Thursday, May 27, 2010

யுத்தம் 56 -நக்கீரன் கோபால்




shockan.blogspot.com

""லட்சுமண சாமி அந்த ஆல்பத்தை எடுங்க''- கொஞ்சம் சத்தமாகவே சொன்னார் டி.எஸ்.பி. நாகராஜன். உடனே இன்ஸ் பெக்டர் லட்சுமணசாமி ஒரு ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதனைக் கையில் வாங்கிய டி.எஸ்.பி. நாகராஜன், ""கோபால்... இந்த ஆல்பத்தில் இருக்கிறதெல்லாம் தீவிரவாதிகள் படம். இதிலே உங்க படத்தைத்தான் முதல் படமா வைக்கப் போறோம். அதற்கப்புறம் உங்களை நாங்க தொடர்ந்து கண்காணிக்க உதவுவீங்களா?'' என்றார். அதாவது, ""உனக்கு பயங்கரமான ஆப்பு வைக்கப் போகிறோம். அதற்கு நீ ஒத்துழைப்பியா'' என்று கேட்பது போல இருந்தது டி.எஸ்.பி.யின் வார்த்தைகள்.

""என்ன சார் சொல்றீங்க? என்னைத் தீவிரவாதியாக்குறதுக்கு நானே உதவுணுமா? நீங்க எது வேணும்னாலும் செய்வீங்கன்னு தெரியுங்க சார். எத்தனையோ விதத்தில் பழி வாங்குறீங்க. அதிலே இதுவும் ஒண்ணு. எல்லாம் உங்க நேரம்'' என்றேன்.

டி.எஸ்.பி. நாகராஜன் அந்த ஆல்பத்தை என்னிடம் காட்டினார். அதில் தீவிரவாதிகளின் படங்கள் வரிசையாக இருந்தன. ""இதிலேதான் கோபால் உங்க படத்தை வைக்கப்போறோம்'' என்றார். ""வீரப்பனிடமிருந்தும் தமிழ்த் தீவிர வாதிகளிடமிருந்தும் ராஜ்குமாரையும் மற்றவர் களையும் காப்பாற்றியதற்கு இப்படியொரு பரிசா'' என்றேன்.

குறுக்கிட்ட லட்சுமணசாமி, ஒரு தீவிர வாதியால்தான் ஒரு தீவிரவாதிகிட்டே சிக்கிக் கிட்டிருக்கவங்களை காப்பாற்ற முடியும் என்று ஏதோ பெரிய தத்துவத்தைச் சொன்னதுபோல சிரித்தார். உடனே டி.எஸ்.பி, நாகராஜன், ""முள்ளை முள்ளால எடுக்கிறதுன்னு சொல்லமாட்டாங்க. அது போலத்தான்'' என்றவர், ""காட்டிலே ஒரு புது கொடி ஏத்தியிருக்கீங்க. அதை படம் எடுத்து, உங்க பத்திரிகையிலேயும் போட்டிருக்கீங்க. இதுவே நீங்க தீவிரவாதின்னு நிரூபிக்கிறதுக்கு போதும்'' என்றார்.

அவர் எந்த சம்பவத்தைச் சொல்கிறார் என்பது புரிந்துவிட்டது.
2000-ம் ஆண்டு. ஆகஸ்ட் 31. வீரப்பன் தன் பிடியிலிருந்த ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமானால், அதற்குப் பதிலாக, சிறையில் இருந்த முத்துக்குமார், சத்தியமூர்த்தி உள் ளிட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். சட்டப்படியாக அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. ரிலீஸ் தேதியும் முடிவாகிவிட்டது. 4 பேரையும் எங்கே ஒப்படைப்பது? ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவித்து எப்படி அழைத்து வருவது? என்பது பற்றி யெல்லாம் ஆலோசிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் தம்பி காமராஜ் வெளியில் இருந்து கவனித்துக் கொண் டார். ஒரு மிகப்பெரிய மீட்பு முயற்சி முடிவுக்கு வந்து, கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழப் போகிறார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகியிருந்தது.

அப்போதுதான் ஒரு திடீர்த் திருப்பம். வீரப்ப னால் காட்டில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஷகில் அக்தரின் அப்பா அப்துல்கரீம் சுப்ரீம் கோர்ட் டில் ஒரு வழக்கு தொடர்கிறார். 4 தீவிரவாதிகளை விடுவிக்கக்கூடாது என்பதுதான் அவரது மனுவிலிருந்த கோரிக்கை. உச்சநீதிமன்ற நீதியரசர் பரூச்சாவிடம் விசாரணைக்கு வந்தது மனு. என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறார் என்பதை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காட்டில் இருந்த வீரப்பன், அவனது கூட்டாளிகள், மாறன் உள்ளிட்ட தமிழ்த் தீவிரவாதி கள் ஆகியோரோடு நானும் தம்பிகளும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம்.

எல்லோரும் வட்டமாக உட்கார்ந்திருக்கிறோம். எங்கள் முன்னால் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ இருக்கிறது. பகல் 12.40 மணிக்கு டெல்லி வானொலி நிலையத்தி லிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்தி அறிக்கைக்காகத்தான் இந்தக் காத்திருப்பு. வெளியில் என்ன நடக்கிறது என்பதை காட்டுக்குள் தெரிந்துகொள்ள இருந்த ஒரே வாய்ப்பு அந்த ரேடியோதான்.

""ஆகாஷவாணி... செய்திகள் வாசிப்பது..''

எல்லோரும் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு காத்திருந்தோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றிய செய்தி, காதில் ஈயத்தை ஊற்றியதுபோல இருந்தது. தமிழ்த் தீவிரவாதி களை விடுதலை செய்யக்கூடாது என்றும், ராஜ் குமாரை மீட்க முடியாவிட்டால் தமிழகம்- கர்நாடகம் இரு மாநில அரசுகளும் ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும் எனத் தன் தீர்ப்பில் மிகக் கடுமையாகத் தெரிவித்திருந்தார் நீதியரசர் பரூச்சா. அதனை ரேடியோ செய்தியில் கேட்ட தும் நாங்கள் பலத்த ஷாக்கானோம். மீட்பு முயற்சி பல்லாயிரம் அடி பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. தீவிரவாதி களை விடுவிக்காவிட்டால் ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்டவர்களையும் விடுவிக்க முடியாது எனச் சொல்லிவிட்டார்கள் வீரப்பன் குழுவினர். வீரப்பன் நறநறவென பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான். என்னைக் கூப்பிட்டு, ""இனிமே என்ன செய்யப்போறே? கோர்ட் தடை போட்டுடிச்சி. எங்க தோழர்களை விடு விச்சாதான், ராஜ்குமாரையும் மத்தவங்களையும் விடுவோம். நீ அரசாங்கத்து தூத ராகத்தானே வந்திருக்கே.. உங்க அரசாங்கம் என்ன செய்யபோகுது'' எனக் கேட்டபடி, அரசாங்கத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தினான். மாறனும் மற்றவர்களும் வேறு ஏதோ ஒரு வேலையில் முஸ்தீபாக இருந்தார்கள். என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

மறுநாள்... செப்டம்பர் 1.

காட்டுக்குள் புரட்சியாளர்களின் படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. காரல்மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ, சேகு வேரா என உலகப் புரட்சியாளர்களில் தொடங்கி தமிழரசன் போன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வரை பலரது படங்களும் இருந்தன. என்னவென்று எனக்குப் புரியவில்லை. அப்போது அங்கு வந்த வீரப்பனின் தோற்றம் முற்றிலுமாக மாறியிருந்தது. தனது வழக்கமான பச்சை நிற உடுப்பை இன் பண்ணியிருந்தான். தலையில் மிலிட்ரி கேப். அவனது ஆட்களும் தமிழ்த் தீவிரவாதிகளும் அதேபோன்ற உடையமைப்பில் தயாராக இருந்தார்கள்.

""சேத்துக்குளி கோவிந்தனிடம் என்ன செய்யப் போகிறீர்கள்'' என்று கேட்டேன். ""தோழர் மாறன் சொல்வதுபோல நடந்துக்குங்க'' என்றான். மாறன் என்னிடம், ""இன்றைக்கு சேகுவேரா நினைவாக மாவீரர் நாளைக் கொண்டாடுகிறோம். இது எங்க ல்ஹழ்ஹக்ங். ம்ஹழ்ஸ்ரீட் ச்ஹள்ற் நடக்கும். அதன்பிறகு, தனித் தமிழ்நாட்டுக்கான கொடியை ஏற்றி சல்யூட் அடிப் போம். உறுதிமொழி ஏற்போம். இதையெல்லாம் உங்க பத்திரிகைகளில் பிரகடனப்படுத்தணும். அந்த செய்தி எங்களுக்கு வரணும். அதற்கப்புறம்தான் ராஜ்குமார் விடுதலை பற்றி முடிவெடுப்போம்'' என்றார்.

ராஜ்குமார் இப்போது அவர்கள் பிடியில் இருக்கிறார். அதன் பின்னணியில் 60 லட்சம் தமிழர்களின் உயிர் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, மீட்பு முயற்சியில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வீரப்பன் தரப்பினர் எடுக்கும் முடிவுதான் ராஜ்குமாரை விடுவிக்கும். அதனால், அவர்களின் நிபந்தனைகளை கேட்க வேண்டிய நெருக்கடி உருவாகியிருந் தது. அவர்களின் மாவீரர் நாள் நிகழ்வுகள், ம்ஹழ்ஸ்ரீட் ச்ஹள்ற், கொடியேற்றுதல் ஆகியவற்றை படம் எடுத்துக்கொண்டு காட்டிலிருந்து திரும்பியிருந்தோம். இரு மாநில முதல்வர் களிடமும் இதனைத் தெரிவித்து, நக்கீரனில் அந்த செய்தியையும் படங்களையும் வெளியிட்டோம். இதைத்தான் தீவிரவாதம் என்று முத்திரை குத்தி என்னிடம் கேள்விகளைக் கேட்டார் டி.எஸ்.பி.

""கர்நாடகாவில் வாழும் தமிழர் களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கையை எப் படி தீவிரவாதம்னு சொல்றீங்க சார்?'' என்றேன்.

""நீங்க அவங்க ளோட ஆளு. அத னாலதான் அவங்க சொன்னதை கேட் டுக்கிட்டு, அவங்க செஞ்சதை வெளி யிட்டிருக்கீங்க'' என்றார் டி.எஸ்.பி. அப்போது இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் குறுக்கிட்டு, ""நான் ஒரு நாவல் படிச்சிருக்கேன். அதில் ஒருத்தர் பத்திரிகை நடத்துவார். அதில் அவர் என்ன செய்தி போடுறாரோ, அது அப்படியே நடக்கும். ஒரு முறை செய்தியைப் போட்டுடுவார். ஆனால், அது நடக்காது. உடனே, தான் போட்ட செய்தி உண்மையாகணும்ங் கிறதுக்காக இவரே ஃபீல்டில் இறங்கி அந்த செயலை செய்து, செய்தியை உண்மையாக்குவார்'' என்றார்.

""சார்... எதுக்கு சார் கதை விடுறீங்க. நீங்க சொல்றது மம்முட்டி நடிச்ச "நியூடெல்லி' படத்தோட கதை. சினிமா கதையையெல்லாம் நாவல்னும் நடந்ததுன்னும் காட்டப் பார்க்காதீங்க.''

""அப்படியா?'' என்றார் டி.எஸ்.பி. நாகராஜன்.

""சார் நாங்க வீரப்பனோட ஆளு கிடையாது. நக்கீரன் மேலே பழி சுமத்துறதுக்காக எதை வேணும்னாலும் சொல்லாதீங்க சார். வேற எதுவும் உங்களுக்கு கிடைக்க லையா? இப்படியெல்லாம் யாராவது செய்ய முடியுமா?'' -நான் கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை.

""இன்ஸ்பெக்டர் ரெடியா?'' என்று கேட்டார் டி.எஸ்.பி. ""ரெடி சார்'' என்று பதில் வந்தது. என்னுடைய கைரேகை யை பதிவு செய்வதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள்.

""கோபால்... உங்க கைரேகையை பதிவு செய்யணும்.''

""எதை வேணும்னாலும் பதிவு செஞ்சுக்குங்க. ஆனா, எல்லாத்துக்கும் கோர்ட் அனுமதி இருக்கணும். என்னிடம் விசாரணை நடத்த மட்டும்தான் கோர்ட் அனுமதிச்சிருக் குது. கைரேகை பதிவு செய்ய உத்தரவு போடலை.''

""உங்ககிட்டே நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து க்ளு கிடைத்ததால் அடுத்த ஸ்டெப்புக்குப் போறோம்'' என்றார் டி.எஸ்.பி. ""இது உங்க கோட்டை.. அதனால எது வேணும்னாலும் பண்ணுவீங்க. நாங்க சட்டத்தை மதிக் கிறவங்க. நீதிமன்ற உத்தரவு இருந்தா நான் ஒத்துழைக் கிறேன்'' என்றேன்.

இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி என் முன்னே வந்தார்.

""தேவாரம் எவ்வளவு பெரிய அதிகாரி? எவ்வளவு நல்ல ஆபீசர் தெரியுமா? அவர் மேலே அநியாயமா பழி போட்டீங்களே?''

-பூனைக்குட்டி வெளியே வரத் தொடங்கியது.

(யுத்தம் தொடரும்)

No comments:

Post a Comment