Thursday, September 2, 2010
""ஜெ.'' போட்ட உத்தரவு! தொண்டர்களுக்கு தொங்கும் தூக்கு கயிறு!
""தீயில் கருகி துடிதுடித்து இறந்த அந்த 3 மாணவிகளை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. அந்தக் கொடூரத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது. அப்பாவி மாணவிகள் தப்பிக்க முடியாத படி பஸ்சின் கதவை மூடித் தீவைத்து, திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைத்தான் சேலம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டை ஏற்றால், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே வீணாகிவிடும்...!''.
தருமபுரி பஸ்ஸில் மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில், 30.8.10 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ். சவுஹானும் கனத்த இதயத்தோடு குறிப்பிட்ட உருக்கும் வாசகங்கள் தான் இவை.
கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.
தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் பறந்தது. ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து, சாலைமறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தமிழகம் முழுதும் வன்முறைகள் நடந்தன. தருமபுரியிலும் நடந்தது...
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் வந்த பேருந்தை தருமபுரி இலக்கியம்பட்டிப் பகுதியில் வழி மறித்து நிறுத்தி, பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்தார்கள். மாணவிகள் கோகில வாணியும், காயத்ரியும், ஹேமலதாவும் தீயில் கருகி உயிரிழந்தார்கள். அகில இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது சேலம் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் இறந்து விட்டார். எஞ்சிய 30 பேரில் இருவரை விடுதலை செய்தது சேலம் நீதிமன்றம்.
மீதி 28 பேரில், ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், முத்து (எ) அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன், ராஜு, மணி, மாதுராமன், முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தௌலத், பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகிய 25 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது சேலம் நீதிமன்றம்.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும், சேலம் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுச் சிறைத் தண்டனையை 2 ஆண்டாக குறைத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறி ஞர்கள் அல்தாப் அகமதுவும், சண்முகசுந்தரமும் ஆஜராகி ""கீழ்க்கோர்ட் குற்றவாளிகளுக்கு விதித்த தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும்!'' என்று வாதாடினர்.
அ.தி.மு.க.வினர் சார்பில் வாதாடிய சுஷில்குமார், ""இந்த வழக்கில் நம்பகத்தன்மையுள்ள சாட்சிகள் இல்லை. சாலைமறியலில் ஈடுபட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படை யில் இந்த மூவரும்தான் பஸ்ஸை எரித்திருப்பார்கள் என்பது வெறும் யூகமே... ஆகவே மரண தண்ட னையை ரத்துச் செய்ய வேண்டும்!'' என்று வாதாடினார்.
25 பேருக்கு 2 ஆண்டுத் தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த 25 பேரும் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த ஆகஸ்ட் 30 நண்பகலில் தருமபுரி அ.தி.மு.க. வட்டாரத்தில் கோபத் தையும் கண்ணீரையும் பார்க்க முடிந்தது.
""யாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு இதைச் செய்தார்கள். அம்மா வுக்காகத்தானே! அம்மா உத்தரவு போட்டதால் தானே செய்தோம். கீழ்க் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் தீர்ப்பு வந்தபோது அம்மா இருக்கிறார்... கட்சி இருக்கிறது... தூக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்... காப்பாற்றுவார்னு சொன்னாங்களே... இப்ப என்ன நடந் திருக்கு தலைமை பேச்சை கண்ணை மூடிக்கிட்டு அடிமை போல கேட்டு நடந்த மூன்று தொண்டர்களின் கழுத்துக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செஞ்சுடுச்சு. இனிமேல் என்ன சொல்லுவார்கள்? கருணை மனு போடலாம்னு தானே... சே... ச்சே...!'' என்று பகிரங்கமாகவே சத்தம் போட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.
அ.தி.மு.க.வினரால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமியை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம்.
""தாமதமானாலும் நீதி சாகாது என்பதைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. பெறாத பிள்ளைகளான சாட்சிகள் எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் சத்தியத்தில் நின்று சாட்சியளித்தார்கள். தங்கள் கட்சித் தலைமைக்காக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எரிக்கலாம், கொல்லலாம் என்று செயல்படுபவர்களுக்கு இதுதான் சரியான பாடம்...!'' கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் வீராசாமி.
எரித்துக் கொல்லப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா பெயரில் "கே.ஜி.எச்.' அறக்கட்டளையை நிறுவிய அதன் தலைவர் அருள் நம்மிடம், ""உச்சநீதிமன்றம் மிக அரிதாகவே மரண தண்டனை விதிக்கிறது. அரசியல் தலைமையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இனிமேலும், யாரும் இப்படிப்பட்ட கொடிய, இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு சக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெருத்த ஆறுதலாக அமைந்திருக்கிறது!'' என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment