Saturday, May 29, 2010

யுத்த களத்தில் பிரபகரனுக்கு போன தகவல்!


2009 புத்தாண்டு தமிழருக்கு மரண ஓலங்களோடு பிறந்தது. சிங்களப் பேரினவாதம் ராஜபக்சேக்களின் தலைமையில் வரலாறு கண்டிராத வெறிகொண்டு நின்றது. முப்படை களையும் ஏவிவிட்டு ஓர் மக்கள் இனத்தையே அழிக்கத் துடித்த சிங்களப் பேரினவாதத்தின் கொலைவெறியை தாராள ஜனநாயகத்தின் மேற்குலகமும், இடதுசாரிகளின் உலகமும், புத்தன்- காந்தியை காட்டியே நீண்ட காலம் பித்தலாட்டம் செய்துவரும் இந்தியாவும் "பயங்கரவாதத்திற் கெதிரான' யுத்தமென ஏற்றுக் கொண்டு ராஜபக்சேக் களின் கொலைவெறிக்குத் தூபமிட்டுத் துணை நின்றன. தமிழ் இனம் தனிமையுற்றது. எமக்காய் பேசவோ, கண்ணீர் விடவோ பெரிதாய் எவரும் இருக்கவில்லை. ஜனவரி தொடங்கியதிலிருந்து கொத்துக் கொத்தாய், பூவாகவும், பிஞ்சாகவும் தமிழர்கள் கொல்லப்படும் செய்திகள் வரத் தொடங்கின. உலகெங்கும் தமிழர்கள் கலங்கினர், கண்ணீர் வடித்தனர், களமிறங்கிப் போராடினர்.

தாய்த் தமிழகமும் குமுறத் தொடங்கி யிருந்தது. அரசியற் கட்சிகளின் போராட்டங்கள், மனித சங்கிலிகள், மாணவர் போராட்டங்கள் என நாளுக்கு நாள் நிலைமை சூடாகிக் கொண்டிருந் தது. தினம் தினம் தமிழர் பிணங்கள் விழுவது கண்டும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையின் உணர்வழுத்தம் அனுபவித்த தமிழர் பலர் தங்கள் இன்னுயிரை அழித்து அதிகாரத்தில் இருக்கிறவர்களின், உலகத்தின் அக்கறையை உக்கிரப்படுத்த தலைப்பட்டனர். முத்துக்குமாரின் ஈகம் புதியதோர் தமிழ் இளையர் எழுச்சிக்கான களத்தினை திறந்தது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன் னும் நான்கு மாதம்தான் என்ற நிலையில் தாய் தமிழகத்தில் அரசியற்களம் சிக்கலுக்குள்ளானது. சாமான்யத் தமிழன் தன் இன்னுயிரையும் ஈழத் தமிழனுக்காய் ஒருபுறம் ஈகம் செய்து கொண்டிருக்க- அரசியற் களத்திலோ சூழ்ச்சிகள், சூதுகளின் காம்புகள் விஷம் சுரக்கத் தொடங்கியிருந்தன. அரசியற் கூட்டணிகள் மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு, புதிய கூட்டணி அரசு இவற்றையெல்லாம் பரிசோதித்திட ஈழத் தமிழனின் இறுதி அழிவு ஓர் அற்புத வாய்ப்பாக சிலரால் பார்க்கப்பட்டது. அரசியற் கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின் கண்ணிகள் மிகவும் பலவீனப்பட்டது. போராட் டங்களுக்கு அப்பால் மத்திய அரசை மண்டியிட வைக்கும் அரசியல் பொது எழுச்சியாய் தமிழக இளையர்கள்- கட்சிகள்- மக்களின் முயற்சிகள் மாற முடியாமற் போனமைக்கு இது ஓர் முக்கிய காரணம். உதாரணமாக ஈழத்தமிழருக்காய் வெளிப்படையான ஆதரவு நிலைப்பாடு காட்டும் ஒரு குறிப்பிட்ட கட்சி, கலைஞர் ஈழ மக்களுக்கு துரோகமிழைப்பதாய் கூறிக் கொண்டே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைக்கப்பட அழைப்பு விடுத்தது. கலைஞர் உஷாரான தருணம் அது. சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை யில் ஒருபுறம் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டு மறுபுறம் உரையாடல்- பேச்சுவார்த்தைகள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதென்ற அணுகுமுறையை வரையறுத்தார்.

தி.மு.க.விற்குள்ளும் உணர்வுபூர்வமான விவாதங்கள் நடந்தன. வெளியே பலருக்கும் தெரியாத நெகிழ்வானதோர் உண்மை என்னவென்றால் ""ஆட்சியை இழப்பதால் நிச்சயம் போர் நிற்கும்- ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியற் போராட்டமும் பாதுகாக்கப்படுமென்றால் ஆட்சியை இழப்போம்'' என்ற நிலைப்பாட்டினை ஒரு கட்டத்தில் கட்சிக்குள் துணிவோடு முன்வைத்தவர் துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். மேடைகளில் வீர முழக்கம் செய்து கைதட்டல்கள் வாங்குவதோடு கடமை முடிக்கும் அரசியல்வாதி களுக்கு மத்தியில் ஆரவாரம் எதுவும் செய்யாமல் ஆட்சியைக் கூட இழக்கும் கருத்தினை முன்வைத்த அவர் மீது, இதனைக் கேள்விப்பட்ட கணம் தொட்டு எழுந்த உயர் மதிப்பு அவ்வாறே தொடர்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை சமீப ஆண்டுகளில் மிகவும் வசதியாகிவிட்ட வெகுசில அமைச்சர்களைத் தவிர அனைவருமே ஆட்சியை இழக்கும் உணர்விலேயே இருந்தனர். கனிமொழி அவர்களும் இந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தினார். ஆட்சியை விட்டு விடலாம் என உள்வட்டத்தில் கலைஞர் நாளுக்கு நாள் பத்து முறையாவது குறிப்பிட்ட நாட்கள் அவை. ஆட்சியை இழப்பதால் மட்டுமே போர் நிறுத்தம் வந்துவிடுமா' என்ற கேள்வியில் தொங்கிய தெளிவின்மையும், போர் நிறுத்தத்தை விட ஆட்சி மாற்றத்தை உள்நோக்காய் கொண்டு தமிழகத்தில் சூழ்ச்சியின் காய்கள் நகர்த்தப்பட்ட சூழலும் "ஆட்சியை இழக்க வேண்டிய அவசியமில்லை' என்ற முடிவிற்கு தி.மு.க.வை நகர்த்தியது. அதேவேளை போர் நிறுத்த வேண்டுகோளை வலுவாகவே புது டில்லிக்கு வைத்துக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில்தான் 2009 ஜனவரி 28-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மத்திய அரசில் முக்கிய அமைச்சராய் இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரது மகன் அவசரமாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ""உடனே சந்திக்க வேண்டும்'' என்றார். "நாளை காலை சந்திக்கலாம்' என்றேன். ""இல்லை, இன்றிரவே பார்க்க வேண்டும்'' என்றார். விபரங்களை தொலைபேசி வழி பேசத் தயங்கினார். ஈழப் போர்க்களம் தொடர்பான அழைப்பு அது என்பது எனக்குப் புரிந்தது.

நான் குறிப்பிட்ட அந்த முக்கிய அமைச்சரின் மகன் எனக்கு நண்பர். என் தனிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று- பொது நன்மைக்காய் நாம் எல்லோருடனும் நட்புறவு பேண வேண்டுமென்பது. காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் என யாரோடு வேண்டுமானாலும் நாம் நட்பு பாராட்டலாம், உரையாடலாம். அதற்காக அவர்களின் கொள்கை நிலைப்பாடுகளோடு உடன்படுகிறோம் என்றில்லை. கட்சிக்குள் ஏழு பிரிவுகள் இருந்தால்கூட பொது நன்மைக்காய் நாம் எல்லோருடனும் பழகலாம், உறவாடலாம்.

அதிலும் நான் குறிப்பிடும் அந்த அமைச்சரின் மகனை தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கும். தடாலடியாகப் பேசுவாரென்பதைத் தவிர முக்கியமான விஷயங்களை முக்கியத்துவத்தோடு புரிந்து செயற்படும் பக்குவம் கொண்டவர். "இதனைச் செய்ய முடியும் முடியாது' என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். முடியும் எனச் சொல்வதை தாமதப்படுத்தாமல் செய்வார்.

போர் தீவிரமடையத் தொடங்கியிருந்த 2008-ம் ஆண்டின் இடைக்காலம் தொட்டே இவரை நான் அவ்வப்போது சந்தித்து ""வலுவான நிலையில் உங்கள் தந்தை இருக்கிறார். எப்படியேனும் ஓர் போர் நிறுத்தம் கொணர உதவக்கூடாதா?'' என்று கேட்பேன். அப்போதெல்லாம் அவர் வேடிக்கையாக, ""ஃபாதர் நான் ஒரு தபால்காரன் போல- டெலிபோன் ஆபரேட்டர் போல... நீங்கள் சொல்வதை, கேட்பதை அங்கு சொல்லுவேன்... அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது. அதேவேளை அங்கிருந்து ஏதேனும் பதில் வந்தால் ஒரு தபால்காரனைப் போல் உங்களையும் தொடர்பு கொள்வேன்'' என்பார். அப்படித்தான் 2009 ஜனவரி 28-ம் தேதி அந்தப் பின்னிரவு அழைப்பும் வந்தது.

அவரது அழைப்பில் தெரிந்த அவசரத்தை உள்வாங்கிக் கொண்டவனாய், பரபரப்பும் படபடப்பும் பற்றிக் கொள்ள நானே வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரவு 11 மணி யளவில் அவரது இல்லம் சேர்ந்தேன். வீட்டு முன் அறை நாற்காலியில் அமர்ந்ததுமே அவர் சொன்ன வாக்கியங்கள் இவை: FATHER, GOVERNMENT OF INDIA WANTS A CEASEFIRE. THE ONLY PRE-CONDITION IS LTTE SHOULD ANNOUNCE AN INTENTION TO LAY DOWN ARMS. THE CEASEFIRE WILL BE GIVEN WITHIN 48 HOURS. CAN YOU CONTACT VANNI? தமிழில் மொழிபெயர்ப்ப தானால், ""ஃபாதர், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே ஓர் போர் நிறுத்தம் நிறுவிட இந்திய அரசு விரும்புகிறது. ஒரே நிபந்தனை "ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தினை' - INTENTION TO LAY DOWN ARMS வெளிப்படையாக விடுதலைப்புலி கள் அறிவிக்க வேண்டும். அறிவித்தார்களென் றால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் நிறுவப்படும்''.

தொடர்ந்தும் அவர் சொன்னார், ""உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கும் விருப்பத்தினைத்தான் - INTENTION TO LAY DOWN ARMS கேட்கிறார்கள். அதற்கு விடுதலைப்புலிகள் ஒத்துக் கொண்டால் புதுடில்லியில் இன்னாருக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்'' என தொலைபேசி எண் ஒன்றையும், அந்நபரின் மின் அஞ்சல் முகவரியினையும் தந்தார்.

இன்னொன்றையும் மிக முக்கியமாக அவர் குறிப்பிட்டார்: ""தயவு செய்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விளிம்பு நிலையிலுள்ள எவரையும் இப்பேச்சுவார்த்தைகளைக் கையாள நியமிக்காதீர்கள் என அவர்களை அறிவுறுத் துங்கள். முன்பு ராஜீவ்காந்தி அவர்களோடான பேச்சுவார்த்தைகள் கசப்பாகிப் போக அது ஓர் காரணமாயிருந்தது. இப்போது அவர் கள் யாரை நியமித்தாலும் அவர் பிரபா கரன் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைத் தகுநிலை உடையவராக இருக்க வேண்டும். அவரது சொல்- பிரபாகரன் சொல்வ தற்கு இணை என்பதாக இருக்க வேண்டும்'' என்றார்.

""எவ்வளவு விரைவில் உங்களுக்குப் பதில் வேண்டும்?'' என்று அவரை நான் கேட்டேன். ""எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வேண்டும்'' என்ற அவர் ""இன்றிரவே கிடைத்துவிட்டால் உத்தமம்'' என்றார். நான், ""அது சாத்தியமில்லை. நாளை இரவுக்குள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வேன். கடவுள் இத் தருணத்தை ஆசீர்வதிக்கட்டும்'' என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்றேன். நேரம் நள்ளிரவு கடந்திருந்தது. சிந்தித்த வாறே வாகனத்தை ஓட்டிக் கொண்டு நேராக என் அலுவலகம் சென்றேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முந்தைய அரசியற்பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள் உயிரோடிருந்தவரை அவருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு களநிலை குறித்து உண்மை நிலை அறிந்து வந்தேன். அவர் படுகொலையானபின் வன்னியோ டான நேரடி தொடர்பு இருக்கவில்லை. எனவே எனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய லண்டனில் வாழும் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன். லண்டனில் அப்போது நேரம் இரவு 8.30 மணி. விஷயத்தையும், அவசரத்தையும் அவருக்கு எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் லண்டன் பொறுப்பாளரை உடனடியாக என்னோடு தொடர்புக்கு வரச் சொல்லிப் பணிக்கும்படிக் கூறினேன். அலுவலகத்திலேயே லண்டன் அழைப்புக்காய் காத்திருந்தேன். இந்திய நேரம் ஜனவரி 29 அதிகாலை 3 மணியளவில் லண்டனிலிருந்து ரவி என்பவர் தொலைபேசி அழைப்பில் வந்தார். லண்டனில் அவர் "ரூட் ரவி' என அறியப்படுகிறவர் என முன்னதாக என் நண்பர் எனக்குக் கூறியிருந்தார்.

ரவி அவர்களிடம் எல்லா விபரங்களையும் விரிவாக எடுத்துக் கூறினேன். துரிதமாக இயங்க வேண்டியதன் அவசியத்தையும், தருணத்தின் முக்கியத்துவத்தையும் அவருக்கு வலியுறுத்திச் சொன்னேன். உடனடியாக இச்செய்தியை வன்னியில் அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்குத் தெரிவிப்பதாகவும், நடேசன் அவர்கள் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்வார் எனவும் ரவி கூறினார். "கடவுளே எல்லாம் சரியாக நடக்க வேண்டும்... தமிழுலகம் ஏங்கும் போர் நிறுத்தத்திற்கான தருணமாய் இது அமைய வேண்டும்' எனப் பிரார்த்தித்தவாறு படுக்கையில் விழுந்தபோது அதிகாலை 4 மணிக்கு மேல் ஆகியிருந்தது.

அடுத்த நாள் எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டேன். வன்னியிலிருந்து அழைப்பு வரும் எனத் தெரியும். காலை சரியாக 11.10-க்கு வன்னிப் போர்க்களத்திலிருந்து நடேசன் அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

No comments:

Post a Comment