Saturday, September 11, 2010

மாதவனுடன் காதலா?-சதா டென்ஷன்!


கிட்டத்தட்ட பீல்ட் அவுட் என்ற நிலை வரும்போது நடிகர் நடிகை கள் கையாளும் ஆயுதம் காதல் அல்லது வேறு ஏதாவது ஒரு பரபரப்பு கிசுகிசு.

இந்த முறை அந்த ஆயுதம் சதாவுக்கும் தேவைப்பட்டுள்ளது.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே என பல படங்களில் நடித்துள்ளார். 'எதிரி' படத்தில் மாதவனும் சதாவும் ஜோடியாக நடித்தனர். இப்படம் 7 வருடங்களுக்கு முன்பு ரிலீசானது. அதைத் தொடர்ந்து ப்ரிய சகி படத்தில் நடித்தனர். பின்னர் வேறு இரு படங்களில் நடித்துள்ளனர். அவை இன்னும் வெளிவரவில்லை.

இப்போது அவர் கைவசம் புலிவேசம் என்ற ஒரேயொரு படம்தான் உள்ளது.

இந்த நிலையில், மாதவனுடன் அவருக்கு திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் பரபரப்பு கிளப்பப்பட்டது. மாதவன் ஏற்கனவே சரிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சதா கூறுகையில், "மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய்தான் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது..." என்றார்.

மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று ஒரு நிருபர் கேட்ட போது, "அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று கூறி நழுவி விட்டார்.

சரி இந்தப் பரபரப்பால் யாருக்கு நன்மை என்கிறீர்களா?

இருவருக்கும்தான்... காரணம், சதாவின் நிலைதான் இங்கே மாதவனுக்கும்!

கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி


வாஷிங்டன்: ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா .

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.

கார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி-பிரபுல் படேலுக்கு ரூ. 25 கோடி சொத்து


டெல்லி: மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே. அந்தோணியிடம் வெறும் ரூ. 1லட்சம் மட்டுமே உள்ளதாம். சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லை.

மறுபக்கம் பிரபுல் படேல், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோருக்கு தலா ரூ. 25 கோடிக்கும் மேல் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜிக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களே உள்ளனவாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் அந்தோணி, எளிமைக்குப் பெயர் போனவர். இவரது பெயரில் சொத்தோ அல்லது வாகனமோ இல்லை. அவரது பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இரு கணக்குகளில் முறையே ரூ. 1.01 லட்சம் மற்றும் ரூ. 16,919 ரூபாய் மட்டுமே உள்ளது. இது 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி வரையிலான கணக்கு.

மூன்று முறை கேரள முதல்வராக இருந்தவரான அந்தோணியின் மனைவி எலிசபெத் பெயரில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலம் உள்ளது. அவரது மூன்று வங்கிக் கணக்குகளில் ரூ. 3.19 லட்சம் பணம் இருப்பில் உள்ளது.

Thursday, September 9, 2010

விஜயகாந்த் போட்ட நிபந்தனை! நிராகரித்த ஜெயலலிதா! ""முட்டாள்தனம்...'' ரஜினி கோபம் யார் மீது?



""ஹலோ தலைவரே... ... கூட்டணி அமைப்பது பற்றி சிவகாசியில் விஜயகாந்த் சீறியிருப்பதைப் பார்த் திருப்பீங்க..''

""கொடநாட்டில் இருக்கும் ஜெ, அ.தி.மு.க.வின் கூட்டணி வியூகம் பற்றி ஒரு முடிவெடுக்காம இறங்கமாட் டாருன்னு ர.ர.க்கள் நம்பிக்கை யோடு இருப்பதைப் பற்றி நாமதான் பேசினோம். இப்ப விஜயகாந்த் திடுதிப்புன்னு 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொல்லியிருக்காரே.. அ.தி.மு.க சைடில் என்ன நினைக்கிறாங்க?''

""2006 சட்டமன்ற தேர்தலில் தன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளையும் விடுதலை சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகளையும் ஒதுக்கிக் கொடுத்த ஜெ., அ.தி.மு.க.வை 188 தொகுதிகளில் நிறுத்தினார். அதனாலதான் ஆட்சியைப் பிடிக்க முடிய லைன்னாலும் 60 சீட்டுகளோடு பலமான எதிர்க்கட்சியா அ.தி.மு.க. நிற்க முடிந்தது. இப்ப அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இல்லை. ஆனா போன முறை 13 தொகுதியில் போட்டியிட்ட சி.பி.எம்.மும், 10 தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஐ.யும் இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் இருக்குது. அதோடு மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை யும் அ.தி.மு.க. அணி பக்கம் நிற்குது. இவங் களுக்கும் திருப்திகரமா சீட் ஒதுக்கணும். இந்த நிலையில், விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்தால், தே.மு.தி.க.வுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்கு வதுங்கிறது பற்றியெல்லாம் கொடநாட்டில் கணக்குப் போட்டுக்கிட்டிருந் தாங்க.''

""அ.தி.மு.க.வும் மெஜாரிட்டி சீட்டுகளை ஜெயிக்கிற மாதிரி நின்றால்தானே, தேர்தலுக்குப் பிறகு பிக்கல் பிடுங்கல் இல்லாமல் முடிவெடுக்கமுடியும்?''

""அதுதான் ஜெ.வோட கணக்கு. அ.தி.மு.க தரப்பிலிருந்து ஒரு மூவர் அணியும் தே.மு.தி.க. தரப்பிலிருந்து ஒரு மூவர் அணியும் கூட்டணி தொடர்பா தொடர்ந்து பேசிக்கிட்டிருக்குது. 60 சீட்டுங்கிறதில் தே.மு.தி.க. பிடிவாதமா நின்னாலும், 50 சீட் வரைக்கும் கொடுக்க லாம்னு அ.தி.மு.க. தரப்பில் முதலில் யோசிக்கப் பட்டது.ம.தி.மு.கவுக்கு போனமுறை மாதிரியே 35 கொடுத் தாலும், இடதுசாரிகளோட எண்ணிக்கையை குறைக்க முடியாது.''

""இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரிசமமா சீட் கேட்பாங்களே..''

""போனமுறை தி.மு.க. கூட்டணியில் அப்படித்தான் கேட்டாங்க. சி.பி.எம்.முக்கு 13 தொகுதிகளும் சி.பி.ஐ.க்கு 10 + 1 ராஜ்யசபா சீட்டுன்னு ஒப்பந்தம் போடப்பட்டது. அதேமாதிரி அ.தி.மு.கவும் இப்ப தந்தாகணும். மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், ம.ம.க. எல் லாத்துக்கும் சேர்த்து குறைந்தபட்சம் 10 சீட்டாவது கொடுக் கணும். அப்படி கணக்குப் பார்த்தா 50+35+13+10+10ன்னு 118 சீட் வந்திடுது. அதாவது, மெஜாரிட்டிக்குத் தேவையான சீட் அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்க வேண்டியிருக்குது. அ.தி. மு.க.வுக்கு 116 சீட்டுகள்தான் மிஞ்சும். அத்தனையிலும் ஜெயித் தாலும் மெஜாரிட்டி கிடைக்காது. ஜெ.வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. 140 இடங்களுக்கு குறையாமல் போட்டி யிட்டு 125 இடங்களையாவது ஜெயிச்சி, தனித்து ஆட்சியமைக்கணும்னு கணக்குப் போடுறார்.''

""அ.தி.மு.க.வுக்கு 140, தே.மு.தி.க.வுக்கு 50, ம.தி. மு.க.வுக்கு 35, சி.பி.எம். 13, சி.பி.ஐ.10, மற்ற கட்சிகளுக்கு 10-ன்னு பங்கு வச்சா 258 சீட்டு கணக்கு வருதே.. தமிழ்நாட்டில் இருப்பதே 234 தொகுதிதானே?''

""வேணும்னா வைகோவுக்கு 10 சீட்டைக் குறைச்சுக்கலாம்னு அ.தி.மு.க தலைமை ஆலோசனை செய்திருக்குது. இதை வைகோ ஏத்துக்குவாரான்னும் பேச்சு அடி பட்டிருக்குது. சகோதரியுடனான கூட்டணி தர்மம்னு அவர் 10 சீட்டை விட்டுக்கொடுத்தாலும் கணக்குப்படி 248 சீட் வருது. விஜயகாந்த் கட்சிக்கு 40 சீட்டுன்னு முடிவானால் 238 சீட்டு கணக்கு வரும். 4 சீட்டை மற்ற கட்சிகளிட மிருந்து ஆளுக்கொன்றாக குறைத்து விட்டால், ஜெ. கணக்குப்படி அ.தி.மு.க 140 இடங்களில் நிற்க லாம். இதைத்தான், தே.மு.தி.க.வின் மூவரணியிடம் பேசிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. வின் மூவரணியிடம் சொல்லி, இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வாங்கன்னு ஜெ. சொல்லி யிருக்கிறார்.''

""இந்தக் கணக்குக்கு தே.மு.தி.க.வின் பதில் என்னவாம்?''

""தே.மு.தி.க. தரப்பு 60 சீட்டிலிருந்து கீழே இறங்கவே யில்லையாம். அது மட்டு மில்லீங்க தலைவரே.. .. மேற்குவங்க பாணியில் மந்திரிசபை அமைக்கப்படும்னும், மந்திரிசபையில் தே.மு.தி.க.வுக்கு பங்கு உண்டுன்னும் உறுதிமொழி கொடுத்து, இருதரப்பின் கையெழுத்துடன் கூடிய ஒப்பந்தம் போட்டுக்க ணும்னு சொல்லியிருக்காங்க. அதோடு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஜெ.வும் விஜயகாந்த்தும் ஒன் டூ ஒன் உட்காரணும்னும் வலியுறுத்தியதோடு, தே.மு. தி.க.வுடன் கூட்டணி அமைக்கிறோம்னு அ.தி.மு.க. வெளிப்படையா அறிவிக்கணும்னும் சொல்லி யிருக்காங்க.''

""அ.தி.மு.க. தலைமைக்கு தே.மு.தி.க. இத்தனை நிபந்தனைகள் போட்டால் சரிப்படுமா?''

""அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தும் மூவரணியே, இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா, எங்க தலைமைக்குப் பிடிக்காது. இருந்தாலும் உங்க நிபந்தனைகளைச் சொல்கிறோம்னாங்களாம். கொடநாட்டில் இருக்கிற ஜெ.கிட்டேயும் இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை அ.தி.மு.க. தரப்பு சொல்லயிருக்குது. அதைக் கேட்டதும் டென்ஷனான ஜெ., 60 சீட்டெல்லாம் கொடுக்க முடியாது. 40தான். அதற்கு மேல முடியாது. அப்புறம், மேற்கு வங்க பாணியெல்லாம் தமிழ்நாட்டுக்கு சரிப்படாது. என் பாணி தனி. அதன்படிதான் சீட் ஷேரிங்-மந்திரிசபை எல்லாம் இருக்கும்னு சொல்லிடுங்கன்னுட்டாராம். இந்தத் தகவல் விஜயகாந்த்துக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கு. இதையடுத்துதான், 30 சீட்டுக்கும் 40 சீட்டுக்கும் நான் கூட்டணி அமைக்க முடியாதுன்னு சிவகாசியில் அவர் சீறித் தள்ளிட்டாரு.''

""அப்படின்னா அவரோட தேர்தல் வியூகம் என்ன?''

""தே.மு.தி.க. தனித்தே நிற்பது, இல்லேன்னா.. தனி அணி அமைத்து நிற்பதுங்கிறதுதான் விஜயகாந்த்தோட இப்போதைய ப்ளான். தனி அணி அமைத்தால் தே.மு.தி.க. மட்டுமே 30 சீட்டு களை ஜெயிக்க முடியும்னு விஜயகாந்த் நம்புறார். அதோடு, தான்தான் சி.எம். கேன்டிடேட்ங்கிற தகுதியையும் யார்கிட்டேயும் பலி கொடுக்க வேண்டியதில்லைன்னு சொல்றார். செப்டம்பர் 14-ந் தேதியோடு தே.மு.தி.க 5 வருடத்தை நிறைவு செய்யுது. அதற்காக ஒரு மாநாடு நடத்தலாம்ங் கிறது அவரோட ஐடியா. நாட்கள் குறைவா இருப்பதால, அக்டோபர் மாதம் உளுந்தூர்பேட் டையில் மாநாடு நடத்த முடிவு பண்ணியிருக் கிறார் விஜயகாந்த். இந்த மாநாட்டுக்கு பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டி, தன் தலைமை யில் அணி அமைக்க மற்ற கட்சிகளுக்கு சிக்னல் காட்டுவதுன்னு தீர்மானிச்சிருக்காராம். மாநாட்டு ஸ்பாட்டா உளுந்தூர் பேட்டையை ஏன் தேர்ந்தெடுக்கணும்னு தே.மு.தி.க வட்டா ரத்தில் விசாரித்தேங்க தலைவரே.. .. இந்த முறை விருத்தாசலத்திலிருந்து ஸ்கிப் ஆகி, உளுந்தூர் பேட்டையில் போட்டியிடுவதுங்கிற திட்டத்தில் இருக்காராம். அதற்கு முன்னோட்டம்தான் இந்த மாநாடாம்.''

""எப்படியெல்லாம் கணக்குப் போடு றாங்கப்பா...''

""ஜெ.வும் கொடநாட்டில் தொடர்ந்து கணக்குப் போட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. 15-ந் தேதி சென்னைக்குத் திரும்ப திட்டமிட்டிருக்கும் ஜெ, 18ந் தேதி சைதை துரைசாமி வீட்டுத் திருமண வரவேற்பில் கலந்துக்கிறார். 21-ந் தேதி மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்குவதுன்னு முடிவு செய்திருக்கும் ஜெ, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பூத் கமிட்டிகளை முழுமையா அமைச்சிடணும்னு கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்காராம்.''

""எதிர்க்கட்சிகளெல்லாம் தேர்தல் கணக்கில் தீவிரமா இருக்கிறப்ப முதல்வரோ, திருமண விழாக்கள், திரைப்பட விழாக்கள்னு பிஸியா கலந்துக்கிட்டிருக்காரே?''

""அதிலெல்லாம் கலந்துக்கிட்டு வாழ்த்துரை வழங்கினாலும், திருச்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் கவனம் தீவிரமாகத்தான் இருக்குது. பழுத்த அரசியல் தலைவராச்சே.. அரசியலையும் மற்ற விழாக் களையும் பகுத்துப் பிரித்து செயல்படுவார். கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் திருமணத்தை நடத்திவைத்துப் பேசும் போது, வைரமுத்து நீண்ட நேரம் நன்றி யுரை ஆற்றியதை சூசகமா சுட்டிக்காட்டி, தன்னை அதிக நேரம் மேடையில் உட்கார வைக்கவேண்டாம்னு பத்திரிகைகளில் எழுதப்படுவதையும் ஆனால் தன்னிடத்தில் உள்ள உரிமையின் காரணமாக வைரமுத்து நன்றியுரை என்ற பெயரால் விளக்கவுரை ஆற்றியிருக்கிறார்னு சொல்லிட்டு, எங்க ளுக்கிடையிலான அண்ணன்-தம்பி உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. அவ்வளவு கெட்டியான உறவுன்னு பலத்த கைதட்டலுக்கிடைய அறிவித்தார்.''





""வைரமுத்து வீட்டு திருமணவிழாவில் ரஜினியின் பேச்சு பரபரப்பை உண்டாக் கிடிச்சாமே?''

""ஆமாங்க தலைவரே.. கல்யாண விழாவில் எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இதை என் அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டேன்னு வைரமுத்து வீட்டு கல்யாணத்தில் ரஜினி பேசினார். அதற்கு இரண்டு நாள் முன்னாடிதான்அவரோட இரண்டாவது மகள் திருமணம் கோலாகலமா நடந்து முடிந்திருந்தது. அதற்கு ரசிகர்களை நேரில் வரவேணாம்னு அவர் அறிக்கை விட்டி ருந்ததால், தங்களை அவர் புறக்கணிப்பதா ஆங்காங்கே ரசிகர்களிடமிருந்து குமுறல் வெளிப்பட்டது. அவங்களை மனதில் வச்சித்தான் ரஜினி இப்படி பேசினார்னு பலரும் நினைச்சாங்க. ரஜினி தன்னோட ரசிகர்களுக்கு புது பொண்ணு-மாப்பிள் ளையை அறிமுகப்படுத்தி ஸ்பெஷல் விருந்து வைக்க ஏற்பாடு செய்வதா அறிவிச்சிட்டாரு. வைரமுத்து வீட்டுக் கல்யாணத்தில் அவர் தன் ரசிகர்களை மனதில் வச்சி அப்படி பேசலையாம். அது வேறொருவருக்கான தகவலாம்.''

""யாருக்கு?''

""ரஜினி வீட்டுக் கல்யாணத்துக்கு கலைஞர், ஸ்டாலின், அழகிரி, வைகோ, ப.சிதம்பரம், அன்புமணின்னு கட்சி எல்லைகளைக் கடந்து பல பேரும் நேரில் வந்து வாழ்த்தினாங்க. சினிமா துறையிலிருந்து கமல், சிரஞ்சீவி, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யாராய்னு கோலிவுட் பாலிவுட் பிரபலங் களெல்லாம் வந்தாங்க. டி.வி. சேனல்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இத்தனை சிறப்புகள் இருந்தும், தன் குடும்பத்தினரோடு நேரில் போய் பத்திரிகை கொடுத்தும் ஜெயலலிதா இந்த கல்யா ணத்துக்கு வரலைங்கிறதில் ரஜினி தரப்புக்கு வருத்த மாம். கல்யாணம் பற்றிய சிறப்பு செய்திகளை ஒளிபரப்பிய ஆங்கில சேனல்களில், ஜெ வரவில்லைன்னு பிரேக்கிங் நியூஸ் போட்டு, அதை நேஷனல் இஷ்யூவாக்கிட்டாங்க. பட்டுவேட்டியில் கருப்புமை ஒட்டியதுபோல, எல்லாவிதத்திலும் பாராட்டுப் பெற்ற தன் மகள் திருமண-வரவேற்பு விழாவில் ஜெ.வின் ஆப்சென்ட் ஒரு இஷ்யூவானதில் ரஜினி கொஞ்சம் அப்செட்தான். அவங்க கொடநாட்டில் இருந்தாலும், அவங்க சார்பில் கட்சி சீனியர்களை அனுப்பி யிருக்கலாமே.. நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்த தற்கு இவ்வளவுதானா மரியாதைன்னு ரஜினி வட்டாரம் வருத்தப்படுது. ஜெ.வின் ஆப்சென்ட்டை மனதில் வைத்துதான், கல்யாணத்தில் எல்லோரையும் திருப்திபடுத்த நினைப்பது முட்டாள்தனம்னு ரஜினி பேசினாராம்.''

""பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ரொம்ப சீரியஸாகவே ஒரு விஷயத்தை பேசிக்கிட்டிருக்காராம். அந்த செய்தியோடுதான் நான் லைனில் இருக்கேன். அ.தி. மு.க., தே.மு.தி.க., பா.ம.க. கட்சி களோடு பா.ஜ.க.வும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து சட்ட மன்றத் தேர்தலை சந்தித்தால், தேசிய அளவில் இந்தக் கூட்டணி முக்கியத்துவம் பெறும்ங்கிறதுதான் வெங்கையா நாயுடு பேசிக்கொண்டிருக் கும் விஷயம். சம்பந் தப்பட்ட கட்சியின் முக்கிய பிரமுகர் களிடம் இதைப் பற்றித்தான் பேசிக் கிட்டிருக்காராம்.''

ரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்!



மற்றவர்களின் குற்றங்களைப் பார்ப்பதைவிடவும்
உங்கள் குற்றங்களை முதலில் பாருங்கள்.
உப்பை நீர் கரைப்பதுபோல்...
உங்கள் நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

திருவாரூர் குடவாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் திருவிடைச்சேரியில் நாம் ஆஜரானபோது அது... திகில் பிரதேசமாகக் காட்சியளித்தது. அங்கங்கே துப்பாக்கி ஏந்திய காக்கிகள் குவிக்கப்பட்டிருக்க... தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

ஊராட்சி மன்றத்தலைவர் குத்புதீனைத் தேடிப் பிடித்தோம். கலக்கத்துடன் பேச ஆரம்பித்தவர்... ‘""இங்க 1000 குடும்பங்கள் வசிக்குது. அதில் எங்க இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டும் 400 இருக்கு. இங்க இருக்கும் முஸ்லிம்கள்.. பொதுவா ஜமாத் முகையதீன் பள்ளிவாசல்ல தொழுறதுதான் வழக்கம். கொஞ்சநாளா தவ்ஹீத் ஜமாத்காரங்க... இங்க வந்து புரட்சிங்கிற பேர்ல... குழப்பத்தை உண்டாக்க ஆரம்பிச்சாங்க. தொப்பி போடாமத்தான் தொழணும். தர்ஹாவையும் இறந்தவங்களையும் வணங்கக்கூடாது. பாத்தியா ஓதக்கூடாது. கந்தூரி விழா கொண்டாடக் கூடாது. மந்திரிச்ச தாயத்து களைக் கட்டக்கூடாதுன்னு அவங்க ஏதேதோ சொல்ல... இதை எங்க ஜனங்கள்ல பெரும்பாலான வங்க ஏத்துக்கலை. அதனால் அவங்களை எங்க பள்ளிவாசலுக்கு வராதீங்கப்பான்னு சொல்லிட் டாங்க. அதனால் இங்க இருக்கும் அப்துல் ரஹீம் வீட்டில் அவங்க ரம்ஜான் தொழுகையை நடத்தி வந்தாங்க. அவங்களால தன்னோட நிம்மதி கெடுதுன்னு எதிர்வீட்டுக் காரரான ஜபருல்லா சொல்ல... ரெண்டுத் தரப்புக்கும் இடையில் பிரச்சினை உண்டாச்சு. அது ரமலான் நோன்புத் தொழுகைக்குப்பின் நைட்டு 7 மணிக்கு கைகலப்பா ஆய்டிச்சிங்க. இதில் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த குத்புதீன் தாக்கப்பட... அவர் திருமங்கலக்குடியில் இருக்கும் அவங்க மச்சான் ஹஜ் முகமதுக்கு போன்போட்டு... என்னை அடிச்சிட்டாங்கன்னு சொல்லியிருக் கார். இந்த நிலையில்தான்.... அந்த விபரீதம் நைட் 10 மணிக்கு ஹஜ் முகமது வடிவில் வந்தது''’என்றார் கை பிசைந்தபடி.

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொறுப்பாளரான அப்துல் ரகுமானோ ""அந்த ரெண்டு தனிப்பட்ட குடும்பங் களுக்கு இடையில் இருந்த மோட் டிவ்தான் இதுக்குக் காரணம்''’என்று முடித்துக்கொண்டார். அப்படி என்ன தான் நடந்தது?

சம்பவத்தை நேரில் பார்த்த முகமது யூசுப் வெடவெடப்பு மாறாமல் விவரித்தார்... ’""நைட் 10 மணி இருக்கும். பரபரன்னு ஆறேழு கார்கள் எங்க பள்ளிவாசல் முன்னாடி வந்து நின்னுச்சு. அதிலிருந்து கோபமா இறங்கிய ஆளுங்க... ""யார்றா ஜமாத் தலைவர்''னு கேட்டாங்க. அப்ப.. இமாம் முகமது இஸ்மாயில் வெளில வந்து ""நான்தான் ஜமாத் தலைவர். நீங்க யாரு''ன்னு கேட்டார். அவரை அந்த கும்பல் அடிச்சித் தள்ளி யது. இதைப்பார்த்து எல்லோரும் ஏன் அவரை அடிக்கிறீங்கன்னு கேட்டப்ப... அந்த ஹஜ் முகமது திடீர்னு தன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பிச்சிட்டார். எங்க கண்ணெதிரிலேயே இமாம் முகமது இஸ்மாயிலும் ஜபருல்லா மச்சான் ஹஜ் முகமதும் அப்படியே ரத்தவெள்ளத்தில் விழுந்து துடிதுடிச்சி இறந்துட் டாங்க. அப்ப கூட்டத்தில் குண்டு பாஞ்சதில்... பால்ராஜ், சந்தியாகு, ராமதாஸ், ஹாஜா மைதீன், யாக்கத் அலி ஆகியோரும் காயம்பட்டு விழுந்தாங்க. அவங்களை ஆஸ்பத்தி ரிக்கு அவசரமா அனுப்பி வச்சோம்''’என்கிறார் நடுக்கத்தோடு..

இமாமின் மகன் அக்பர் “""ரமலான் மாதத்தில் போய் எங்க வாப்பாவை இப்படி பண்ணிட்டாங் களே’''’என தலையில் அடித் துக்கொண்டு அழுதார். ஹஜ் முக மதுவின் மனைவி ஜைனத் கனியோ “""என் பிள்ளைகளை எப்படி காப்பாத்தப் போறே னோ?''’என தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

துப்பாக்கி குண்டுகளோடு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தியாகு “""எங்களுக்கு சொந்த ஊர் பக்கத்தில் இருக்கும் விழுதி யூர். அங்க இருக்கும் ஆரோக்கியமாதா கோயில் திருவிழாவை எங்க அப்பா பால்ராஜும் நானும் ராமதாஸும்தான் நடத்தணும். அதுக்காக வசூலுக்கு இங்க வந்தோம்ங்க. அப்ப சச்சரவா இருக்க... என்ன ஏதுன்னு பள்ளிவாசல்ல எட்டிப்பார்த்தோம். அப்பதான் எங்களையும் அந்த ஆள் இடுப்புக்குக் கீழேயே சுட்டுட்டார். வலி உயிர்போற மாதிரி இருக்கு''’என்றார் வேதனையோடு. இந்த விவகாரம் குறித்து திருவாரூர் எஸ்.பி.மூர்த்தியிடம் கேட்டபோது ""அந்த ஹஜ் முகமது ஆளுங்க 10 பேரை மடக்கிட்டோம். இப்ப நிலைமை எங்க கட்டுக்குள் இருக்கு''’என்றார் இறுக்கமான குரலில். இந்நிலையில், 6-ந்தேதி மாலையில் சிதம்பரத்தில் சரணடைந்தார் ஹஜ் முகமது.

எனினும்... அடுத்த நொடி என்ன நடக்குமோ என்ற பக்பக்கோடு... திருவிடைச்சேரி இன்னும் பதட்டத் தகிப்பு மாறாமல் பகீர் நிலையிலேயே இருக்கிறது.



கொலைகாரனின் கூட்டாளியான அதிகாரிகள்!


இருவரை சுட்டுக் கொன்ற ஹஜ் முகமது மீது கேரளா, மும்பை ஆகிய இடங்களில் மோசடி பாஸ்போர்ட் வழக்கு உள்ளது. உண்டியல் பிசினஸில் கில்லாடியான இவரிடம் லைசென்சுடன் 3 துப்பாக்கி கள் உள்ளன. மேலும் ஒரு துப்பாக்கியை லைசென்ஸ் இல்லாமல் வைத்திருக்கிறார். போலீசிடம் நல்ல செல்வாக்கு உள்ள ஹஜ் முகமது, எஸ்.பி. லெவ லுக்கு குறைவாக உள்ள எந்த காக்கி அதிகாரியிடமும் பேச மாட்டார். முன்னாள் ஐ.ஜி.காளிமுத்து, சஸ் பெண்டட் டி.ஐ.ஜி.முகமது அலி ஆகியோர் இவருக்கு மிகவும் நெருக்கம். அவர்களிடம் நேரடியாகவே போனில் பேசி, தன்னை நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வது வழக்கம். ஹஜ் முகமதை விசாரிக்கும் போது, அதிகாரிகளின் உடந்தை பற்றிய மேலும் பல விபரங்களும் வெளிவரும் என்கிறது காக்கி வட்டாரம்.

நீச்சல் வீரரின் உயிருக்குக் குறி!


அண்மைக்காலமாக தமிழகத் தலைநகரான சென்னை நகரம்... தாக்குதல் நகரமாக உருமாறி வருகிறது.. அரசியல் புள்ளிகளின் வீடுகள் மீது தாக்குதல், வி.ஐ.பி.க்களின் கார்கள் மீது தாக்குதல், நட்சத்திர ஓட்டல்கள் மீது தாக்குதல், தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் மீது தாக்குதல் என பெருகிவரும் தாக்குதல் சம்பவங்களின் பட்டியலில்... தற்போது நிகழ்ந்திருக்கும் ஒரு தாக்குதல்.... ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறையையே அதிரவைத்திருக்கிறது.

காரணம்; தற்போது தாக்கப்பட்டி ருப்பவர் உலக அளவில் புகழ்பெற்றுவரும் இளம் நீச்சல் வீரரான பால கிருஷ்ணன். ஒரு மாஜி மந்திரியின் உறவினர் தரப்பு தான் இந்தத் தாக்குதலுக்கும் காரணம் என கிளம்பியிருக்கும் ஒரு உபரித் தகவல்... இந்த விவகாரத்தின் பரபரப்பை... கூடுதலாக்கியிருக்கிறது.

பாலகிருஷ்ணன் தெற்காசிய விளையாட் டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று... இந்தியாவிற்கும் தமிழகத் திற்கும் ஒருசேர பெருமை தேடித் தந்தவர். இதுதவிர தேசிய அளவிலான பல்வேறு நீச்சல் போட்டி களிலும் ஏகப்பட்ட பதக்கங்களை வாரிக்குவித்திருக்கிறார். இவரது விளை யாட்டுத் திறமையைக் கண்டு.. தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்க முன்வர... நீச்சலுக்காக அதை மறுத்துவிட்டு... அண்ணா பலகலைக் கழகத்தில் பி.சி.இ. வகுப்பில் சேர்ந்தார் பாலு. அண்ணா பல்கலைக் கழகமோ அவர் நீச்சல் பயிற்சி எடுக்க ஓராண்டு சிறப்புவிடுமுறை கொடுத்து அவரை கௌரவப் படுத்தியிருக்கிறது.

அடுத்த மாதம் டெல்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும்... அதற்கு அடுத்த மாதம் சீனா வில் நடக்க இருக்கும் தெற் காசிய போட்டியிலும் பால கிருஷ்ணன் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில்தான்... 5-ந் தேதி காலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

தலையில் 5 தையல்கள் போடப்பட்ட நிலையில் உடல்முழுதும் காயங்களோடு காட்சியளித்த பால கிருஷ்ணனை நாம் அந்தத் தனியார் மருத்துவமனையில் சந்தித்தபோது... ’’""எனக்குன்னு யாருமே எதிரிகள் இல் லை. எங்க அப்பா பத்ரிநாத்தும் அம்மா லட்சுமியும் குழந்தைகள் நல மருத்துவர்கள். அவர்கள் கொடுத்து வரும் உற்சாகத்தில்தான் நான் விளையாட்டுத்துறையில் சாதித்துவருகிறேன். எனக்கு நண்பர்களோ பொழுது போக்கோ இல்லை. நீச்சல்தான் எனக்கு வேலை. பொழுதுபோக்கு... எல்லாமே. இப்ப தீவிர நீச்சல் பயிற்சி எடுத்துவரும் நான்... காலை 5.30-க்கு வழக்கம் போல் செனாய் நகர் நீச்சல் குளத்துக்குப் போய்க்கிட்டு இருந்தேன். அப்ப... செனாய்நகர் 8-வது கிராஸில் நான் போகும்போது ரெண்டுபேர் அட்ரஸ் கேக்கறமாதிரி வழிமறிச்சாங்க. டூவீலரை நான் ஸ்லோ பண்ணியதும்.. கையில் இருந்த கிரிக்கெட் மட்டையால் என்னை கண்டபடி தாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அலறிக்கிட்டே விழுந்தேன். இதைப்பார்த்து அங்க இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிவர... அந்த ரெண்டுபேரும் ஓடிட்டாங்க எதுக்காக யார் என்னை அடிச்சாங்கன்னே தெரிய லைங்க. நாளைக்கு வேற நம்ம முதல்வர் கையால் விருது தர்றோம்னு கோட்டைக்குக் கூப்பிட்டிருக்காங்க. எப் படி போறதுன்னு தெரியலை''’என்றார் கவலையாக. ஆனால் மறுநாள் அந்த நிலையிலும் துணை முதல்வர் ஸ்டாலின் கையால் விருதை வாங்கிக் கொண்டவர்... தாக்குதல் குறித்து அவரிடமும் புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார்.

பாலகிருஷ்ணனின் அப்பா டாக்டர் பத்ரிநாத்தோ ""எங்க மகனை ஒரு சாதனையாளனா உருவாக்கிக்கிட்டு இருக்கோம். எங்க பையனுக்கு இந்த வயதிலேயே பாதுகாப்புப் பிரச்சினை வருதுன்னா... எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு''‘என்றார் கலக்கமாய்.

பாலகிருஷ்ணனின் கோச்சரான சந்திரசேகரோ ""இன்னும் 20 நாளில் காமன்வெல்த் போட்டி நடக்க இருக்கு. அதுக்குள்ள பாலகிருஷ்ணனால் பூரண குண மாக முடியுமான்னு தெரியலை. காமன் வெல்த்துல பால கிருஷ்ணன் கலந்துக்கக் கூடாதுன்னு நினைக்கிற யாரோதான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கணும். ஆனா பலரும் பலவிதமா சந்தேகங்களைக் கேட்கறாங்க. பாலகிருஷ்ணனுக்கு பர்சனல் மோட்டிவ் இருக்கா... காதல் இருக்கான்னு கேட்கறாங்க. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இன்னும் சிலரோ... காமன்வெல்த் போட்டியில் கலந்துக்க இருக்கும் சக நீச்சல்வீரரான அக்னீஸ்வரன் தரப்பு செஞ்சிருக்குமான்னு கேட்கறாங்க. காரணம் அவங்க அப்பாவான ஜெயப்பிரகாஷ் என்கிற ஜெ.பி.அரசியல் பின்புலமும் சீனியர் போலீஸ் அதிகாரி களிடமும் நெருக்கம் உள்ளவர். எங்களுக்கு யார் காரணம்னு தெரியலையே''’என்றார் எரிச்சலாக.. கோச்சர் சந்திர சேகர் குறிப்பிட்ட ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் பற்றி யும் விசாரித்தபோது “அவர் மாஜி அ.தி.மு.க. மந்திரி மதுசூதனனின் நெருங்கிய உறவினர். போன பீரிய டில் ரொம்ப செல்வாக்கா இருந்த வர். இப்ப அகில இந்திய நீச்சல் கழக நிர்வாகிகளில் ஒருவரா இருக்கார்’ என்றார்கள் அவரை அறிந்தவர்கள் அந்த ஜெயப்பிரகாஷிடமும் நாம் பேசினோம். அவர் மீதான விமர் சனம் குறித்து நாம் சொன்னதும், ""அந்த பாலகிருஷ்ணன் முதுகுப்பக்க மா பேக் நீச்சல் அடிக்கிறதில் சாத னை படைக்கிறவர். என் மகன் அக்னீஸ்வரன் வழக்கம்போல் குப்பு றப்படுத்து பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் அடிக்கிறவர். இவங்க ரெண்டுபேரும் தனித்தனி பிரிவு., அப்படியிருக்க... எதுக்கு அவரை நாங்க டிஸ்டர்ப் செய்யணும். போலீஸ் தீர விசாரிக்கும் போது... தானா உண்மை வெளில வரும்''’என்று முடித்துக்கொண்டார்.

இவர் இப்படி சொன்னாலும், போலீஸ் உயரதிகாரிகளிடம் இவ ருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதா லும் சென்னையில் உள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆட்களின் கைவரிசையா லும்தான் இந்த தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பாதிக்கப் பட்டவரின் தரப்பிடம் உள்ளது.

உலகத்தில் பெரிய வியாதி! -மரணகானா விஜி


கறுப்பு பறையன் காணாம போனதக்கப்பறம் சுடுகாட்டு சூழல்ல இருந்து மெல்ல மெல்ல விலகிக்கிட்டு இருந்தேன். அப்போ என்னை தத்தெடுத்துக்கொண்டது மரண வீடுகள்தான். கறுப்பு பறையனின் மரண சித்தாந்தத்தையும் ஆயிரம் விளக்கு செல்வாவின் கானாவையும் இணைச்சி மரணகானாங்கிற புதிய விசயத்தை உருவாக்குனேன். மெட்ரஸ்லயும் அத சுத்தி இருக்கிற கிராமத்துலயும் மரண வீடுகள்ல ஒலிச்சது என்னோட கானா.இதனால குடிசைவாசிகள்டயும் தாழ்த்தப்பட்ட மக்கள்டயும் நான் பாப்புலராயிட்டேன்.

ஒரு நாள்... ஸ்டேன்லி ஆஸ்பெட்டல இருந்து சுமதின்னு ஒரு பொண்ணு என்கிட்ட பேசினா. அந்த சுமதி,’""அண்ணே.. எங்க அப்பா சாக கெடக்கிறாரு. 10,15 நாளுக்கு மேல அவரு உசிரு இழுத்துக்கிட்டே இருக்குண்ணே. நேத்து ராத்திரி என் அப்பா என்னிட்ட "நான் இனி பொழைக்க மாட்டன் குட்டி. கடைசி கடைசியா ஒரு ஆசை... கானா விஜிய கூப்பிட்டு எனக் காக ஒரு கானா பாட சொல்ல வெப்பியா? அத கேட்டு நிம்மதியா செத்துப்போவேன் குட்டி'ன்னு சொன்னாரு அண்ணா. எங்கப்பா ஆசைய நிறைவேத்துவீங்களா அண்ணா. என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு அத தர்றேன்''னு சொன்னா.

அத கேட்டு எனக்கு என்னம்மோ ஆச்சு. உடனே வர்றேன்மான்னு சுமதிக்கிட்டச் சொல்லிட்டு ஸ்டான்லி ஆஸ்பெட்டலாண்ட போனேன். 4-வது மாடியில இருந் தாரு சுமதியோட அப்பா. ராத்திரியிலயிருந்து அசைவே இல்லாம இருக்காருண்ணான்னு சொன்னா சுமதி. உறவுக்காரங்கன்னு ரெண்டே ரெண்டு பேரு அங்கிருந் தாங்க. சுமதியோட அப்பா நெஞ்சுல கையவெச்சு பாட ஆரம்பிச்சேன்.


"முதலாம் மாசம் நெஞ்சடைக்குதடா.. ரெண்டாம் மாசம் விந்து வளருதடா...மூணாம் மாசம் முதுகு தண்டு மொளைக்குதடா... நாலாம் மாசம் நரம்பு தளழுதடா... அஞ்சாம் மாசம் ஐம்புலன்களும் ஊறுதடா...ஆறாம் மாசம் அழகு முகம் மலருதடா... ஏழாம் மாசம் இதயம் துடிக்கு தடா... எட்டாம் மாசம் எட்டி எட்டி உதைக்குதடா... ஒம்பதாம் மாசம் வளகாப்பு நடக்குதடா... பத்தாம் மாசம் பனிக்குடம் ஒடைஞ்சு, ரத்த பிண்டமாய், சதைப் பிண்டமாய் குடல் கிழிந்து உடல் கிழிந்து குருதிக் கொட்ட மண்ணில் கொழந்தை பொறக்கு தடா....'’ன்னு ஒரு மனுஷனோட பொறப்பு எப்படி நடக்குதுங்கிறதை அடித்தொண்டையிலிருந்து கானாவா பாடுனேன். அவரோட உடம்பு குலுங்கியது. அப்போ அவரோட வாயி எதையோ சொல்ல நெனைச்சது.ஆனா முடியல. அடுத்த ஒரு நிமிஷத்துல மூச்சு அடங்கிடுச்சு அவருக்கு. என் கையை புடிச்சிக்கிட்டு அழுதா சுமதி. 10,15 நாளா உயிரு போவாம எங்கப்பா அவஸ்தைப்பட்டது எனக்குதான்ணா தெரியும். அவரு நிம்மதியா செத்துப் போகணும்னு நான் வேண்டாத கடவுள் இல்லண்ணா... ஆனா... நடக்கல.இப்போ நிம்மதியா செத்துப்போயிருக்காரு. ரொம்ப நன்றி அண் ணான்னு சொல்லி, அவ கையில இருந்த 100 ரூவாய கொடுத்தா. அத வாங்க மறுத்துட்டு சுமதி யோட அப்பாவை அவளோட சேந்து அடக்கம் பண்ணிட்டு வந்தேன். இதையெல்லாம் பாத்தா மரணம்ங்கிறது ஒன்னுமே இல்லை.மரணத்தை அது போக்குலயே ஏத்துக்கிட்டா பெருசா துக்கம் வராதுன்னு எனக்கு தோணுச்சு.

மெரினா பீச்சாண்டா நடந்த சில சம் பவங்கள சொன்னா மனசு கஷ்டமா இருக்கும். இன்னைக்கும் அத நெனச்சன்னா கூட... என்னையும் அறியாம அழுவேன். மரணங்களை பாத்து பாத்து மனசு மரத்து போயிருந்தாலும் சில சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்திடுது.15 வருஷத்துக்கு முன்னால மெரினா பீச்சுல மீனாட்சி பாட்டின்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு 60 வயசு இருக்கும். ஒரு விபச்சாரி. ஆனா 60 வயசுல இருக்கிற அவள யார் விரும்புவா? அதனால வேற ஸ்டைலில் இறங்கிட்டா. அதுக்கு 5 ரூவான்னு சொல்லிக்கிட்டே மெரினாவ ஒரு சுத்துசுத்தி வருவா. ஒரு நாளைக்கு 50 ரூவா சம்பாதிச்சுடுவா மீனாட்சி பாட்டி. ஒரு முறை எனக்கு முன்னாலயே அவளோட பிஸ்னஸ் நடந்துச்சு. அத பாத்துக்கிட்டு என்னால இருக்க முடியல. கொஞ்சம் அப்பால தள்ளிப்போய்ட்டேன். அரைமணி நேரத்துல, அவ கிட்ட இருந்த ஆளுங்க கிளம்பி போனதும் அவளும் அந்த இடத்த விட்டு நகந்து வந்தா. அப்போ நான் அவள கூப்பிட்டேன். என்கிட்ட வந்த மீனாட்சி பாட்டி,’என்னா 5 ரூவா இருக்கா?’ன்னு கேட்டா. அதுக்கு நான், உன்ன அதுக்கு கூப்பிடல. இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு செத்து போயிடலாம்.. நீ என்ன ஜென் மம்?ன்னு கோபமா கேட்டுட்டேன். இன்னைக்கு வரைக்கும் அந்த பாட்டிய பாத்து நான் ஏன் அப்படி கேட்டன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு மீனாட்சி பாட்டி,’ எனக்கு திருட தெரியாது தம்பி. அதான் எனக்கு தெரிஞ்சத செய்றேன். மானம் ஈனமெல்லாம் பசி பாக்காது தம்பி'ன்னு சொல்லிட்டு போய்ட்டா. அவ நடையில ஒரு வெறுமை தெரிஞ்சது எனக்கு. அவக்கிட்ட அப்படி கேட்டிருக்க கூடாதோ? அந்த சம்பவத்துக்கு பெறகு 4,5 நாளா மீனாட்சி பாட்டிய நான் பாக்கவே முடியல. பீச்சாண்டயும் அவ சுத்தி வந்த மாதிரியும் தெரியல. மனசு என்னமோ அவளை பாக்க துடிச்சது..

ஒரு நா..நண்பர்களோட ஜி.ஹெச்சுக்கு போற வேல ஒன்னு வந்துச்சு. அப்படி போயிக்கிட்டு இருக்கிறப்போ சென்ட்ரல் ஜெயிலுக்கு பக்கத்துல இருக்கிற சுடுகாட்டுல நிறைய குப்பை குவிஞ்சு கெடந்துச்சு. அந்த குப்பையோட குப்பையா ஒரு பாடியும் கெடந்துச்சு. அது என் கண்ணில் பட நண்பர்களுக்கிட்ட,’டேய்... அங்கு ஒரு பாடி கெடக்குதடா..ன்னு சொல்ல அங்கே நாங்க போனோம். குப்பைக்குள்ளார புதைஞ்சு கெடந்தது அந்த பாடி. அத கால புடிச்சு இழுத்தோம். பாடி வெளியேவர அத திருப்பி போட்டு பாத்தா... அது மீனாட்சி பாட்டி. என் நெஞ்சல்லாம் அடைக்கிற மாதிரியாய்டுச்சு. கூட இருந்த நண்பர்கள் ’இது நம்ம மீனாட்சி பாட்டிடா.. இவ எப்படிடா செத்து கிடக்கிறா? பசி கொடு மையால செத்துருப்பாடான்னு சாதாரணமா சொன்னானுங்கோ. எனக்கு ஏதோ உறைக்கிற மாதிரி இருந்துச்சு. செத்து போய்டலாம்னு 4 நாளைக்கு முன்னால நாம சொன்னத செஞ் சுட்டாளா மீனாட்சி பாட்டி? மனசு முழுக்க ஏதேதோ கேள்விகள் கேட்டுகிட்டே அந்த இடத்தை விட்டு நகந்தோம். ஒரு வேளை அன்னைக்கு நான் அவக் கிட்ட மிருகத்தனமாக அப்படி கேட் காம இருந்திருந்தா மீனாட்சி பாட்டி இன்னைக்கு உயிரோட இருந்திருப்பாளோ? தெரியல. ஆனா, இன்னைக்கு வரைக்கும் என் மனசை அரிச்சிக்கிட்டு இருக்கிற விஷயம் இது.

மீனாட்சி பாட்டியை போலவே சுபத்ராங்கிற ஒரு விபச்சாரிக்கிட்டயும் கேள்வி கேட்டேன். அதுக்கும் அவ சொன்ன பதிலும் என் மனச உறுத்திக் கிட்டுதான் இருக்கு. சுபத்ரா ஒரு தெலுங்கு பொண்ணு. 25,30 வயசு இருக்கும்.நல்லா கலரா வும் இருப்பா. சின்ன வயசுலயே கல்யாணம் செஞ்சு கொடுத்து...நிறைய கொடுமைகள அனுபவிச்சிருக்கா சுபத்ரா. புருஷனே விபச்சாரத்துல தள்ளிவிட்டுட்டான். 2... 3 கொழந்தைங்க வேற.மெரினாவுல அன்னைக்கு சுபத்ரான்னா ரொம்ப ஃபேமஸூ. என்கிட்டயும் அவளுக்கு நல்ல பழக்கம். அன்பா பேசுவா. ஒரு நாளைக்கு எப்படியும் 10,12 கஸ்டமர பார்த்துடுவா சுபத்ரா. ஒரு நா....ஒரே சமயத்துல 5 பேருக் கிட்ட போய்ட்டு வந்த சுபத்ரா...கொஞ்சம் ரெஸ்டு எடுக்கிறதுக்காக என்கிட்ட வந்து உக்காந்தா. அப்போ நான்...’ என்ன சுபத்ரா... ஒரே நேரத்துல இத்தன பேருக் கிட்ட போறியே பெரிய வியாதி கியாதி வந்துராதா? வியாதி வந்துச்சுன்னா என்ன பண்ணுவே?’ன்னு கேட்டேன்.கலகலன்னு சிரிச்ச அவ,’"இந்த ஒலகத்துல எல்லா பெரிய வியாதிய காட்டிலும் ஒரு பெரிய வியாதி இருக்கடா விஜி. அந்த பெரிய வியாதி....வேறு எதுவும் இல்ல... அதான் ... பசி.என்ன நம்பி 5 வயிறு இருக்குடா விஜி. அதனால இந்த வியாதிய பத்தி கவலப் படல. இருக்குற வரைக்கும் பசியில் லாம இருப்போம்'ன்னு சொன்னா சுபத்ரா. அதுக்கு பெறகு இது மாதிரி கேள்வி எதயும் நான் கேட்டதே இல்ல. இன்னைக்கு அந்த சுபத்ரா இருக்கிறாளா? இல்லையா?ன்னு தெரியல. இருட்டும் திருட்டும் இல்லைன்னா... மெட்ராஸ்ல பல ஜீவன்கள் தெனம்தெனம் செத்துப் போயிக் கிட்டே இருப்பாங்க. அதுக்கு பசிதான் காரணமா இருக்கும்.

என் உசிருக்கு உசிரா இருந்த பீடை சேகர் செத்துப் போனதுக்குப் பெறகு எனக்கு கெடச்ச ஒரு ஃப்ரெண்டு பீட்டரு. நல்லா வசதிக்கார பையன். சூளமேட்டுல அவனுக்கு பெரிய வீடெல்லாம் இருக்கு. ஒருமுறை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு அவன் வந்தப்போ என் னோடு நல்லா பழகிட்டான். அதுலயிருந்து ரொம்ப நாளைக்கு ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். ஒருநா... காலையில என்ன பாக்க அவசரம் அவசரமா ஓடிவந்த பீட்டரு, ""மச்சான், என் தங்கச்சி தூக்கு மாட்டி செத்துப் போயிட்டா. ஏன், எதுக்குன்னு அப்புறம் சொல்றேன். இப்போ என் தங்கச்சியோட பாடி ஜி.ஹெச்.சுக்கு போயிருக்கு. மார்ச்சுவரியிலயிருந்து என் தங்கச்சியை சீக்கிரமா கொண்டுவர நீதாண்டா உதவணும். ஜி.ஹெச்.சுல எனக்கு யாரையும் தெரியாதுடா''ன்னு சொன்னான்.

சரி வாடான்னு அவன அழைச்சிக்கிட்டு ஜி.ஹெச்.சுக்கு போனேன். அங்க மார்ச்சுவரியில குய்யான்னு எனக்குத் தெரிஞ் சவன் இருக்கான். அவன பாக்கப் போனோம். ஆனா, பிணவறை இன்னும் திறக்கல. 2 மணி நேரம் காத்துக் கிடந்தோம். ரெண்டு நாளா சோறு எதுவும் திங்காததினால, பசி வேறு வயித்த கிள்ளிச்சு. ஒரு டீயும் பன்னும் சாப்பிட்டா தேவலாம்னு தோணுச்சு. பீட்டருக்கிட்ட கேட்டேன். மொறைச்சிப் பார்த்தான்.

கொஞ்ச நேரத்துல குய்யான் வந்து பிணவறையை தெறந்தப்போ, அவன்கிட்டே போனோம். என்னப் பார்த்து, "என்ன மச்சான் ஆளையே ரொம்ப நாளா காணோம்?'ன்னு கேட்டான் குய்யான். நான் வந்த விபரத்தைச் சொன்னேன். அவனே ஓடிப்போய் சில காரியத்தை முடிச்சிட்டு, எங்களை உள்ளே அழைச்சிட்டுப்போன குய்யான், "யாருப்பா இதுல உன் தங்கச்சி'ன்னு பீட்டருக்கிட்ட கேட்க, அங்கே அடுக்கி வெச்சிருந்த ஒவ்வொரு பாடியையும் பார்த்துட்டு ஒரு பாடிய அடையாளம் காட்டினான் பீட்டரு. அந்த பாடியப் புடிச்சி இழுத்து கீழப்போட்டான் குய்யான். பீட்டரு பதறித் துடிச்சு, "மெதுவாடா.. அவ என் தங்கச்சி'ன்னு அழுதான். நான் அவன்கிட்ட "உனக்குதான் அவ தங்கச்சி, இவனுக்கு இது ஒரு பாடி, அவ்வளவுதான்'னு சொன்னேன்.

அப்போ, போண்டாவும் டீயும் கொண்டாந்து வச்சிட்டுப் போனான் ஒரு பையன். அத என்கிட்ட கொடுத்தான் குய்யான். நான் எந்த உணர்ச்சியும் காட்டாம சாப்பிட்டேன். அத பாத்த பீட்டரு, ""என்னடா இது... என் தங்கச்சி செத்துட்டா. நீ கவ லையே படாம டீயை குடிக்கிற''ன்னு கோபப்பட... "கவலப்படற தால உன் தங்கச்சி வந்துருவாளா? இல்லல்ல... அப்புறம் எதுக்குடா பசியோட இருக்கணும்'னு சொன்னேன். எல்லாம் முடிஞ்சு பாடியயும் வெளியே எடுத்துட்டு வந்தப்புறம் என்கிட்ட ஒரு 500 ரூபாயை தூக்கிக் கெடாசிட்டு, "இனி என் முகத்துல யே யே முழிக்காதடா'ன்னு காறித் துப்பாத கொறையா சொல்லிட்டுப் போனான் பீட்டரு. இதுல நான் செஞ்ச பாவம் என்ன? போண்டாவும் டீயும் சாப்பிட்டதுதானா? இன்னைக்கும் அந்த பீட்டரு இருக்கான். ஆனா... பிரிஞ்சு போன எங்க ஒறவு மட்டும் சேரவே இல்லை.

-(தொடரும்)

யுத்தம் -நக்கீரன் கோபால் (86)


நண்பர் ஜெயராஜின் வீடு. நக்கீரன் அலுவலகத்தின் கட்டிடக் கலைஞர் அவர்தான். நக்கீரன் நலனிலும் என் மீதும் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். அவர் வீட்டிற்குத்தான் நான் சென்றிருந்தேன். மாடியில் ஒரு சின்ன இடம் இருந்தது. ஒரு ஆள் மட்டுமே படுக்கக்கூடிய அளவிலான இடம். துணிமணிகளுடன் அங்கேதான் தங்கியிருந்தேன். என் குடும்பத்தினர் உள்பட யாருக்கும் நான் இருக்கும் இடம் தெரியாது.

ஜெயராஜின் வீட்டிலிருந்து மிகவும் பக்கத்தில் இருக்கிறது கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோட்டிலுள்ள நவசக்தி விநாயகர் கோயில். நக்கீரனும் அதன் வெளியீடுகளும் அங்கேதான் முதலில் வெளி யிடப்பட்டன. என் குடும்பத்தினர் அங்கே வந்து சாமி கும்பிடுவது வழக்கம். அன்றைக்கு என் மூத்த மகள் பிரபாவதிக்குப் பிறந்தநாள். என் துணைவியார் அங்கே வந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஜெயராஜின் மகன் அங்கே வருகிறான். அவனைப் பார்த்து, சாதாரணமாக நலன் விசாரித்த என் துணைவியார், கோயில் பிரசாதமான குங்குமத்தை அவனிடம் கொடுத்து, "அம்மாகிட்டே கொடுப்பா' என்று அனுப்பிவைக்கிறார். ஜெயராஜின் மகன் வீட்டுக்குத் திரும்ப, அவன் கையில் குங்குமம் இருப்பதைப் பார்த்து ஜெயராஜ் விசாரிக்கிறார். விவரம் அறிந்ததும், அதை வாங்கிக்கொண்டு, மகனை அனுப்பிவிட்டு, இவர் மட்டும் மாடிக்கு வந்தார்.

என்னிடம், "அண்ணி கொடுத்தாங்கண்ணே' என்று அந்த குங்குமத்தைக் கொடுத்தார். மகள் பிறந்தாளில் வழக்கமாக கேக்கும் சாக்லேட்டும் கொடுப்போம். இந்த முறை விநாயகர் கோயில் குங்குமம். மூத்த மகள் பிரபாவுக்கு செல்போனில் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன்.

வீட்டைச் சுற்றி இருந்த போலீஸை, அவர்களின் திருட்டுத்தனத்தை விரட்டி விரட்டி தம்பி பிரகாஷ் தன் டூவீலரில் போட்டோகிராபர் இளங்கோவனை வைத்துக்கொண்டு திறமையா எடுத்த படங்கள் எல்லா பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டது. பத்திரிகைகளும் கொதித்தெழுந்தன. எல்லா அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. புகைப்படங்கள் எடுத்த தம்பிகள் பிரகாஷ், சம்பத், இளங்கோ மூவருக்கும் ஒரு சபாஷ்.

என்ன வழக்கிற்காக என்னைப் போலீஸ் தேடுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஒருவரிடம் தம்பி காமராஜ் விசாரித்திருக்கிறார்.

"2 கேஸ் இருக்கு. எதிலே வேணும்னாலும் நடவடிக்கை எடுக்கலாம்?'

"எந்த 2 வழக்கு?'

"கந்தவேலு கேசும், பக்தவத்சலம் கேசும் இருக்குது. இரண்டையும் சீரியஸாகவும் கொண்டு போகலாம். சாதாரணமாகவும் விட்டுடலாம். நக்கீரனுக்கு எதிரான கேஸ்களை கவனிக்கும் பொறுப்பை என்கிட்டே கொடுத்தாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்' என்று தம்பியிடம் சொல்லியிருக்கிறார் அந்த அதிகாரி. அவரது இடத்தில், எஸ்.பி. ஸ்ரீதரை நியமித்தது ஜெ.வின் அரசாங்கம்.





இந்தத் தகவலை எனக்குத் தெரிவித்த தம்பி காமராஜ், "உங்களை ட்ரேஸ் செய்வதுதான் ஸ்ரீதரோட அசைன்மென்ட். எப்படியாவது உங்களை வெளியே வரவைக்கணும்னு வேலைகள் நடக்குது. அதற்காக, குடும்பத்தைக்கூட டிஸ்டர்ப் பண்ணுவாங்க. நாலைந்து இடங்களை நோட் பண்ணி, அங்கெல்லாம் உங்களை சர்ச் பண்ணவும் திட்டம் போட்டிருக்காங்க. ஆபீசுக்கும் வந்து ரெய்டு பண்ண ப்ளான் இருக்குது. புதுசா செல்போன் கனெக்ஷன் வாங்குறதை கண்டுபிடிச்சி அதை சீஸ் செய்யவும் ஐடியா பண்ணியிருக் காங்க. நக்கீரனை கவனிப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டியில் ஒரு பெரிய டீம் வேலை பார்த்துக்கிட்டிருக்குது' என்றார். புது சிம்களை சீஸ் செய்யும் சி.பி.சி.ஐ.டி.யின் வேலை தொடங்குவதற்கு முன்பாக நான்கைந்து சிம்கார்டுகளை வாங்கிவிடுவோம் என்று வாங்கி வைத்துவிட்டேன்.

2003-ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவில் பிறந்தாலும், நமது வாழ்க்கையில் விடியல் பிரகாசமாக இருக்கும் என்று மனது நம்பிக்கைக் கொள்ளும். எந்தப் பிரகாசமும் இல்லாமல் மெல்லிய வெளிச்சமும், அடர்த்தியான இருட்டும் கலந்திருந்த அறைக்குள் நான் இருந்தேன். இந்த இருள் விலகும், புதிய வெளிச்சம் பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் குறையவில்லை.

அதேநேரத்தில், அலுவலகத்தையும் வீட்டையும் நோட்டம்விடும் போலீசின் கண்காணிப்புத் தீவிரமானது. நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்பெஷல் டீம் சுற்றிக் கொண்டிருந்தது.சட்டரீதியான பாதுகாப்பைத் தேடுவதைத் தவிர நமக்கு வேறு எந்த பாதுகாப்பும் கிடையாது. அதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ரிட்மனுக்களை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர நமது அட்வகேட் பெருமாள் முயற்சியெடுத்தார். அரசின் அட்வகேட் ஜெனரலோ, "ஒரு வாரம் கழித்துதான் உங்கள் வழக்கு, விசாரணைக்கு வர முடியும்' என்றார். காலதாமதத்தின் மூலம், கண் காணிப்பை அதிகப்படுத்தி, பொய்வழக்கில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம். அதனால் உச்சநீதி மன்றத்தின் உதவியை நாடுவது என முடிவு செய்யப் பட்டது.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தம்பி காமராஜ் டெல்லி சென்றார். நம் சார்பில் நமது அட்வகேட் பெருமாள், டெல்லி வழக்கறிஞர் அகர்வாலா இருவரும் ஜனவரி 7-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அதில், ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வீரப்பன் வழக்குகள் பலவற்றை மறுவிசாரணை என்ற பெயரில் ஓப்பன் செய்து என்னை அந்த வழக்குகளில் குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். இந்நிலையில், கர்நாடக டி.ஜி.பி. தினகர் எழுதிய அவதூறு புத்தகத்திற்காக அவர் மீது வழக்குப் போட்டுள்ளேன். இந்த வழக்கு தொடரப்பட்ட பின் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 27-ந் தேதி முதல் , போலீசார் 3 வேன்களில் என் வீட்டருகே முகாமிட்டு ரகசிய கண்காணிப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர். எங்கள் நிருபர் சிவசுப்ரமணியனைக் கடத்திச் சென்று பொய் வழக்குகள் போட்டதுபோல என் மீதும் பொய் வழக்குகள் போட போலீஸ் முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளைத் தடுத்து பத்திரிகை சுதந்திரம் காக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டதுடன்,நக்கீரன் அலுவலகத்தையும் என் வீட்டையும் போலீசார் கண்காணிக்கும் படங்களும் அந்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தன.

இந்த மனுவை நீதியரசர்கள் ராஜேந்திரபாபு, பிரிஜேஷ்குமார், ஜி.பி.மாத்தூர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு தயாரானது. நமது மனு தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ப டெல்லியில் மூவ் செய்த ஜெ அரசால், உச்சநீதிமன்றம் நமது மனுவை ஏற்றுக்கொண்டு, பத்திரிகையாளர்களின் உரிமைகள் குறித்து கருத்து தெரிவித்ததை ஏற்க முடியவில்லை. மனு மீதான விசாரணைக்கு முன்பாக, என்னைப் பிடித்து உள்ளே தள்ளிவிடவேண்டும் என்பதுதான் அரசு இயந்திரத்தின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

டெல்லியில் நடக்கும் மூவ்கள் பற்றி உடனுக் குடன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத் தகவல் வர, இங்கிருந்து நக்கீரனுக்கு எதிரான நடவடிக்கைகள் வேக மெடுத்தன.

கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கு விசாரணைக்காக கோபி கோர்ட்டில் ஜனவரி 9-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டி ருந்தது. ஊழல் வழக்குகளில் ஆஜரா காமல் வாய்தா வாங்குவதில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது அரசாங்கம் நம் மீது போட்ட அத்தனை பொய் வழக்குகளுக்கும் அஞ்சாமல், வாய்தா கேட்காமல், கோர்ட்டில் ஆஜராகி விசாரணையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, பொய் வழக்கைப் பொடிப்பொடியாக்குவது நம் வழக்கம்.

இந்த முறை, அரசும் போலீசும் போட்டுள்ள சதித்திட்டத்தால் வெளிவரமுடியாமல் இருக்கிறேன். தலைமறைவாகி 13 நாட்களாகிவிட்டன. நான் வெளியே வந்தால், தூக்கிச் சென்றுவிடவேண்டும் என்ற வெறியோடு போலீசார் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோர்ட்டை மதித்து நடப்பவன் என்பதால் எப்படியும் நான் கோபியில் ஆஜராவேன் என்றும், அப்போது கைது செய்துவிடலாம் என்றும் காவல்துறை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

நான் அட்வகேட் ப.பா.மோகனிடம் பேசினேன். "சார்.. இந்த முறை நான் கோர்ட்டுக்கு வந்தா அரெஸ்ட் பண்ணுவாங்க. வெளியே வருவது சேஃப்ட்டியா தெரியல. வாய்தா வாங்கிடலாமா?'

"சிவாவும், ஜீவாவும் இந்த முறை அப்பியர் ஆகட்டும். நீங்க, உடல் நிலை சரியில்லைன்னு ஒரு தந்தி கொடுங்க. அதோடு, ஒரு அஃபிடவிட்டும் அனுப்பி வையுங்க. நான் பார்த்துக்குறேன்.'

-ப.பா.மோகன் சொன்னது போலவே, உடல்நிலையைக் காரணம் காட்டி தந்தி கொடுத்துவிட்டு, அஃபிடவிட்டும் அனுப்பி வைத்தேன். 9-ந் தேதியன்று கோபி கோர்ட்டுக்கு ரொம்பவும் பரபரப்பாக வந்திருக்கிறார் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன்.

கோர்ட்டுக்கு வெளியில், நமது அட்வகேட் ப.பா.மோகனைப் பார்த்த சங்கரநாராயணனின் குரலில் உற்சாகம் வெளிப்பட்டிருக்கிறது.

""கோபால் வருவாரா?''

""வருவார்..''

""எங்களுக்குத் தெரிஞ்ச தகவல்படி அவர் திருச்சியிலிருந்து வந்துக்கிட்டிருக்கிறார்.''

-நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் போட்டு வாங்குவதற்காக இப்படியொரு தகவலை அவராகவே சொல்லியிருக்கிறார் அரசு வழக்கறிஞர். அவர் விடாக்கண்டர்னா, நமது ப.பா.மோகன் கொடாக் கண்டராச்சே!

""எனக்கு தெரிஞ்சு, கோவைக்கு ஃப்ளைட்டில் கோபால் வர்றாருன்னுதான் தகவல்'' என்று ப.பா.மோகன் சொன்னதும், நான் எப்படியும் வந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்போடு இருந்தது அரசு தரப்பு. கோர்ட்டில் வாதங்கள் தொடங்கியபோது, என் தந்தியையும் அஃபிடவிட்டையும் நீதிபதியிடம் கொடுக்கிறார் ப.பா.மோகன். பி.பி.க்கு பி.பி. எகிறிவிட்டது.

""நோ.. நோ.. கோபால் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறார். கோர்ட்டை அவமதிக்கிறார். அவர் ஆஜராகாததற்கு உடனே வாரண்ட் போடுங்க'' என அவரசப்படுத்துகிறார்.

ப.பா.மோகன் விடவில்லை. ""என் கட்சிக்காரர், கோர்ட் உத்தரவுகளை மதித்து நடப்பவர். வழக்கு என்றால் காலை முதல் மாலை வரை நீதி மன்றத்தில் காத்திருப்பவர். அவர் எப்படி கோர்ட்டை அவமதிப்பார்? உடல்நலம் சரியில்லாததால் அவரால் ஆஜராக முடியவில்லை.''

""வாரண்ட் போட்டு, உடனே அதை எக்ஸிக்யூட் பண்ண ஆர்டர் போடுங்க யுவர் ஆனர்-'' பி.பியின் வேகம் குறையவில்லை. ப.பா.மோகன் பொறுமையாக வாதாடி, வேறு தேதி கேட்டார்.

""நாளைக்கே அடுத்த வாய்தா போடவேண்டும்'' என்றார் பி.பி. நீதிபதியோ 23-ந் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்தார். எனக்குத் தகவல் வந்ததும், ஒரு நெருக்கடியிலிருந்து மீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது.

அதற்குள் என்ன செய்யலாம் என ஜெ அரசும் போலீசும் வேகம் காட்டியது. அடுத்த அதிரடிக்காக அவர்கள் நாடியது, கோவை நீதிமன்றத்தை. அங்கே..

-யுத்தம் தொடரும்

"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள கிராமம்!


"கல்வி அறிவு பெற்ற முதன்மை மாநிலம் எங்கள் மாநிலம்தான்' என சேட்டன்களும், சேச்சிகளும் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட கேரளாவிலேயே... அந்த மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தை அறியாத கிராமம் ஒன்றும் இருக்க... அந்த கிராம மக்களுக்கு மலையாளம் சொல்லிக் கொடுத்து மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்... தமிழ்நாட்டில் இருந்து சென்ற சிந்து...

அந்த சிந்துவை எழுத்தறிவித்த இறைவனாக ஒரு மாவட்டமே கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறது.

கேரள இடுக்கி மாவட்டத்தில் "கட்டப்பன்'யில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அந்த அட்டபாடி கிராமம். மரம், செடி, கொடிகள் என புடைசூழ பச்சை பசேலாக காட்சி தரும் அந்த கிராமத்தில் 350-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. காட்டு பயிர்களை விவசாயமாக ஏற்றுக் கொண்ட அந்த கிராமத்தில், கேரள அரசால் ஒரு பள்ளிக்கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் இருந்தும் அங்கிருக்கும் ஒருவருக்குக் கூட கல்வியறிவைக் கேரள அரசால் கொடுக்க முடியவில்லை. அதற்குக் கார ணம் அந்த மக்களுக்குத் தெரிந்த ஒரே மொழி மலைவாழ் மக்கள் பேசுற எழுத்து உருவமே இல்லாத ஒரு மொழி. இதனால் பாடம் சொல்லிக் கொடுக்கப் போன வாத்தியார்களுக்கு இம்மக்களின் மொழியும், இந்த மக்களுக்கு வாத்தியார்கள் பேசிய மலையாள மொழியும் தெரியவில்லை. இதனால் மாநில தாய்மொழியான மலை யாள மொழியை அந்த மக்களிடம் கொண்டு செல்ல அரசு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

எல்லாம் தெரிந்த படித்தவர்களால், கல்வியறிவு இன்றி நாகரீகமின்றி காணப்பட்ட அங்குள்ள சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாலியல் கொடுமை மட்டும் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் இடுக்கி மாவட்டத்துக்கு மருமகளாக நம்மூர் நெல்லை மாவட்ட வள்ளியூர் தமிழ்ப்பெண்... 27 வயது சிந்து போனார். அதன்பிறகு அந்த கிராமத்தில் நடந்ததை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

""கேரள அரசின் மக்கள்தொகையில் இந்த கிராம மக்களின் எண்ணிக்கையும் உள்ளது. அவர்களுக்கென்று அரசு ஒரு நடுநிலைப் பள்ளியை மட்டும் கட்டி கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு தாய்மொழியான மலையாள மொழி தெரியாததால் எந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அந்த கிராமத்தின் பக்கமே போவது கிடையாது. பள்ளிக்கூடத் துக்கு ஆசிரியர்களும் வருவது இல்லை. பனிஷ்மெண்ட் டூட்டியில் வரும் ஆசிரியர்கள் கூட அந்த மக்கள் பேசும் மொழியை கேட்டு அன்றைக்கே தலையை பிய்த்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

இவர்களை எப்படி சரிப்படுத்துவது என்று கேரள கல்வித்துறை கைபிசைந்து கொண்டிருந்த நிலையில்...

இந்த கிராமத்தை நேரில் சென்று பார்த்த நான் அந்த மக்களுக்கு எப்படியாவது கல்வியறிவு ஊட்ட வேண்டும் என்ற வைராக்யம் எடுத்துக் கொண்டேன். தமிழில் எம்.எஸ்.சி. பி.எட்., படித்த நான் அரைகுறையாக தெரிந்த மலையாள மொழியை கணவர் ஷாஜன் உதவியுடன் முழுமையாக கற்றேன். அந்த மக்களுக்கு நான் ஆசிரியையாக பணியாற்ற அரசிடம் கோரிக்கை வைத்தேன். கேரள அரசோ... நான் தமிழ்ப் பெண் என்பதால் மறுத்து விட்டது. இருந்தும் என்னுடைய முயற்சியை விட்டு விடாமல் இரண்டு ஆண்டுகளாக அந்த மக்க ளோடு பழகி அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொண்டேன். உதாரணத்துக்கு மரச்சீனி கிழங்கு என்றால் அவர்கள் மொழியில் தவளை என்றும் அரிசி என்றால் உயிர் என்றும் அர்த்தம் இருந்தது.

பின்னர் அந்த கிராமத்து குழந்தைகளுக்கும் இளைஞர்களுக் கும் மலையாள மொழியைக் கற்றுக் கொடுத்தேன். இதற்காக கேரள அரசின் பாட புத்தகங்களை சொந்த செலவில் வாங்கினேன். 3 ஆண்டுகளில் 350 குழந்தைகள் மலையாள மொழியை பேசத் தொடங்கினார்கள். இதனைப் பார்த்த கேரள கல்வித்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்தோடு தமிழச்சியான என்னை அந்தப் பள்ளியிலேயே ஆசிரியராக அமர வைத்தனர். தற்போது 4-ம் வகுப்பில் 250 குழந்தைகள் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு 80 சதவீத தேர்ச்சியை கொடுத்து இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இப்போது தான் கேரளா முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. இந்த பெருமை என்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தமிழுக்குத்தான் சேர வேண்டும். இந்த குழந்தைகளின் கல்விக்காக இரவு, பகல் உழைக்க வேண்டுமென்ற காரணத்தினால் குழந்தை பெறுவதைக் கூட தள்ளி வைத்துவிட்டேன்'' என்றார் உற்சாகமாக.

மாநிலமொழியான மலையாளத்தில் பேசி அசத்தும் அட்டபாடி கிராம மாணவர்களிடம் பேசினோம். ""தமிழ்நாட்டிலிருந்து வந்து எங்களை இந்த அளவுக்கு மாற்றிய அந்த டீச்சர்தான் எங்களுக்கு தெய்வம். என்றைக்கும் எங்களோடுதான் இருக்க வேண்டும். நாங்கள் படித்து வேலைக்கு போவதை அந்த டீச்சர் பார்க்க வேண்டும். சிந்து டீச்சர் மூலம் தமிழை யும் நாங்கள் விரைவில் கற்றுவிடுவோம். எங்கள் ஊருக்கே அந்த சிந்து டீச்சரின் பெயரை சூட் டப் போகிறோம்'' என் றார்கள் நெகிழ்ச்சியாய்.

கல்வியாளர்களும், இடுக்கி மாவட்ட மக்க ளும் சிந்துவின் புகழை எப்போதும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழகத்தோடு எப்போதும் வம்பு செய்துகொண்டிருக்கும் கேரள அரசு தமிழர் களின் உணர்வை இனி யேனும் உணருமா?

அரசு வேலைக்கு லஞ்சம்? நாமம் போட்ட டுபாக்கூர்!


""யோவ் காசை விட்டெறிஞ்சா கவர்ன்மெண்ட் வேலை நம்ம காலடியில வந்து விழும்யா... சரி, ஒரு ரெண்டு லட்சத்தை எப்படியாவது ரெடிபண்ணு முடிச்சிடலாம். இங்க பாரு லேட் பண் ணாத... இதே போஸ்ட்டிங்கிற்கு மூன்று லட்சம் கொடுத்து வேலைக்குச் சேர ரெடியா இருக்கானுங்க சரியா? ஹும்... கவர்ன்மெண்ட் வேலைன்னா ச்சும்மாவா?'' -இப்படி கெத்தாக இளிக்கும் டுபாக்கூர் பார்ட்டிகள் அதிகம். அப்படிப்பட்ட ஒருவனிடம்... ஏமாந்துதான், மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸிடம் புகார் கொடுத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக் கிறார்கள் கடலூர்வாசிகள்.

ஏமாந்தவர்கள் லிஸ்ட்டிலுள்ள அறிவழகனோ... ""ஏற்கனவே அவன்கிட்ட பணம் கொடுத்துட்டு வேலைக்காக காத்திருந்த செல்வம் மூலமாத்தான் அவனை சந்திச்சேன். அப்போ "ஏம்பா உனக்குத்தான் வேலை வாங்கித் தர்றேன்னு சொன்னேன். நீ என்னடான்னா ஊர்ல இருக்கிறவன் எல்லாரையும் கூட்டி வந்து ரெக்கமண்டேஷன் பண்ற?' என்று அவன் டென்ஷன் ஆக... அடேங்கப்பா... எப்படி யாவது இவர் கையில கால்ல விழுந்து எவ்ளோ பணமா இருந்தா லும் கொடுத்து வேலையை வாங்கிடணும்னு என் மனசு துடிக்க ஆரம்பிச் சிடுச்சு. ரொம்ப கெஞ்சின பிறகுதான் ஒத்துக்கிட் டான்.

"இங்க பாருப்பா நானும் உன்னை மாதிரிதான் மாட்டு ஊசி போடுற கம்பவுண்ட ரா வேலைக்குச் சேர்ந்து... இன்னைக்கு கால்நடை மருத்துவ ஆய்வாளரா உயர்ந்து பல பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துக் கிட்டிருக்கேன்'னு அவன் சொல்ல... புல்லரிச்சுப் போயிட்டேன். அதுக்கப்புறம்தான் எங்க வீட்ல பணம் கேட்க... "புள்ள மாட்டு ஊசி டாக்டராகப் போறான்னு சொத்தையெல்லாம் வித்துக் கொடுத்த ஒரு லட்சத்தைக் கொடுத்தேன். வேலைவாங்கித் தராம... எஸ்கேப் ஆகிட்டாங்க'' என்கிறார் வேதனையுடன்.

தோட்டப்பட்டுவைச் சேர்ந்த ராமனோ... ""பணம் திரட்டுறதுக்காக என் மகள் பிறந்த நாள் விழாவை பத்திரிகை அடிச்சு கொண்டாடுனேங்க. அந்தப் பணத்தைத்தான் கம்பவுண்டர் வேலைக்குக் கொடுத்துட்டு ஏமாந்து நிற்கிறேன் ப்ச்...'' என்கிறார் சோகமாக.

""செம்மண்டலத்துல பேட்டரி கடை வெச்சிருக்கிற கோகுல்ங்கிறவன்தாங்க அந்த டுபாக்கூர் பயலோட அஸிஸ் டெண்ட். நாங்க கொடுக்கிற பணத்தையெல்லாம் டி.டி.யாக மாற்றணும்னு ஆயிரம், ரெண்டாயிரம்னு வசூல்பண்ணு வாங்க'' என்கிறார் பொய்யாமொழி டென்ஷனாக.

பரணி என்கிற சௌந்தரராஜன்தான் வேலை வாங்கித் தருவதாக குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், ""இவன் பணம் வாங்கிட்டு சிலபேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துருக் காங்க. அதை நம்பித்தான் பலர் பணம் கொடுத்து ஏமாந்திருக்காங்க. இவனோட காதல் மனைவியும் இவனுக்கு உடந்தைதான். எங்க போனாலும் மனித உரிமை கமிஷன் மெம்பர்னும் அமைச்சரை தெரியும்னு எஸ்.பி.யை தெரியும்னும் மிரட்டிக்கிட்டு திரியுறான். இதைவிட காமெடி என்னன்னா... அவன் கால்நடை மருத்துவரே கிடையாது. எட்டாவதே தாண்டாதவன்தான்'' என்று சிரிக்கிறார்கள் பரணியைப் பற்றி அறிந்தவர்கள்.

எஸ்.பி.யிடமிருந்து ஃபார்வர்டு ஆன "ஏமாந்தவர்களின் புகார்' என்ன ஆச்சு?' என்று கேட்டோம் எஸ்.ஐ.மகேஷ்வரி யிடம். ""இனிமேதாங்க விசாரிக்கணும்'' என்று முடித்துக்கொண்டார்.

சீக்கிரம் விசாரித்தால் பரணிக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரி களும் சிக்குவார்கள்.

காஞ்சி Vs சிருங்கேரி! யாக ஃபைட்!


காஞ்சி ஜெயேந்திரருக்கு எதி ராக சிருங்கேரி சங்கராச் சாரியாரும், சிருங்கேரிக்கு எதிராக ஜெயேந்திரரும் மாறி மாறி யாகம் நடத்திய விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஏன்? எதற்கு? விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய ஆன்மிக நண்பர் ஒருவர்...

""காஞ்சி மடத்தின் மீது எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை சிருங்கேரி மடம். ஆதிசங்கரர் உருவாக்கியது மொத்தமே நான்கு மடங்கள்தான். அதில் காஞ்சி மடம் வராது. எப்படியோ பிற்காலத்தில் பிரபலமாக்கிவிட் டார்கள். அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அர்ச்சகர்களாக பணிபுரியும் அனைவரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அங்கு தீட்சை பெறாதவர்கள் யாரும் இங்கு பணியாற்ற முடியாது. இந்த விஷயத்திலும் இவர்களுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பலமுறை போட்டி போட்டும் ஒன்றும் முடியவில்லை. கோயில் கும்பாபிஷேகம்கூட சிருங்கேரி மடாதிபதி தலைமையில்தான் நடந்தது. அதை பெரிய அளவில் லாபி செய்து, தானும் கலந்துகொண்டார் ஜெயேந்திரர். இந்திய அளவில் பிரபலமான சாமியாராக இருந்தும் சிருங்கேரியிடம் தன்னுடைய பாச்சா பலிக்கவில்லை என்பது ஜெயேந்திரருக்கு வருத்தமாகவே இருந்தது. ராமேஸ்வரம் கோயிலில் தன்னுடைய பவர் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தார். மொட்டையாகி நிற்கும் வடக்கு, தெற்கு கோபுரங்களை எடுத்துக் கட்டினால் என்ன என்று யோசித்தவர், உடனே ஸ்பான்சர்களை பிடித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு அனுமதி கொடுக்கப் பட்டது.

2001-ம் வருடம் பெரும் ஆரவாரமாக வடக்கு கோபுரம் கட்டுவதற்காக ஜெயேந்திரரால் அடிக்கல் நாட்டப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்மட்டம் கிளம்பி 10 அடிக்கு உயரம் வந்துவிட்டது.

இந்த நிலையில்தான் 2004-ல் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளே போனார். அதோடு அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டன. ஜெயேந்திரர் சார்பாக யாரும் கோபுரம் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கக்கூடாது என்று ஜெயலலிதா கடுமையான உத்தரவைப் போட்டார்.

அதோடு கோபுரக் கட்டுமானப் பணி அப்படியே நின்றுபோனது. ஜெயேந்திரர் வழக்கு முடிந்து வந்தாலும் அவர் மூலம் கட்டுமானப்பணி நடக்கக் கூடாது என்று பெரும்பாலான புரோகிதர்கள் மற்றும் அறங்காவல் குழுவில் உள்ளவர்கள் சிருங்கேரி மடாதிபதியிடம் தெரிவித்தனர். அதோடுதான் அதற்கான பரிகார பூஜைகளை நடத்தியது மட்டுமல்லாமல் இனி கோபுரம் கட்டுமா னப் பணிக்கு எந்த வகையிலும் தடங்கல் வரக்கூடாது என்று யாகங்களும் நடத்தினார்கள் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தவர்கள்'' என்றார் அவர்.

சிருங்கேரி மடாதிபதியின் பக்தரான கோவை தொழிலதிபர் வசந்தகுமார் என்பவர் வடக்கு கோபுரத்தைக் கட்டித் தரும் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளார். தெற்கு கோபுரத்தின் செலவை சிருங்கேரி மடமே ஏற்றுக்கொண் டுள்ளது.

கடந்த மாதம் இதற்கான வேலைகள் ஆரம்பமானது. இதற்கிடையே இந்த வேலைகள் நடைபெறக்கூடாது என்று ஜெயேந்திரர் சில பூஜைகளை காஞ்சியில் செய்கிறார் என்ற தகவல் சிருங்கேரி தரப்புக்குத் தெரியவர, அதை முறியடிக்கும் பூஜைகளை ராமேஸ்வரத்தில் கடந்த வாரம் முழுவதும் நடத்தினர்.






தடங்கல் செய்ய நினைப்பவர்களை துவம்சம் செய்யும் மிருத்யுஞ்சய ஹோமம், சிருங்கேரி மட மேனேஜர் நாராயணன் மேற்பார்வையில் ராமநாத சாஸ்திரிகள் தலைமையிலான புரோகிதர்கள் மூலம் நடத்தப்பட்டது. இப்படியே தினமொரு யாகம் நடத்தப்பட்டு கணபதி ஹோமத் தோடு நிறைவுபெற்றது.

நாம் இது சம்பந்தமாக கேட்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள சிருங்கேரி மடத் திற்குச் சென்றோம். மேனேஜர் நாரா யணனோ, ""இது சம்பந்தமாக தற்போது எதுவும் பேச முடியாது'' என்று கிளம்பி விட்டார்.

தெற்கு கோபுரம் அருகே யாகப் பொருட்களுக்கு காவலாக நின்ற கோயில் ஊழியரிடம் பேசினோம்.
""கோபுர பேஸ் மட்டத்திலிருந்து 20 அடி வரைக்கும் கருங்கல்லில்தான் கட்டவேண்டும். அது ஆகம விதி மட்டுமல்ல, கோபுரம் ஸ்ட்ராங் காகவும் இருக்கும். ஆனால், ஜெயேந்திரரோ 10 அடி மட்டும் கருங்கல்லால் கட்டிவிட்டு மீதியை செங்கலால் எழுப்பி யிருக்கிறார். இதனால் செலவை மிச்சம் பண்ணலாம் என்று நினைத்திருக்கிறார். அதுதான் அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. இப்போது சிருங்கேரி, அந்த செங்கல் கட்டுமானத்தை உடைத்தெறிய சொல்லிவிட்டார்'' என்றார்.
என்னதான் சிருங்கேரி மடாதிபதி சொன்னாலும் ஒரு பேச்சுக்கூட ஜெயேந்திரரிடம் ஒரு தகவலும் சொல்லாமல் கோபுர வேலைகளை கோயில் நிர்வாகம் செய்துவிட்டதாக வருத்தம் அடை கிறார்கள் ஜெயேந்திரரின் பக்தர்கள்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் முரளிதரன், ""பல வருஷங்களா யாருமே கண்டுகொள்ளப்படாமல் இருந்ததை, காஞ்சி சங்கராச்சாரியார்கள்தான் கண்டுகொண்டு வடக்கு, தெற்கு கோபுரங்களைக் கட்டுவதற்குண்டான ஏற்பாடுகளை செய்தனர். இங்கே மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கும் இப்படித்தான் நன்மைகளை செய்துகொண் டிருக்கிறார்.

வழக்கு இருப்பதால் அவர் குற்றவாளி ஆகிவிடுவாரா? ஆனால் கோயில் நிர்வாகம், அவர் உருவாக்கிய பணியை, வேறு மடாதிபதி செய்யப்போவதை "கர்ட்டசி'க்குக்கூட சொல்லவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

பூஜை, யாகமெல்லாம் மீண்டும் ஒரு தடங்கல் வரக்கூடாது என்பதற்காகத்தான் செய்கிறார்கள். வேறு நோக்கமல்ல.

ஆன்மிகவாதிகளுக்கு அதிகப்படியான மரியாதை கொடுக்கும் கலைஞர் ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு தகவல் தெரிவிக்காமல் கோபுர வேலைகள் ஆரம்பித்ததுதான் நெருடலாக உள்ளது'' என்றார்.

இன்னும் மூன்று வருடங்களில் இரண்டு கோபுரங்களும் கம்பீரமாக எழுந்து நிற்கும். அதன் பெருமை தனக்குக் கிடைக்குமென்று நினைத்தார் ஜெயேந்திரர். ஆனால் அதன் பெருமை சிருங்கேரி மடாதி பதிக்குத்தான் கிடைக்குமென்றால் விதியை என்ன சொல்வது?

""அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்!'' -பூசாரியின் புது டெக்னிக்!



""கல்யாணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லையா? என்ன குழந்தை வேண்டும்? ஆணா, பெண்ணா? தீராத நோயால் துன்பப்படு கிறீர்களா? கிரகம் சரியில்லையா? வாருங்கள்! தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டினம் வண்டிப் பேட்டை காமாட்சி அம்மன் கோயிலுக்கு வாருங்கள்! காமாட்சி அம்மன் கடைக்கண் காட்டுகிறாள். பூசாரி குண சேகரன் பூர்த்தி செய்கிறார்!'' என்ற பூசாரி குணசேக ரனின் பிட் நோட்டீஸ் விளம்பரங் களுக்கு நல்ல பலன் கிடைத்தது. பூசாரி குணசேகரனைத் தரிசிக்கக் கூட்டம் கட்டி ஏறுகிறது.

வண்டிப்பேட்டை வயல் வெளியில் சின்னஞ்சிறிய காமாட்சி அம்மன் கோயில் தென்னங்கீற்றால் ஆன முன் மண்டபக் கொட்டகை.

காலை 11 மணிக்கு அம்ம னுக்குப் பூசையைத் தொடங்கி னார் பூசாரி குணசேகரன். தீப ஆராதனை முடிந்ததும் தென் னங்கீற்றுக் கொட்டகையில் ஓரமாக உட்கார்ந்தார். ""உங்கள்ல யார் யார் என்ன வரத்தை அம்ம னிடம் கேட்கப் போறீங்க? ஒவ் வொருத்தரா வாங்க!'' -பக்தர்களை அழைத்தார்.

வரிசையில் முன்னால் நின்ற சிவா என்பவர் போனார். ""அய்யா எனக்குத் தீராத வயித்துவலி. செய்யாத வைத்தியம் பாக்கி இல்லை. மெட்ராசுக்கு கூட போய் பார்த்துட்டு வந்துட்டேன். தீரலை!'' உட்கார்ந்து சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டினார்.

""பேனா பேப்பர் இருக்கில்ல... ஒரு சீட்ல இங்கிலீஷ் வைத்தி யம்னும், இன்னொரு சீட்ல மூலிகை வைத்தியம்னும் எழுதி சுருட்டி அம்மன் காலடிகிட்ட போட்டு பக்தியோட கும்பிடுங்க. அப்புறம்... ரெண்டு சீட்ல ஒண்ணை மட்டும் எடுத்துட்டு வாங்க!'' என்றார் பூசாரி. சொன்னபடியே செய்தார் சிவா. "மூலிகை வைத்தியம்' என்று எழுதப்பட்ட சீட்டை எடுத்து வந்து பூசாரியிடம் கொடுத்தார்.





சில மூலிகைப் பொடிகளோடு, வேப்பிலையைச் சேர்த்து அரைத்து, அதில் அம்மனின் திருநீறையும் கலந்து சிவாவுக்கு கொடுத்த பூசாரி, ""இதுமாதிரி 15 நாள் சாப்பிடுங்க. அம்மா குணப்படுத்தி விடுவாள். தட்சணை எதுவும் வேணாம். விருப்பம் போல உண்டியல்ல போட்டுட்டுப் போங்க!'' என்றவர் அடுத்த பக்தரை அழைத்தார்.

""சின்னதா போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கேன். வருமானம் சரியில்லை...!'' என்றபடி தயா என்ற பக்தர் சென்றார்.

""இதே தொழிலைச் செய்யலாம், வேற தொழில் செய்யலாம்னு ரெண்டுல எழுதிப் போட்டுக் கும்பிட்டு ஒரு சீட்டைக் கொண்டு வாங்க!'' என்றார்.

"இதே தொழில்' என்ற சீட்டு வந்தது. ""பயப்பிடாதீங்க. தொழில் நல்லா டெவலப்பாகும்... இந்தாங்க அம்மன் படம்... ஸ்டுடியோவில் வச்சு நம்பிக்கையோட கும்பிடுங்க!'' அவரை அனுப்பிவிட்டு, மூன்றாவதாக நின்ற நம்மை அழைத்தார். ""உங்களுக்கு என்ன பிரச்சனை...?'' கேட்டார்.

""நீங்க கொடுக்கிற சீட்டால பயன்பெற்ற வர்கள் யாராவது உண்டா? சொல்ல முடியுமா?'' என்றோம். நம்மை ஏற இறங்கப் பார்த்த பூசாரி ""நீங்க யாரு?'' என்றார்.

""நான் நக்கீரன் நிருபர்!''

""நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொன்னா சரியாயிருக்காது. இங்கே வந்திருக்கிற பக்தர்கள்ட்ட கேளுங்க. சொல்லுவாங்க!'' பக்தர்களைக் கைகாட்டினார்.

வரிசையில் அமர்ந்திருந்த காமாட்சி அம்மன் பக்தர்களிடம் சென்றோம்.

சங்கரானந்தம்-லதா : கல்யாணமாகி 6 லருஷமா புள்ளையில்லை. எல்லா இங்கிலீஷ் வைத்தியமும் பாத்திட்டுதான் கடைசியா இங்கே வந்தோம். சீட்டெழுதிப் போட்டோம். அம்மன் அருளால, பூசாரியய்யா தந்த மூலிகை மருந்தால ஒரே வருஷத்தில இதோ இந்தப்பய பொறந்தான் அந்த நன்றி மறக்காமத்தான் வாராவாரம் இங்கே வர்றோம்.

கணபதி (50 வயது) : என் வயித்தில பெரிய கட்டி. வலியோ வலி. தஞ்சை டாக்டர் முரளி, இது புற்றுநோய்... ஆபரேஷன் செய்யலாம். செஞ்சா எதுவும் நடக்கலாம். முத்திப் போச்சுனு சொன்னார். உயிர்ப் பயத்தில அழுதுகிட்டிருந்த என்னை இங்கே கூட்டி வந்தாங்க. சீட்டுப் போட்டு பாத்துவிட்டு, பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்க சரியாயிடும்னு சீட்டு வந்தது. ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். இப்ப எந்த பயமும், வலியும் இல்லை.

ஆறுமுகம் : என் தங்கச்சி ஜெயந்தியை காரைக்குடியில கட்டிக் கொடுத்தோம். 38 வயசாச்சு. குழந்தை இல்லை. இங்கே வந்து போன பிறகு இப்ப குழந்தை பிறந்திருக்கு. அதான் அம்மாகிட்ட விபூதி வாங்க வந்தேன்.

கோவிந்தம்மாள் (கீழத் தோட்டம்) : எம் மகள் ஜெயலட்சுமிக்கு 29 வயசு. கல்யாண மாகலை. இங்கே வந்து சீட்டெழுதிப் போட் டேன். வீட்டுக்குப் போ... உன் மகளுக்கு மாப்பிள்ளை வீடு தேடி வருவார்னு சீட்டுல வந்துச்சு. அடுத்த வாரம் கல்யாணம், பூசாரியய் யாட்ட அந்த நல்ல சேதியைச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.

பஞ்சவர்ணம் : என் புருஷனுக்கு கால்ல பெரிய கட்டி... அதிராமபட்டினம் ஆஸ்பத்திரி யில பார்த்தோம். புண்ணுதான் பெரிசாச்சு. காலு எலும்பே தெரிஞ்சுச்சு... இங்கே வந்தோம். எழுதிப் போட்டுப் பார்த்து பூசாரி மருந்து தந்தாக. இப்ப புண்ணு ஆறிருச்சு. என் புருஷன் வேலைக்கு போறாக!

சுப்பிரமணி-தேவிகா தம்பதியும், கோபு-உமா தம்பதியும் தங்கள் ஆண் குழந்தைகளோடு வந்திருந்தார்கள். காமாட்சியின் கிருபையும், பூசாரியின் மருந்தும் தங்களுக்கு வாரிசைக் கொடுத்ததாக சொன்னார்கள்.

பக்தர்களை சந்தித்துவிட்டு கிளம்பத் தயாரானபோது, நம்மிடம் வந்த பூசாரி குணசேகரன் ""என்கிட்ட எந்த மாயமந்திரமும் இல்லை. எந்தச் சக்தியும் இல்லை. அம்மனிடம் வேண்டி சீட்டு எழுதிப் போட்டு கேட்கிறேன். அம்மன் அனுமதி கொடுத்தா... குழந்தைவரம் உள்பட எல்லாம் நடக்கும். ஏதோ எனக்கு தெரிஞ்ச மூலிகைகளை அரைச்சுக் கொடுக்கிறேன். மக்கள் என்னை நம்பி வரலை. காமாட்சி அம்மனை நம்பி வர்றாக...!'' என்றபடி நம்மை வழியனுப்பி வைத்தார்.

ஊருக்குள் நாம் சந்தித்த இளைஞர்களோ ""பூசாரி குணசேகரனுக்கு சித்த வைத்தியம் தெரியும். அம்மன் பேரைச் சொல்லி அந்த வைத்தியத்தைச் செய்றாரு... சாதாரணமா சித்த வைத்தியம்னு சொன்னா யாரும் வரமாட்டாங்க. அம்மன் அருள்னா பயபக்தியோடு வருவாங்களே... அதுதான் டெக்னிக். அந்த அம்மனாலும், பூசாரியாலும் எங்க ஊர் வளருது... ஊருக்கு பேரும் புகழும் கூடுது!'' என்றார்கள்.

""நிறை வாழ்வு வாழ்க!''


இளையமகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பித ழோடும், அகம் காட்டும் கொள்ளைச் சிரிப்போடும், ஆகஸ்ட் 27 வெள்ளி அன்று நக்கீரன் அலுவல கத்திற்கு வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சூப்பர் ஸ்டாரை, நமது ஆசிரியரும், நக்கீரன் மேலாண் இயக்குநர் குருசாமியும் வாசலில் நின்று வரவேற்று, 3/4 மணி நேரம் பிரிண்டிங், பைண்டிங், கம்ப்யூட்டர், விநியோகம், நிர்வாகம், செய்திப் பிரிவு மற்றும் ஓம் சரவணபவ, இனிய உதயம், சினிக்கூத்து, பொதுஅறிவு உலகம், பாலஜோதிடம் என அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, நக்கீரன் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தி னார்கள். ""ரஜினி ரசிகன் வந்தபோது பார்த்தேன். இப்போது வயதாகி விட்டதோ...'' என ஒவ்வொரு வரையும் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார், நக்கீரன் இணையாசிரியர் காமராஜை சந்தித்து உரையாடினார். நிறைவாக, ஆசிரியர் அறைக்கு வந்ததும், தாம்பூல மரவையில் அழைப்பிதழை வைத்து, ஆசிரியரிடம் தந்து ""இது உங்க வீட்டுக் கல்யா ணம் கட்டாயம் வரணும்...!'' மிகுந்த உரிமையோடு அழைத்தார்.

3.9.10 வெள்ளி காலை 5 மணிக்கே சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்திற்கு இருவீட்டாரும் வந்துவிட்டனர். 6 மணிக்கு ஹோமம் தொடங்கியது. நமது ஆசிரியர் உட்பட, மணவிழாக் காண வந்த அத்தனைபேரையும் முகப்பில் நின்று கரம் கூப்பி வரவேற்று, அழைத்துச் சென்று இருக்கைகளில் அமர வைத்துக்கொண்டிருந்த ரஜினி, 7.30-க்கு மராட்டியத் தலைப்பாகையுடன் மணவிழா மேடையேறினார். பாதபூசை சடங்குகள் நடந்தன. 8 மணிக்கு தந்தை ரஜினியின் மடியில் மகள் சௌந்தர்யா அமர, கெட்டி மேளம் முழங்கியது. மணமகன் அஸ்வின் மணமகள் சௌந்தர்யாவிற்கு திருப்பூட்டினார். மணமக்களை அழைத்து வந்து நமது ஆசிரியர் உட்பட தமிழக வி.ஐ.பி.க்கள் அனைவரிடமும் வாழ்த்து பெற வைத்தார் ரஜினி.

""நிறைவாழ்வு வாழ்க!'' என வாழ்த்தினார் ஆசிரியர்.

திரைக்கூத்து!


என்னாதான் பண்றது?


ரம்பாவின் அண்ணன் வாசு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும் மொழியில் எடுக்கப்பட்ட படம் ‘"விடியும்வரை காத் திரு'. ரம்பா, பிரகாஷ்ராஜ், முமைத்கான் என நிறைய்ய நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடி. ஆனால்... குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி விட்ட ரம்பா திரும்பவும் சினிமாவுக்கு வந்தது போல இருக்கும். அதனால் "இந்தப் படத்தை வெளியிட வேண்டாம்' என்கிற மனநிலையில் இருக்கிறார் ரம்பாவின் கணவர் இந்திரன். "படம் வெளியாகாவிட்டால் கடன் பிரச்சனை விசுவரூபம் எடுக்கும்' என ஃபீலாகிறார் ரம்பாவின் அண்ணன் வாசு. கணவருக்கும், அண்ணனுக்கும் நடுவில் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார் ரம்பா. ஒக்காந்து பேசி நல்ல முடிவா எடுங்க.

இன்னொரு கூடுதல் செய்தி... கனடாவில் இருக்கும் ரம்பா இப் போது முழுகாம இருக்காராம்.


சேலகட்ட சொல்றாங்க!


தயாநிதி அழகிரி தயாரிப்பில் "வ-குவாட்டர், கட்டிங்' படம் ஸைலண்ட்டாக தயாராகிவிட்டது. "வ' என்றால் கால்பங்கு. அதாவது... குவாட் டர்னு அர்த்தமாம். இந்தப் படத்தில் லேகா வாஷிங்டன் நாயகி வேஷம் கட்டியிருக்கிறார். லேகாவப் பத்தி "வ' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா சூப்பரா ஒரு தகவல் சொன்னாரு. ""லேகா எனக்கு நல்ல தோழி. திடீர்னு கோலிவுட்டை விட்டுட்டு பாலிவுட் போய்ட்டாங்க. ஏன்?னு கேட்டேன். ‘"கோலிவுட் ரொம்ப மோசம்.... சேலை கட்டி நடிக்கச் சொல்றாங்க... அழச் சொல்றாங்க... அதான் பாலிவுட் போயிட்டேன்'னு சொன்னார். "லேகா விரும்பிய காஸ்ட்யூம் "வ' படத்தில் கிடைச்சிருக்கு'' என கவர்ச்சிக் கதையைச் சொல்லி குவாட்டர், கட்டிங் அடிக்காமலேயே கிக்கேத்தினார்.


நல்லபுள்ளயா மாறீட்டாக!




முதன்முதலாக ஜீவா டபுள் ரோலில் மீன் வெட்டுபவராகவும், வக்கீலாகவும் நடித்து வரும் படம் "சிங்கம்- புலி'. டபுள் ஆக்ஷன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் சாய் ரமணி. சிங்கம்புலிக்கு கால்ஷீட் டேக்கா கொடுத்து வந்த திவ்யா பந்தனாஸ் இப்போ நல்ல புள்ளயா... சிங்கம்புலிக்கு இரை போடும் கவர்ச்சிமானாக கலக்கி வர்றாராம்.


அத மாத்த யாரால முடியும்!


இந்த முறை டார்க் ஏரியாவுக்குள் போகப் போறதில்லை. "அவன்-இவன்' ஜாலியான படம் என சொல்லியிருந்தார் பாலா. ஆனால் கடந்த ஒரு வாரமாக கீழ்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் பாலா.


அழ வச்சிருக்காங்க!


அடிதடி, அதகள ஸ்பெஷலிஸ்ட்டான டாக்டர் ராஜசேகரை தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘"மருதாணி' படத்தில் பாசமலர் கதையில் உருக உருக நடிக்க வச்சிருக்காங்க. டாக்டரும் செமயா சோக ஆக்டிங் குடுத்திருக்காராம்.


நக்கல் விட்ருக்காங்க!


"ஊமைவிழிகள்' புகழ் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ், கரண் நடித்திருக்கும் படம் ‘"இரண்டு முகம்'. "எதிர்க்கட்சித் தலைவி அடிக்கடி ஓய்வெடுப்பதில் தொடங்கி, ஆளுக்கொரு செல் போன் குடுத்தா மக்கள் ஓட்டுப் போட்டுட்டுப் போறாங்க' என்கிற இலவச அறிவிப்புகள் வரை சமகால அரசியலை நக்கல் விட்டிருக்கிறது ரூபன். ஜே. பேனா. இயற்கை விவசாயத்தின் அருமை, அந்நிய நாடுகளின் விபரீத ஆராய்ச்சிகளுக்கு இந்தியர்களை பரிசோதனை எலி யாக்குவது... என சமூக விஷயங்களை போகிற போக்கில் சொல்லி சிந்திக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.

அப்படியா!



காட்டன் வீரன் நடித்து சமீபத்தில் வந்த படம் மீடியாக்களிடம் பாராட்டைப் பெற்றாலும் கூட, வசூலில் மந்தம் காட்டுகிறது. இந்தப் படத்தை பெரிய இடத்து பேனரில் வெளியிட்டிருந்தாலும் கூட அந்த பேனருக்கு சம்பந்தமில்லை. பெர்மிஷன் வாங்கி அந்த பேனரை பயன்படுத்தி வெளியிட்டி ருக்கிறார்கள். ஆனால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் தியேட்டர்-டிஸ்ட்ரி பூட்டர் தரப்பு ரீ-ஃபண்ட் கேட்டு ஹீரோவின் அப்பாவிடம் பேசி வருகிறார்கள்.

மீண்டும் சிலை சர்ச்சை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பிற்கு கொம்பு சீவிக் கொண்டிருக்கிறார் தியாகி சுடலைமுத்து.

எம்.எல்.ஏ. அப்பாவு முயற்சியால், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு, கலைஞரின் பெற்றோர் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயரை நீக்கிவிட்டு, காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், புழல் சிறையிலும் உண்ணா விரதம் இருந்தார் தியாகி சுடலைமுத்து. இவருடைய கோரிக்கையை ஏற்று, பெயர் மாற்றத்திற்கு உத்தரவிட்டார் கலைஞர்.

இப்போது, அதே ராதாபுரம் பேருந்து நிலையத்தில், நிறுவப்பட்டி ருக்கும் கலைஞரின் பெற்றோர் சிலைக்கு அருகில், காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

இதற்கு எம்.எல்.ஏ. அப்பாவு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பியது.

""எதற்காக உங்கள் தரப்பு காமராஜர், கக்கன் சிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறது?'' -எம்.எல்.ஏ. அப்பாவுவிடம் கேட்டோம்.

""கலைஞரின் பெற்றோர் சிலை களையும், பெயரையும் மாற்ற வேண்டு மெனப் போராடியவர்கள்தான் இப்போதும் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆனால் நான் இதைத் தடுக்கவில்லை. தடுப்பதற்கு நான் யார்? நான் காமராஜருக்கும் கக்கனுக்கும் எதிரானவன் இல்லை. சிலை வைப்பதற்கு அனுமதி அளிப்பது அரசாங்கம். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்கிறார் அப்பாவு.

காமராஜர், கக்கன் சிலை அமைப் புக்குழு தலைவரான கே.பி.கே. ஜெயக் குமாரோ, ""இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கலைஞரால் மிகவும் போற் றப்படக்கூடியவர்கள் இந்த இரு பெரும் தலைவர்களும்'' என்கிறார்.

எதற்காக இப்படியொரு புதிய பிரச்சினை? -தியாகி சுடலைமுத்துவிடம் கேட்டோம்.

""குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் இருந்து ராதாபுரத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து, விவசாயத்தை செழிக்கச் செய்தவர்கள் காமராஜரும் கக்கனும்தான். அந்த நன்றிக்கடனுக்காகத் தான் அவர்கள் சிலைகளை வைக்க வேண்டுமென்கிறோம். பிரச்சினையை உருவாக்குவது எம்.எல்.ஏ.தான். இந்தச் சிலைகளை கலைஞரின் பெற்றோர் சிலைக்கு அருகில் வைப்பதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் அக்டோபர் 2-ம் தேதியன்று டில்லியில், காந்தி சமாதி முன்பு நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம்'' என்கிறார் சுடலைமுத்து.

காமராஜர் சிலையை ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டுமென்று, இந்தப் பகுதி காங்கிரசாரிடம் சொன்னதே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் என்றும், டில்லி உண்ணா விரதத்திற்கு ஏற்பாடு செய்யப்போவதும் இளங் கோவன்தான் என்றும் சொல்கிறார்கள் தியாகி சுடலைமுத்துவின் குழுவினர்.

நாட்டு நடப்பு!

திண்டுக்கல் : பால் பொங்குது பால் பொங்குது!


நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் "செல்ஃப் கிச்சனை' உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் வள்ளலார். 5 க்யாஸ் அடுப்புகள், தேவையான பாத்திரங்கள் உள்ள இந்த அடுப்படியை நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை அடுப்பு பற்றவைக்க 3 ரூபாய் கட்டணம். கஞ்சி, பால், சுடுதண்ணீர் என நோயாளிகளுக்கு தேவையானதை சமைக்க வும் காய்ச்சவும் சூடு பண்ணவும் செய்யலாம். தமிழ்நாட்டில் திண் டுக்கல் மருத்துவ மனையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த "சமையல் கூடத்தை' பழனி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களிலும் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் கலெக்டர் வள்ளலார்.

-சக்தி


வாணியம்பாடி :பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்...?


தோல் தொழிற்சாலைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளிகள் பலியாவது வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் சர்வசாதாரணமாகிவிட்டது. ""எந்திரங்களை வைத்து துப்புரவு செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களும், அதிக பட்ச அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்க வேண்டும்'' என்றெல்லாம் தோல் தொழிற்சாலை முதலாளிகளுக்கு கட்டாய அட்வைஸ் செய்தார் கலெக்டர் ராஜேந்திரன்.

கலெக்டரின் அட்வைஸ் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? கடந்த வாரம், வாணியம்பாடி நூருல்லா தோல் தொழிற்சாலையில் பாபு என்ற தொழிலாளி "ஷாக்' அடித்து இறந்துவிட்டார். பாபு குடும்பத்திற்கு ஒரு லட்சத்தைக் கொடுத்து, விபத்தை தற்கொலையாக்கி விட்டார்களாம்.

""திருட்டு கரண்ட் எடுக்கும்போதுதான் ஷாக்கடிச்சு பாபு செத்தார். உண்மையான காரணத்தை பகிரங்கமாக சொல்ல முடியுமா? அதோ அந்த பாபு டெம்பரரி ஒர்க்கர்தானே?'' மற்ற தொழிலாளிகள் வேதனையில் விம்மிக்கொண்டிருக்கிறார்கள்.

-து.ராஜா


தூத்துக்குடி: பட்டுச்சேலை காத்தாட...!


""புத்தம் புது பட்டுச்சேலையை இப்படிக் கசக்கிப்பிட்டாளுவளே'' -அன்றைக்கு நடந்ததை இன்றுவரை மறக்க முடியவில்லை தி.மு.க. பெண் கவுன்சிலர்களால்.

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய கட்டடத் தில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், மேயர் கஸ்தூரி தங்கம் உட்பட தி.மு.க. பெண் கவுன்சிலர் கள் அத்தனை பேருக்கும் பட்டுச்சேலை, பட்டு ரவிக்கையும் தி.மு.க. ஆண் கவுன்சிலர்களுக்கு பட்டு வேட்டி பட்டுச் சட்டையும் மொத்த தி.மு.க. கவுன்சிலர்களுக்கு கலைஞர் படம் பொறித்த 1 பவுன் தங்க மோதிரமும் பரிசளித்து முதல் கூட் டத்திற்கு அணிந்துகொண்டு வரவேண்டுமென்று கூறியிருந்தார் மா.செ. பெரியசாமி. அன் றைக்கு அவரும் மாநகராட்சிக்கு வந்து பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந் தார். மாநகராட்சிக் கூட்டம் தொடங்கியதும் ஏதோ ஒரு பிரச்சினையை கிளப்பி, அ.தி.மு.க. வினர் வெளி நடப்பு செய்த நேரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும், அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும் மோதல். ""போங்கடி... சரிதான் வாங்கடி...'' என்று ஆரம்பித்து பட்டுச்சேலைகளை இழுத்துக் கசக்கும் அளவுக்கு தள்ளுமுள்ளாகி ஒரு வழியாக சமாதானமானார்கள்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அத்தனை புதுப் பட்டுச்சேலைகளும் கசங்கித்தான் வந்தன.

போலி டாக்டர் சர்டிஃபிகேட்!

பாதுகாப்பாய் மது அருந்திட(!) வேண் டுமா? பாதுகாப்பாய் புகை பிடித்திட(!) வேண்டுமா? உயர் ரத்த அழுத்த நோயுடன் உற்சாகமாய்(!) வாழ வேண்டுமா? நாங்கள் கொ டுக்கும் மூலிகை மருந்தை 33 நாட்கள் சாப்பிட் டாலே போதும். விலை 990 ரூபாய் மட்டுமே!

உடனே அணுகவும்... சித்த மருத்துவப் பேராற் றல் டாக்டர் ஏ.இ.ரமேஷ் ஆர்.எஸ்.எம்.பி., இன்னும் எக்கச்சக்கமான பட்டங் கள் (ஆனா... என்ன படிப்புன்னுதான் சரியா புரியல!)

இந்தக் கட்டுரையை முழுமை யாகப் படித்து முடிப்பதற்குள்ளேயே "யார் அந்த பேராற்றல் டாக்டர்?' என்ற ஆச்சரியத்தில் அவரை சந்தித்து மருந்து வாங்க ஓடிவிடுவீர்கள் என்பதால் தான் மருத்துவமனையின் பெயரையும்... முகவரியையும் ஆரம்பத்தில் குறிப்பிடவில்லை.

அதற்குக் காரணம்... இவர் ஒரு போலி மருத்துவர் என்று நமக்கு கிடைத்த தகவல்தான். அட... இந்த மாதிரி போலி மருத்துவர்கள்தான் தமிழ்நாடு முழுக்க எக்கச்சக்கமான பேர் மக்களை ஏமாற்றிக்கிட்டு திரியுறாங்களே என்கிறீர்களா? ஆனால், இந்த டாக்டர்(?) ரமேஷிடம் தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சில் வழங்கிய அரசு பதிவு பெற்ற சான்றிதழ் இருப்பதுதான்... ஷாக்!

எப்படி? ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சந்தேகத்துக் குள்ளான ஸ்ரீபாரதி சித்த மருத்துவ மனையின் டாக்டர்(?) ரமேஷிடமே கொக்கி போட்டோம்.

""46 வயசாகுது எனக்கு. 1998 ஏப்ரல் 18-ந் தேதி சென்னையில இருக்கிற சித்த மருத்துவ மன்றத்தில் பதிவுபண்ணி இந்த ஆர்.எஸ்.எம்.பி. டாக்டர் சர்டிஃபி கேட்டை வாங்கினேன்'' என்றவரிடம்...

"1997 நவம்பர் 30-ந் தேதியே ஆர்.எஸ்.எம்.பி. எனப்படும் "ரெஜிஸ்ட்ரேஷன் சித்தா மெடிக்கல் பிராக்டிஷனர்' சர்டிஃபிகேட் கொடுப்பதை அரசாங்கம் நிறுத்திடுச்சே... அப்படியே ஆர்.எஸ்.எம்.பி. சர்டிஃபிகேட் வாங்கினவங்களுக்கு 56 வயது தாண்டியிருக்கணுமே' என்று நாம் கிடுக்கிப்பிடி போட்ட போது...

""ஹலோ... ஈரோடு சித்த மருத்துவ சங்கத்துல இருக்கிற சீனியர் டாக்டர்தான் எனக்கு சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தாரு. தமிழ்நாடு முழுக்க இந்த மாதிரி சர்டிஃபிகேட்டை வாங்கி வெச்சிருக்காங்க பலரும்.

ஹைகோர்ட்டே எங்களை எல்லாம் அலோபதி ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு(?) அனுமதி கொடுத்துருச்சு. நீங்க என்னமோ எங்களை போலி டாக்டர் ரேஞ்ச்சுக்கு டீல் பண்றீங்க?'' -கெத்தாக அவர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர வைத்தன.

அப்படீன்னா... அரசு சித்த மருத்துவக் கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ் இவருக்கு எப்படிக் கிடைத்தது? இது போன்று எத்தனை பேர் அரசு சான்றிதழை வைத்துக்கொண்டு பொதுமக்களையும், போலீசையும் ஏமாற்றி "அல்வா' கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? என்று ஆராய்ந்தபோதுதான் போலி மார்க்ஷீட் விவகாரத்தைப் போலவே பல அதிர்ச்சித் தகவல்கள் பூதாகரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவத் துறையிலுள்ள உயர் அதிகாரி ஒருவரோ... ""கடந்த 13 வருஷங்களா பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் ஆர்.எஸ்.எம்.பி. "பி' க்ளாஸ் சர்டிஃபிகேட் மோசடி நடந்துக்கிட்டிருக்கு. இதனால அஞ்சாவது படிச்சவங்ககூட ரூபாய் 30,000-ல் இருந்து 50,000 ரூபாய்வரை கொடுத்து சித்த மருத்துவ கவுன்சிலின் சர்டிஃபிகேட்டை வாங்கி டாக்டர் ஆகிடுறாங்க.
இதனால மக்கள் உயிருக்குத்தான் ஆபத்து. அதுவும் ஆர்.எஸ்.எம்.பி. எனப்படும் பரம்பரை சித்த மருத்துவர்கள் தமிழ்நாடு முழுக்க மொத்தமே 2245-க்கும் கீழ்தான் இருப்பாங்க. ஆனா இது மாதிரி போலி சர்டிஃபிகேட்டை வெச்சிருக்கிறவங்க ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், சென்னைன்னு தமிழ்நாடு முழுக்க 3,000-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர்கள்னு சொல்லிக்கிட்டு மக்களிடம் சீட்டிங் பண்ணிக்கிட்டிருக்காங்க'' என்று அதிர்ச்சி கிளப்பியவரிடம்... "யார் இந்த போலி சர்டிஃபிகேட்டுகளை தயாரித்து விற்பது?' என்று கேட்டபோது... அவர் சொன்ன தகவல் நம் நெஞ்சையே பிளக்க வைத்தது.

""அதான் போலி டாக்டர் ரமேஷே பாதி உண்மையை கக்கிவிட்டாரே. தமிழ்நாடு முழுக்க இருக்கிற சித்த மருத்துவ சங்கத்திலுள்ள சீனியர் டாக்டர்கள்தான் போலி சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டுக்கொண்டிக்கிறார்கள். இதை தயாரித்துக் கொடுப்பதே சித்த மருத்துவ கவுன்சிலிலுள்ள சில உயரதிகாரிகள்தான்'' என்று இன்னொரு குண் டையும் வீசுகிறார்.

புரோக்கர்கள் யார்? யார்? என்று தோண்டித் துருவியபோது... ஈரோட்டில் அக்பரின் பெயர்கொண்ட சித்த வைத்தியர், முருக கடவுள் பெயர் கொண்டவர், பொள்ளாச்சியில் "தேவ' என்று ஆரம்பிக்கும் கிறிஸ்துவ பெயர் கொண்டவர், திருச்சியில் "பையா' என்று முடியும் பெயர் கொண்டவர், தஞ்சா வூரில் மூர்த்தி என முடியும் பெயர் கொண்டவர், சேலத்தில் "கிங்' என பெயர் கொண்டவர் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவர் மைக்கேல் ஜெயராஜோ, ""எம்.எஸ்.ஸி. அனாடமி, எம்.எஸ்.ஸி. பிஸியாலஜி, எம்.எஸ்.ஸி. பார்மா அண்ட் பயோ படிச்சவங்களே டாக்டர்னு போட்டுக்கிட்டு அலோபதி சிகிச்சை அளிக்க முடியாது. ஆனா, இதையெல்லாம் நாங்களும் படிச்சிருக் கோம்னு சொல்லிக்கிட்டு அலோபதி சிகிச்சை கொடுக்கிற பட்டதாரி சித்த மருத்துவர்களால் சித்த மருத்துவம் அழிஞ்சிதான் போகும். மேலும் இதனால் அலோபதி மருந்துக் கம்பெனி களுக்குத்தான் லாபம். அதனால்தான் இதை எதிர்த்து வழக்குத் தொடுக் கப்போகிறோம். மேலும் "நாங்களும் அரசு பதிவு பெற்ற மருத்துவர் கள்தான்'னு பரம்பரை மருத்துவர்களும் அலோபதி சிகிச்சை செய்ய ஆரம்பிச் சிட்டா, மக்களின் நிலைமை என்ன ஆகுறுது? -இப்படி சிந்திச்சுக்கிட்டி ருக்கிற நேரத்துல இதிலேயே போலி சர்டிஃபிகேட் வாங்கி வெச்சிருக்கிற கில்லாடி போலி டாக்டர்களை தமிழக அரசு கடுமையாக தண்டிக்கணும் இல்லையென்றால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்கிறார் கொந்தளிப்பாக.

ஒருங்கிணைந்த சித்த மருத்துவ பேரவையின் தலைவர் டாக்டர் மூலிகை மணி வேங்கடேசனோ, "" "ஏ' க்ளாஸ் பட்டதாரி சித்த மருத்துவர்கள் 3449 பேர், "பி' க்ளாஸ் பரம்பரை சித்த மருத்துவர்கள் 2245-க்குக் கீழ். அட்டவணை பட்டியலில் இடம் பெற்றுள்ள என்லிஸ்ட் மென்ட் மருத்துவர்கள் 2411 பேருக்குக் கீழ் என கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர்தான் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் இல்லாத சித்த மருத்துவ சர்டிஃபிகேட்டை யார் காண்பித்தாலும் அவர் போலி சித்த மருத்துவர்தான். அதுவும் பரம்பரை சித்த மருத்துவ சர்டிஃபிகேட் வாங்குவதில்தான் மோசடி நடந்து கொண்டிருக்கிறது. நான் சித்த மருத்துவ கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்தபோது... இயக்குநராக இருந்த லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்.-ன் கையெழுத்து சீலை போலியாக பயன்படுத்தித்தான் இந்த போலி சர்டிஃபிகேட் விநியோகிக்கப்படு கிறது. சிக்கிய ரமேஷையும் புரோக்கர்களாக செயல்படுபவர்களையும் தீவிர விசாரணை செய்தாலே பழைய ஒரிஜினல் சர்டிஃபிகேட்டில் போலியாக பெயர், ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் டைப் செய்து விற்கும் அரசு அதிகாரிகள் பலர் சிக்குவார்கள். இதற்கு ஒரே வழி பரம்பரை சித்த மருத்துவர்கள் நல வாரியம் அமைத்து பரம்பரை வைத்தியர் களுக்கு நன்கு பயிற்சி அளித்து கண்காணிக்க வேண்டும்'' என்கிறார்.

இந்த போலி மருத்துவ சர்டிஃபிகேட் குறித்து முன்னாள் இந்திய மருத்துவ கவுன்சிலின் இயக்குநரும் மாநில திட்டக்கமிஷன் ஆலோசகருமான மூத்த அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்.ஸிடமே பேசினோம்.

""என்னது... என் கையெழுத்தை வைத்தே போலி சர்டிஃபிகேட் விற்பனை செய்கிறார்களா?'' என்று ஷாக் ஆனவர், உடனடியாக சித்த மருத்துவ கவுன்சில் அதிகாரிகளிடம் விசாரணையைத் தொடங்கி விட்டார்.

இந்திய மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் யாராக இருந்தாலும் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க...

போலி சித்த மருத்துவ சர்டிஃபிகேட் விவகாரமும் ஒருபக்கம் சுகாதாரத்துறைக்கு தலைவலியை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.

கட்டாய குடும்பக் கட்டுப்பாடு...

குடும்பக் கட்டுப்பாடு ஆபரே ஷன் இப்போது வேண்டாம் என்று சொன்னதற்காக, பச்சை உடம்புக் காரியை, ஆஸ்பத்திரியில் இருந்து பிடரியை பிடித்து வெளிய தள்ளலாமா?

இராமநாதபுரம் அரசு மருத்துவ மனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபடத் தயாராகிவிட்டன பொது நல அமைப்புகள். சோத்தூரணியில், தன் பிறந்த வீட்டில் இருந்த எட்டிவயல் குமுதப் பிரியங்காவைப் போய்ப் பார்த்தோம். முதல் குழந்தை பெண் குழந்தை. 2 வயதாகிறது. இப்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

""இடுப்பு வலி எடுத்ததும்தான் ராம நாதபுரம் பெரியாஸ்பத்திரிக்கு போனோம். ஓசியில புள்ளைப் பெத்துகிற வந்துவிட் டாள்னு அப்பவே அசிங்க அசிங்கமா நர்சுக்க பேசுனாக. எனக்கு வலி தாங்க முடி யலை. அவுக என்னனா இப்பப் பொறக் காது இன்னம் 15 நாள் கழிச்சு வானு சொல்லி விரட்டப் பாத்தாக. கெஞ்சிக் கூத்தாடினேன். அப்புறம் பொது வார்டுல சேத்தாக. அன்னைக்கே ஆம்புளைப் புள்ளை... நல்லபடியா... சுகப்பிரசவமாச்சு.

மறுநாள்... குடும்பக் கட்டுப்பாடு பண் ணிக்க சொன்னாக. ரொம்ப பலகீனமா இருக்கு. அஞ்சாறு மாசம் கழிச்சு கட் டாயம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். சரினு போன வுக... மறுநாள் வந்து சூப் ரண்ட் டாக்டர் சொல்லிப்பிட் டாக. ஃபாரமெல்லாம் ஃபுல்லப் பண்ணியாச்சு கட்டாயம் ஆபரேஷன்னு ஒத்தக் கால்ல நிக்கிறாக... நான் முடியாதுனு சொன்ன தும்... எல்லா நர்சுகளும் ஒண்ணா சேர்ந்துக்கினு... எங்க பேச்சை கேக்காத வளுக்கு இங்கே என்ன வேலை? புள்ளைய தூக் கிட்டு போடினு பெட்ல இருந்து இழுத்து புள்ளை யத் தூக்கி கையில குடுத்து, வெளிய கொண்டாந்து விட்டுட்டாக. எம் புருஷன் இப்ப வந்துருவாக... வந்ததும் போறேன்னு கெஞ்சுனேன். மனசு இரங்காம வெளிய தள்ளிப்பிட்டாக. ஆட்டோ புடிச்சு இங்கே வந்தேன்!'' -கோபமும் வேதனையு மாகச் சொன்னார் பிரியங்கா.

""என் மகளுக்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்குனு நினைக்க வேணாம். குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்க மறுத்த பல பெண்களை இப்படி வெளிய புடிச்சு, தள்ளிருக்காங்க!'' என்றார் பிரியங்காவின் தந்தை விஜயகுமார்.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு இப்போதும் நடக் கிறதா? ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக் கண்காணிப் பாளர் டாக்டர் இபுறாகீம் அலியை சந்தித்தோம்.

""ரெண்டு குழந்தை பெற்ற பெண்ணிடம், கு.க. செய்யச் சொல்லி அட்வைஸ் செய்வோம். அரசு பாலிஸியே அதுதானே... ஆனால், இதற்காக யாரையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டோம். இதற்காக சொல்லாமல் போய்விட்டு, இப்போது புகார் செய்கிறாரா? இருந்தாலும் நர்ஸ்களிடம் நான் விசாரிக்கிறேன். தப்பாக நடந்து கொண்டிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார் டாக்டர் இபுறாகீம் அலி.

குமுதப் பிரியங்காவின் குற்றச்சாட்டுகளை கலெக்டர் ஹரிகரன் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அக்கறை யோடு கேட்ட அவர், ""அந்தப் பெண் முதலில், கு.க. செய்து கொள்ளச் சம்மதித்திருக்கும். பிறகு குடும்பத்தினர் அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள். இதுதான் நடந்திருக்கும். சாதாரணமாக நார்மல் டெலிவரி நடந்தால் 2 நாள்தான் மருத்துவமனையில் வைத்துக் கொள்வார்கள். நர்ஸ்கள் கட்டாயப்படுத்தி அவரை வெளியேற்றி இருந்தால் அது மனித நேயமற்ற செயல்தான்... நான் ரிப்போர்ட் கேட்டிருக்கிறேன். வரட்டும்!'' என்றார் மாவட்ட ஆட்சியர்.

""ஜெயலலிதா என்ன யோக்கியமா?'' -விளாசிய விஜயகாந்த்!




""தலைவன வரவேற்கணும்ல... புதுசு புதுசா வார்த்தயப் போட்டு ப்ளக்ஸ் வைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு...''

வேண்டுமென்றே சலித்துக்கொண்டார் அந்த தே.மு.தி.க. தொண்டர்.

"அப்படி என்ன புதுமை பண்ணிட்டீங்க?'

""சிவகாசிக்கு வர்றாருன்னா சும்மாவா? ஆக்டோபஸ்ன்னு ஒரு பேனர் வச்சோம். அருவருப்பா இருக்குன்னு பப்ளிக் ஃபீல் பண்ணுச்சு. வாழும் காமராஜரேன்னு வச்சோம்... இது நாடாக்கமாரு ஊருல்ல... காமராஜருக்கும் விஜயகாந்த்துக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேள்வி கேக்குறாங்க. புதிய புரட்சித் தலைவரேன்னு போஸ்டர் ஒட்டினோம்... அப்ப எம்.ஜி.ஆர். பழைய புரட்சித் தலைவராயிட்டாரா? தமிழ்நாட்டுக்கு ஒரே புரட்சித் தலைவர்தான்னு எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருத்தரு மல்லுக்கு நின்னாரு. அண்ணா, எம்.ஜி.ஆரோட அரசியல் வாரிசுன்னு வச்சோம்... அ.தி.மு.க.காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. எந்தலைவன் வந்தா பொறாமைல எத்தனை பேரு எதிர்க்கு றாங்க பாருங்க. அவரு முதலமைச்சரு நாற்காலில உக்கார்ற வரைக்கும் நாங்க இந்தப் பாடுபட்டுத்தான் ஆகணும். அதான் 2011-ன் ஆட்சி மாற்றமேன்னு எங்க மனசு குளிர்ற மாதிரி போஸ்டர் ஒட்டினோம். ஒரு சனமும் எதிர்க்கல. அப்பவே தெரிஞ்சுப் போச்சு. அடுத்து கேப்டனோட ஆட்சிதான்னு...'' -அத்தனை நம்பிக்கையோடு பேசினார் அந்தத் தீவிரத் தொண்டர்.

சிவகாசி-எம்.ஜி.ஆர். திடலில் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழா மேடைக்கு முன்பாக ஓரளவு பெண்கள் கூட்டம். ""சுள்ளுன்னு அடிக்கிற இந்த வெயில்லயும் இம்புட்டுச் சனம் காத்துக் கிடக்குல்ல. சத்தியமாச் சொல்லுறேன்... கருப்பு எம்.ஜி.ஆருன்னா எம்புட்டுப் பொருத்தமா இருக்கு'' -பெருமிதத்துடன் சொன்னார் அதே தொண்டர்.

"நீங்க எந்தக் கட்சி?'

பெண்கள் பகுதியில் நின்றுகொண்டிருந்த கோமதி யிடம் கேட்டோம்.

""அதுவா?'' என்று தலையைச் சொறிந்தவர் ""எம்.ஜி.ஆரு கட்சி. ரெட்டை இலைக்கு ஓட்டுப் போடு வேன். பெண்கள் குழு வுல இருக்கேன். எங்க எல்லா ருக்கும் முட்டை பிரியாணி பொட் டலம், ரெண்டு தண்ணி பாக்கெட்டு, கையில அம்பது ரூபான்னு கொடுத்து பஸ் பிடிச்சு கூட்டியாந்தாங்க...'' என்று கூட்ட ரகசியத்தைப் போட்டு உடைத்தார் வெள்ளந்தியாக.





உள்ளூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு முப்பெ ரும் விழாவில் மைக் பிடித்த விஜய காந்த், ஆவேசத்தில் சகட்டு மேனிக்கு கலைஞரை விமர்சித்துவிட்டு ""ஜெயலலிதா மட்டும் என்ன யோக்கியமா? அவங்க ஆட்சியில அப்படி என்ன நல்லது பண்ணிட்டாங்க? நான் ஜெயலலிதாக்கும் பயப்படமாட்டேன். யாருக்கும் பயப்படமாட்டேன். 30, 40 சீட்டுக்காக நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுக்கு நல்லது பண்ணணும்னுதான் கட்சி ஆரம்பிச்சேன். மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நெனைக்குற வங்க கூடத்தான் நான் கூட்டணி வைப்பேன். அது மக்கள் விரும்புற கூட்டணியா இருக்கும். அதுவும் மக்கள்ட்ட கருத்து கேட்டுட்டு, மக்கள் மத்தியிலதான் கூட்டணிய அறிவிப்பேன். தி.மு.க., அ.தி.மு.க. மட்டும்தான் தமிழ்நாட்டுல கட்சியா? வேற கட்சியே கிடையாதா? அந்த ரெண்டு கட்சியுமே வறுமைய ஒழிக்காத கட்சிக. அத நம்பிப்போனா நாசமாத்தான் போகணும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணம் கொடுத்து கூட்டத்தக் கூட்டுது. நான் அப்படியில்ல. என்னோட கொள்கைக்காக தானா வந்த கூட்டம் இது... '' என்று கூட்டத்தை நோட்ட மிட்டவர் ""பத்திரிகைகள்தான் மக்களைக் குழப்புது. யாரும் குழம்ப வேணாம். நான் தெளிவாயிருக்கேன். நீங்களும் தெளிவா இருங்க'' என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.





விஜயகாந்த்தின் இந்த "அரசியல் தெளிவு' குறித்து அக்கட்சித் தொண்டர்களிடம் கருத்துக் கேட்டோம்.

ராஜபாளையத்திலிருந்து வந்திருந்த அய்யனார், ""மக்கள் விரும்புற கூட்டணின்னு கேப்டன் சொல்லுறது ரொம்ப குழப்பமா இருக்கு. அவருக்கு யோசனை சொல்லுற இடத்துல நாங்க இல்ல. இனியும் தனிச்சு நின்னா சாமர்த்தியமில்லை. இருந்த பணம் அத்தனையையும் செலவழிச்சிட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறோம். காங்கிரஸ், பா.ம.க.ன்னோ, பி.ஜே.பி.ன்னோ தோதான கட்சிகூட கூட்டணி வச்சிக்கிறது தப் பில்ல...'' என்றார் விட்டேத்தியாக.

காளிராஜ் என்ற இளைஞர், ""கேப்டன் சொன்னது எனக்கு சரியா வௌங்கல. பக்கத்துல இருந்தவன்கிட்ட கேட்டேன். அவனும் புரியாத மாதிரி தலைய ஆட்டுனான்'' என்றவர், கைநீட்டிய திசையில்... "அரசியல் விழிப்புணர்ச்சியே!' என விஜயகாந்த்தை வரவேற்ற பேனர் கண் சிமிட்டியது.

Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது


சென்னை: பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.

பாலச்சந்தரின் நாயகன்:

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. இவரது தந்தை சித்தலிங்கையா பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்:

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழ் உணர்வாளர்:

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசன், சரத்குமார் , விஜயகாந்த் , பிரபு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் முரளி.

47 வயதில் துயர மரணம்:

மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

முரளியின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tuesday, September 7, 2010

திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலை


நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமா ப் படம் எடுக்கவுள்ளனராம்.

நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில்.

நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார்.

தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார்.

சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.

கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம்.

ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.