Friday, June 11, 2010
கசாப்பை விடுவிக்க விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்
shockan.blogspot.com
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கைதாகி தூக்கு தண்டனை பெற்றுள்ள கசாபை விடுவிக்க மும்பை விமானத்தை தீவிரவாதிகள் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து மும்பை விமான நிலையம் உள்பட நாடு முழுவதுமே விமான நிலையங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் உதவியோடு நடத்தியதாக அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லி, இந்திய விசாரணைக் குழுவினரிடம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விமானக் கடத்தல் திட்டத்தை அரங்கேற்றி கசாவை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் பேரம் பேச தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அல்-கொய்தா, தலிபான்கள் உதவியோடு ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகள் நேபாளத்தில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்துக்குக் கடத்தி தீவிரவாதிகளை விடுவித்த பாணியில் இப்போதும் கசாபை விடுவிக்க முயல்வதாகத் தெரிகிறது.
முதலில் தீவிரவாதிகளின் நேபாளத்தில் இருந்து டெல்லி, மும்பைக்கு வரும் விமானங்களை கடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த சதி திட்டம் குறித்து ரா மற்றும் ஐபி உளவுப் பிரிவுகள் விமான போக்குவரத்துத் துறையை உஷார்படுத்தின. இதையடுத்து நேபாள தலைநகர் காட்மாண்டு விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதோடு இந்திய விமானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் விமானக் கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந் நிலையில் உளவுத்துறையினர் மீண்டும் ஒரு எச்சரிக்கை தகவலை தந்துள்ளனர். அதில், மும்பையில் இருந்து புறப்படும் அல்லது மும்பைக்கு வரும் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகளின் தற்கொலை படை மும்பை விமான நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்றும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால் மும்பை விமான நிலையத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் 12 தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண உடை போலீசார் ரோந்து பணியில் சுற்றி வந்து சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கின்றனர்.
நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானத்தை கடத்த இயலவில்லை என்பதால் மும்பையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானத்துக்குத்தான் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மராட்டிய மாநில உளவுத்துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 2 பேர் இந்த கடத்தலில் ஈடுபட முயலக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பை தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பிற விமான நிலையங்களிலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment