Tuesday, March 30, 2010

மனம் திறந்து பேசுகிறார்! ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்..? முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி


shockan.blogspot.com
தமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.

2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.
இந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன? தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன? என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...!

5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;

அதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் ""மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;

இதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;

தனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

கலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-

""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -

""யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.





செம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே?

கலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.



தி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்?

கலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா?





தி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள்! அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார்? யார்? என்று பட்டியல் இடுங்களேன்?

கலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே?



அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்?

கலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.





கிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது?

கலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.





தமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது? பிடிக்காதது?

கலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.

குளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்?

கலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.

இடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.





மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

கலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.





எல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.

கலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.





தி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம்? எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்?

கலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.





உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்?

கலைஞர் : ""இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே?'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.


முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

கலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.


கட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா? எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

கலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.


இலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன?

கலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்!


72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி?

கலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.

No comments:

Post a Comment