Wednesday, May 26, 2010
இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!
shockan.blogspot.com
2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.
இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.
மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.
வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.
அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.
உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.
2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.
மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.
முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.
மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.
மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.
NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.
இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.
அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment