Friday, April 30, 2010

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment