Tuesday, June 1, 2010

துப்பாக்கிச்சூடு சம்பவம் : ப.சிதம்பரம் கருத்துக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அதிருப்தி


வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் குறிவைக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் கார் புறப்பட்ட பிறகே இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறாக செய்தி. அவர் குறிவைக்கப்படவில்லை என்றே தெரிகிறது," என்றார்.

மேலும், "ரவிஷங்கரின் சீடர்கள் இடையே மோதல் நிகழ்ந்திருக்கிறது. அதில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனத் தெரிகிறது," என்றார் ப.சிதம்பரம்.

கர்நாடக காவல்துறையும் ப.சிதம்பரம் தெரிவித்ததையே கூறியிருக்கும் நிலையில், இந்த விசாரணை தொடர்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "சீடர்கள் இடையே ஏற்பட்ட குழு மோதல் காரணமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறப்படுவது சரியான தகவல் அல்ல. சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தாமதாக தெரிவிக்கவில்லை.

அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்று நாங்கள் உடனடியாக உணரவில்லை. திடீரென ஏதோ சத்தம் கேட்டது. ஆசிரமத்தின் நிர்வாக மற்றும் பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிச்சூட்டை உறுதிபடுத்த சற்று நேரமானது. அத்துடன், ஆசிரமம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது. நேற்று மாலை மழையும் பெய்து கொண்டிருந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் வந்து சேரவும் சற்று நேரமானது.

துப்பாக்கி்ச்சூட்டில் காயமடைந்த பக்தர், நான் இருந்த இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் இருந்தார். பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் தான் இச்சம்பவத்திற்கு காரணம் என்று காவல்துறையினர் கருதக் கூடாது. இதுகுறித்து அவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆனால், முழுமையாக விசாரிக்காமலே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது, எனக்கு மனவலியை ஏற்படுத்துகிறது," என்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.

கர்நாடக காவல்துறை தகவல்...

முன்னதாக பெங்களூர் ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மீதான தாக்குதல் அல்ல என்றும், அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கர்நாடக காவல்துறை டிஜிபி அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்த நிகழ்வை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மீதான தாக்குதல் என்று சொல்லமாட்டேன். ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் புறப்பட்டு 5 நிமிடம் கழித்தே இந்த சம்பவம் நடந்துள்ளது," என்றார்.

பெங்களூர் புறநகர் பகுதியில் தலகட்டபுரா என்ற இடத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று மாலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் மாலை 6.30 மணி அளவில் ரவிசங்கர் அங்கிருந்து, தான் தங்கி இருக்கும் இடத்துக்கு காரில் புறப்பட்டார். அப்போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஆசிரம செய்தித் தொடர்பாளர் சாரு தெரிவிக்கையில், "நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரவிஷங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக ரவிஷங்கர் காயமின்றி தப்பினர். அந்த நபரும் தப்பியோடிவிட்டார்.

ஆனால், ரவிஷங்கரின் பாதுகாவலரின் தொடையில் குண்டு உராய்ந்து சென்றது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் ரவிசங்கர் பதற்றமடையவில்லை. இரவு 7 மணியளவில், வழக்கம் போல சீடர்களிடையே அவர் உரையாற்றினார்," என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இந்நிகழ்வை ரவிஷங்கர் மீதான தாக்குதல் இல்லை என்று கூறியுள்ள கர்நாடக காவல்துறை டிஜிபி அஜய் குமார் சிங், " இதைத் தாக்குதல் என்று சொல்ல முடியாது. இது ஒரு சம்பவம் தான். துப்பாக்கியால் சுட்டது நபரா இல்லையா என்பது பற்றி இப்போதைக்குச் சொல்ல முடியாது.

"தோட்ட புறப்பட்ட இடத்துக்கும் காயமடைந்த பாதுகாவலருக்கும் இடையிலான தூரம் 700 அடி ஆகும். நீண்ட தூரத்தில் இருந்து புல்லட் பாய்ந்து வந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தோட்டாவை வைத்துப் பார்க்கும் போது, அது நாட்டுத் துப்பாக்கியில் இருந்து வந்ததாக தெரியவில்லை; ஃபேக்டரியில் தயாரிக்கப்பட்ட ரகம் போன்றே தெரிகிறது.

சம்பவம் நடந்து தாமதமாகவே - இரவு 9.30 மணியளவில் தான் ஆசிரமத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு புகார் வந்திருக்கிறது.

இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

சுட்டவரை மன்னித்துவிட்டேன் : ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் இன்று காலை நிருபர்களிடம் கூறுகையில், "என் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதை உணர்கிறேன். ஆயினும், இதுபோன்ற தாக்குதலுக்காக நான் பயப்படவில்லை.

இந்தத் தாக்குதல் காரணமாக எனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை. என்னைச் சுட்டவரை நான் மன்னித்து விட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் விரும்புகிறேன். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன்," என்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.

கட்காரி கடிதம்...

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆசிரமத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு பிஜேபி தலைவர் நிதின் கட்காரி அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment