Sunday, June 20, 2010

டிரைவரின் போதை தந்த பயங்கரம்!


shockan.blogspot.com
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள திருமல்வாடி கணேசன்-சுகன்யா தம்பதியின் ஒரே மகள் நித்யாவுக்கும், பில்பருத்தி மகேந்திரன் மகன் குஜராத்தில் பணிபுரியும் டிப்ளமோ இன்ஜினியர் அருணுக்கும், பொம்மிடி மண்டபத்தில் 17.6.10 காலை 8 மணிக்கு திருமணம். 23 வயது நித்யா பி.ஏ. முடித்து, ஆசிரியர் பயிற்சியும் முடித்திருந்தார்.

நித்யாவுக்கு அமையவிருக்கும் நல்ல வாழ்க்கை... ஜோடிப் பொருத்தம்... ஜாதகப் பொருத்தம் பற்றி யெல்லாம் உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மினிலாரி வந்தது. அதன் ஓட்டுநர் மாரண்டஹள்ளி குமாரவேல் இறங்கி வந்தார்.

""லாரி கண்டிஷன்ல இருக்கா? 60 பேருக்கு மேல ஏறணும்... ஒண்ணும் பிரச்சினை இல்லைல... சரி வாங்க டிரைவர் கொஞ்சம் "சரக்கு' ஏத்திக்கலாம்!'' அழைத்துச் சென்று டாஸ்மாக் விருந்து வைத்திருக்கிறார்கள் சில உறவினர்கள்.

""பொண்ணு அலங்காரம் பண்ணிருக்கு... பொண்ணையும் பொண்ணோட பாட்டியையும் உன் பக்கத்தில கேபின்ல உட்கார வச்சுக்கப்பா!'' மணமகனின் தந்தை கணேசன் டிரைவரிடம் சொன்னார்.

மணமகள் வீட்டாரை ஏற்றிக் கொண்ட மினிலாரி, பொம்மிடி நோக்கி கிளம்பியது.

இரவு 10.30. புலிகரை தாண்டி கடமடை பகுதியில் வேகமெடுத்தது லாரி.

சாலையோரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டரை, முன்னால் சென்ற பஸ் ஓவர்டேக் எடுத்தது. அதைத் தொடர்ந்து குமாரவேலுவும் பஞ்சர் டிராக்டரை தாண்டிச் செல்ல முயன்றபோது, எதிரில் சரக்கேற்றிய கேரள லாரியொன்று ஹெட்லைட் பிரகாசத்தோடு பாய்ந்து வந்தது. ஒரு நொடி தடுமாறிய மினிலாரி ஓட்டுநர் குமாரவேலு, லாரியை வலது பக்கம் சாலையை விட்டு கீழே இறக்க முயன்றபோது... வந்து மோதியது கேரள லாரி... டிரைவர் கேபின் தனியே பெயர்ந்து சாலையை விட்டு தூக்கியெறியப்பட்டது.

மினி லாரியின் பின்புறம் நொறுங்கி நடுரோட்டில் கவிழ்ந்து... அதன்மீது கேரள லாரி ஏறித் தள்ளி... மோதிய சத்தமும் 60 பேரின் அலறலும் அந்த ஏரியாவையே குலை நடுங்க வைத்து விட்டது. சாலை ரத்தக் காடாகிவிட்டது.

ஸ்பாட்டிலேயே 16 பேரின் உயிர் போய்விட்டது. கடுமையான காயம்பட்டு ஆஸ்பிட்டல் கொண்டு செல்லப்பட்ட 41 பேரில் 2 பேர் இறந்து விட்டனர்.

சிறு சிறு காயத்தோடு டிரைவர் கேபினுக்குள் மயங்கிக் கிடந்த ஓட்டுநரையும் மணமகள் நித்யாவையும், பாட்டியையும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யாவைப் பெற்றவர்களும் சீரியஸாகத்தான் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

முதலுதவிக்குப் பிறகு வெளியே வந்த நித்யா... மருத்துவமனையில் அடுக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்து ""அய்யோ... அய்யய்யோ... என்னால் என் சொந்தக்காரங்க எல்லா ரும் செத்துப் போயிட்டாங்களே... நான் என்ன பாவம் செஞ்சேன்...!'' கதறிய காட்சி... அத்தனை பேரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. திருமல்வாடி துக்கவாடியாய் கதறிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment