Friday, May 28, 2010

சிங்கம் பட விமர்சனம்


shockan.blogspot.com
நடிகர்கள் - சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு - ப்ரியன்
இயக்கம்- ஹரி
தயாரிப்பு- ஸ்டியோ கிரீன்
பிஆர்ஓ- நிகில்

மசாலா படங்கள் என்றால் நூறு கார்கள் நொறுங்க வேண்டும், நூற்றுக்கணக்கில் வெள்ளை வேட்டி சட்டையில் வில்லன்கள் பறக்க வேண்டும், சரியாக 20 நிமிஷத்துக்கு ஒரு முறை முக்கால் நிர்வாணத்தில் ஹீரோயினும் துணை நடிகையும் ஆட வேண்டும், கடைசியில் வில்லன் தோற்று ஹீரோ ஜெயித்து, முதலில் பாடிய அதே டூயட்டை நாயகியுடன் பாடியபடி கையாட்டி ரசிகர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...

இந்தக் காட்சிகள் மற்றும் பார்முலாவில் ஒன்று கூட மிஸ்ஸாகாமல் கொதிக்கக் கொதிக்க மசாலாவை அள்ளி ரசிகர்கள் தலையில் கொட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் நல்லூர் கிராமத்தில் மளிகைக் கடை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள ஆசைப்படும் சூர்யா, தன் அப்பாவின் ஆசைக்காக போலீஸ் வேலையில் சேருகிறார். நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது அந்த ஊர்.

ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சென்னை தாதாவான பிரகாஷ்ராஜுடன் சூர்யாவுக்கு மோதல் ஏற்பட, பிரகாஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டர் சூர்யாவாக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது இருவருக்குமான போலீஸ்- திருடன் சேஸிங்.

கடைசியில் ஹீரோ எப்படி வில்லனை முடிக்கிறார் என்பது ரத்தம் சொட்டும் க்ளைமாக்ஸ்.

ஜீப்பின் கதவுகள், மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு, கதறக் கதற வசனம் பேசியபடி அறிமுகமாகிறார் ஹீரோ சூர்யா.

ஸ்ஸ் அப்பா... இப்படி கண்ணக் கட்ட வைக்கிறாய்ங்களே என வடிவேலு பாணியில் சலித்துக் கொள்கிற அளவுக்கு ஏக பில்டப் காட்சிகள். பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக்குகளை உச்ச கட்ட டெஸிபலில் சூர்யா பேசப் பேச நமக்கு காது கிழிகிறது. 'அன்புச் செல்வன்' சூர்யாவுக்கு இந்த மசாலா போலீஸ் துரைசிங்கம் சுத்தமாகப் பொருந்தவில்லை.

ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல, இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.

ஹீரோவை விட வில்லன் பிரகாஷ் ராஜுக்கு படு பவர்புல் அறிமுகம். ஆனால் சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்கு பயந்து உறுமும் சிங்கம் அளவுக்குக் கூட இல்லை இவரது பாத்திரப் படைப்பு. கடைசி வரை வாய் உதார்தான்.

படத்தின் ஜில்லான அம்சம் அனுஷ்கா. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் மசாலா படத்தில் ஹீரோயினை முழுப் படத்திலும், ஓரளவு ஸ்கோப் உள்ள பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்கள். அனுஷ்காவும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஏட்டு எரிமலையாக வந்து கத்திரி வெயிலில் இன்னும் காந்த வைக்கிறார் விவேக். சகிக்கவில்லை.

போஸ் வெங்கட் பாத்திரம் நிறைவு. நாசர், மனோரமா, விஜயகுமார் என ஹரியின் ஆஸ்தான கலைஞர்கள் இதிலும் உண்டு.

ப்ரியனின் ஒளிப்பதிவு ஓகே. தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை என்றால் வீசை என்ன விலை என்று கேட்டிருக்கிறார் மனிதர். வி.டி. விஜயனின் எடிட்டிங் ஆங்காங்கே தத்தித் தாவுகிறது.

இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்களை விறுவிறுப்பாக நகர்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஹரி உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் தனது முந்தைய பட காட்சிகளையே காப்பியடிப்பது, மாறாத லொகேஷன்கள், ரிபீட் வசனங்கள் என சலிப்புத் தட்ட வைக்கிறார் ஹரி.

படத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் எளிதில் யூகித்து கமெண்ட் அடிப்பது மிகப் பெரிய மைனஸ்!

No comments:

Post a Comment