Saturday, May 29, 2010
வறுமையை வென்ற மாணவி!
வழக்கம் போல... புடவை மூட்டையை தனது டூவீலர் கேரியரில் கட்டிக்கொண்டு, வியாபாரத்திற்கு புறப்பட்டபோதுதான் இந்த இனிமையான செய்தி ஷேக்தாவூதின் காதை நிறைத்தது.
மகள் ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் மாணவியாக, 10-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற் றிருக்கிறாள். இதுதான் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த ஏழை முஸ்லிம் தந்தையை திக்குமுக்காட வைத்த செய்தி.
நெல்லை டவுனில் கல்லணை பகுதியில், 650 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஷேக்தாவூதின் மகள்தான் தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவிய லில் 98 என்று மதிப்பெண்களை குவித்திருக்கும் மாணவி ஜாஸ்மின். தன்னைச் சாதனை மாணவியாக்கிய நெல்லை கல்லணை மாநக ராட்சி மேனிலைப் பள்ளியை, தலைமை ஆசிரியர் நடராசன் சாரை, வகுப்பாசிரியர் ராமன் சாரை, ஊர் ஊராக அலைந்து வியர்வை சிந்தும் தந்தையை, அம்மா நூர்ஜஹானை, அண்ணன் இம்ரான், தம்பி இர்பான் எல்லாரையும் நன்றிப் பெருக்கோடு பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
""அப்பா படும் கஷ்டந்தான் இன்னும் படிக்கணும்... இன்னும் படிக்கணும்கிற ஆர்வத்தை உண்டாக்கியது... எங்க ராமன் சார் எடுத்துக்கிட்ட முயற்சி... எல்லாம் சேர்ந்துதான் எனக்கு இந்தப் பெருமை வந்திருக்கிறது. மாநகராட்சி பள்ளியென் றால் எல்லாருக்கும் இளக்காரம். அந்தப் பள்ளிதான் என்னை மாநிலத்தில் முதல் மாணவியாக்கி கல்வி மாவட் டத்திலேயே தன்னை மூன்றாவது இடத்துக்கு உயர்த் திக் கொண்டிருக்கிறது!'' -தாயின் முத்தங்களோடு சொன்னார் ஜாஸ்மின். ஜாஸ்மினைக் காட்டிலும், அந்த ஏழைக் குடும்பத்தைக் காட்டிலும் அதிகம் பூரித்து நிற்கிறார்கள் நெல்லை கல்லணை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment