Saturday, June 26, 2010
யுத்தம் 65 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com
""விசாரணை முடிந்ததும் உங்க ஆபீசுக்கு சேர்ந்து போகப்போறோம்''-என்றார் 9-ம் நாள் விசா ரணையைத் தொடங்கிய டி.எஸ்.பி. நாகராஜன்.
""ஏன்?''
""நிறைய எடுக்க வேண்டியிருக்குது.''
""அதுதான் பலதடவை ஆபீஸையும் வீட்டையும் ரெய்டு செய்து எதுவும் எடுக்காமலேயே நீங்களா, ஃபைல் ஃபைலா போட்டுவச்சிக்கிட்டு விசாரணைங் கிற பேரிலே ஏதேதோ கேட்குறீங்களே?''
""நாங்க வர்றோம்னதும் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க?''
""விரோதிங்களைக் கூட வீட்டுக்குள்ளே விட்டுடலாம். உங்களைப் போன்ற போலீஸ்காரங்களை ஊருக்குள்ளே விட்டா என்னாகும்ங்கிறதை மலை கிராம மக் கள்கிட்டே கேட்டா கண்ணீர் கதையா சொல்லுவாங்க. எங்க நக்கீரன் தம்பி சிவா வீட்டுல ரெய்டுங்கிற பேருல உங்க டீம் செஞ்ச அக்கிரமத்தை எப்படி மறக்க முடியும்? வீட்டுல இருந்த பொம்பளைங்களையெல்லாம் ஈவிரக்கமேயில்லாம அவமானப்படுத்தினீங்களே.. உங்ககிட்டே உண்மையும் கிடையாது நியாயமும் கிடையாது. ரெய்டில் எதுவும் கிடைக்கலைன்னா, நீங்களே எதையாவது வச்சி எடுத்துட்டுப்போயிடுவீங்க. இல்லேன்னா குடும்பத்தையே அவமானப்படுத்துவீங்க. நாங்களெல்லாம் மான- அவ மானங்களுக்குப் பயந்து வாழுற மனுசங்க. பெரியவங்க சொல்லியிருக்கிற மாதிரி, எது எதுக்குப் பயப்படணுமோ அது அதற்குப் பயப்படணும். -அதான் பயப்படுறோம்.''
-நான் சொன்னதற்கு டி.எஸ்.பி.யிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பக்கத்திலிருந்த போலீஸ் அதிகாரிகளைத் திரும்பிப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உடனே ஒரு ஃபைலை எடுத்தார். என்னைப் பார்த்தார்.
""பக்தவத்சலத்தை ஏன் கொன்னீங்க?''
""ஏன் கொன்னேனா? என்ன சார் சொல்றீங்க? வீரப்பன் சம்பந்தப்பட்ட கேஸையெல்லாம் எங்க மேலே போடுறீங்க. எதற்கு எங்க மேலே இப்படி அநியாயமா பழி போடுறீங்க. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.''
நான் கோபமாகவே சொன்னதைக் கேட்டதும் டி.எஸ்.பி. நாகராஜன், ""பக்தவத்சலம் நாங்க அனுப்புன ஆள். ஒரு ஸ்டூடண்ட். பி.பி.சி. நிருபர்ங்கிற பேருல போலீஸ் இன்ஃபார்மரா நாங்க தான் அனுப்பி வச்சோம். நிருபர் இல்லைன்னு தெரிஞ்சதும் வீரப்பன், அவனைக் கொன்னுட்டான். அதற்கு நீங்கதான் காரணம்.''
போலீஸ் அனுப்பிவைத்த ஆளை வீரப்பன் கொலை செய்ததற்கு நக்கீரன் எப்படி காரணமாக முடியும்? பொய் களால் சதிவலை பின்னும் போலீசாரின் கொடூரத்தனத்திற்கு அளவேயில்லையா என நினைத்த எனக்கு, இளைஞன் பக்தவத்சலம் சம்பவம் நினைவுக்கு வந்தது.
அது வீரப்பனிடமிருந்து நக்கீரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆடியோ கேசட். ஏதேனும் முக்கியமான தகவலாக இருந்தால் இதுபோல செயல்படுவது அவன் வழக்கம். என்ன தகவல் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடனும் பதட்டத்துடனும் அந்த கேசட்டை டேப் ரிகார்டரில் ப்ளே செய்தேன். கேசட் ஓடத் தொடங் கியதும் ஒரு இளைஞனின் பயம் கலந்த குரல் ஒலித்தது. மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு அந்த இளைஞன் பேசுவதை உணர்ந்தபோது அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றேன்.
""ஐ.ஜி. காளிமுத்து அவர்களுக்கு, நான் பக்தவத்சலம் பேசுறேன். வீரப்பனும் அவங்க ஆட்களும் என்னைப் பிடிச்சு வச்சிருக்காங்க. அவங்க எவ்வளவு காசு கேட்கிறாங்களோ அதைக் கொடுத்து என்னை மீட்டுக்கிட்டு போங்க. உங்க திட்டங்கள் எல்லாம் வீரப்பன் அண்ணனுக்கு தெரிஞ்சு போச்சு... உலகமே அழிஞ்சாலும் அண்ணனை நீங்க பிடிக்க முடியாது. அதனால அவங்க கேட்கிற கோரிக்கையை கொடுத்திடுங்க.... அண்ணே சுட்டுடாதீங்கண்ணே...''
இளைஞனின் குரல் அலறுகிறது. வீரப்பன் தரப்பின் பிடியில் அவன் இருப்பது நன்றாகத் தெரிகிறது. தொடர்ந்து அந்த பதட்டக் குரல் ஒலிக்கிறது.
""அவங்க கேட்கிற காசையும் கோரிக்கையையும் தரலைன்னா என்னை கொலை செய்து விடுவாங்க. .. போலீஸ் இன்பார்மராக இருக்கும் நான் வீரப்பன் பிடியிலே இருக்கேன். காசும் கோரிக்கையும் கொடுத்து என்னை மீட்டுட்டுப்போங்க.''
கொஞ்ச நேரம் இடைவெளி. டேப் வெறுமனே சுழல்கிறது. மீண்டும் அந்த இளைஞனின் குரல்.
""அன்புள்ள அப்பா -அம்மாவுக்கு... பக்தவத்சலம் ள்/ர் ரத்னம் , 545-சுக்ரவார்பேட்டை வீதி, காந்தி பார்க், கோவை . போன் நம்பர் 471752 என்ற விலாசத்தில் உள்ள என்னை வீரப்பன் அண்ணன் பிடிச்சு வச்சிருக்காரு. அவரு என்ன கேட்கிறாரோ அதைக் கொடுத்து என்னை மீட்டுட்டு போகும்படி கேட்டுக்குறேன். இன்னொரு விலாசம்.. பி.பி.சி. பிராஞ்ச் ஆபீஸ், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆத்துப்பாலம்.''
-அட்ரஸ் சொல்லி முடித்ததும் திரும்பவும் பேச்சு துண்டிக்கிறது. கேசட் நாடாவில் தொடர்பில்லாமலும் பல இடங்களில் சத்தம் குறைந்தும் பதிவாகியிருந் தது அந்த கேசட். அதனுடன் ஒரு லெட்டரும் இருந்தது. "டேப் ரிகார்டர் ரிப்பேராகிவிட்டதால் இப்படிப் பதிவாகியிருக்கிறது. அதனால் நடந்த சம்பவங்களை எழுதி அனுப்பியிருக்கிறோம்' என்கிற அந்தக் கடிதம் வீரப்பன் தரப்பிலிருந்து அனுப்பப் பட்டிருந்தது.
அதில், "இந்த இளைஞன் பக்தவத்சலத்தை தாளவாடி பாயும் இன்பார்மர் கந்தவேலுவும் சில மாதங்களுக்கு முன் அழைத்து வந்தார்கள். அவன் பி.பி.சி. நிருபர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். போலீஸ் இன்பார்மராக இருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால் அவனுக்குப் பேட்டி தரவில்லை. அதிரடிப்படை தொடர்ந்து என்னையும் என் ஆட்களையும் தேடியதால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கணும்னு சொல்லி தாளவாடி பாய் மூலமா அந்தப் பையனை அழைத்து வரச்சொன்னேன். அவன் வந்ததும், நீ போலீஸ் இன்பார்மர்தானேன்னு கேட்டு, போடு போட்டதும் உண்மையைச் சொல்லிவிட்டான்' என்பது அந்த கடிதத்தின் சாராம்சம்.
யார் இந்த இளைஞன் பக்தவத்சலம்? வீரப்பன் காட்டுக்கு அவன் ஏன் சென்றான்? இவன் நிருபரா, இன்பார்மரா? -அலறும் குரலுடன் ஒலித்த அந்த ஆடியோ கேசட்டும் அதனுடன் இணைந் திருந்த கடிதமும் நம்முடைய அதிர்ச்சி அளவினை அதிகரிக்கச் செய்தது. உடனடியாகப் புலனாய்வில் இறங்கினோம்.
ஆடியோ கேசட்டில் அவன் தெரிவித்திருக்கும் முகவரிக்கு நமது நண்பர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டோம்.
"ஆமாம்.. பக்தவத்சலம் இங்கே உள்ள பையன்தான். டி.எம்.இ. படிச்சிருக்கான். பி.இ. படிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப் பட்டதால் படிப்பைத் தொடர முடியலை. ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறவன். வேலை தேடி மெட்ராசுக்குப் போனான்' என்ற தகவல் கிடைத் தது. இந்தத் தகவலோடு நக்கீரன் நிருபர் தம்பி மகரன், பக்தவத்சலம் வீட்டுக்குப் போனார்.
பக்தவத்சலத்தின் அப்பாவையும் அண்ணனையும் சந்தித்தார்.
""ஆமாந்தம்பி.. 20 நாளுக்கு முன்னாடி அவன் ஃப்ரெண்டோட அப்பா போன் செய்தாரு. அவரு இன்ஸ்பெக்டரா இருக்காரு. போலீஸ் வேலைக்கு எங்க பக்தவத்சலம் செலக்ட்டாகியிருப்பதாவும் கூடிய சீக்கிரம் நல்ல சேதி வரும்னும் சொன்னார்'' என்றார் கள்.
போலீஸ்தான் பக்தவத்சலத்தைக் காட்டுக்குள் அனுப்பியதா என்பதை கண்டுபிடிக்க, அந்த இன்ஸ்பெக்டர் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர் ஈரோட்டில் ரேடியோ இன்ஸ்பெக்டராக இருப்பது தெரிந்தது. அது, மத்திய அரசு வேலை என்றாலும் அதிரடிப்படையோடு நெருக்கமான தொடர்புடைய பணிதான். இந்த விவரத்தோடு, பக்தவத்சலத்தின் நண்பர்களைத் தொடர்புகொண்டோம்.
""நாங்க அவனை பரத்.. பரத்துன்னுதான் கூப்பிடுவோம். மலையேறுவதில் ரொம்ப ஆர்வமா இருப்பான். வீரப்பனைப் பார்க்கப்போறேன்னும் சொல்லுவான். நாங்க கிண்டல் பண்ணுவோம். அவன் கவலையேபடமாட்டான். நான்தான் தலைவர் வீரப்பனை வெளியில அழைச்சிட்டு வரப்போறேன்னு சொல்லுவான்'' என்றார்கள். வீட்டிலும் இப்படித்தான் பக்தவத்சலம் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பான் என்றும் அவன் நண்பர்கள் சொன்னார்கள். நக்கீரனில் வெளியான வீரப்பன் பற்றிய செய்திகளையும் தினசரி பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் கத்தரித்து தனி ஃபைலே வைத்திருந்திருக்கிறான்.
அவனுடைய தாய்மாமன்களுக்கு தாளவாடியில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே போகும்போது, நாட்டுத் துப்பாக்கியால் முயல் வேட்டையாடுவதில் அவனுக்கு அலாதிப் பிரியம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக நண்பனோடு அந்தப் பகுதிக்குப் போயிருக்கிறான். அந்த சமயத்தில்தான் தாளவாடி பாய் என்ற பிரமுகரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீரப்பன் பற்றிய தகவல்களை யெல்லாம் ஆர்வமாகக் கேட்டிருக்கிறான். தனக்கு வீரப்பனைப் பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்னு சொல்லியிருக்கான். வீரப்பனைப் பார்ப்பதற்கு இது சரியான ரூட் என்பது பக்தவத்சலத்தின் கணக்கு.
தாளவாடியிலிருந்து கோயம்புத்தூருக்கு பக்தவத்சலம் திரும்பியபிறகு, பாயிடமிருந்து அடிக்கடி போன் வந்திருக்கிறது.
"தலைவர் வீரப்பனை எப்படியாவது பார்த்திடணுமுங்க. நீங்கதான் ஏற்பாடு செய்யோணும்' என்று சொல்லி, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது பக்தவத் சலத்தின் வழக்கம். அவனுடைய வீட்டில் இருந்தவர்களுக்கும் பக்தவத்சலத்தின் போக்கு என்ன வென்று தெரிந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவன் காட்டுக்குச் செல்வான் என்பதை அவர்கள் எதிர்பார்த்தே இருந்திருக்கிறார்கள்.
ஓசியில் ஒரு கேனான் கேமரா வாங்கிக்கொண்டு தீபாவளிக்கு மறுநாள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான் பக்தவத்சலம். அதன்பிறகு அவன் வீட்டாருக்கோ சொந்தக்காரர் களுக்கோ நண்பர்களுக்கோ எந்தத் தகவலும் வராத நிலையில்தான், வீரப்பன் தரப்பிலிருந்து நக்கீரனுக்கு கேசட் வந்தது.
அதில்தான், அதிரடிப்படைத்தலைவர் காளிமுத்துவுக்கு மரணத்தின் முனையிலிருந்து கோரிக்கை வைத்திருக்கிறான் பக்தவத்சலம். போலீஸ் அவனை எப்படி பயன்படுத்திக் கொண்டது? வீரப்பனின் கொடூரப் பிடியில் சிக்கியிருக்கும் அவனது கதி?
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment