காரணமா இருப்பதை அறிய முடியுது. அத னால் டிரைவர்களை எப்படி நடத்தணும், எந்த அளவிற்கு அவங்களை வீட்டிற்குள் அனு மதிக்கணும், எந்த அளவிற்கு அவங்களை நம்பணும் என்பதை யெல்லாம்... அவங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்ட பிறகு தான் தீர்மானிக்கணும். இல் லைன்னா பல்வேறு பிரச்சினை களை சந்திக்கவேண்டியிருக்கும்'' என்றார் நம்மிடம்.

தகாத உறவுக்கொலைகள் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இத்தகைய போக்குகளுக்கு என்ன காரணம் என பிரபல மன நல மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம், நாம் கேட்டபோது ""ஒரு ஆணோ பெண்ணோ... வெளிநபர்கள்ட்ட ஒரு எல்லையோடதான் பழகணும். இந்த எல்லையை நாம எப்போ மறக்கறோமோ அங்கேயே சறுக்க ஆரம்பிச் சிடுவோம். அதேபோல் கணவன் -மனைவிக் குள் புரிதல் என்பது அத்தியாவசியத் தேவை. எவ்வளவு பிஸியா இருந்தாலும் மனம் விட்டுப்பேச.. அன்பைப் பரிமாற... தம்பதிகள் தங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கணும். எந்தப் பிரச்சினைகள் என்றா லும் பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும். முடியவில்லை என்றால் சங்கடப் படாமல் ஒரு உளவியல் ஆலோசகரை இருவரும் அணுகவேண்டும். இது தெரியாமல் சின்னசின்ன விவகாரத் துக்காக கோபித்துக்கொண்டு கணவனை மனைவியும், மனைவி யை கணவனும் விட்டுவிட்டு தனியாகப் போவது பிரச்சினைக் குத் தீர்வாகாது. அது மேலும் மேலும் சங்கடங்களைத்தான் உண் டாக்கும்''’’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்.

தகும் உறவுகளுக்கு வழி வகைகள் இருக்கும்போது... விபரீதங்களுக்கு வழிகோலும் தகாத உறவுகள் எதற்கு?

சேலம் மண்டலத்தின் ஒட்டு


அரசியல் கட்சிகளில் ரகசிய சந்திப்புகள்-பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிற தருணம் இது. யாருடன் யார் கூட்டணி சேரப்போகிறார்கள், எந்தெந்த விதத்தில் அணிமாற்றம் நிகழும் என அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு கட்சியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இன்னொரு கட்சியும், ஆட்சியில் பங்கு என மற்றொரு கட்சியும், இந்த முறை பெரிய கட்சிகளின் தூண்டிலில் சிக்கிவிடாமல், நமக்குரிய பங்கை வாங்கவேண்டும் என சிறிய கட்சிகளும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான், தமிழக அரசியல் நிலவரம் குறித்த நக்கீரனின் கள ஆய்வு முடிவுகள் ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சென்னை, வேலூர், கடலூர் மண்டலங்களைத் தொடர்ந்து, இந்த இதழில்.... சேலம் மண்டலம்.

கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி ஆறு தமிழகத்திற்குள்நுழைந்து, மேட்டூர் அணையில் தேங்கி, தமிழகத்தின் விவசாயத்திற்கு நம்பிக்கையும் உத்தரவாத மும் அளிக்கும் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியே சேலம் மண்டலமாக வரையறுக் கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 3 நாடாளுமன்றத் தொகுதி களைக் (சேலம்- கிருஷ்ணகிரி- தர்மபுரி) கொண்ட இந்த மண்டலத்தில் ஓமலூர், இடைப்பாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீர பாண்டி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

சேலம் மண்டலத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வன்னிய சமுதாயத்தினரே அதிகமாக உள்ளனர். அவர்களையடுத்து, தலித் மக்கள் உள்ளனர். எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தாலும் பொருளாதார நிலையில் இரு சமுதாயத்தினருமே இங்கு ஒரேயள வில் பின்தங்கியே இருப்பதை நேரடி யாகக் காண முடிகிறது. சேலம் மாவட் டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயத் தினர் பொருளாதார நிலையில் முன் னேற்றம் கண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு பேசும் சமு தாயத்தினர் 28% அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, கர்நாடக எல்லையை ஒட்டி இந்த மாவட்டம் இருப்பதால் கன்னடம் பேசுவோரும் அந்த மாநிலத்தில் அதிக முள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ள னர். சேலம் மண்டலத்தில் இஸ்லாமி யர்களின் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.

கட்சிகளைப் பொறுத்தவரை அ.தி.மு.கவும், தி.மு.கவும் இங்கு பலத்த போட்டியில் இருப்பதை அவற் றிற்கிடையிலான வாக்கு சத வீதத்தில் மிகக்குறைந்த இடைவெளி இருப் பதிலிருந்தே காண முடியும். எம்.ஜி.ஆர். மீதான பிடிப்புகொண்டவர்கள் இன்னமும் இரட்டை இலைக்கே வாக்களிக்கிறார்கள். வன்னியர், தலித், தெலுங்குபேசுவோர் என பல தரப்பிலும் இரட்டை இலைக்கான ஆதரவு உள்ளது. வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அ.தி.மு.க ஆதரவாளர்களாக உள்ளனர். எம்.ஜி.ஆர். பற்றுதலால் இறுக்கமாக உள்ள அ.தி.மு.க வாக்குவங்கியை ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறைகள் சிதைத்து வருவதாக சொந்தக் கட்சிக்காரர்களே வருத்தப் படுகிறார்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி இந்த 3 மாவட்டங்களிலும் அ.தி.மு.கவில் கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்க நபர்கள் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும், சிலர் ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்துவிட்டதும் அ.தி.மு.கவின் கோட்டை யாக விளங்கிய மண்டலத்தில் சிறிய ஓட்டையைப் போட்டிருக்கிறது.

தி.மு.கவின் பலம் என்பது வன்னியர் கள், தலித், இஸ்லாமியர்கள் பகுதிகளில் உள்ள வாக்கு வங்கிகள்தான். அதைத்தாண்டி, கடந்த 4 ஆண்டுகால செயல்பாடுகளால் கலைஞர் என்ற இமேஜ் அனைத்து தரப்பு மக்களிடமும் தி.மு.க.வின் செல்வாக்கை உயர்த்தியுள்ளதை நேரடியாக களத்தில் காண முடிகிறது. சில கட்சிக்காரர்கள் செய்யும் ரவுடீசம், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவை சேலம் மாவட்ட பொதுமக்க ளிடம் பெரியளவில் பயத்தை உருவாக்கி யுள்ளது. எனினும், கலைஞர் அரசின் நலத்திட்டங்கள் வீடு தேடி வருவதும், இன்னும் பல திட்டங்களை கலைஞர் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கையும் தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்களாக மாறுகின்றன.






வன்னியர்கள் நிறைந்துள்ள மண்டலம் என்பதால் பா.ம.க.வின் பலம் இங்கே சில இடங்களில் பெரிய கட்சிகளுக்கே போட்டியாக உள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளால் இப்பகுதியில் பா.ம.க. தலைமை கூடுதல் கவனம் செலுத்துகிறது. பா.ம.கவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் விஜயகாந்த்தின் தே.மு.தி.க வளர்ந்துவருவதை கள ஆய்வுகளின் போது காண முடிந்தது. கிராமப்புறத்தைச் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தே.மு.தி.க.வுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். தலித் வாக்குகள் தி.மு.க, அ.தி.மு.க பக்கமே அதிகள வில் இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பல இடங்களில் அமைப்புகள் உள் ளன. அருந்ததியர் சமுதாயத்தினரும் இந்த மண்டலத்தில் ஆங்காங்கே உள்ளனர். பா.ம.க வேட்பாளராக வன்னியர் சமுதாயத்தவர் கள மிறங்கும் தொகுதிகளில் அவருக்கு எதிராக தலித் ஓட்டுகள் ஒருங்கிணைவது இங்கு வழக்கமாக இருக்கிறது. பாரம்பரியமாக காங்கிரசுக்கு விழும் வாக்குகள் அதே நிலையில் தொடர்ந்து பதிவா கின்றன. சேலம் உருக்காலை, மேட்டூர் அனல்மின் நிலையம் போன்ற உற்பத்தித் தளங்களில் கம்யூனிஸ்ட் கொடி பறக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் அதிருப்திகள் நிலவினாலும் ஆளுந்தரப்பு மீதான அதிருப்தியை சாதகமாக்கிக்கொள்ளும் நிலை யில் பிரதான எதிர்க்கட்சி இல்லை என்பதே சேலம் மண்டலத்தின் நிலவரம். மலர் உற்பத்தி யும் காய்கறி விளைச்சலும் பெருகியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூ ஏற்றுமதி செய்வதற்கும் காய்கறி விற்பனையைப் பெருக்குவதற்கும் ஓசூரில் ஒரு ஏர்போர்ட் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஏர்போர்ட் வசதி இருந்தால் பெங்களூரு வரை பூக்களை ஏற்றிச் செல்லாமல் ஓசூரிலிருந்தே சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பூக்களை உடனடியாக அனுப்பி வைக்கமுடியும். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு காய்கறிகளை அனுப்பி வைக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

இன்று வரை அந்த கோரிக்கை கண்டுகொள்ளப் படவேயில்லை. மாம்பழ உற்பத்திக்குப் பெயர் பெற்ற சேலம் மண்டலத்தில், கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங் களில்தான் அதிகளவில் மாம்பழங்கள் விளைகின்றன. இவற்றைப் பதப் படுத்துவதற்கும் பயன்படுத்துவதற் கும் ஏற்ற வகையில் ஜூஸ் ஃபேக்டரி ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியளவில் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்படுகிறது. கிருஷ்மா என்ற பெயரில் இதை அமைக்கவேண்டும் என விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. எந்த அரசும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

சேலத்திலும் மேட்டூரிலும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கோ வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கோ எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. சேலம் மண்டலத்தில் பிரபல தனியார் தொழிற்கல்லூரி கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல இளைஞர்கள் தொழிற்படிப்பில் பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் உரிய வேலை வாய்ப்பு இல்லை.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. சேலத்தில் ஐ.டி. பூங்கா அமைக்கவேண்டும் என்கிற நீண்டநாள் கோரிக்கையும் நிறை வேற்றப்படாமலேயே இருக்கிறது.

பல கோரிக்கைகள் அப்படியே இருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டு களில் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை ஆளுந்தரப்பு முன்வைத்து மக்களின் செல்வாக்கை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. சேலத்தில் விரைவில் திறக்கப்படவிருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆளுந்தரப்பின் சாதனையாக முன் வைக்கப்படுகிறது. மத்திய அரசின் உதவியுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு காரணம் நாங்கள்தான் என பா.ம.க.வினரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அதுபோல, சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது தொடர் பாகவும் தி.மு.க-பா.ம.க இருகட்சிகளும் உரிமை கோருகின்றன.

சேலத்தில் புதிதாகத் திறக்கப்படவுள்ள கலெக்ட்ரேட் அலுவலகத்தை ஆளுந்தரப்பு தனது சாதனையாக முன்வைக்கிறது. கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் முதற்கட்டப் பணிகளில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை எழுப்பினாலும், ஆளுந்தரப்பு தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டப்பணிகளின் முன்னேற்றம், தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்பது ஆளுங் கட்சியின் கணக்கு.

ஒட்டுமொத்த மாக சேலம் மண்டலத்தில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில், விவசா யம்- தொழில்- வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெரி யளவில் முன்னேற் றம் இல்லை என் றாலும் தமிழகம் தழுவிய அளவிலான அரசின் இலவச திட் டங்களும், சேலம் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கானச் சிறப்பு திட்டங்களும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதக மான அம்சமாகவே இருக்கின்றன. ஆட்சி யில் நிறைவேற்றப் படாத திட்டங்களை வலுவாக எடுத்துச் சொல்லும் நிலையில் அ.தி.மு.க அணி இல் லை. பா.ம.கவின் ஜாதி ரீதியான செல்வாக்கும், தே.மு.தி.க.வின் தனிப் பட்ட வளர்ச்சியும் இம்மண்டலத்தின் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத் தக் கூடியனவாக இருக் கின்றன. இதனைப் பெரிய கட்சிகள் இரண்டும் எப்படிக் கையாளப் போகின்றன என்ப தைப் பொறுத் தே சேலம் மண்டலத் தில் சட்டமன்றத் தேர் தல் தீர்ப்பு அமையும்.

(வரும் இதழில் கோவை மண்டலம்)

தமிழகம்- ஆண்-பெண் ஆதரவு யாருக்கு?


தமிழகம் தழுவிய அளவில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில் ஆண்களின் வாக்குகளும் பெண்களின் வாக்குகளும் ஒரேவிதமாகப் பதிவாவதில்லை என்பது தெரியவருகிறது. ஆண்களிடம் சில கட்சிகளும், பெண்களிடம் சில கட்சிகளும் கூடுதல் செல்வாக்கைப் பெற்றுள்ளன. இந்த இடைவெளி அதிகளவில் இல்லை என்றாலும், தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது ஆண்கள் அதிகளவில் வாக்களிக்கிறார்களா, பெண்கள் அதிகளவில் வாக்களிக்கிறார்களா என்பதைப் பொறுத்து தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் நிகழும் என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்யமுடிந்தது.

மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஆண்கள் எந்த அளவு ஆதரவாக உள்ளார்கள், பெண்கள் எந்தளவு ஆதரவாக உள்ளார்கள் என்பது வரைபடங்களின் மூலமாக விளக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் வாக்குகளில் 36% தி.மு.கவுக்கு கிடைக்கிறது. அ.தி.மு.கவுக்கு 31% கிடைக்கிறது. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் பத்திரிகை படிப்போர், புதிய தொழில் வாய்ப்புகள் பெற்றோர் உள்ளிட்டோரின் ஆதரவே தி.மு.க.வை ஆண்கள் மத்தியில் முதலிடத்தில் நிறுத்துவதற்கு காரணமாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தனக்குரிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற எண்ணம் ஆண்களிடம் உள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் ஆண்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது அபிமானம் கொண்டவர் களைவிட சோனியா-ராகுல் போன்ற மேலிடத்து தலைவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களே அதிகம். நகர்ப் புறங்களில் தி.மு.க-அ.தி.மு.க இரண்டையும் விரும்பாத இளைஞர்கள், கிராமப்புறங்களில் சினிமாவசப்பட்ட இளைஞர்கள் ஆகியோரிடம் விஜயகாந்த்துக்கு ஆதரவு உள்ளது. பா.ம.க.வுக்கு அதன் சமுதாய வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஆதரவு உள்ளது. விடு தலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் கட்சிகள், சாதி சார்ந்த கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு மற்ற வை என்ற பொதுவான பிரிவுக்குள் அடங்குகிற அளவிலேயே உள்ளன.

பெண்கள் வாக்குகளில் அ.தி.மு.கவே 37% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெய லலிதாவின் தலைமையை ஆதரிக்கும் பெண்களாலும், எம்.ஜி.ஆர். கட்சி என்ற அடிப்படையில் இரட்டை இலைக்கு ஆதரவளிக்கும் பெண்களாலும் இந்த நிலவரம் தொடர்கிறது. தி.மு.க அரசின் இலவச கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாத நிதியுதவி, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி எனப் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளில் பெண்களிடம் தி.மு.க.வுக்கு செல்வாக்கை உயர்த்தியுள்ளது.

அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பெண்கள் ஆதரவில் இருந்த இடைவெளியை இந்தத் திட்டங்கள் பெருமளவு குறைத்துள்ளன. தேர்தல் நேரத்தில், தி.மு.க.வுக்கான பெண்களின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதை நமது ஆய்வின் போது கணிக்க முடிந்தது. சோனியா காந்தியின் தலைமையும் ராகுலின் வசீகரமும் காங்கிரசுக்கு ஆண்களை விட பெண்களிடம் கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருகிறது. விஜயாகாந்த்துக்கு கிராமப்புற பெண்களிடம் உள்ள ஆதரவு நகர்ப்புறத்துப் பெண்களிடம் இல்லை. பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், புதியதமிழகம், முஸ்லிம் அமைப்பு கள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் பெண்கள் அந்தந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்களே. மற்றவை என்பதில் ஆண்களைவிட பெண் களின் சதவீதம் கூடுதலாக உள்ளது. இதில், எந்தக் கட்சிக்கு வாக்கு என்று முடிவெடுக் காதவர்களும் முடிவைத் தெரிவிக்காத பெண்களும் அடக்கம்.

தொகுதியில் ஒரு கண்! -இது ப.சி. ஸ்டைல்!


எப்போதும் டென்ஷனோடு இருக்கும் நாட்டின் முக்கியமான துறைக்கு அமைச்சராக இருந்தபோதிலும், தனது தொகுதிப்பக்கம் வாரம் ஒருநாளாவது வந்து மக்களை சந்திப்பதில் மற்ற எம்.பி.க்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு குறைந்த பட்சம் எதாவது நன்மைகள் செய்துகொண் டிருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருக்கும் சிதம்பரம், கடந்த 3-ந்தேதி தேவகோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 25 "ரெப்கோ வங்கி' கிளைகளை நாடு முழுவதும் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

தேவகோட்டை எம்.வி.பி.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், இணைய தளம் மூலம் வங்கிக் கிளைகளை திறந்து வைத் தார். இதில் 3 மண்டல அலுவலகங்களும் அடங்கும். அங்கு பேசிய ப.சிதம்பரம், ""ரெப்கோ வங்கி மற்ற வங்கிகளைப் போல் இதுவரை செயல்படவில்லை. தாயகம் திரும்பியவர்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டது இவ்வங்கி. இந்த வங்கி ஒன்றுதான் உள்துறை அமைச்சகத் தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மற்றவையெல்லாம் நிதி அமைச்சக மூலமாகும்.

வங்கிகளில் பொதுமக்கள் கடன் வாங்கி, தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்க ளுடைய பொருளாதார நிலையும் உயரும். கந்து வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். கந்துவட்டிக்கு கடன் வாங்கி மாடு வாங்கினால், மாடு கட்டும் கயிறு கூட மிஞ்சாது. அதிகமான கடன்களை வழங்கினால்தான் வங்கிகளும் முன்னேற முடியும்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி ஆட்சியில், சுதந்திர இந்தியாவில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள் ளது. இதை மாற்றுக் கட்சிகள் கூட மறுத்துப் பேச முடியாது. இது எங்கள் சாதனை. அதனால் பொதுமக்களே, தைரியமாக கடன் வாங்கி வீடுகளை கட்டுங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். அதற்கு ரெப்கோ வங்கிக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார் ப.சிதம்பரம்.

ரெப்கோ வங்கியின் எம்.டி. பாலசுப்ரமணியன், ""சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 14 ஒன்றியங்களில் நடப்பாண்டில் மட்டும் 109 கோடி ரூபாய் கடனாகக் கொடுக்கவுள்ளோம். இதன்மூலம் 85 ஆயிரம் பேர் பயனடைவார்கள். அடுத்ததாக இத்திட்டம் காஞ்சிபுரத்திலும், கடலூரிலும் 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்'' என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ்காரர் ஒருவர் ""அப்பச்சி ரொம்ப விவரமானவர். தனது தொகுதியை தக்க வச்சுக்க, 85 ஆயிரம் குடும்பங் களுக்கு எதாவது ஒரு வகையில லோன் சென்ற டைய ஏற்பாடு செஞ்சதோட மட்டுமில்லாம, தன் னோட ஆதரவாளர்களின் தொகுதிகளுக்கும் கடன் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்காரு. ஓட்டு போட்ட மக்களுக்கு இது போதாதா?'' என்றார் சிரித்தபடி.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் காளையார் கோயில் ஒன்றியத்துக்கு சென்றவர், மறவமங்கலம், பில்லூர் கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் உரை யாடினார். ""தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யா விட்டாலும் பரவாயில்லை. இப்படி எங்கள பார்க்க வர்றதே சந்தோஷமா இருக்கு'' என்று கிராம மக்கள் சொல்லுமளவிற்கு ப.சி.யின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இருந்தன. ஜனங்களின் சைக்காலஜியை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் ப.சி.

அதேபோல் அவருடைய நடவடிக்கைகளில் எந்த பந்தாவும் இருப்பதில்லை. நக்ஸல்களால் குறிவைக்கப் படும் ஒரு அமைச்சர், எவ்வித பாதுகாப்பு கெடுபிடி, ஆடம்பரமில்லாமல் மக்களோடு மக்களாக செயல்படுவது வியப்பான விஷயம்தான்.

4-ந்தேதி சிவகங்கை அருகிலுள்ள இலுப்பகுடி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

""உங்கள் ஊருக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கட்டிடம்தான் இந்த ஊருக்கு முதல் அரசுக் கட்டிடம் என்று சொன்னார்கள். நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் ஒரு பங்கை செலுத்தினால் அரசு 2 பங்கை செலுத்துகிறது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி யுள்ளது. இதை காங்கிரஸ், தி.மு.க. தொண் டர்கள் கிராம மக்களுக்குப் போய் சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கிராம மக்களே, நான் உங்களிடம் காசு, பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்'' என்று "டச்சிங்'காகப் பேசினார்.

அடுத்து சிவகங்கை நகராட்சியில் சலவைத் தொழி லாளர்களுக்கு தனது எம்.பி. நிதியிலிருந்து டோபிகானா கட்டி திறந்து வைத்தார். இத்தனை நிகழ்ச்சிகளுக்கு இடையில் சிவகங்கை நகர தி.மு.க. செயலாளர் ஆனந்தின் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்று விட்டு வந்தார் ப.சி. எல்லாம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்.

மானாமதுரை ஒன்றியத்தில் கல்குறிச்சி, கீழபசளை, அன்னவாசல், அரிமண்டபம், மிளகனூர், குவளைவேலி, கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், கால்பிரவு, ராஜகம்பீரம் ஆகிய ஊராட்சிகளுக்கு மூன்று மணி நேரத்தில் சென்று மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி வந்தார். மனு கொடுத்த மக்களிடம் ஜாக்கிரதையாக, ""நீங்கள் பல பிரச்சினைகளுக்காக மனு கொடுத்துள்ளீர் கள். அனைத்தையும் உடனே செய்துவிட முடியாது. அனைத்தையும் படித்துப் பார்த்து, முடிந்தவற்றை படிப்படியாகச் செய்வேன்'' என்று சாதுர்யமாகப் பேசினார்.

முள்ளிக்குண்டு கிராமத்தில் தனது கட்சியின் தேவகோட்டை நகர சபை கவுன் சிலர் அன்பு என்பவருக்கு சொந்தமான பாலிடெக்னிக்கை திறந்து வைத்துப் பேசும் போது, ""தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு மாநிலத்தி லும் ஒரு மத்திய பல்கலைக்கழக மும் கொண்டு வருவதுதான் அடுத்த பணி'' என்றார்.

""2 நாள் டூரில் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை கிராமங் கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் வேற எங்கேயும் இப்படியொரு எம்.பி.ய பார்க்க முடியாது. சிலபேருக்கு எம்.பி. என்ற பதவியின் அர்த்தம் புரியாமல்தான் அலட்சியமாக இருக்கிறார் கள். அதுபோல் எங்கள் தலைவர் போல, "பங்சுவாலிட்டி'யை யாரிடமும் காண முடி யாது. பலபேர் பலவிதமா அவரை விமர் சனம் செய்தாலும், தொகுதி மக்கள் அனை வரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இன்னைக்கு சிவகங்கை மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்'' என்றார் காங்கிரஸ் பிரமுகர் துரை.கருணாநிதி.

ப.சிதம்பரத்தின் பாணியை தமிழகத்தின் மற்ற எம்.பி.க்களும் பின்பற்றலாமே! அப்போதுதான் தொகுதி மக்களுக்கு தாங்கள் ஓட்டுப் போட்டது பிரயோஜன மானதுதான் என்ற எண்ணம் வரும்.

புலிகேசியான புண்ணாக்கு!


"ஆ...'ன்னு அலறிக்கிட்டே காட்றாரு. ரத்தம் பீச்சிக்கிட்டு வருது. அந்த வயித்தெரிச்சலான நேரத்துலயும் "டப்'புனு பஸ்ஸே அலர்ற மாதிரி சிரிச்சுப்புட்டேன்.

"ஆஸ்பத்திரிக்கி வாங்கய் யா'னு ரெண்டு பேரு அவர கைத்தாங்கலா எறக்குறாக.

"அடப்பாவி... என்னோட வேதன ஒனக்கு சிரிப்பா இருக்கா?'ங் கிற மாதிரி அந்தப் பெரியவரு என்னய ஒரு பார்வ பாத்தாரு.

எனக்கு சங்ங்ங்கட்டமா போயிருச்சு.

அந்த பெரியவருக்கு அங்கன வீக்கம். களவாணிப் பயபுள்ளைக... தெரியாம பிளேடப் போட்டு ஆபரேசன் பண்ணிப்புடுச்சுக.

இது ரொம்ப வகுத்தெரிச்ச லான சம்பவந்தான். சிரிச்சிருக்கக் கூடாதுதான்.

ஆனாலும் நான் பண்ற காமெடிகள்ல இப்புடிப்பட்ட வகுத்தெரிச்ச சிரிப்பு அனுபவங் களையும் சேத்துக்கிட்டேன். எதிரிக என்னய துவம்சம் பண்ணி அந்தல சிந்தல பண்ணீருவாய்ங்க. நான் வலியோட தவிப்பேன். மக்கள் மனசுவிட்டு சிரிப்பாக.

புயல் மாதிரி ஒரு விஷயம் நம்மள நோக்கி வரும். அது என்னா ஏதுன்னு தெருஞ்சுக்கிறதுக்கு முன் னாடியே நம்மள ஒரு வழி பண்ணீ ரும். "இப்ப என்னடா நடந்துச்சு?'னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் நடந்து முடிஞ்சிரும். இந்த டைப்ல நான் நெறயா ஸீனு பண்ணீட்டேன். இதுவும் மதுரயில எனக்கு கெடச்ச அனுபவந்தான்.

அப்ப ஒதுக்குப் புறமா சாராயக்கட இருந்திச்சு. வௌôடுறதுக்கு நாங்க அந்த ஏரியாவ தாண்டித்தான் போவம்.

அன்னக்கி காலேல.... சால்னா கடக்காரரு வந்து அப்பத்தான் கடய தொறந்தாரு. வீட்லருந்து அவுச்சுக் கொண்டாந்திருந்த சுண்டல தாம்பாளத் துல கொட்டி பலகா மேல தூக்கி வச்சாரு. ரெண்டு பத்திக்குச்சிய எடுத்து கொளுத்தி சுண்டல் தட்டுக்கு மூணு சுத்து சுத்துனாரு.

‘"லொள்ளு'னு ஒரு சத்தம்.

கல்லாவ இழுத்து அதுக்கு பத்திக்குச்சியால சுத்தப் போனாரு.

"லொள்..லொள்லொள்'னு மறுபடி சத்தம்.

திரும்பிப்பாத்தாரு. தாவாங்கட்டய சொரிஞ் சுக்கிட்டே ‘"அடச்சீ நாயே'ங்கிற மாதிரி தெனா வெட்டா பாத்துப்புட்டு கல்லாவுக்கு பத்திக்குச்சிய சுத்திக்காமிச்சிட்டு பலகாவுல இருந்த இடுக்குல பத்திக்குச்சிய சொருகுனாரு. சேர்ல ஒக்காந்த மனுஷன் அப்புடியே கண்ணமூடி "மொய்ங் மொய்ங்'னு எதோ வாய்க்குள்ள மொனகுனாரு.

என்னத்த மொனகீருப்பாரு. "கடவுளே... எல்லா தீனிப்பண்டமும் வித்து நல்லா நெறயணும் கல்லா'னு ஆசாமியத் தவர எல்லாச் சாமியயும் கும்புட்ருப்பாரு.

அவரு கண்ணமூடி உருகிக்கிட்டிருக்க...

"வவ்வவ்வவ்... லொள்லொள்லொள்... கர்ரு...புர்ரு...உர்ரு'னு சும்மா சவுண்ட் எபெக்ட்டு ஜாஸ்தியாகுது.

என்னா நடக்குதுன்னே தெரியாம ஏரியாவ புழுதி மூடீருச்சு.

‘"நச்சுநச்சு'னு தும்மிக்கிட்டே ரெண்டுகைலயும் புழுதிய வெலக்கிக்கிட்டு நாங்க பாக்குறோம்.

ஏரியாக்குள்ள புதுசா வந்த லேடி டாக்க யார் டீல் பண்றதுங்கிற மேட்டர்ல லோக்கல் ஆம்பள நாய்களுக்குள்ள போட்டி. இந்த மேட்டர்ல அடுத்த ஏரியா ஆம்பள நாய் ஒண்ணும் வந்திருச்சு. இந்த எல்லப் பிரச்சனயில நடந்த களேபரம்தான் அது. புழுதி அடங்குனப் பின்னாடி பாத்தா... லேடி எஸ்கேப்பு. ஒருத்தனுக்கும் கெடைக்காமப் போச்சேனு தொங்கிப்போன மொகத்தோட வருசயா வாராய்ங்க ஏரியா நாய்ங்க.

அதுகள பாத்து கண்ல தண்ணி வர சிரிச்சுப்புட்டு... "சரி வாங்கடா போலாம்'னு திரும்புனா.... சால்னா கடக் காரரு ஒறஞ்சு போயி ஒக்காந்துருக்காரு. தட்டு நெறய்யா மல போல மகராசன் சுண்டல குவுச்சு வச்சிருந்தாரு. நிமிஷத்துல அதக் காணாம். பலகா மேல நாலு சுண்டலு... கல்லாக்குள்ள கைப்புடி சுண்டலு விழுந்து கெடக்கு. தட்டு தரயில கெடக்கு. எங்களுக்குன்னா வயிறு வலிச்சுப் போச்சு சிரிப்புல. ஒரு வழியா சிரிப்ப அடக்கிக்கிட்டு கிட்டக்க போனம்.

"எண்ணேங்...'

"என்னாடா ணொண்ணேங்...'னு எந்திரிச்சாரு. கண்ணெல்லாம் கலங்கிப் போயி இருந்துச்சு அவருக்கு.

"ஆஹா... இதுக்குமேல இங்ஙன இருக்க வேணாம்'னு கௌம்புனோம்.

ஒரு வழியா என்ன நடந்துச்சுனு யூகிச்சவரு "வக்கால்லி'னு ஆரம்புச்சு பேசுனாரு பாருங்க பேச்சு. கொஞ்சநஞ்ச மாவா பேசுனாருங்கிறீக. ஆம்பள நாயி, பொம்பள நாயி, அந்த நாயப் பெத்த நாயி, நாய வளத்தவிங்கனு போய் அந்தத் தெருவுல குடியிருக்கவங்க, இந்தத் தெரு வுல குடியிருக்கவங்கனு சகட்டு மேனிக்கி வஞ்சு தீத்தாரு.

"ஏண்டா வடிவேலு... தெருக்காரங் களையெல்லாம் ஏண்டா வையுறாரு?'னு கேட்டான் பிரெண்டு.

"கடய காலிபண்ணதுல வீட்டு நாய்க ரெண்டு மூனு இருந்துச்சு. வளத் தவய்ங்கள வஞ்சாரு. தெருநாயி தெருவு லயே வளருது. அதான் தெருக்காரவங் களயெல்லாம் திட்றாரு போல'னு நான் சொன்னேன். நான் குடிகாரனா சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் ‘"மாயி' படத்துல சாராயக்கடயில போயி லோலாயித்தனம் பண்ணுவேன்.

சால்னாகட கெழவி அப்பத்தேன் ஊதுபத்தி கொளுத்தி ஏவாரத்த நடத்தும். நான் போயி கெழவிகளோட பேத்திகள கையப்புடிச்சு இழுத்து வம்பு பண்ணி கடயில இருக்க பொருளயெல்லாம் அள்ளி எறிஞ்சிருவேன். கடசியில கோவை சரளா வந்து என்னய அட்டாக் பண்ணதும் அடுச்ச போதயெல்லாம் எறங்கி அப்பாவியா நிப்பேன். இந்த ஸீன எடுக்குறப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த எக்ஸ்பீரியன்ஸ சொல்லட்டா...

யப்பா... யப்பா... அதச் சொல்ற துக்கு முன்னாடி... மறந்தாலும் மறந்து போயிரும். அதனால ரயில்ல நான் பாத்த ஒரு போதை கிராக்கி மேட்ற சொல்லிப் புடுறேன்.

நான் நடிக்க வந்த ஆரம்ப காலங்கள்ல மதுரயிலருந்து ட்ரெயின் ஏறி தாம்பரத்துல எறங்கிருவேன். அங்கருந்து எலக்ட்ரிக் ரயில்ல கோடம்பாக்கம் வந்து எறங்கிருவேன். இப்புடி ஒரு தடவ எலக்ட்ரிக் ரயில்ல வரும்போது...

"எக்ஸ்கியூஸ் மீ' அப்டின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தரு ரயி லுக்குள்ள வந் தாரு. பாக்க பக்கா டீசண்டு. புல்கேண்ட புல்லா எறக்கிவுட்டு பேண்டுக்குள்ள சட்டயவுட்டு தொரகணக்கா வந்தாரு. செத்தநேரந்தேங் அந்த டீசண்டெல்லாம். சரக்க போட்டுட்டு ரயில்ல ஏறியிருக்காரு. இப்ப சரக்கு அவருக் குள்ள ஏறுது. அங்கிட்டும் இங்கிட்டும் பெனாத்துறாரு.

ரெண்டு மூணு ஸ்டேஷன் தாண்டீருச்சு.

ட்ரெயினுக்குள்ள ஒக்காந்திருந்தவுக நாலஞ்சிபேரு அடுத்த ஸ்டேஷன்ல எறங்கணு மேன்னு எந்திரிச்சி முன்னாடி வாராக. நின் னுக்கிட்டிருந்த நாலஞ்சிபேரு அந்த சீட்ட புடிக்க குறுக்கப் போறாக. ஓடுற ரயிலுக்குள்ள இப்புடி பரபரப்பா அங்கிட்டும் இங்கிட்டும் போயிட்டிருக்கவும் போத ஆசாமிக்கி ஸ்டே ஷன் வந்திடுச்சின்னு ஷாக்காயிருச்சுபோல.

அந்த மனுசன் என்னா செஞ்சாரு தெரியுமா?

"வெண்ணெய்ங்க ஸ்டேஷன் வந்தா சொல்லமாட்டாய்ங்க'ன்னு சொல்லிக்கிட்டே ஓடுற ரயில்ல இருந்து எறங்கிட்டாரு. "அய்யய் யோ...'ன்னு ஒரு சத்தம்.

என்ன பண்ணமுடியும்? அடுத்த ஸ்டேஷன்ல ரயில் நின்னதும் "சார்... சார்.. இந்த மாதிரிக்கு இந்த மாதிரி... இப்படி ஆயிப்போச்சு'ன்னு வெவரத்தச் சொல்லிட்டு வந்தோம்.

இப்புடி என் வாழ்க்கையில நெறையா குடிகாரர்களப் பாத்திருக் கேன். போத ஒண்ணுதான்னாலும் ஒவ் வொரு மனுசனும் செய்ற அலம்பலு ஒவ்வொரு விதமாத்தான் இருக்கும்.

இப்படி கண்ல காங்கிற போத கிராக்கிகட்டருந்து நெறைய விசயங் கள எடுத்திருக்கேன்.

"மாயி' படத்துல வர்ற சாராயக் கட சலம்பல சொல்லட்டா...

(சொல்லுவம்ல)

யுத்தம் 70 - நக்கீரன் கோபால்


தம்பி காமராஜ் சொன்ன தகவல் ரொம்பவும் எக்ஸ்க்ளூசிவ் தகவல். ஒரு மாநிலக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருப்பவரைப் பொடா சட்டத்தில் கைது செய்ய ஜெயலலிதா முடிவெடுத்திருக்கிறார் என்பது, சட்டநெறிமுறைகள் பற்றி அவர் எந்தவித கவலையும் படவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியது. தனக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்கவேண்டும், அதற்காகச் சட்டத்தை எப்படியும் பயன்படுத்தலாம் என்பதே ஜெ.வின் போக்கு.

பொடாவில் கைது செய்வதற்கான ப்ளான் உருவாகிக்கொண்டிருந்தபோது வைகோ அமெரிக்கா வின் சிகாகோ நகரில் இருந்தார்.

""என்ன காரணத்துக்காக வைகோ மேலே பொடா?'' -தம்பியிடம் கேட்டேன்.

""அண்ணே.. விடுதலைப்புலிகள் ஆதரவுங்கிற பேரில்தான் அவரைக் கைது பண்ண ப்ளான் போட்டி ருக்காங்க. உள்ளுக்குள்ளே வேற சில காரணங்கள் இருக்குது'' என்ற தம்பி காமராஜ், அது பற்றியும் சொன் னார்.

மத்தியில் அப்போது வாஜ் பாய் பிரதமராக இருந்தார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்து கொண்டி ருந்தது. இதில் தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை முக்கிய பங்காளிகள். தி.மு.க.வை வெளியேற்றிவிட்டு, அ.தி.மு.க. அந்த இடத்தில் உட்கார வேண்டும் என்பது ஜெயலலிதா வின் கணக்கு. ஆனால், ஏற்கனவே 1998-ல் ஜெ.வின் தயவில் ஆட்சியமைக்க வேண் டிய சூழல் ஏற்பட்டு, தன் அரசியல் வாழ்வில் அதுவரை கண்டிராத கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருந்தார் வாஜ்பாய். அதனால் அவர் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்க விரும்ப வில்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வர விரும்புவதை தி.மு.க..வை விடவும் வேகமாக அப்போது எதிர்த்துக் கொண்டிருந்தவர் வைகோ தான்.

ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் மத்திய அரசு அப்போது போட்டிருந்த வழக்குகள் சில நிதித்துறையில் இணையமைச்சர் பொறுப்பில் இருந்த செஞ்சி ராமச்சந்திரன் துறையுடன் சம்பந்தப்பட்டிருந்தன. அந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என அ.தி.மு.க. தலைமை விரும்பியது. வெவ்வேறு ரூட்டில் இது பற்றி பேசிப்பார்த்தும்கூட வைகோவும் செஞ்சி ராமச் சந்திரனும் இந்த விஷயத்தில் ஜெ.வுக்கு சாதகமாக நடக்கவில்லை.

""இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் இப்படி கெஞ்சிக்கிட்டிருக்கணுமா? நான் யாருன்னு காட்டுறேன்'' என்று கார்டனில் கோபத்தைக் கொட்டியிருக்கிறார் ஜெயலலிதா. பொடா சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு அ.தி.மு.க. ஆதரவு தந்தது. பாரதிய ஜனதா வுடன் நெருங்க வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்கு அடிப்படைக் காரணம்.

ராஜ்யசபா நியமன எம்.பி.யாகவும் இருந்த தமிழ்நாட்டுப் பத்திரிகைக்காரரான "சோ' இந்த விஷயத்தில் ஜெ.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் அனுமார் போல பாலம் போட்டுக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. உறவை வாஜ்பாய் விரும்பாததால், அத் வானி மூலமாக இந்தப் பாலம் போடும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பா.ஜ.க வுக்குள் எழுந்த உள்புகைச்சல் காரணமாக துணைப்பிரதமரானார் அத்வானி. அதன்பிறகுதான், பொடா சட்டம் வந்தது.

தூதுவர் மூலம் அத்வானிக்கு தகவல் அனுப்பினார் ஜெ. "உங்கள் அமைச்சரவையில் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. அதன் தலைவரை எங்கள் மாநில அரசு பொடாவில் கைது செய்ய முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் தலையிடாமல் இருக்கவேண்டும்' என்பதுதான் தூதுவரான பத்திரிகையாளர் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்ட செய்தி. அங்கிருந்து அப்ஜெக்ஷன் எதுவுமில்லை. இதன்பிறகுதான், வைகோவை பொடாவில் தள்ளும் நடவடிக்கைகள் வேகமெடுத்தன.

சிகாகோவில் இருந்த வைகோ, அங்கிருந்த படியே தனது கட்சியின் நிர்வாகிகளைப் போனில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டி ருந்தார். ""பொடாவில் தள்ளப்பட்டால் ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாது'' என்பதை கட்சிக்காரர்கள் கவலையோடு சொன்னபோது, ""நீங்க கவலைப்படவேண்டாம். நம்ம கட்சி வளர ஒரு நல்ல சந்தர்ப்பம், நமக்கு ஒரு நாள் கிடைக்கும்னு அடிக்கடி நான் சொல்வேனே.. அந்த சந்தர்ப்பம்தான் இப்ப வந்திருக்குது. இதை நாம சரியா பயன்படுத்திக்கணும். என்னை கைது செய்தால் கட்சி தீவிரமா வளரும். நீங்க யாரும் சோர்ந்து போயிடக்கூடாது'' என்பதுதான் கட்சிக்காரர்களுக்கு வைகோ சொன்ன தகவல்.



துணை பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதுபோல ஜெ செயல்பட்டுக்கொண்டிருக்க, அமெரிக்காவிலிருந்த வைகோ டெல்லி யில் பிரதமர், துணைபிரதமர், பா.ஜ.க. அமைச்சர்கள் பலரையும் தொடர்பு கொண்டு, "என்னைப் பொடாவில் கைதுசெய்தால் மத்திய அரசு தலையிட வேண்டாம். நான் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப் பேன்' என்று தனக்கேயுரிய உரத்த குரலில் சொல்லிவிட்டார்.

ஜூலை 11ந் தேதி. 2002.

அன்றுதான் சிகாகோவிலிருந்து மும்பை வழியாகச் சென்னை வருகிறார் வைகோ. அவரைக் கைது செய்வதற்காக முதல் நாள் இரவிலிருந்தே போலீஸ் காத்திருக்கிறது. மதுரை திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆத ரித்து வைகோ பேசினார் என்பதுதான் பொடாவில் அவரை உள்ளே தள்ளு வதற்கு ஜெயலலிதா அரசு முன்வைத்த காரணம். வைகோவுடன் இந்த கூட்டத் திற்கு பொறுப்பு வகித்த ம.தி.மு.கவின் 9 பேர் மீதும் பொடா வழக்குப் போடப் பட்டிருந்தது. அவர்களை ஜூலை 9-ந் தேதியே கைது செய்து சிறையி லடைத்தது காவல்துறை. நள்ளிரவில் சென்னையில் உள்ள ம.தி.மு.க.வினரின் வீட்டுக் கதவைத் தட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்படி 2000 பேர் கைது செய்யப்பட்டனர். ம.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்த எல்.கணேசனும் முன்னெச்ச ரிக்கை கைதுக்குத் தப்பவில்லை. ஆனாலும், போலீசுக்கு சிக்காமல் ம.தி.மு.க.வினர் பலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்திய அளவிலான மீடியாக்கள் அனைத்தும் குவிந்திருந்தன. வைகோவின் குடும்பத்தார், அவருக்குத் தேவையான துணிமணிகளுடன் விமான நிலையத்தில் காத்திருந்தார்கள்.

மாலை 5.10 மணி. மும்பையிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய வைகோவை உள்ளே சென்று கைது செய்ய போலீசார் நினைத்தனர். விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

குடும்பத்தினரிடம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பேசிவிட்டு, கைது பற்றி கவலைப் படாமல் வெளியே வந்த வைகோவிடம், பிடிவாரண்ட்டைப் போலீசார் காட்டினார்கள். சிரித்தபடியே அதைப் படித்துவிட்டு, கைதான வைகோ அங்கே திரண்டிருந்த மீடியாவிடம் ஆவேசமாகப் பேசினார்.

""கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகளான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரை தர்மபுரியில் பேருந்துக்குள் வைத்து உயிரோடு எரித்த சண்டாள ஆட்சி இது. சதிகாரியின் ஆட்சி இது. இந்தக் கைது நடவடிக்கையால் எங்கள் கொள்கைகளை விட்டுவிடமாட்டோம். தாயகத்தின் விடுதலைக் காகப் போராடும் விடுதலைப்புலிகளை ஆத ரிப்போம். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை மக்கள் சக்தியுடன் விரட்டியடிப்போம்'' என்றார் வைகோ. பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் எனப் பெரு மளவில் கூட்டம் திரண்டிருந்தது. வைகோ வைக் கைது செய்த போலீசார், அவரை மதுரைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின் வேலூர் சிறையில் அடைத்தனர்.

வைகோவும் அவருடன் 9 பேரும் பொடாவில் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில், ""ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று கோட்டையில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா தெரிவித்தார்.

ம.தி.மு.க.வின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் எல்லா இடங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த நிலையில், டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த கேபினட் அமைச்சர் கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டம் நடந்து முடிந்தது. அதிகாரிகள் வெளி யேறிய நிலையில் பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பேச ஆரம்பித்தார்.

""பொடாவில் கைது செய்யப்பட்ட கூட்டணிக் கட்சித் தலைவரை நம்மால் காப்பாற்ற முடியலை. பா.ஜ.க.வின் நிலை என்ன என்பது எனக்குப் புரியவில்லை.''

"புலிகளை அவர் ஆதரித்துப் பேசியது சரியா?'- என்று அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கேட்டிருக்கிறார்.

அதற்கு மாறன், ""பார்லிமெண்ட்டில் வைகோவை பார்த்து மணிசங்கரய்யர், "நீங்க ராஜீவைக் கொன்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்' என்றபோது, "நான் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்' என்றவர்தான் வைகோ. அப்போது நீங்கள் எல்லோரும் பார்லிமெண்ட்டில்தான் இருந்தீங்க. அப்போது தவறாக தெரியாத பேச்சு, இப்போது பொடா சட்டத்திற்குட்படு கிறதா? கூட்டணியில் உள்ள ஒரு தலைவ ரைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?'' என்று முரசொலி மாறன் குரலை உயர்த்திக் கேட்டிருக்கிறார்.

துணை பிரதமர் அத்வானி இதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார். ஏனென்றால், அவருக்குத்தானே தூதுவர் மூலம் வைகோ மீதான நடவடிக்கை பற்றி முதலிலேயே தெரியவந்தது! அந்த தூதுவரும் ஜெயலலிதாவும் நடத்திய ஆலோசனையில் அவர்களின் அடுத்த பொடா டார்கெட் யார் தெரியுமா?

-யுத்தம் தொடரும்

நரகத்துலயிருந்து தப்பிக்கணும்... -நயினார்!


"நயினார் நாகேந்திரன் ஒரு முடிவெடுத்து விட்டார்' என நெல்லை மாவட்ட ர.ர.க்களே அடித்துச் சொல்கிறார்கள். "காரணம் என்ன' வென்று கேட்டால் கூடை கூடையாகக் கொட்டு கிறார்கள்.

""ஜெ. பேரவைச் செயலாளர் நயினார். நெல்லை மாநகரச் செயலாளர் பாப்புலர் முத்தையா. ரெண்டுபேருக்கும் ஆகவே ஆகாது. நெல்லை புறநகர் மா.செ. செந்தூர்பாண்டியன் கூட இணக்கமாத்தான் இருந்தாரு. இப்ப அதுவும் கட் ஆயிடுச்சு. மா.செ. ஆகணும்னு நயினார் காய் நகர்த்துனாரு. எப்படித் தெரியுமா? டாக்டர் வெங்கடேஷ் இங்கே தென்காசி பாசறைக் கூட்டத்துக்கு வந்தப்ப, 25 லட்ச ரூபாய் செலவழிச்சு "கையில பணமே இல்லாத செந்தூர் பாண்டியனை விட நான் பெரியவன்'னு காட்டிக் கிட்டாரு. நயினாரின் இந்தச் செயல் செந்தூர் பாண்டியனை டென்ஷன் ஆக்கிருச்சு. இப்படி மாவட்டத்துல, கட்சில முக்கிய புள்ளிக ரெண்டு பேரும் பகையாளியா நெனைக்குற நயினாருகிட்ட யிருந்து இப்ப அவரோட ஆதரவாளர்களே கழண்டுக் கிட்டிருக்காங்க.

நயினாருகிட்ட அம்புட்டு நெருக்க மாயிருந்தாரு ஏ.கே.சீனிவாசன். இப்ப மாவட்ட மாணவரணி செயலாள ராகி அவரு ஒட்டுன போஸ்டர்ல நயினார் படம் மிஸ்ஸிங். நயினாரால பொறுப்புல யிருந்து தூக்கப்பட்ட சங் கர்நகர் பேரூர் செயலாளர் சங்கருக்கு ஒரே மாசத்துல திரும்பவும் பொறுப்பு வாங்கிக் கொடுத்துட் டாரு பாப்புலர் முத் தையா. சொந்த மாவட்டத்துல யே பேரவை செயலாள ரான நயினா ருக்குத் தெரியாம லேயே, பீர் முக மதுவை சங்கர்நகர் பேரவை நகரச் செயலாளரா அறிவிச்சிருச்சு தலைமை. "கட்சித் தலைமையும் தொடர்ந்து அவமானப்படுத்திக்கிட்டே யிருக்கு. கட்சித் தொண்டனும் மதிக்க மாட்டேன்கிறான். எதுக்கு இந்தக் கட்சி? இந்த நரகத்துலயிருந்து தப்பிக்கணும்'னு தனக்கு நெருக்கமானவங்ககிட்ட புலம்பிக் கிட்டிருக்காரு நயினார். இந்தப் புலம்பல் அழகிரிக்கு எட்டிருச்சு. அதான், இணைப் புக்கான பேச்சுவார்த்தை ஜரூரா நடக்கு. இந்த 2011-ஐ தி.மு.க.வுக்குப் போயி குஷியாக் கொண்டாடப் போறாரு நயினார்'' என்று கிசுகிசுக்கிறார்கள்.

""ஆமாங்க... மனோஜ் பாண்டியனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கிருச்சு கட்சி... அடுத்து ஆட்சிக்கு வர்றப்ப தன்னோட அப்பா பி.எச்.பாண்டியனை அமைச்சராக்க ணும்னுதானே அவர் ஸ்டெப் எடுப்பாரு. இந்தப் போட்டில நயினாரு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். எதுக்கு ரிஸ்க்? இருக்குற கொஞ்சநஞ்ச மானத்தோடு தி.மு.க.வுக்கு போறதுதான் பெட்டர்'' என்கிறார்கள் நயினாரின் விசுவாசிகள்.

என்னைப் போலவே நயினாரும் தி.மு.க.வுக்கு வருவாருன்னு கொளுத்திப் போட்ட தீப்பொறி ஆறுமுகத்திடம் நாம் பேசியபோது, ""தன்னை ராஜ்யசபா ஆக்க லைங்கிற வருத்தம் நயினார்கிட்ட இருக்கு. அவர் தி.மு.க.வுக்கு வருவார்'' என்றார்.

"கட்சி தாவும் மனநிலையில் இருக்கிறாரா?' என்றறிய நயினார் நாகேந் திரனின் கைபேசியில் தொடர்பு கொண்டபோது, காரியதரிசி தொடங்கி அவரது சொந்தபந்தங்கள் வரை நம் லைனுக்கு வந்தார்கள். ""பெரிய தொந்தர வாப் போச்சுன்னு அவரோட போனை எங்ககிட்ட கொடுத்துட்டாரு'' என்றார்கள். யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்ற நயினாரின் வைராக்கியமான இந்த மௌனம் அவர் ஏதோ ஒரு முடிவெடுத்து விட்டதையே உணர்த்துகிறது.

கேபிள் ஃபைட்! உயிருக்குக் குறி!

ஒசூரில் இரண்டு நபர்களுக்கிடையே நடந்துவரும் கேபிள் யுத்தம் உச்சகட்டத்தை எட்ட.... எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திக்திக்கில் இருக்கிறார்கள் ஏரியாவாசிகள்.

ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் சிட்டி என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் வேலு. இவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். இதேபோல் ஒசூரில் ஏ-1 என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் சூரி. இந்த இருவருக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டிதான் தற்போது தீவிரம் பெற்று பலரையும் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

""சூரியாவது சுண்டைக்காயாவது. இனி எவனும் சூரிக்கிட்ட கேபிள் இணைப்பைப் பெறக்கூடாது. மீறிப் பெற்றால்... விபரீதத்தைத்தான் சந்திக்கணும்னு ஒரு பக்கம் வேலு தரப்பு மிரட்டுது. இன்னொரு பக்கம் "வேலுவாவது வெங்காயமாவது.... இனி வேலுவிடம் இணைப்பை வாங்காதே. என்னிடமிருந்துதான் வாங்கணும். இல்லைன்னா நடக்கறதே வேற' என சூரித்தரப்பு மிரட்டுது. இப்படி இவங்க மாறி, மாறி மிரட்டிக்கிட்டு இருப்பதால் என்னை மாதிரி மற்ற கேபிள் ஆபரேட்டர்களும் பொதுமக்களும்தான் மிரண்டுபோய்க் கிடக்குறோம். இது சம்பந்தமா போலீஸுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு. இருந்தும் இவங்க ஆட்டம் அடங்கலைங்க''’என மிரட்சி விலகாமலே சொல்கிறார் அந்த கேபிள் ஆபரேட்டர்.

இன்னொரு கேபிள் ஆபரேட்டரோ ""சூரிமேல் கொலை வழக்கு உட்பட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஒசூர் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தணுங்கிற எண்ணத்தில் அவர் வேலுக்கிட்ட இணைப்பு வாங்கிய ஆபரேடர்களை மிரட்டறார். கொஞ்சம்கூட அவகாசம் தராமல்... அங்கங்கே கேபிள் வயரை 300 முதல் 500 அடிவரை அவர் ஆளுங்க துண்டிச்சிட்டுப் போயிடறாங்க. சன் கிட்ட ஒசூர் இணைப்பை வாங்கிய சூரி... அளவுக்கு மீறி இணைப்புக் கொடுத்ததால்... சன்.. தன் கேபிள் இணைப்பைத் துண்டிச்சிடிச்சி. இது தொடர்பா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடக்குது. இப்படி இந்த ரெண்டு தரப்பும் பண்ணி வருகிற அட்டகாசத்தால்... சமீபத்தில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கூட பார்க்க முடியாம ஒசூர் மக்கள் ரொம்பவே அவஸ்தைப் பட்டாங்க. விரைவில் ஒசூரே ரத்தக்களறியா ஆகுமோங்கிறதுதான் எங்க பயமே''’என்கிறார் பீதியோடு.

இவர்களின் யுத்தம் குறித்து ஒசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரிடம் நாம் கேட்டபோது “""இந்த இரண்டு தரப்புமே மாறி மாறி புகார் மனுக்களை எங்களிடம் குவித்து வருகிறது. எனவே ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக் கிறோம்'' என்று முடித்துக்கொண் டார்.

நாம் ஆர்.டி.ஓ செல்வராஜையும் விடாமல் துரத்திப்பிடித்தோம்.. அவர் நம்மிடம் ""சன் டி.வி.மீது சூரித் தரப்பு வழக்குப் போட்டிருக்கு. வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் பேச்சுவார்த் தைக்கு வருவோம்னு அவர் சொல்றார். வேலு தரப்பும்... வழக்குக்குப் பிறகு பேசுறதுதான் முறைன்னு சொல்லுது. அதனால் கோர்ட்டின் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம். அதற்கிடையே இவர்கள் வன்முறை போன்ற நடவடிக்கைகளில் இறங்கினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கடுமையாக நடவடிக்கை எடுப்போம்''’என்றார் எச்சரிக்கைக் குரலில்.

கண்ணப்பன் vs மூர்த்தி!

தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம் என தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா அறிவித் திருக்கும் நிலையில்.... இப்போதே சீட்டுப்பிடி யுத்தங்கள் சகல கட்சிகளிலும் ஆரம்பித்துவிட்டன. தொகுதி சீரமைப்புக்கு ஏற்றபடி தங்களுக்கு எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற கணக்குகளோடு... கட்சிப் பிரமுகர்களும் தொகுதிகளைக் குறிவைத்து சுற்றிவர ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்களின் வரிசையில் மாஜி அ.தி.மு.க. அமைச்சரான கண்ணப்பனின்... ஒட்டுமொத்த பார்வையும் மதுரை கிழக்குத் தொகுதியின் பக்கம் திரும்பியிருக்கிறது. தனது இளையான்குடி சட்ட மன்றத் தொகுதி வரும் சட்டசபைத் தேர்தலில் நீக்கப்பட்டுவிட்டதால்... 40 சதவீதத்திற்கு மேல் இருக்கும் தனது யாதவர் சமூகம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்... மதுரை கிழக்கின் மீது காதலாகிவிட்டார் கண்ணப்பன்.

இதற்காக சிவகங்கை வீட்டைக் காலி செய்துவிட்டு.. மதுரை ஐயர் பங்களா பகுதியில் ஒரு மெஹா சைஸ் வீட்டை விலைக்கு வாங்கி.. அதில் குடியேறியிருக்கிறார். கட்சியில் யார் யார் சீட் கேட்பார்கள் என லிஸ்ட் எடுத்து இப்போதே அவர்களைத் தன் ஆதரவாளராக ஆக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டார். ஒதுங்கி இருக்கும் ர.ர.க்கள் மற்றும் யாதவ சமூகப் பிரமுகர்களைத் தினசரி தேடித்தேடி சந்தித்துப் பேசி வரும் கண்ணப்பன்... தொகுதிக்காரர்கள் வீட்டில் நடக்கும் அத்தனை நல்லது கெட்டது களிலும் கலந்துகொண்டு... தொகுதி மக்களை வசீகரித்து வருகிறார். சேடப்பட்டி மாற்று முகாம் போய்விட்டார். காளிமுத்துவை இயற்கை அழைத்துக்கொண்டுவிட்டது. வளர்மதி ஜெபராஜோ கட்சியினர் மத்தியிலேயே தனது ஒளிவட்டத்தை இழந்து நிற்கிறார். இந்த நிலையில் தனக்கென்று ஒரு இமேஜை வளர்த்து வைத்திருக்கும் கண்ணப்பன்... இங்கே வந்து அரசியல் செய்வது எங்களுக்கெல்லாம் தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது''’என்கிறார்கள் லோக்கல் ர.ர.க்கள்.

இதேபோல் சூரியத்தரப்பைச் சேர்ந்த மா.செ.மூர்த்தியும்... தனது சோழவந்தான் தொகுதி நீக்கப்பட்டு அது சமயநல்லூர் தனித்தொகுதியாக நிறம் மாறுவதால்... மதுரை கிழக்கையே குறி வைத்திருக்கிறார். கண்ணப்பன் பாணியில் இவரும் ஐயர் பங்களா பகுதிக்கு குடியேறி... பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கிறார்.. அழகிரியை அடிக்கடி விழாக்களுக்கு அழைத்து கட்சிக்காரர்களையும் தொகுதிவாசி களையும் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இருக்கும் மூர்த்தி... கண்ணப்பனுக்கு சகல விதத்திலும் ஈடுகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே நிலவுகிறது. இதற்கிடையே அழகிரியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் என உடன்பிறப்புக்களால் கருதப்படும் வழக்கறிஞர் சந்திரசேகர்... "எங்கள் யாதவ வாக்குகள் கண்ணப்பனுக்குப் போகாமல் இருக்க... எனக்கு சீட் கொடுங்கள்' என அழகிரியிடம் மனு போட்டுக்கொண்டிருக்கிறார்.

பலரும் மதுரைக் கிழக்கைக் குறிவைத் தாலும்... தற்போதைய நிலையில் இலைத் தரப்பில் மாஜி கண்ணப்பனும்... சூரியத் தரப்பில் மா.செ.மூர்த்தியும் தொகுதியில் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆந்திராவில் கொத்தடிமைகளாக தமிழர்கள்!

""ரொம்ப கொடுமைங்க. ஆந்திராவில் கொத்தடிமைகளா இருந்த... நம்ம தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர்... கொடுமைகள் தாங்காம.. அங்கிருந்து தப்பிச்சி... பசிபட்டினியோடு வந்திருக்காங்க. அதிலும் நடந்தே வந்திருக்காங்க. இந்த விசயத்தை அரசு எந்திரங்களின் கவனத்துக்கு நக்கீரன்தான் கொண்டுபோகணும்''’-நம்மைத் தொடர்புகொண்ட திருவண்ணா மலை டைஃபி தோழர் ஒருவரின் வேண்டுகோள் தகவல் இது.

அந்த நள்ளிரவில் திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே துவண்ட நிலையில் இருந்த அவர்களை நாம் சந்தித்தோம். முதியவர் கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என 19 பேர் இருந்தனர். அவர் களின் கண்களில் பசி மயக்கம். முகத்தில் வாட்டம். உடலில் பலவீனம்.

களைப்பு விலகாத நிலையில் இருந்த அவர்களில்... ராசுவும் ராமுவும் அந்த கொடுமையான ஆந்திர அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினர்.

""நாங்க திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் இருக்கும் பொய்யாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 25 நாளைக்கு முன்னாடி... எங்க ஊருக்கு வந்த மதுரைக்காரப் பொம்பளை ஒருத்தி... "ஆந்திர மாநில சித்தூர்ல மாம்பழ ஜூஸ் பேக்டரிக்கு ஆள் கேட்கறாங்க. தலைக்கு 5 ஆயிரம் ரூபா அட்வான்ஸும் நாள் கூலியா 200 ரூபாவும் தருவாங்க. உங்களுக்கெல்லாம் வேலைக்கு வரச் சம்மதமா'ன்னு கேட்டா.

இதை நம்பி எங்க ஊரைச் சேர்ந்த 35 பேர் அவகூட கிளம்பிப்போனோம். "செக் இன்னும் வரலை. அதனால அட்வான்ஸை சித்தூர் போய் வாங்கித் தர்ரேன்'னு அந்த பொம்பளை சொன்னாள். இதன்பிறகு சித்தூர்ல இருந்து 20 கி.மீ.தூரத்தில் இருக்கும் முதுவலந்தூர் என்கிற கிராமத்தில் அருண்குமார்ங்கிறவர் நடத்தும் அந்த ஜூஸ் கம்பெனியில் எங்களைக் கொண்டுபோய் அவள் சேர்த்துவிட்டாள். போனதுமே மாட்டுக்கொட்டாய் மாதிரியான இடங்கள்ல பத்துப் பத்துபேரா பிரிச்சி எங்களைத் தங்க வச்சாங்க.

அந்தக் கம்பெனியில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 700 பேர் கொத்தடிமைகளா இருந்தாங்க. அவங்களோட எங்களையும் கொத்தடிமைகளா ஆக்கிட் டாங்க. மாம்பழ லோடுகளை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை லாரியில் இருந்து இறக்கும் வேலைதான் எங்களுக்கு. கடுமையா வேலை செய்தும் 2 வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்தாங்க. கொஞ்சம் அசந்தாலும் திட்டி அடிப்பாங்க.

அட்வான்ஸும் கொடுக் காம நாள் சம்பளமும் கொடுக்காம அவங்க கசக்கிப் பிழிஞ்சு எங்களை சக்கையா ஆக்கியதால்... இனியும் தாங்க முடியாது... இதுவரை வேலை செஞ்சதுக்கான சம்பளத்தை யாவது கொடுங்கைய்யா... ஊருக்குப் போய்சேரறோம்னு கேட்டோம். தொடர்ந்து வேலை பார்த்தாத்தான் சம்பளம் தருவோம். இல்லைன்னா சல்லிப் பைசா தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. இவங்கக் கிட்ட எதுவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சதால் எங்கள்ல 15 பேர் செல்போன், வாட்சையெல் லாம் வித்துட்டு ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

எதுவும் இல்லாத நாங்க... அங்க இருந்தே பசியோட... நடந்தே ஊர் திரும்பிக்கிட்டு இருக்கோம். திருவண்ணாமலை யைச் சேர்ந்த 50 பேரும் அங்க கொத்தடிமையா சிக்கிக்கிட்டு இருக்காங்க. அவங்க அட்வான்ஸ் வாங்கிட்டு வேலையில் சேர்ந்ததால் அவங்களை அந்தக் கம்பெனிக்காரங்க விடமாட் டேங்கறாங்க. அவங்களை விரைவா மீட்கலைன்னா... அவங்க தற்கொலைதான் பண்ணிக்குவாங்க''’என்றவர்கள்... ""அங்க இருந்து தப்பிப்போம்னு நினைச்சுக்கூட நாங்க பார்க்கலை. அதே சமயம் எங்க ஊர்ப்போய்ச் சேர்றவரை... எங்க உடம்பில் உயிர் இருக்குமான்னு தெரியலைங்க. அந்த அளவுக்கு களைச்சிப் போய்ட்டோம். உடம்பில் தெம்பே இல்லை''’என்றார்கள் கண்ணீர் வழிய.

அவர்களது ஊரைத் தொடர்புகொண்டு அவர்களது நிலைமையைச் சொல்ல... பதறிப்போன பொய்யாம்பட்டிக் காரர்கள்... அவர்களை அழைத்துக்கொள்ள வேனோடு வருவதாகச் சொன்னார்கள். .சொன்னபடியே வந்து அழைத்துச்சென்றனர்.

டைஃபி பிரமுகரான ரகுமான் ""ஆந்திராவில் கொத்தடிமைகளாக சிக்கியிருக்கும் எங்க திருவண்ணாமலைக்காரர் களை மீட்க மாவட்ட நிர்வாகம்தான் முயற்சியெடுக்க வேண்டும். மேலும் அங்க இருக்கும் தமிழக கொத்தடிமைகளை மீட்கவும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கணும்'' என்கிறார் எதிர்பார்ப்போடு.

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் பிழைப்புத் தேடிப் போன நம் தமிழக பாட்டாளிகள்... அங்கு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. ரத்தம் உறியும் அட்டையாக இருக்கும் அந்த ஆந்திரக் கம்பெனி மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இதுகுறித்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் கூறியபோது... முழு விபரங் களையும் கேட்டுக் குறித்துக் கொண்டவர், ""என் மாவட்ட மக்கள் ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருப்பதை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இப்பொழுதே காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசுகிறேன். உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மீட்கப்படுவார்கள்'' என்றார் மிக உறுதியாக.

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு! -ராமதாஸ் முடிவு!


shockan.blogspot.com

கட்சி வேண்டாம் சங்கமே போதும் என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம் டாக்டர் ராமதாஸ். பா.ம.க.வை வழிநடத்தும் பொறுப்பை இனி டாக்டர் அன்புமணி கவனிப்பார் என்கிறார்கள் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள். கடந்த 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இந்த அதிகார மைய மாற்றத்தை உணரமுடிந்தது.

மாநில அளவிலான இந்தப் பொதுக்குழுவின் போது புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோ.க.மணி 7-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளில் மாநில அளவில் தொடங்கி ஒன்றியம் வரை அத்தனை பொறுப்புகளிலும் புதிதாக பதவியேற்றவர்களில் 80 சதவீதம் பேர் டாக்டர் அன்புமணியின் நேரடி அறி முகத்தில் இருப்பவர்கள்தானாம். பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்ட பேனர்களில் தொடங்கி பல இடங்களி லும் அன்புமணியே பிரதானமாக தெரிந்தார். பொதுக் குழுவில் டாக்டர் அன்புமணி பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் கைதட்டல் சத்தம் அதிகமாக இருந்தது.

பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளாக பொறுப் பேற்ற அத்தனை பேரும் அன்புமணிக்கான முக்கியத் துவத்தை அதிகமாகவே கொடுத்தார்கள். ஏழாவது முறையாக தலைவரான கோ.க.மணியும் மத்திய அமைச்சராக அன்புமணி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டு அவரைப் போல திறமையான நிர்வாகி யார் இருக்கிறார் என கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆர். அழைத்தும் போகாத தன்னுடைய விசுவாசத்தையும் அந்த மேடையில் மீண்டும் ஒருமுறை பதிவு செய்தார் மணி.

அன்புமணி பேச்சின்போது வழக்கத்தை விட கொஞ்சம் வேகம் தெரிந்தது. புதிய நிர்வாகிகளை தேர்தலுக்கு உசுப்பிவிடும் விதத்தில் பேசினார். ""ஒருசில கட்சிகளைப் போல அண்ணன் கோஷ்டி, தம்பி கோஷ்டி என்றெல்லாம் நம்முடைய கட்சியில் இல்லை. இங்கே எல்லாம் அய்யா கோஷ்டிதான்'' என்ற அன்புமணி, ""வரும் தேர்தலில் புதிய நிர்வாகி கள் எல்லோரையும் அரவணைத்து கடுமை யாக உழைக்க வேண்டும். பென்னாகரம் ஃபார்முலா படி நாம் உழைக்க வேண்டும். நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'' என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியபோது அரங்கம் அதிர கைதட்டி அவரின் பேச்சை வரவேற்றார்கள் புதிய நிர்வாகிகள்.

டாக்டர் ராமதாஸ் பேசிய போதும், இனி கட்சியின் முக்கிய முடிவுகளை அன்புமணிதான் எடுப்பார் என்பதை உணர்த்தி னார். ஒரு கட்சி செல்வாக் கோடு இருக்க இளைஞர்கள் அவசியம். இந்த கட்சி இளைஞர் இயக்கமாக மாறவேண்டும்' என்றெல்லாம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியவர் "பதவி, பொறுப்பு போனவர்கள் இதற்காக கவலைப்படக்கூடாது. புதிதாக பதவியேற்றவர் களிடம் இருந்து பதவியை மீண்டும் பெறும் வகையில் செயல்படவேண்டும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வகையில் பதவிகள் தேடிவரும். உங்களுக்கான பதவி சின்ன அய்யா மூலம் உங்களுக்கு கிடைக்கும்' என்றார். பதவியை தீர்மானிப்பவர் டாக்டர் அன்புமணிதான் என்பதை ராமதாஸ் வெளிப்படையாகவே பேசியதால் இந்த மாற்றத்துக்கு ஏற்ப அரசியல் செய்ய தயாராகி வருகிறார்கள் பா.ம.க.வினர்.

பொதுக்குழு பற்றி நம்மிடம் பேசிய மாநில நிர்வாகிகள் சிலர், “""கடந்த ஒரு வருடமாக கட்சிப்பணிகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்படி அன்புமணியிடம் சொல்லி வந்தார் டாக்டர் ராமதாஸ். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தபோது கிளை அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் வரை மட்டுமே அவர் பார்த்துக்கொண்டார். ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில அளவிலான பதவிகளுக்கான பொறுப்பாளர் களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அன்புமணியிடம் கொடுத்து விட்டார். டாக்டர் அன்புமணியிடம் பொறுப்பு போனதால் எம்.எல்.ஏ.வேல்முருகன் மாநிலத்தலைவராவார் என்றும் கூட பேச்சு எழுந்தது. ஆனால் அந்த ஒரு பதவியை மட்டும் மீண்டும் மணிக்கே தரும்படி சொன்னா' டாக்டர் ராமதாஸ்.

அதிகார மைய மாற்றம் குறித்து தன்னிடம் பேசிய முக்கியஸ்தர்கள் சிலரிடம், "வர வர எனக்கு அரசியலே பிடிக்காமல் போய்விட்டது. அரசியலுக் காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் சங்கத்தில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். கட்சியை தம்பி பார்த்துக்கட்டும். நானும், குருவும் வன்னியர் சங்கத்தை பார்த்துக்கப்போறோம். சங்க வேலையிலாவது மன நிம்மதி இருக்கும்'’என்று தன் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்'' என்கிறார்கள்.

கூட்டணி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் மட்டும் ஈடுபடுவாராம் ராமதாஸ். அதிகார மையத்தில் மாற்றம் வந்ததும் பெரிய திட்டத் தோடு மக்களை சந்திக்க திட்டம் வகுத்திருக் கிறார் அன்புமணி. பென்னாகரத்தில் வன்னிய சமுதாய மக்களை சந்தித்து உணர்வுகளை உண்டாக்கியது போல தங்களுக்கு சாதகமாக உள்ள 80 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங் கெல்லாம் தீவிரமாக வேலை செய்ய இருக் கிறார்களாம். தொகுதிக்கு 4 நாட்கள். முதல் இரண்டு நாளில் பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தொகுதிக்குள் உள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்று கொடி ஏற்றி, மக்களோடு மக்களாக தங்குவார்களாம். கடைசி இரண்டு நாட்களில் அன்புமணி களமிறங்கு வாராம்.

தேவைப்பட்டால் கடைசி நாளில் தானும் வருவதாக சொல்லியிருக்கிறாராம் டாக்டர் ராமதாஸ். தேர்தலுக்கு முன்னதாக முடிந்த வரை முக்கியமான தொகுதிகளை சுற்றி விட வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறார் அன்புமணி. இந்த சுற்றுப்பயணத்தின் போது உள்ளூர் கட்சியினர், வன்னிய சொந்தங்கள் என எல்லோருக்கும் அன்புமணியின் முக்கியத்துவம் புரிய வைக்கப்படுமாம்.

அன்புமணியின் ஆதரவாளர்களும் இந்த அதிகார மாற்றம் குறித்து உற்சாகமாக பேசுகிறார்கள்.

""அண்ணனுக்கு முழுப்பொறுப் பையும் ஒப்படைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இளைஞ ரணியில் உள்ள பலரும் இப் போது பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் உற்சாகமாக களமிறங்கி வேலை பார்ப்பார்கள். தொகுதி சுற்றுப்பயணத்தின் போது தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல இளைஞர்களை பா.ம.க.வில் சேர்க்க இருக்கிறோம். இளைஞரணியைப் போன்று இளம்பெண்கள் அணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். முழு சுதந்திரம் அண்ணனுக்கு இருந்தாலும் அய்யாவை ஆலோசித்தே எல்லாம் செய்வார். கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக அண்ணன் பழக ஆரம்பித்ததும் பாருங்கள் மாற்றத்தை''’என்கிறார்கள் நம்பிக்கையோடு.