Wednesday, April 7, 2010

ஸ்டாலின் மீது என்ன கோபம்? அழகிரி பதில்!


""ஹலோ தலைவரே... .... தமிழக அரசியல் போக்கு, நம்ம நக்கீரனில் வெளியாகும் பேட்டிகளின் அடிப் படையில்தான் டர்ன் எடுக்குது.''

""ஆமாப்பா... ஸ்டாலினும்-அழகிரியும் உரசிக்கொண்டால்னு கலைஞர் கொடுத்த பேட்டியையடுத்து, கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவேன்னு அழகிரி ரியாக்ட் பண்ணி னார். அதையடுத்து, மு.க.ஸ்டாலின் நம்ம நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், அதிரடி அரசியலில் தனக்கு நம்பிக்கையில்லைன்னு அழுத்தமா சொல்லியிருந்தார்.''

""இந்த பேட்டி சம்பந்தமாகவும் ஏர்போர்ட்டில் அழகிரியை ஏகப்பட்ட மீடியாக்கள் சூழ்ந்து, ஸ்டாலின் பேட்டிக்கு என்ன ரியாக்ஷன்னு கேட்க, அவர்கிட்டேயே கேளுங்கன்னு சொல்லிட்டார். கலைஞர் குடும்பத்தில் இப்ப சீனியரா இருப்பவங் களில் முக்கியமானவர் முரசொலி செல்வம். கலைஞர் மகள் செல்வியின் கணவர். அவரோட மகள் எழிலரசியின் வீணை இசை அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு சென்னையில் நடந்தது. 3 மாதத்தில் வீணை பயிற்சி முடித்து நடைபெற்ற அரங் கேற்றத்தில் எழிலரசியின் வீணை இசை, கலைஞர் உள்ளிட்ட எல்லோரையும் கவர்ந்திடிச்சி. சமீபகாலத்தில் கலைஞர் குடும்பத்தினருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி தந்த விழா இது.''

அந்த விழாவில் பேசிய கலைஞர், "என்னுடைய குடும்பம் கலைக் குடும்பம். கலையாத குடும்பம், கலைக்க முடியாத குடும்பம்-அவ்வாறு இது திகழவேண்டும் என்பதுதான் கடவுள் நம்பிக்கை இல்லா விட்டாலும் என்னு டைய பிரார்த்தனை யாகும்'னு நெகிழ்ச்சியா சொல்லியிருக்கிறாரே!''

""இந்த விழாவில் கலைஞருக்கு ஒரு பக்கம் அழகிரியும் கனிமொழியும் உட்கார்ந்திருந்தாங்க. இன்னொரு பக்கம் ஸ்டாலினும் தயாநிதி மாறனும் உட்கார்ந்திருந்தாங்க. நிகழ்ச்சி முடிந்து கிளம்புற வரைக்கும் ஸ்டாலினும் அழகிரியும் எதுவும் பேசிக்கலை. ஆனா, அதற்கப்புறம் அழகிரி தனக்கு வேண்டியவங்ககிட்டே, நடப்பு அரசியல் நிகழ்வுகள்பற்றி மனம் திறந்து பேசியிருக்காரு. அப்ப, உங்க சொந்த தம்பி ஸ்டாலின் மீது அப்படி என்ன கோபம்னு அவருக்கு வேண்டியவங்க கேட்டிருக்காங்க.''

""என்ன சொன்னாராம்?''

""நம்ம நக்கீரனில் ஏற்கனவே சொன்ன விஷயம்தான். பென்னாகரம் இடைத்தேர்த லுக்கு தன்னைப் பிரச்சாரத்துக்கு வரும்படி ஸ்டாலின் கூப்பிடலைன்னு கலைஞரிடம் அழகிரி சொல்லியிருந்ததையும், அதுபற்றி ஸ்டாலின்கிட்டே கலைஞர் கேட்டப்ப, ஸ்டாலின் சொன்ன பதில் கலைஞருக்கு திருப்தி தரலைன்னும் எலெக்ஷன் சமயத்திலேயே சொல்லியிருந் தோம். பென்னாகரத்தில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் இருந்தப்ப, அழகிரி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தார். தனக்குரிய மரியாதையை ஸ்டாலின் தருவதில் லைன்னு தனக்கு நெருக்கமானவங்க கிட்டே அழகிரி சொல்லியிருக்கிறார்.''

""கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளரா இருக்கிறவர் அழகிரி. அவர் மண்டலத்தில் இடைத்தேர்தல் நடக்கும்போது ஸ்டாலின் போய் பிரச்சாரம் செய்கிறார். அதுமாதிரி இவரும் வந்து பிரச்சாரம் செய்தால், கட்சிக்கு பலம்தானே!''

""அழகிரிக்கு வேண்டியவங்க அது பற்றியும் அவர்கிட்டே கேட்டிருக்காங்க. அதற்கு, நான் என் அப்பா மாதிரி பிடிவாதக்காரன். அந்தப் பிடிவாதத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அழையா விருந்தாளியா எங்கேயும் போகமாட் டேன். கூப்பிட்டாதான் போவேன். மதுரைக்கு ஸ்டாலின் வந்தா என் ஆட்கள் வரவேற்க வருவதில்லைன்னு சொல்றாங்க. அவர் முன்கூட்டியே சொல்லிட்டு வந்தாதானே ஆட்களை அனுப்ப முடியும். மதுரைக்கு வந்த பிறகு சொன்னால் எப்படின்னு சொன்னவர், அதன்பிறகு சொன்ன விஷயங்கள் ரொம்ப முக்கியமானவை. ஸ்டாலினே முதல்வராகி, பதவியில் இருக்கட்டும். எனக்கு மத்திய மந்திரி பதவியெல்லாம் வேணாம். இந்த பார்லி மெண்ட் கூட்டத் தொடர் முடிஞ்சதும் என்னோட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திடுவேன். வெறும் எம்.பி.யா தென்மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிக் கூட்டங்களை நடத்தப்போறேன். எம்.எல்.ஏ தேர்தலில் என் பங்குக்கு 60 தொகுதிகளை ஜெயித்து தர்றேன்ங் கிறாராம் அழகிரி.''

""தென்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை லம்ப்பா ஜெயித்துக்காட்டுறேன்ங்கிறார்.''

""அதோடு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் தன் பொறுப்பில் கொடுத்தால் இன்னும் 30 தொகுதிகளைச் சேர்த்து 90 தொகுதி கள் வரைக்கும் ஜெயித்து தர்றேன்னு பிட்டு போடுகிறார். அதாவது, மெஜாரிட் டுக்குத் தேவை 118 தொகுதிகள். தன்னோட 90 போக, 30 தொகுதிகளை நீங்க கவனம் செலுத்தினா போதும்ங்கிறதுதான் அழகிரியோட கணக்கு. இதையெல் லாம் சொல்ல வேண் டிய இடத்தில் சொல் லுங்கண்ணேன்னு அவரோட ஆதரவாளர்கள் சொல்லியிருக் காங்க. கலைஞர்கிட்டேயே இதைப் பற்றி பேசிட்டேன்னு அழகிரி சொல்லியிருக்காரு.''

""தி.மு.க ஏரியாவிலேயே டிராவல் பண்ணிக்கிட்டிருக்கியே.. அ.தி.மு.க பக்கம் வாப்பா.. சிறுதாவூர் பங்களாவில் அ.தி.மு.க நிர்வாகிகளோடு ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு ஜெ ஆலோசனை நடத்தியிருக்காரே... பென்னாகரம் முடிவுகள் பற்றித் தானா?''

""ஆமாங்க தலைவரே... ... ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தம்பிதுரை, ஜெயக்குமார் இவங்களையெல்லாம் சிறுதா வூருக்கு வரவைச்ச ஜெ.வின் முகம் கோபத் தில் கடுகடுன்னு சிவந்திருந்திருக்குது. சிறுதாவூர் பங்களாவில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில்தான் டிஸ்கஷன். ஜெ கையில், பென்னாகரத்தில் பூத்வாரியா அ.தி.மு.க வாங்கிய ஓட்டு விவரம் இருந்திருக்குது. பா.ம.க., தே.மு.தி.க.வெல்லாம் ஓட்டு வாங்கி யிருக்குது. அதெல்லாம் நம்மைவிட பெரிய கட்சியா? தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி சொன்னபடி நாம டெபாசிட் இழந்திருக் கோம். தோல்வியைக் கூட நான் தாங்கிக்கு வேன். துரோகத்தை ஏற்கமாட்டேன்னு கோபமா சொல்லியிருக்கிறார்.''

""கட்சி நிர்வாகிகளின் பதில் என்ன?''

""அவங்க, நாங்களும் எவ்வளவோ போராடினோம். பா.ம.க 4 மாசமா கேம்ப் போட்டு ஜாதி ஓட்டுகளை குறி வச்சி செயல்பட்டது. தி.மு.க. 3 மாசமா அங்கேயே சுற்றி சுற்றி வந்துக்கிட்டிருந்தது. நாம வெறும் 15 நாள்தான் வேலை பார்த்தோம். இருந்தா லும், இன்னும் ஒரு 2000 ஓட்டுகள் வாங்கி நீங்க சொல்றமாதிரி டெபாசிட் இழக்காம தப்பிச்சிருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. இனி, கட்சியை எப்படி பழைய கட்டுக் கோப்புக்கு கொண்டுவருவதுன்னு சிறுதா வூரில் டிஸ்கஷன் நடந்திருக்குது.''

""என்ன முடிவெடுத்தாங்களாம்?''

""மே 1-ந் தேதியன்னைக்கு நெய்வேலியில் எம்.ஜி.ஆர் சிலையை ஜெ. திறக்கிறார். அதற்கான இடம், விழா அமைப்பு பற்றியெல்லாம் பேசியதோடு, தொண்டர்கள்கிட்டே இனிமே நெருக் கமா இருக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றியும் பேசியிருக்காங்க. 2004-ல் கொளப்பாக்கத்தில் கிளைவாரியா கட்சிக்காரர்களை சந்தித்ததுபோல சந்தித்துப் பேசலாம்னு ஆலோசிக்கப்பட்டிருக்குது. இந்த சந்திப்பு முடிவானால், ஒரு கிளையிலிருந்து 4 பேர் வரணும். ஒரு ஒன்றியத் துக்கு 1200 பேர் வருவாங்க. இவங்களுக்கெல்லாம் ஒ.செ. தான் பஸ் ஏற்பாடு, தங் க இடம், சாப்பாடுன்னு செலவு செய்யணும். கணக்கு போட்டா, ஒரு ஒ.செ.க்கு 5 லட்சத்துக்கு குறையாம செலவாகுமேன்னு யோசித் திருக்காங்க. 96-ல் ஜெ. உள்பட அ.தி.மு.க.வினர் தோற்றபிறகு, டான்சி நிலத்தில் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். அதற்கப்புறம் 2001-ல் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதுபோல இப்பவும் கட்சியினரை சந்திக் கணும். அவங்களை ஒரு இடத்துக்கு வரவைக்கலாமா அல்லது ஜெ ஒவ்வொரு மாவட்டமா பயணம் செய்து சந்திக்கலாமான்னு ஆலோசனை நடந்திருக்குது. இன்னும் முடிவெடுக்கலையாம்.''

""பென்னாகரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அ.தி.மு.க தரப்பிலிருந்து பா.ம.க. வுக்கு அழைப்பு வந்ததாகவும், அ.தி.மு.க சார்பில் வேட் பாளரை நிறுத்தாமல் பா.ம.க.வை ஆதரிப்பதுன்னும், ராஜ்யசபா சீட் தருவதுன்னும், சி.வி.சண்முகம் போட்ட வழக்கை வாபஸ் வாங்குவதுன்னும் சொன்னதாகவும், கார்டனுக்கு வரும்படி அழைத்ததாகவும் இதையெல் லாம் பா.ம.க ஏற்கலைன்னும் எலெக்ஷன் முடிந்து ரிசல்ட்டெல்லாம் வந்தபிறகு கோ.க.மணி சொல்லி யிருக்கிறார். அதுக்கு ஜெயலலிதாவிடமிருந்து அதிகாரபூர்வமா எந்த பதிலும் இல்லையே?''

""அ.தி.மு.க. தரப்பில் விசாரிச் சப்ப அவங்க தரப்பைச் சொன் னாங்க. அதாவது இடைத் தேர்தல் நேரத்தில் பா.ம.க தரப்பிலிருந்து எல்லா கட்சிகளையும் தொடர்பு கொண்டு பேசினாங்க. அப்ப அ.தி.மு.க சைடில் டாக்டர் வெங்கடேஷ், செங்கோட்டையன், ஆர்ட்டிகல்ச்சர் கிருஷ்ண மூர்த்தி இவங்களெல்லாம் பா.ம.கவோடு காண்டாக்ட் டில் இருந்தாங்க. அவங்க மூலமா, பா.ம.க வுடனான கூட்டணி பற்றிய பேச்சு ஜெ.விடம் போக, அவரோ... அவங்க வரட்டும். பேசட்டும். நம்மை ஆதரிக்கட்டும்னு சொல்லியிருக்காங்க. பா.ம.க தரப்புக்கு இதை கன்வே பண்ணிய மூவரும், கார்டனுக்கு மேடம் வரச்சொன்னாங் கன்னு மட்டும் சொல்லியிருக்காங்க. இந்த ராங் கன்வேதான் இப்ப அரசியல் பரபரப்பாகி யிருக்குது. பா.ம.கவோ அ.தி.மு.க அழைத்தும் நாங்க போகலைன்னு தி.மு.கவுக்கு சிக்னல் காட்டுவதாக சொல்றாங்க.''

""ஆமாப்பா... இடைத்தேர்தல் சமயத்திலேயே கலைஞரிடம் ராமதாஸ் போனில் பேசியிருக்காரே!''

""அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தேவைப்படுவதால் பா.ம.க இந்த மூவ் பண்ணுதுங்கிறதுதான் அரசியல் வட்டார கணிப்பு. தி.மு.க தரப்பில் விசாரித்தேன். அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. போனால் அந்த அணி பலமாயிடும். அதனால தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வை வச்சுக்க கலைஞர் நினைப்பார்னு ஒரு தரப்பு சொல்லுது. அதனாலதான், கோ.க.மணி மீது போடப்பட்ட தீண்டாமை வழக்கு கை விடப்பட்டிருக்குன்னு சொல்றாங்க. இன்னொரு தரப்போ, வழக்கை வித்ட்ரா பண்ணியதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்வ தோடு, இப்ப சட்டமன்றம் நடந்துக்கிட்டிருக்கிற நிலையில், கோ.க.மணி மீதான தீண்டாமை வழக்கை பா.ம.க பெரிய இஷ்யூவாக்க திட்டம் போட்டிருந்ததுன்னும், அதனால ஏற்கனவே மந்திரி சுரேஷ்ராஜன் மீது இதுமாதிரியான வழக்கு விவகாரம் வந்தபோது, அடிப்படை முகாந்திரம் இல்லாததால் கைவிட்டதுபோல, இப்பவும் அடிப்படை முகாந்திரம் இல்லாததால் கைவிடப்பட்டிருக்குன்னும் சொல்லுது.''

""தே.மு.தி.க.வின் மா.செ.க்கள்-மாநில நிர்வாகிகளோடு விஜயகாந்த் ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?''

""அது ஒன் மேன் ஷோ போல நடந்ததுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க தலைவரே... ... அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், நான்தான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 20 வருஷத்துக்கு நான்தான் முதல்வரா இருப்பேன். வில்லனாக நடிக்கத்தான் வந்தேன். ஹீரோ வாயிட்டேன். அப்புறம் நடிகர் சங்கத் தலைவரானேன். நான் நினைப்பதெல்லாம் நடக்குது. என் படம் கஜேந்திராவை ரிலீஸ் பண்ண விடாம தடுத்தாரு ராமதாஸ். கட்சி ஆரம்பித்து அவரோட ஏரியாவிலேயே போட்டி போட்டு ஜெயித்தேன். என் குணத்தை யாருக்காக வும் மாத்திக்க மாட்டேன். என்கிட்டே பணம் இல்லை. கேப்டன் டி.வி.யை கடனில்தான் ஆரம்பிக்கிறேன். நீங்களும் நிறைய கஷ்டப்படு றீங்கன்னு தெரியும். கட்சி ஆரம்பித்த 4 வருஷத்திலேயே கூட்டணி வச்சி எம்.எல்.ஏ. மந்திரின்னு ஆயிடும்னு நினைக்கிறீங்க. அவ்வளவு சீக்கிரமா முடியாது. கட்சியை விட்டுப் போறதுன்னா போங்க. நான் கவலைப்படலை. என்கூட இருந்தா, நான் முதலமைச்சராகிறப்ப நீங்க மந்திரியாவீங்க. நானும் நல்லா இருப்பேன். நீங்களும் நல்லா இருப்பீங்க. அ.தி.மு.க இப்ப ஸ்ட்ராங்கா இல்லை. தி.மு.க.வில் ஸ்டாலின்- அழகிரி மோதல் பெருசாகி எலக்ஷன் நேரத்தில் நமக்கு சாதகமா அமையும்னு சொல்லியிருக்காரு.''

""நித்யானந்தர் தகவலோடு நான் லைனில் இருக்கேன். பெங்களூரில் பாலகங்காதர சுவாமிகள்ங்கிறவரோட ஆசிரமம் இருக்குது. இவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். டெல்லியிலிருந்த நித்யானந்தா இப்ப இந்த ஆசிரமத்திற்கு வந்துதான் ரகசியமா தங்கியிருக்கிறாராம். நித்யானந்தரின் சீடரான சதானந்தாங்கிற தனசேகரன் தினமும் ரகசியமா இந்த ஆசிரமத்துக்கு வந்து நித்யானந்தரை சந்திச்சிட்டுப் போறாராம். தன் விசிட் யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுங்கிறதுக்காக தாடியை எடுத்துட்டு, மொட்டை அடிச்சிருக்காராம் சதானந்தா. கர்நாடக அரசின் சப்போர்ட்டால் நித்யானந்தா இப்போது பத்திரமாக இருக்கிறார்.''

மிஸ்டுகால்



பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் டெபாசிட் இழப்புத் தோல்வியை தாங்கமுடியாமல் தீக்குளித்த தொண்டர் தங்கவேலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஜெ., அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும் செய்தார். 70%க்கு மேல் தீக்காயமடைந்த தங்கவேல், சிகிச்சை பலனின்றி திங்களன்று மதியம் மரணமடைந்தார்.



கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அவர் மீது நில சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, அவர் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் விலகியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு, அவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு தெரிவித்துள்ளது.



பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டத் திட்டமிட்டிருப்பதால், உடுமலைப்பேட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தி வைகோ தலைமையில் ஏப்ரல் 2-ந் தேதியன்று அமராவதி சோதனைச்சாவடியில் ம.தி.மு.க.வினர் திரண்டு மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை சென்னைவரை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



மே 15-ந் தேதிவரை நடைபெறவுள்ள பட்ஜெட் விவாத கூட்டத்திற்காக ஏப்ரல் 5-ந் தேதி தமிழக சட்டமன்றம் கூடியது. முதல்நாளில், மின்வெட்டைக் கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து வந்தனர் சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள். மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.ஐ. கட்சியினருடன் சேர்ந்து இவர்களும் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க.வினர் மீது வழக்குப் போடப்படுவதைக் கண்டித்துப் பேச அனுமதிக்காததால் பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்

No comments:

Post a Comment