Monday, June 14, 2010

கொடநாட்டில் ஓய்வா? ஜெ. ஆவேசம்


shockan.blogspot.com

கருணாநிதி தலைமைக் கழகத்திற்குச் சென்று கட்சிக்காரர்களை சந்திக்கிறார் என்றும், நான் தலைமைக் கழகத்திற்குப் போவதற்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது என்றும் பேசி இருக்கிறார் மு.க. அழகிரி.

கருணாநிதியானாலும், அழகிரியானாலும், ஸ்டாலின் ஆனாலும், இவர்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ஆட்கள் யாரும் வருவதில்லை. ஏனென்றால் மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி இவர்களிடம் இல்லை.




ஆனால், நான் தலைமைக் கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகின்றார்கள். தலைமைக் கழகம் சென்றால், அவர்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பதால், நான் வீட்டில் இருந்தபடியே முக்கியமான கட்சி வேலைகளை கவனிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நான் முதன் முதலாக தொண்டர்களை சந்தித்து மனுக்களை வாங்கினேன் என்றும், இது எனது கன்னி சந்திப்பு என்றும், ஒரு மணி நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நான் போய்விட்டேன் என்றும், இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துவிட்டதாகவும் 22 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் மனு வாங்கும் படலம் என்றும் சில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நான் 1982 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்ததில் இருந்து இன்று வரை கழக உடன்பிறப்புகளிடமிருந்து தினந்தோறும் மனுக்களை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 1982 ஆம் ஆண்டு நான் தலைமைக் கழகம் செல்ல ஆரம்பித்த பிறகு தான் தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.

1983 ஆம் ஆண்டு கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் தினமும் தலைமைக் கழகத்திற்கு சென்று அங்கு வரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தேன்.

அதற்கு முன்பு புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இருந்த எந்த ஒரு அமைச்சரும் தலைமைக் கழகத்திற்கு சென்று என்னைப் போன்று கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்றதும் கிடையாது, அவர்களது குறைகளை கேட்டறிந்ததும் கிடையாது என்று கழக உடன் பிறப்புகளே என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். கழகத் தொண்டர்கள் தான் அமைச்சர்களை தலைமைச் செயலகத்திற்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கோ சென்று பார்ப்பார்களே தவிர, அமைச்சர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். காலையில் கோட்டைக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்காக மாம்பலம் ஆற்காடு சாலையில் இருந்த அலுவலகத்திற்கு வருவார்கள். நானும் தலைமைக் கழகத்தில் காலை முதல் மதியம் வரை தொண்டர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாம்பலம் அலுவலகத்திற்குச் செல்வேன். அங்கு புரட்சித் தலைவரோடு நானும் மதிய உணவு அருந்துவேன். பின்னர், கழக உடன்பிறப்புகள் என்னிடம் கொடுத்த மனுக்களை, கோரிக்கைகளை புரட்சித் தலைவரிடம் தெரிவிப்பேன். இதன் விளைவாக கழக உடன் பிறப்புகளின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

1983 ல் கழக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு, தமிழ் நாட்டில் என் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் நான் தொடர்ந்து இடைவிடாது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு ஊரிலும் என்னை சந்தித்த கழக உடன்பிறப்புகளின் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை பொறுமையாக கேட்டுக் கொள்வேன்.

இந்த அளவுக்கு கட்சிப் பணியை நான் ஆற்றியதன் காரணமாகவும், கழக உடன் பிறப்புகளின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியதன் காரணமாகவும் தான் கழக உடன் பிறப்புகள் “புரட்சித் தலைவரின் வாரிசு” என்று என்னை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரியும். எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987 வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும்.

எந்த ஒரு கட்சியின் பொதுச் செயலாளரும் அத்தனை பேரிடமும் ஒரே நாளில் மனுக்களைப் பெற்று அவர்களது குறைகளை நேரில் கேட்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். ஏனென்றால் இன்று, கழகம் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. இருப்பினும், அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். தினசரி தொண்டர்கள் தலைமைக் கழகத்திற்கும், எனது இல்லத்திற்கும் வருகின்றார்கள். கழகத் தொண்டர்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அனைத்துக் கடிதங்களுக்கும் பதில்கள் அனுப்பப்படுகின்றன.

எல்லோரையும் நான் நேரில் பார்த்து மனுக்களைப் பெறவில்லை என்று குறை சொல்பவர்கள், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1982 ல் என்னுடைய வயது 34. இன்று எனக்கு வயது 62 என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், கழக தொண்டர்கள் எல்லோரும் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால், மாவட்ட வாரியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தால் சரியாக வராது என்பதால், ஒன்றிய வாரியாகவோ, நகர வாரியாகவோ, அல்லது சட்டமன்றத் தொகுதி வாரியாகவோ சந்திக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சட்ட மன்றத் தொகுதி வாரியாக சந்திப்பை ஏற்பாடு செய்தால் கூட, 234 நாட்கள், அதாவது கிட்டத்தட்ட ஒர் ஆண்டு காலம் ஆகும். அப்போதும் ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் வருவார்கள். இருந்தாலும், இதற்கு என்ன வழி என்பதை சிந்தித்து, விடா முயற்சியோடு தொண்டர்களுக்கு நிச்சயம் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவேன்.

கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு வராமல் இருந்தால் தான் செய்தி. நான் தலைமைக் கழகத்திற்கு வந்தால் அது தான் செய்தி என்று சொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தொண்டர்களை தினசரி சந்தித்து இருக்கிறாரா? அதற்கு அத்தாட்சி இருக்கிறதா? நான், போயஸ் கார்டனில் இருந்தாலும், தலைமைக் கழகத்தில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும், எந்த நேரமும் கழகப் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்.

கருணாநிதி தலைமைக் கழகத்திற்குச் சென்று கட்சிக்காரர்களை சந்திக்கிறார் என்றும், நான் தலைமைக் கழகத்திற்குப் போவதற்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது என்றும் பேசி இருக்கிறார் மு.க. அழகிரி. கருணாநிதியானாலும், அழகிரியானாலும், ஸ்டாலின் ஆனாலும், இவர்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ஆட்கள் யாரும் வருவதில்லை. ஏனென்றால் மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி இவர்களிடம் இல்லை. அறிவாலயம் எப்போதும் கூட்டம் இன்றியே வெறிச்சோடி இருக்கும். ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சி இருந்தால் தவிர அங்கு கூட்டம் வருவதில்லை.

ஆனால், நான் தலைமைக் கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகின்றார்கள். தலைமைக் கழகம் சென்றால், அவர்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பதால், நான் வீட்டில் இருந்தபடியே முக்கியமான கட்சி வேலைகளை கவனிக்கிறேன்.

அடுத்தபடியாக நான் கோடநாடு சென்றாலே, ஒய்வெடுக்க செல்கிறேன் என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கோடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை
தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கோடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment