Thursday, June 24, 2010

தமிழனுக்கு கிடைத்த புதையல்!


""ஹலோ தலைவரே... .... பாசனத்திற்கு தண்ணீர் வேணும்னு கிணறு வெட்டுற நேரத்தில், புதையல் கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ அப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக் கிறார் கலைஞர்.''

""செம்மொழி மாநாட்டைப் பற்றித்தானே சொல்றே?''

""மாநாட்டுச் சிறப்பு ஒருவித மகிழ்ச்சின்னா, சமீபத்தில் கிடைத்திருக்கும் 86 செப்பேடுகள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்குது. ராஜராஜசோழனின் பேரனான முதலாம் ராஜாதிராஜன் நிலபுலன்கள் தொடர்பாக அளித்த ஆணையை அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் உறுதிசெய்து வழங்கிய செப்பேடுகள்தான் அது. மேலைச் சாளுக்கிய மன்னர்களை எதிர்த்து கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில், யானை மீது இருந்த முதலாம் ராஜாதிராஜன் வேல் பாய்ந்து இறந்துபோக, அந்தக் களத்திலேயே மன்னனாக முடிசூடிய அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திரன், சிதறிய சோழப்படைகளை உடனடியாக ஒருங்கிணைத்து போரில் ஜெயித்தான். அந்த கொப்பம்தான், சந்திரபாபுநாயுடுவின் ஊரான ஆந்திர மாநிலம் குப்பம். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட சோழர்கள் ஆட்சிக்காலத்தில் நில நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை இந்த செப்பேடுகள் காட்டுது. தமிழ் மூவேந்தர்களின் ஒற்றுமையையும் காட்டும் விதத்தில் புலி, வில், மீன் என மூன்று சின்னங்களும் பொறிக்கப் பட்ட இந்த செப்பேடு கலைஞருக்கு சந் தோஷத்தைக் கொடுத்திருக்குது. செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் இந்த செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.''

""தங்களுக்குள் மோதிக்கொண்ட மூவேந்தர்கள், தமிழுக்காக ஒற்றுமையாக இருந்தது சரி. செம்மொழி மாநாடு நடக்கிற நேரத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சி போராட்டம் நடத்துதே?''

""ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமையை பின்தள்ளுவதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தப்படுதுன்னு அ.தி.மு.க, ம.தி.மு.க, சில தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் குற்றம்சாட்டிவந்த நிலையில், மின்னஞ்சல் மூலமா இரா.மு.சுபன்- இணைப் பாளர்-தலைமைச் செயலகம்-தமிழீழ விடுதலைப்புலிகள் -தமிழீழம்ங்கிற முகவரியி லிருந்து உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட் டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் மாநாடு உறுதுணையாக இருக்கும் என்று வந்திருக்கிற அறிக்கை முதல்வருக்கு மனநிறைவைத் தந்திருக்குது. மாநாட் டுக்கு 2 நாள் முன்னதாகவே கோவைக் குப் போய் உற்சாகமா இறுதிக்கட்டப் பணிகளை பார்த்து, கடைசி நேர மாறுதல்களை செய்ய ஆரம்பித்து விட்டார்.''

""ஜெ மட்டும் மாநாட்டை தொடர்ந்து எதிர்த்துக்கிட்டே இருக்காரே? புறக்கணிப்பு, போராட்டம், கேலிக்கூத்துன்னு காரசாரமா அறிக்கைகள் வெளியாவதன் பின்னணி என்னவாம்?''

""மாநாட்டுக்கு எப்படியாவது இடையூறு வராதா, கலவரம் உண்டாக வாய்ப்பிருக்கு தாங்கிறதுதான் ஜெ.வோட எதிர்பார்ப்பு. ஆனா, செம்மொழி மாநாட்டுக்கு மக்கள் கிட்டே ஆதரவு இருக்குன்னு அவர் கைக்கு ரிப்போர்ட் போயிருக்குது. இந்த ரிப்போர்ட்டை தொகுத்து கொடுத் திருக்கிறவர், அ.தி.மு.க வட்டாரத்துக்குள் நியூ என்ட்ரியான சேஷாத்திரி அய்யங்கார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தினமும் எல்லா பத்திரிகை செய்திகளையும் படித்து, அதில் ஜெ.வின் கவனத்திற்குப் போகவேண் டிய முக்கிய செய்திகளை தொகுத்து, கம்ப்யூட்டர் மூலமா அதையெல்லாம் ஒரு பத்திரிகை போல வடிவமைத்து கொடுப்பதுதான் இவரோட வேலை. செம்மொழி மாநாடு சம்பந்தமா பாசிட்டவான தகவல்களை இவர்தான் ஜெ.கிட்டே தெரிவித்திருக்கிறார்.''

""அ.தி.மு.க எம்.பிக்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை திங்கட்கிழமையன்னைக்கு சந்திச்சி மனு கொடுத்தாங்களே?''

""15 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க எம்.பி.க்கள் கொடுத்த மனுவில் ஜெ ஒரு விஷயத்தை சேர்த்திருந்தார். அதாவது வழக்காடும் மொழி யாக தமிழை அறிவிக்கணும்ங்கிற கோரிக்கைதான் அது. பார்ப்போம்னு மட்டும் ஜனாதிபதியிடமிருந்து பதில் வந்ததாம். தம்பிதுரை, மைத்ரேயன், பாலகங்கா, வேணுகோபால், சிவசாமி உள்பட 8 அ.தி.மு.க எம்.பி.க்களோடு ம.தி.மு.க கணேச மூர்த்தியும் ஜனாதிபதியைப் பார்க்கப் போனாங்க. மனுவில் சி.பி.ஐ. சார்பில் கையெழுத்து போடப்பட்டிருந்தது. ஆனா, சி.பி.எம். இதில் கையெழுத்திடலை.''

""ஓ...''

""செம்மொழி மாநாட்டுக்கு புலிகளிடமிருந்து வந்த அறிக்கையை கலைஞர் வரவேற்றதால, இதை இஷ்யூவாக்கி காங்கிரசின் ஆதரவைப் பெறலாம்ங்கிற கணக்கில் ஜெ. ஒரு கண்டன அறிக்கை ரெடி பண்ணிக்கிட்டிருக்கிறார். இது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புலி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்குது?''

""செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடிகுண்டு சம்பவத்தில் குற்றவாளிகளும் பிடிபடலை, காரணமும் புரிபடலையே?''

""ரயில்வே நிர்வாகம் சில விவரங்களை மறைக்கிறதுதான் இதற்கெல்லாம் காரணம்னு தகவல் வருதுங்க தலைவரே... என்ன நடந்ததுங்கிறது தொடர்பான சந்தேகங்களை ரயில்வே துறை தெளிவாக்கவேயில்லை. சேலம் பாசஞ்சர் ரயில் க்ராஸாகிப் போனபிறகுதான் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததுன்னு ரயில்வே நிர்வாகம் சொல்லுது. இதுதான் சந்தேகத்துக்கு காரணம். உண்மை என்னன்னு தெரிஞ்சிக் கிறதுக்காக நானே நேரில் போனேங்க தலைவரே.. இன்ஜினுக்கு முன்புறத்தில் , ஒரு இரும்புத்தகடு இருக்கும். தண்டவாளத்தில் கல்லு, கட்டை ஏதாவது இருந்தா இது தள்ளிவிட்டுட்டு, ரயில் போறதுக்கு வழி பண்ணும். அதோடு சேண்ட் பைப் ஒண்ணும் முன்பகுதியில் இருக்கும்.''

""அது என்ன?''

""அதாவது, மழைக்காலத்தில் தண்ட வாளத்துக்கும் சக்கரங்களுக்குமிடையில் க்ரிப் இல்லாமல் போயிடும். அதனால, ரயில் தடம்புரண்டிடக் கூடாதுங்கிறதுக்காக இன்ஜினில் ஒரு லீவர் இருக்கும். அதை டிரைவர் இழுத்தால், அதிலிருந்து சேண்ட் பைப் வழியா தண்டவாளத்தில் மணல் தூவப்படும். மணல் தூவியதும் க்ரிப்போடு வண்டி ஓடும். சேலம் பாசஞ்சர் ரயில் இன்ஜினில் இந்த சேண்ட் பைப் அடிபட்டு வளைஞ்சிருக்குது. குண்டு வெடிக்கிறதுக்கு முன்னாடி ரயில் க்ராஸ் ஆயிருந்தா பைப் இப்படி வளைஞ்சிருக்காது. அதுபோல கடைசியா இருந்த கார்டு பெட்டியும் டேமேஜ் ஆகியிருக்குது. அதனால, குண்டு வெடிச்சபிறகுதான் தண்டவாளத்தில் அந்த ரயில் போயிருக்குது. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால், ஏன் ரயிலை நிறுத்தலை, மக்கள் உயிர் என்னாகிறதுன்னு ரயில்வே நிர் வாகம் கேள்விக்குள்ளாகும். அந்த ரிஸ்க்கை எதிர் கொள்ளக்கூடாதுன்னுதான் ரயில்வே அதிகாரிகள், வட்டாரம் இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி மறைச்சு மறைச்சு பேசுது'.

""விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி அரெஸ்ட் டாகியிருப்பதும், அதையடுத்து 3 விடு தலைப்புலிகள் வெடிகுண்டோடு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகிக்கொண்டி ருக்குதே?''

""புலிகளின் உளவுப்பிரிவில் சிரஞ்சீவி ரொம்ப முக்கியமானவர். பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். உளவறிந்து சொல்வதில் ரொம்ப கெட்டிக்காரர்னு ஈழ வட்டாரம் சொல்லுது. இவர் சொன்ன தகவல்கள் எதுவும் தவறாக இருந்ததில்லையாம். இறுதி யுத்தம் நடந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு சிரஞ்சீவி வந்துட்டார். அவர் பிடிபட்டிருப்பது எங்களோட அடுத்த கட்ட முன்னேற்றங்களுக்குப் பெரிய தடையா இருக்கும்னு புலிகள் வட்டாரம் சொல்லுதாம். தமிழக வட்டாரமோ, 15 நாளுக்கு முன்னாடியே சிரஞ்சீவி யை பிடிச்சாச்சுன்னும் வெளியே தெரியாமல் அவர் விசாரிக்கப்பட்டப்ப தமிழ்நாட்டில் யார் யாரைத் தெரியும், எந்தெந்த தலைவர்களை சந்தித்தேன்னு சொல்லியிருக்காராம்.''

""அடுத்த தகவல்?''

""செம்மொழி மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கிற நேரத்தில், பா.ஜ.க தலைவர் அத்வானி பர்சனல் விசிட்டாக தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அவர் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிற தலைவர். 22, 23, 24 இந்த 3 நாட்களும் அவர் தமிழ்நாட்டில் இருப்பதா ப்ளான். மாநாட்டுப் பாதுகாப்புக்கு போலீஸ் உயரதிகாரிகள் வரை எல்லோரும் போயிடுவாங்கங்கிறதால, வேற தேதிக்கு பர்சனல் விசிட்டைத் தள்ளி வச்சிக்க முடியுமான்னு தமிழக காவல்துறை தரப்பி லிருந்து கேட்கப்பட்டிருக்குது. நோ...ன்னு அத்வானி தரப்பிலிருந்து பதில் வந்திருக்குது. அதனால செம்மொழி மாநாட்டு நேரத்தில், அத்வானிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையிலும் தமிழக போலீஸ் இறங்கியிருக்குது.''

""தி.மு.க.வில் அழகு திருநாவுக்கரசு சேர்ந்திருப்பதால் ஜெ தரப்பில் ஒரு புது சந்தோஷம் தெரியுது. அந்த விவரத்தை நான் சொல்றேன்.. ஜெ ஆட்சியில் இருந்தப்ப அவரோட பிறந்த நாளுக்கு அனாமத்தா வந்த 3 லட்சம் டாலர் செக் சம்பந்தமா இன்னமும் வழக்கு நடந்துக்கிட்டிருக்குது. இதில் 88 லட்ச ரூபாயை வசூலித்து அதை டி.டி.யா மாற்றியதா இந்த வழக்கில் அழகுதிருநாவுக்கரசு மேலே சார்ஜ் இருக்குது. மெயின் அக்யூஸ்ட்டான அவர் இப்ப ஆளுங்கட்சிக்குப் போயிட்டார். ஏற்கனவே டி.எம்.செல்வ கணபதி இப்படி கட்சி மாறியதால் கலர் டி.வி. வழக்கு புஸ்வாணம் ஆனது. இப்ப அழகு திருநாவுக்கரசால பிறந்த நாள் பரிசு வழக்கும் நீர்த்துப்போயிடும்ங்கிறது தான் ஜெ தரப்பின் சந்தோஷத்துக்கு காரணம்.''

No comments:

Post a Comment