Saturday, June 19, 2010
யாருடன் கூட்டணி? தே.மு.தி.க. தலைவர் பரபரப்பு பேட்டி!
shockan.blogspot.com
எம்.ஜி.ஆரின் அமைச்சரவை சார்பாக இலங்கை பிரச்சினையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் வாதிட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இன்று விஜயகாந்த்தின் தலைமையிலான தே.மு.தி.க.வின் அவைத்தலைவராக, அந்தக் கட்சி எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் அச்சாணியாக திகழ்கிறார். தே.மு.தி.க., வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட தயாராகிறது. அதற்காக அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது என செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவரை நாம் சந்தித் தோம்.
இலங்கை பிரச்சினையின் இன்றைய நிலை?
பண்ருட்டி ராமச்சந்திரன் : இலங்கை தமிழர்களின் இன்றைய நிலை சொல்வதற்கு முடியாத அளவில் படுமோசமாக இருக்கிறது. தமிழர்கள் வசித்த பகுதிகள் எல்லாம் சிங்களர் வசம் வந்துவிட்டது. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்-குறிப்பாக பெண்கள் ஒருவேளை உணவுக்குக்கூட தங்கள் மானத்தை சிங்கள ராணுவத்திற்கு விற்கவேண்டிய இழிநிலை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை ஏன் அவர்கள் தம் வாழ் விடங்களுக்கு அனுப்ப வில்லை என கேள்வி கேட்டால் சிங்கள அரசு கண்ணிவெடிகள் அகற்று வதில் காலதாமதம் என காரணம் சொல்கிறது. உண்மையில் தமிழர்களின் வீடு, நிலம், தோட்டம், கிராமம் அனைத்தும் சிங்களமயமாகி வருகிறது. கோயில்கள் புத்தவிஹார் களாக மாற்றப்பட்டு வருகிறது.
இலங்கை அரசின் இந்த செயல்பாடு என்ன விளைவை ஏற்படுத்தும்?
இலங்கையில் எந்த இடத்திலும், ஊரிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடாது என்கிற திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும் ராஜபக்ஷே அரசு இலங்கை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமையானது என சொல்வது தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு மாகாணமான உரிமை முழக்கத்தை மறுப்பதற்காகவே. தமிழர் கள் நிரந்தர அடிமையாவார்கள். இந்த சிங்களமயமாக்கும் மனிதாபிமானமற்ற இனவெறி திட்டத்திற்கு இந்திய அரசு ஓடோடி உதவிபுரிந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். ஆட்சி இருந்தால் தமிழர்களுக்காக என்ன கோரிக்கையை எழுப்பியிருப் பீர்கள்?
பண்ருட்டி ராமச்சந்திரன் : போர் முடிந்துவிட்டது எனச் சொல்லும் இலங்கை அரசே வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம், தமிழர்கள் தங்கள் தாயக பூமியில் சுதந்திரமாக நடமாடக்கூட உரிமை யில்லையா? அவர்களை மட்டும் ராணுவ ஆட்சியின் கீழ் அடக்கி ஆள நினைப் பது மனித உரிமைகளுக்கு எதிரானது. முதற்கட்டமாக தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்பதுதான் எங்களது முதல் கோரிக் கையாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் நிலவும் தற்போ தைய அரசியல் சூழல்?
பண்ருட்டி ராமச்சந்திரன் : தமிழக மக்கள் தங்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள் பற்றி அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு இலவசத் திட்டங் களையும் பணத்தையும் அரசு வாரி இறைக்கின்றன. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. மக்கள் இந்த மயக்கத்திலிருந்து விழித்தெழுவார்கள் என உறுதியாக நான் நம்புகிறேன். பதவி, பணம், படை பலம், எதிர்க்கட்சிகளை சீரழிக்கும் போக்கு போன்றவை மக்கள் சக்தியின் முன் தோற்றுப் போகும் என்பதே உலக வரலாறுகள் உணர்த்தும் உண்மையாகும்.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி?
பண்ருட்டி ராமச்சந்திரன் : ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் எதையும் பணத்தால் சாதிக்க முடியும் என்கிற சூழ்நிலையும், எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியாக அரசியல் நடத்துவதற்குப் பெரிதும் இடையூறாக உள்ளது.
ஆளும் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதுதான் காரணமா? பென்னாகரம் இடைத்தேர் தலில்கூட...?
பண்ருட்டி ராமச்சந்திரன் : பென்னா கரம் தேர்தல் முடிவுக்கும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் எந்தத் தொடர்புமில்லை. தனித்து நிற்பது, கூட்டணி அமைப்பது என்பது மட்டும் தேர்தல்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்காது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டுப் பிரிந்த மம்தா தனித்து வெற்றிபெற்றார். 1980-ல் காங்கிரசும் தி.மு.க.வும் அமைத்த மெகா கூட்டணியை எதிர்த்துதான் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்றார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் கட்சிகள் எப்படி செயல்படு கின்றன என்பதைப் பொறுத்தே தேர்தலில் வெற்றி தோல்விகள் அமையும்.
தே.மு.தி.க. ஒரு அரசியல் கட்சியாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டி ருக்கிறதா?
பண்ருட்டி ராமச்சந்திரன் : நிச்சயமாக, அதனால்தான் தமிழக மக்கள் கூட்டணி இல்லாமல் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டபோது தே.மு.தி.க.வுக்கு போடப்படும் ஓட்டு செல்லாத ஓட்டுக்கு சமம் என ஆளும்கட்சி பிரச்சாரம் செய்த தையும் மீறி பணம், ஜாதி, மதம் என எந்தப் பின்னணியும் இல்லாத தே.மு.தி.க. வேட் பாளர்களுக்குத் தொடர்ந்து வாக்குகளை அள்ளி வழங்கி, ஆதரவைப் பெருக்கி எங்களை வளர்த்து வருகிறார்கள். இது தமிழக அரசியலில் மிக ஆரோக்கியமான அறிகுறியாகும்.
தே.மு.தி.க.வின் உண்மையான பலம் என்ன?
பண்ருட்டி ராமச்சந்திரன் : தே.மு. தி.க.வின் உண்மையான பலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி செய்த பிரச்சாரத்தை பார்த்தால் போதும். இது இடைத்தேர்தல். இதன்மூலம் விஜயகாந்த் முதல்வராகிவிட முடியாது. எனவே எங்களுக்கு வாக்களி யுங்கள்; பொதுத்தேர்தலில் விஜயகாந்த் துக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் வெளிப்படையாகவே ஆளும்கட்சி பிரச்சாரம் செய்து எங்களது வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் 20 சதவிகிதம் பேர். அவர்கள் இருப்பது எங்கள் பக்கம்தான். அதையும்தாண்டி இளைஞர்களும் ஏழை தாய்மார் களும் ஒருகாலத்தில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக இருந்தார்கள், அவர்கள்தான் தே.மு.தி.க.வின் முழு பலம்.
இந்த பலம், தேர்தல் களத்தில் எந்தவிதத்தில் தே.மு. தி.க.வுக்கு கை கொடுக்கும்?
பண்ருட்டி ராமச்சந்திரன் : அரசியல் கணக்குப்படி சொல்வ தென்றால் தே.மு.தி.க. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்கு கள் 11 சதவிகி தம். தே.மு.தி.க. விற்கென்று திரட்டினால் 20 சதவிகித வாக்குகளாக அந்த எண்ணிக்கை உயரும். தொகுதிக் கணக்குப்படி பார்த்தால் சுமார் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மேல் தே.மு.தி.க.தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். இன்றைய தமிழக அரசியலில் முக்கியமான மூன்று கட்சிகளில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளதே எங்கள் பலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த பிரச்சினையை மையமான பிரச்சினையாக தே.மு.தி.க. மக்கள் முன் நிறுத்தும்?
பண்ருட்டி ராமச்சந்திரன் : 1967 தேர்தலில் இந்தி பிரச்சினை மைய பிரச்சினையாக இருந்தது. 1980 தேர்தலில் எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது சரியா
என்பது மைய பிரச்சினையாக இருந்தது. இன்று விலைவாசி உயர்வு மைய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் வரும்வரை இது ஒரு மைய பிரச்சினையாக இருக்குமா? என்று கேட்டால் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எத்தகைய மைய பிரச்சினை உருவாகும் என்பதை பொறுத்தே எங்களது தேர்தல் வியூகம் அமையும்.
தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி பேசுகிறது என செய்திகள் வருகிறதே?
பண்ருட்டி ராமச்சந்திரன் : அவையெல்லாம் செய்திகளாகவே இருக்கின்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிடுமா?
பண்ருட்டி ராமச்சந்திரன் : 1991-ம் ஆண்டு தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் வரும் என ராஜீவ்காந்தி கணித்திருந்தார்.
அதற்காகத்தான் என்னை சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட சொன்னார். பிறகு, காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் பா.ம.க.வைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அவரது கணக்கு. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட அவரது மரணம் அ.தி.மு.க.வை பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க உதவியது.
எனவே வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் பற்றி இப்பொழுதே பதில் சொல்ல முடியாது. தேர்தல் வரும், கூட்டணிகளும் வரும். இப்பொழுது யாருடனும் நேரடியாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment