Friday, April 9, 2010

ஒரே பார்வையில் வடக்கு கிழக்கு மலையக தேர்தல் முடிவுகள்

இலங்கையின் வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களைப் பெற்று இலங்கை நாடாளுமன்றில் 3 ஆவது தனிப்பெரும் கட்சியாக கட்சியாகியுள்ளது‐போனஸ் ஆசனம் கிடைத்தால் 14 ஆசனங்கள்‐ பட்டியல் இணைப்பு

நடந்துமுடிந்த 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்துறை தொகுதியைத் தவிர ஏனைய அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இந்த மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 மொத்தமாக பெற்று ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊர்காவல்துறை தொகுதியில் மாத்திரம் வெற்றிபெற்றதுடன் மொத்தமாக 47,622 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிபெறறாத போதிலும் 12,624 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும் இலங்கைத் தமிரசுக் கட்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 37,522 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிரசுக் கட்சி பட்டிருப்பு தொகுதியில் மாத்திரம் வெற்றிபெற்ற போதிலும் அந்த மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சி மொத்தமாக 66,235 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மற்றும் கல்குடா தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன் மொத்தமாக 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் அந்த மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி 22,935 வாக்குகைளப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 16,886 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 132,096 வாக்குகளுடன் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய முன்னணி 90,757 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 26,895 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதுடன் மூதூர் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. திருகோணமலை தொகுதியின் தேர்தல் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை. திருகோணமலை தொகுதிக்குட்பட்ட கும்புறுப்பிட்டி வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டுக்கள் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வாக்கு எண்ணும் பணிகள் சூன்யமாக்கப்பட்டன. இதனால் திருகோணமலை தொகுதியின் தேர்தல் முடிவு வெளிவருவது தாமதமாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்தின் தமிழ் மக்கள் செறிந்துவாழும் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நான்கு தேர்தல் தொகுதிகளிலும் வெற்றிபெற்றதுடன் மொத்தமாக 149,111 வாக்குகளைப் பெற்று ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி 96,885 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மலையக மக்கள் முன்னணி 13, 189 வாக்குகளைப் பெற்ற போதிலும் ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

பதுளை மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதுடன் 203,689 வாக்குகளுடன் ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய முன்னணி 112,886 வாக்குகளைப் பெற்றதுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியது. மலையக மக்கள் முன்னணி 11,481 வாக்குகளைப் பெற்ற போதும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்ற முடியவில்லை.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தொகுதியின் பல வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு சூன்யமாக்கப்பட்டு மறு வாக்குப் பதிவு செய்யப்படவுள்ளதால் இந்த மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 480,896 வாக்குகளுடன் 10 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் ஐக்கிய தேசிய முன்னணி 339,750 வாக்குகளுடன் ஏழு ஆசனங்களையும் ஜனநாயக தேசியக் கூட்டணி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றின.

TNAயில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்:‐

நடைபெற்று முடிந்த இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோயோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்த்தி ஆனந்தன், வினோனோதராதலிங்கம் ஆகியோரும் அம்பாறையில் சந்திரநேரு சந்திரகாந்தனும், மட்டக்களப்பில் பொன்செல்வராசா, யோகேஸ்வரன், அரியநேந்திரன் ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தில் ஆர் சம்பந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின்படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 41673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37527 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கியதேசிய முன்னணி 12813 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. மட்டக்களப்பில் 3 ஆசனமும் திருகோணமலையில் 1 ஆசனம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்பாறை மாவட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment