Thursday, September 2, 2010

சிறுமிகளுக்கு தயாரான தாலி!


""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக.

No comments:

Post a Comment