Thursday, June 24, 2010

உயிருக்கு நேர்


shockan.blogspot.com

தமிழின் பெருமைகளை உரக்கச் சொல்லும் வகையில் "உயிருக்கு நேர்' என்ற சிறப்பு மலரினை நக்கீரன் நிறுவனம் தயாரித்துள்ளது. மலரின் முதல் படியினை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞரிடம் நக்கீரன் ஆசிரியர் 20-06-2010 ஞாயிறு காலையில் நேரில் வழங்கினார். கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது நக்கீரன் இணையாசிரியர் அ.காமராஜ், தலைமைத் துணையாசிரியர் கோவி.லெனின் இருவரும் உடனிருந்தனர். நக்கீரன் தயாரித்துள்ள சிறப்பு மலரின் உள்ளடக்கத்தையும் வடிவமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து அகமகிழ்ந்தார் முதல்வர்.

கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை (திருவள்ளுவராண்டு 2041 ஆனி 9-13) நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள்தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவில் நக்கீரன் இடம்பெற்றுள்ளது. முதல்வர் தலைமையில் நடந்த இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், "செம்மொழிக்காக பத்திரிகைகள் அனைத்தும் தனித்தனியே மலர் வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும். நக்கீரன் சார்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறோம்' என உறுதியளித்திருந்தார் ஆசிரியர் நக்கீரன் கோபால். அதனை நிறைவேற்றும் வகையில் உயிருக்குநேர் எனும் 232 பக்க சிறப்புமலர் முற்றிலும் வண்ணப்பக்கங்களுடன் 130 ரூபாய் விலையில் வெளிவந்துள்ளது.

தமிழ் அறிஞர்களின் கைவண்ணத்தால் சிறந்துள்ள, உயிருக்குநேர் எனும் இந்த மலரில் பரிதிமாற்கலைஞர், கால்டுவெல், திரு.வி.க, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட அந்நாளைய தமிழறிஞர்களின் கட்டுரைகளில் தொடங்கி, இன்றைய தமிழ் வல்லுநர்களின் கட்டுரைகள் வரை இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி பாரதி, பாரதிதாசன், கண்ண தாசன், மு.மேத்தா, வைரமுத்து எனத் தொடரும் தமிழ்க்கவிதை பாரம்பரியத்தின் இன்றைய கவிஞர்கள் வரையிலான படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

செம்மொழித் தமிழின் தொன்மைச் சிறப்புகளையும் இன்று அது எதிர்கொள்ளும் சவால்களையும் நாளை பெறவேண்டிய வெற்றிகளையும் அலசி ஆராயும் வகையில் அமைந்துள்ள இம்மலர், செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியாகும்.

No comments:

Post a Comment