Saturday, June 26, 2010
கோயிலை விட்டு வந்த அங்காள பரமேஸ்வரி!
shockan.blogspot.com
செஞ்சி டூ ஆரணி செல்லும் சாலையில்... டூவீலரிலேயே நாம் பயணித்தபோது வளத்தியில் இருந்து வடவெட்டி கிராமம் வரை... 5 கி.மீ.தூரத்திற்கு பக்தர்களின் கூட்டத்தை கவலை, பக்தி, பீதி என பல்வேறு கலவை முகங்களில் பார்க்க முடிந்தது.
அங்கங்கே சாலையில் வெள்ளை நிறத்தில் காலடித்தடம் போன்ற அச்சு தெரிய... அதுதான் அம்மன் காலடித் தடம் என்றபடி... அவற்றைச் சுற்றி மஞ்சள் வட்டம் போட்டு... வழிபட ஆரம்பித்திருந்தனர். வளத்தியில்... "அம்மா தாயே.... உன் கோபத் தைக் குறைச்சிக்கிட்டு கோயிலுக்கே திரும்பி வாம்மா'’என்றபடி ஒரு நடுவயதுப் பெண்மணி கண்ணீர் பெருக... அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கொண்டிருந்தார். பல இடங்களில் பெண்கள் சாமி வந்து ஆட... அங்கங்கே தடத்தை பக்தர்கள் கையால் தொட்டுக் கும்பிட்டபடி இருந்தனர். .
இதென்ன கலாட்டா என திகைத்து நிற்க... காலடித் தடத்தை தரிசிக்க வந்திருந்த... திண்டிவனம் இளைஞர் ஆறுமுகம் ""சந்தேகமே இல்லை. இது அம்மனோட காலடித் தடமேதான். அம்மனுக்கு ஏதோ மனவேதனை. அதான் மேல்மலையனூர் கோயில்ல இருந்து கிளம்பி... இவ்வளவு தூரம் நடந்தே வந்து... வடவெட்டியில் இருக்கும் ஆலமரத்தில் குடிபுகுந்திருக்கா. அம்மனுக்கே சங்கடம்ன்னா நாம் எம்மாத்திரம்?'' என்றார் கவலையாய்.
அம்மனின் மன வேதனைக்கு காரணம் என்ன? செஞ்சியில் இருந்து வந்திருந்த அண்ணாமலை பதில் தர ஆரம்பித்தார். ""அம்மாவாசைதோறும் லட்சக்கணக்கானவங்க கூடு வாங்க. கூட்டம் கூடுவதை சாதகமாக்கிக்கிட்டு சமூகவிரோதிகள் பல குற்றங்களை இங்க நடத்து றாங்க. போனமாசம் ஆரணி வக்கீல் சஞ்சீவியின் மனைவி கழுத்தில் கிடந்த 18 பவுன் தாலிச்சரடை அறுத்துக்கிட்டுப் போய்ட்டானுங்க. அதுக்குப் பிறகு போனவாரம் ஒரு புதுமணப் பெண்ணின் தாலியை அறுத்துட்டானுங்க. பல கற்பழிப்புச் சம்பவங்களும் நடந்திருக்கு. கோயில் அருகே இருக்கும் கரும்புக் கொல்லையிலும் ஏரிக்கரையி லும் அடிக்கடி பெண்கள் பிணம் கிடக்குது. கோயிலுக்கு வெளியில் இப்படின்னா கோயிலுக் குள் பூசாரிகள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியாததா இருக்கு. கோயில் உண்டியல் வருமானம் எல்லாம் பூசாரிகளுக்கே போகுது. முடி எடுக்குற டெண்டர் முதல், கடைகளுக்கான டெண்டர் வரை பேரம்பேசி... பணம் சுருட்டறாங்க. இப்படி எல்லாப் பக்கமும் கோயிலை வச்சி அநியாயம் நடப்பதால்தான்.. அம்மன் கோயிலை விட்டுக் கிளம்பிட்டா''’என்றார் ஆதங்கமாய்.
பூசாரிகள் அட்டகாசம் செய்வது உண்மையா? என்ற கேள்வியுடன் அங்காளபரமேஸ்வரி கோயிலின் அறங்காவலர் துரையை சந்தித்தோம். நிதானமாகப் பேச ஆரம்பித்த அவர் ""அம்மன் கோயிலைவிட்டுப் போனதாச் சொல்றதெல்லாம் அப்பட்டமான வதந்தி. காலடித்தடம் என்பதே ஒரு சதி. ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம் நடு இரவில் ஒரு குரூப்... சாலையை அழுத்தி இப்படி ஒரு தடத்தை உருவாக்கியிருக்கு. கோயில்ல எந்த முறைகேடும் நடக்கலை. காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்தான் வதந்தி பரப்பி இப்படி பக்தர்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள்''’’ என்று அழுத்தமாய் மறுத்தார்.
அம்மன் இடம் பெயர்ந்ததாகச் சொல்லப்படும் வடவெட்டி ஆலமரத்தைப் பார்க்கப்போனோம். அங்கே ஒரு அம்மன் சிலையை ஆலமரத்தடியில் வைத்து அலங்கரித்து... பூசாரி அவதாரமெடுத்த சிலர் அபிஷேக ஆராதனை நடத்திக்கொண்டிருந்தனர். ஆயிரக் கணக்கானோர் திரள ஆரம்பித்ததால் திடீர் கடைகளுக்கும் பஞ்சமில்லை.
அப்போது மகேஸ்வரி என்ற பெண்மணி திடீரென சாமிவந்து ஆட ஆரம்பிக்க... அவரிடம் ஒரு பக்தர்... “"அம்மா... நீ மலையனூர்ல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்தது உண்மையா? இனி நாங்க உன்னை மலையனூர்ல வழிபடலாமா வேணாமா?'’என்று கேட்க... அந்த மகேஸ்வரி அம்மனோ ரொம்பவும் மரியாதையாய் “"டேய்.. நான் கோவிச்சிக்கிட்டு இங்க வந்துட்டேன். அங்க நடக்கும் அநியாயம் தாங்கலை. நான் எல்லா இடத்திலும் இருப்பவள்டா... அதனால் அங்கயும் போ... இங்கேயும் வா'’ என நடுநிலையாக அந்த பக்தருக்குத் தீர்ப்பு சொன்னது.
திடீர் பூசாரிகளான பாலுவும், ஞானவேலும் ""யாரும் வதந்தி பரப்பலை. அம்மன் காலடித்தடம் இருந்ததைப் பார்த்து... தானா பக்தர்கள் திரள ஆரம்பிச்சிட்டாங்க''’என்றார்கள் உற்சாகமாய்.
"இங்க அம்மனும் இல்லை அத்தனும் இல்லை. புறம்போக்கு இடமான இதை வளைக்க மாவட்ட கவுன்சிலர் புண்ணியமூர்த்தி தரப்பு பண்ற வேலைங்க இது'’என்று ஒருவர் நம் காதில் கிசுகிசுக்க.. அந்த புண்ணிய மூர்த்தியையும் சந்தித்தோம். அவரோ “""எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் கடவுளை வேண்டிக்கிட்டு இரண்டாவதா திருமணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு 3 குழந்தைகள் இருக்கு. அதனால் நான் தெய்வபக்தி உள்ளவன். செல்வமும் செல் வாக்கும் எனக்கு இருப்பதால்... என்னை இந்த இடத்தில் கோயில் கட்டிக்கொடுக்கச் சொன்னாங்க. இங்க அஸ்திவாரம் தோண்டிய நேரத்தில்தான்.. அம்மன் இங்க வந்ததா ஜனங்க கூட ஆரம்பிச்சிருக்காங்க. நான் மக்கள் மன உணர்வுக்கு மதிப் பளிப்பவன், அதனால் இங்க கோயிலைக் கட்டி திருவிழாவையும் நடத்திட்டுதான் உட்காருவேன்''’’என்றார் தன்போக்கில்.
செட்டிக்குப்பம் பெரியவர் அர்ச்சுனனோ “""கோயில்ல இருந்து அம்மன் கோபித்துக்கொண்டு வந்திருந்தா கோயில் முகப்பில் இருந்தல்லவா தடம் இருக்கணும். ஏன் பாதி தூரத்தில் இருந்து தடம் பதியுது.? அதிலும் ஒரே பக்க காலடித்தடம் மட்டும் இருக்குன்னா.. அம்மனுக்கு ஒரு கால் இல்லையா? என்னங்க இது கூத்தா இருக்கு''’என்றார் சலிப்பாய்.
கப்பலோட்டிய தமிழன் என்ற இளை ஞரோ ""கோயிலும் டாஸ்மாக் கடையும் இல்லாத ஊர்ல பிரச்சினையே வராது. 500 குடும்பங்கள் இருக்கும் எங்க ஊர்ல கோயி லும் இல்லை. பிரச்சினைகளும் இல்லை. நாங்க கோர்ட், வழக்குன்னு கூட போலீஸ் ஸ்டேஷன் படியை மிதிச்சதில்லை'' என்கிறார்.
அப்போ அம்மன் காலடித்தடம்?
""எல்லாம் ஜோடிப்புங்க'' என்கிறார் அவரே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment