Sunday, August 1, 2010

வெடிகுண்டு பூமியான பாண்டி!


டேஞ்சரஸ் திகில் பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது புதுவை.

அட்டாக்-1 : அந்த எம்.எல்.ஏ. வீட்டுக்குப் பக்கத் தில் இருக்கும் ஓட்டல் பாரில்... எம்.எல்.ஏ. ஆளான தாதா கழுவா செந்திலும் அவன் கூட்டாளி பாலாஜியும் உட் கார்ந்து தண்ணியடித்தனர். வெளியே தனக்காக எமன் காத்திருப்பதை அறியாமல்... சிரித்துப் பேசியபடியே கண்சிவக்கக் குடித்தவர்கள்... மெல்ல தள்ளாட்டமாய் வெளியே வந்தனர். அப்போது வெளியே காத்திருந்த கழுவாவின் எதிரி டீமான கருணா டீம்... படீர் படீர் என வெடிகுண்டுகளை வீச... ரத்தச் சகதியாகி துடிதுடித்து செத்துப்போனான் கழுவா தன் நண்பனுடன்.

தனது மச்சான்களான காந்தியையும் பரசுராமனையும் ஏற்கனவே கழுவா செந்தில் பொலிபோட்டதால்... பதிலுக்கு பதிலாக கழுவாயைத் தீர்த்துக்கட்டி புதுவையை திகிலில் உறைய வைத்துவிட்டான் கருணா. இது நடந்தது கடந்த மாதம் 12-ந் தேதி.

அட்டாக்-2 : முன்னாள் கப்பல் கேப்டனான விஜய சுந்தரம், தன் மகனின் திருமணப் பத்திரிகையை உறவினர் களுக்குக் கொடுப்பதற்காக... உற்சாக உற்சாகமாக கடந்த 9-ந் தேதி புதுவைக்கு வந்தார். அப்போது அவரை பஞ்சநாதன் என்று எண்ணி... பஞ்சநாதனின் எதிர்கோஷ்டியான ஏகநாதன் குரூப்... ஆள்மாறாட்டத்தில் குறிவைத்துப் பின் தொடர்ந்தது. இது தெரியாமல் அங்கே இங்கே என்று அவர் கல்யாணப் பத்திரிகையோடு போய்க்கொண்டிருந்தார். சரியான சந்தர்ப்பமாகப் பார்த்து... ஏகநாதன் டீம்... விஜயசுந்தரத்தின் மீது குபீர் குபீர் என வெடிகுண்டுகளை எடுத்து வீச... எதற்கு? யாரால் கொல்லப்படு கிறோம்? என்று தெரியாமலே அந்த மாஜி கேப்டனின் உயிர்த்துடிப்பு அடங்கிவிட்டது. இதனால் புதுவையின் பதட்ட டெஸிபல்ஸ் அதிகமானது.

அட்டாக்-3 : க்ரைம் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி... காரைக்காலில் வசித்து வந்த பாலா என்கிற சின்ன பாலாவுக்கு போதாத நேரம். தன் குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக... குழந்தையை புதுவையில் இருக்கும் அந்த மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த் தான். மருத்துவமனையில் பொழுது போகாததால்... அருகில் இருந்த பாலாஜி சினிமா தியேட்டருக்குப் போனான். அவன் தியேட்டருக்குப் போவதைக் கண்ட ஒரு டீம் பரபரப்பானது. திடீர் வியூகங்கள் வகுக் கப்பட... ஆயுதங்கள் ரெடி செய்யப்பட்டன.

தனக்கு விபரீதம் காத்திருப்பது தெரியாமல்... உள்ளே ஜாலியாய்ப் படம் பார்த்துக்கொண்டிருந்த பாலா... படம் முடியும் தறுவாயில் வெளியே வந்தான். வாசலில் காத்திருந்த அந்த டீம்... குபீர் குபீர் என அவன் மீது வெடிகுண்டுகளை வீசியதோடு.. அடிபட்டுத் துடித்து விழுந்தவனை அரிவாளால் பொலிபோட்டுவிட்டுக் கிளம்பியது. 5 வருடங்களுக்கு முன் மொந்தி சங்கரை கொலை செய்ததற்கு... இத்தனை நாள் காத்திருந்து கணக்குத் தீர்த்தது சமீபத்தில் கொல்லப்பட்ட கழுவா செந்திலின் சிஷ்யகோடிகள் டீம்..

-திருவள்ளுவர் நகர் 8-வது வார்டு கவுன்சிலரான ராஜலட்சுமி சொல்கிறார், ""புதுவையைப் பொறுத்தவரை ஜனங்க ஒவ்வொரு நொடியையும் மரண பயத்தோட கழிக்க வேண்டியிருக்கு. யாரை வெட்டறாங்க? எதுக்கு வெட்டறாங்கன்னே தெரியமாட் டேங்குது? வெடிகுண்டுகள் ரொம்ப தாராளமாப் புழங்குது. சில அரசியல்வாதிகள் தாதாக்களை உரம்போட்டு வளர்க்கறாங்க. பெரும்பாலான மர்டர் திட்டங்கள் சிறையில்தான் தயாராகுதுன்னு சொல்றாங்க. பிள்ளையார் கோயிலுக்குள்ள செல்போன் ஜாமர் கருவியை வைக்கிறவங்க.. ஜெயிலுக்குள்ள வைக்கலாமில்லையா? பாரதியும் பாரதிதாசனும் புழங்கிய புரட்சி பூமியான புதுவையில்... ரத்தச் சகதியோட ஆயுதக் கலாச்சாரம் வளரக்கூடாது. காவல்துறை என்ன பண்ணுதுன்னு தெரியலை''’ என்றார் ஆதங்கமாய்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றவேண்டும் என்ற கோஷத்தோடு இடது சாரிகள் பாலாஜி தியேட்டர் எதிரில்... ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு மைக் பிடித்த தோழர் விசுவநாதன் "" “யார் மீதாவது பெட்டிகேஸ் போட்டாக்கூட அமைச்சர்கள் அவங்களுக்காக போலீஸிடம் பேசறாங்க. குற்றவாளிகளைப் பிடிக்கிறதுக்கு முன்னரே... அமைச்சர்கள் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்துடறாங்க. இப்படியிருந்தா எப்படி சட்டம்-ஒழுங்கைக் காப்பாத்தறது?''’-என காட்டமாகப் பேசி ஆளும் தரப்பான காங்கிரஸுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

புதுவையில் பெருகிவரும் க்ரைம்கள் குறித்து நம்மிடம் பேசிய சில காக்கிகள் ’""புதுவையைக் கலக்கிய 2 தாதாக்கள்ல வெள்ளை குணா காங்கிரஸில் சேர்ந்து நற்பணி மன்றம் நடத்தறார். இன்னொரு தாதாவான தட்டாஞ்சாவடி செந்தில் பா.ம.க.வில் சேர்ந்துட்டார். இருந்தபோதும் இந்த ரெண்டுபேருமே எங்க போனாலும் அடியாட்கள் புடைசூழத்தான் போய்க்கிட்டு இருக்காங்க. வெள்ளை குணாவிடமிருந்து போன கருணா இப்ப தனி டீமா... ஆயுதங்களோட ஒருபக்கம் துவம்சம் பண்ண... கழுவா செந்திலின் மரணத்துக்குப் பின் அவன் ஆளுங்க வீரய்யா தலைமையில் ஒரு டீமா க்ரைம் ராஜாங்கம் நடத்திக்கிட்டு இருக்காங்க. இதற்கிடையில் தி.மு.க., எம்.எல்.ஏ.வான சிவா சில தாதாக்களோட நட்பு பாராட்டிக்கிட்டு இருக்கார். அவங்களால் இவருக்கு எதுவும் ஆயிடக் கூடாதேன்னு எம்.எல்.ஏ.வை எச்சரிக்கிறது எங்க துறை''’ என்கிறார்கள் நிலைமையின் சூட்டை தெளிவுபடுத்தும் விதமாய்.

புதுவையின் பகீர் நிலவரம் குறித்து எஸ்.எஸ்.பி. பொறுப்பில் இருக்கும் சந்திரனிடம் கேட்டோம். அவரோ ""நான் வந்ததும் இரண்டு வெடிகுண்டு வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுபண்ணியிருக்கேன். இனியும் ரவுடிகள் அடங்கவில்லை என்றால் தமிழகத்தில் நடப்பது போல் என்கவுண்ட்டர்கள் இங்கும் நடக்கும். யோசிக்கமாட்டோம்'' என்றார் அழுத்தமாய்.

காவல்துறை அமைச்சர் வல்சராஜையும் சந்தித்து "குற்றவாளிகளை அரசியல்வாதி கள்தான் காப்பாத்தறாங்கன்னு சொல்றாங்களே?'’ என்றோம். ""அமைச்சரோ காவல்துறையில் இருப்பவர்கள் தீவிரமாகச் செயல்படவில்லை. அதனால்தான் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுது. இனி செயல்படாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்போகிறேன்.

எந்த அரசியல்வாதிகளின் குறுக்கீட் டிற்கும் காவல்துறை முக்கியத்துவம் தராது. புதுவையின் சட்டம்- ஒழுங்கை சரிபண்ண தீவிரமான நடவடிக் கைகளில் இறங்குவோம்'' என்கிறார் அழுத்தமாக.

புதுவை அமைதிப் பூங்கா வாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment