Saturday, June 19, 2010

மீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட்டம்



shockan.blogspot.com

''சொந்த மண்ணை எந்தக் கட்டத்திலும் மறந்துடக்-கூடாதண்ணே... அதேபோல உறவுகளும் விட்டுப் போய்விடக்கூடாது. அழகான சங்கிலித் தொடர் போன்றது நம் உறவுகள்.

அதைப் புரிஞ்சுகிட்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கூட்டுக்குடும்ப சுகமே தனியண்ணே.அதை அனுபவிச்சுப் பார்த்தவர்களுக்குத்தான் அருமை புரியும்’’ பெரிய மீசைக்காரர் ‘நக்கீரன்’ கோபால் குடும்ப உறவைப் பற்றி கோர்வையாகப் பேசிக்கொண்டே போகும்போது, முரட்டு மனிதரைப்போல் தோற்றமளிக்கும் இவருக்குள் இவ்வளவு மென்மையான உணர்வுகளா என்றே பிரமிக்க வைக்கிறது. சென்னை, ஜாம்பஜார் காவல்நிலையம் எதிரேயுள்ள ஜானி ஜான்கான் சாலையில் அவரது நக்கீரன் அலுவலகத்தை ஒட்டியே இருக்கும் வீட்டுக்குள் நுழைந்தபோது, அந்தக் கால ‘பாரதவிலாஸ்’தான் நினைவிற்கு வந்தது.

வீடு முழுக்க ஜே... ஜே... என்று மனிதர்கள்! கோபாலின் மனைவி விஜயலட்சுமி, அவர்களது இரண்டு மகள்கள் பிரபாவதி, சாருமதி, கோபாலோடு பத்திரிகை அலுவலகத்தில் இணைந்து பணிபுரியும் தம்பி குருசாமி, அவரது மனைவி ராஜலட்சுமி, பிள்ளைகள் ஜெயபிரசாந்த், ராம்பிரசாத், டாக்டராகவுள்ள கோபாலின் மைத்துனர் ராஜாராம், கோபாலின் தந்தை ராமநாதன், மாமியார் என்று இந்த பாசக்கூட்டில் பதினோரு பேர் இருக்கிறார்கள் என்றால், இவர்கள் தவிர மதுரையிலுள்ள தங்கை ராணி குடும்பத்தினர் மற்றும் அருப்புக்கோட்டையிலிருக்கும் அக்கா வள்ளி குடும்பத்தினரும் அவ்வப்போது வந்து போவார்களாம்! இதில் இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம், குடும்பத்திற்குள்ளேயே திருமண பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, கோபாலும், அவரது தம்பியும் அக்கா, தங்கையை மணமுடித்துக் கொண்டுள்ளார்கள்!

ஹாலின் நடுநாயகமாக சட்டத்திற்குள்ளிருந்து எல்லோரையும் கவனித்துக்கொண்டிருப்பவர் மறைந்த தாயார் ராஜமாணிக்கம்மாள்.


கலகலப்பான கூட்டுக்குடும்பம் என்றாலும், அங்கே மரியாதை தராசு முள்போல் நிற்கிறது. அப்பா ராமநாதன் நின்றாலே அங்கிருந்து வேறு இடத்திற்கு நழுவுகிறார் கோபால். போட்டோவுக்கு போஸ் கொடுக்கக்கூட அவரது தம்பி மனைவி பெரியவர்களுக்கு முன்பு நிற்பதைத் தவிர்க்கிறார். எல்லோரையும் ஒரே அணியாக திரட்டுவதே சற்று பாடாகிவிட்டது. குடும்பத்தலைவர் என்ற முறையில் அப்பா ராமநாதனிடம் கேட்காமல் பெரிய காரியங்கள் எதுவும் நடக்காதாம்!

பண்டிகை நேரத்தில் கூட்டம் இன்னும் பெரிதாகிவிடுமாம்.

‘‘அருப்புக்கோட்டையில் அக்கா இருக்கும் எங்க பாரம்பரிய வீடு இருக்கு. வருஷா வருஷம் பொங்கலுக்கு எல்லோரும் அங்க போய்டுவோம். அப்போ அலுவலகத்திற்கு நாலு நாள் விடுமுறை. பொங்கல் வச்சு, பாட்டு கூத்துன்னு அந்த நாலு நாளும் போறதே தெரியாது! பொங்கல் அன்னிக்கு ராத்திரி குடும்பத்தோட சினிமாவுக்குப் போனா,எங்க கலாட்டா தியேட்டரில் தொடரும். சொல்லப்போனால் அந்த நாலு நாளுக்காக வருஷம் முழுக்கக் காத்திருப்போம்’’என்று தம்பி குருசாமி சொல்லும்-போது,இடைமறித்து அந்த வீடு அப்பா பெயருக்கு மாறிய சுவாரஸ்யமான கதையைச் சொன்னார் கோபால்.

‘‘அருப்புக்கோட்டை வீடு முதல்ல பழங்காலத்து மண் வீடா இருந்துச்சு. பேங்கில் லோன் போட்டு பக்காவா கட்டலாம்னு முடிவு பண்ணி பேங்கிற்கு போனோம். அப்பா பேரில் வங்கிக் கடன் விண்ணப்பம் செய்தபோது, ‘சொத்தெல்லாம் அம்மா பேரில்தான் இருக்கு. அதனால் அப்பா பேரில் லோன் கிடைக்காது’என்று ஒரே வரியில் சொல்லி-விட்டார்கள்.உடனே அம்மா பேர்ல கூட விண்ணப்பம் செய்திருக்கலாம். ஆனா, அப்பா ரொம்ப அப்செட் ஆயிட்டார் என்பது அவர் முகத்திலேயே புரிஞ்சுது. அவர் எதையும் காட்டிக்க மாட்டார். உடனே கூடப்பிறந்தவங்க நாலு பேரும் ரிஜிஸ்தர் ஆபீஸுக்கு நேரா போய் சொத்தை அப்பா பெயருக்கு எழுதி வாங்கியபோது, அங்குள்ள அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா? எழுபத்தைந்து வயசுல அப்பா பிள்ளைகளுக்கு சொத்தை எழுதி வைப்பாங்க. இங்க, பிள்ளைங்க அப்பாவுக்கு எழுதி வைக்கிறாங்க.’’

இதை கோபால் ஜாலியாகச் சொல்லும்போது, அவர்களது அன்பின் ஆழம் புரிந்தது! அந்த பாசக்காரக் கூட்டத்திலிருந்து விடைபெறும் நேரம்... ஹாலில் ஒரு போர்டு... அதில் ஒரு திருக்குறள் எழுதி, அதற்கு பொருளும் சுருக்கமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.

‘‘எங்கள் ரொம்ப நாள் பழக்கம். தினமும் ஒவ்வொருத்தரும் ஒரு குறள் எழுதி, பொருள் எழுத வேண்டும். அதை எல்லோரும் இதே இடத்தில் கூடி உரக்கச் சொல்வோம். உறவு மட்டு மல்ல. மொழியும் அடுத்த தலைமுறைக்கும் ஒழுங்காப் போய் சேரணு மண்ணே’’ என்றார் கோபால்! இந்த அழகான குடும்பத்தில் இன்னும் எத்தனை ஆச்சரி யங்களோ!.

No comments:

Post a Comment